முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

“காட்பாதரில்” இருந்து “தேவர் மகன்” மற்றும் “நாயகன்” - கமல் எனும் மேதை (1)



தமிழில்காட்பாதரின்தாக்கத்தில் ஏகப்பட்ட படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. இவற்றில்தேவர் மகன்மற்றும்நாயகன்நேரடியாகவேகாட்பாதரைநினைவுபடுத்துபவை; தமிழ் சினிமா வரலாற்றில் மைல்கல்களாக பாராட்டத்தக்கவை. இந்த இரு படங்களில்தேவர் மகன்மேலான கச்சிதமான திரைக்கதையை கொண்டது. ஒருவிதத்தில்காட்பாதரைவிட சிறந்ததுதேவர் மகன்திரைக்கதை; ஒரு திரைக்கதையாளராக கமல் ஒரு மேதை. இதைப் பற்றி பேசுவதே இந்த கட்டுரையின் நோக்கம்.

காட்பாதருக்கும்” “தேவர் மகனுக்கும்நாடகீய முரணும் (அமைதியான ஒருவன் தனக்குள் இருக்கும் வன்முறையாளனை எதிர்கொள்வது) முதற்கோளும் (அப்படி உணரும் ஒருவன் நல்லவனா கெட்டவனா?) கிட்டத்தட்ட ஒன்று தான். இப்படங்கள் கையாளும் விழுமியத்திலும் அதிக வித்தியாசம் இல்லை. நாம் முதலில் இந்த விழுமியத்தைப் பற்றிப் பேசுவோம்.
 சினிமாவில் விழுமியம் என்றால் என்ன? ஒரு பிரதான பாத்திரம் கதையின் வளர்ச்சியுனூடே பெறும் படிப்பினை தான் அத்திரைக்கதை முன்வைக்கும் விழுமியம்.  “தேவர் மகனில்முன்வைக்கப்படும் விழுமியம் என்ன?
 ‘வன்முறை தேவையில்லை, அது நம்மை அழித்து விடும்என கிடைக்கும் சந்தர்பத்தில் எல்லாம் தன் சாதிசனத்திடம் அமைதிக்காக கொடி பிடிக்கும் சக்தி (கமல்) எப்படி தன்னை அறியாமல் மெல்ல மெல்ல அவர்களைப் போல வன்முறையாளனாகிறான்; வன்முறையை மறுப்பதற்காகவே அவன் கத்தியை கையில் தூக்கி ரத்தம் சிந்துகிறான் எனும் முரணை இப்படம் சித்தரிக்கிறது. படத்தின் கதையமைப்பில் மட்டும்காட்பாதரில்இருந்துதேவர் மகன்சிறியதாக ஆனால் முக்கியமான வகையில் வித்தியாசப்படுகிறது:
 “காட்பாதர்” (பாகம் 1) ஒரு விமரிசையான திருமணக் காட்சியுடன் துவங்குகிறது. அங்கு குடும்ப உறுப்பினர்கள், கோர்லியோனோ குடும்பத்துக்கு விசுவாசனாமனவர்கள், அப்பா கோர்லியோனாவால் அடுத்தவர்களுக்கு கிடைக்கும் நற்பயன்கள் ஆகியவை காட்சிப்படுத்தப்படுகின்றன. படத்தின் நாயகனாக மேலெழப் போகிற மைக்கேல் இக்காட்சியில் அமைதியாக ஒருஓரமாகஇருக்கிறான். அவனுக்குள் இருக்கும் மிருகம் வெளிப்படப் போவது, இடைவேளைக்கு முன், போலீஸ் அதிகாரி ஒருவரால் அவன் தாக்கப்பட பிறகு தான். அதற்கு முன் ரொம்ப முக்கியமான மாற்றங்கள் பல நிகழ்ந்து விடுகின்றன; ஆனால் அக்காட்சிகளின் தூண்டுதல்களில் இருந்து மைக்கேல் விலகி விலகி சென்ற படி இருக்கிறான். முகவாய் உடையும்படிக்கு கிடைக்கும் ஒரு குத்து அவனது தலைவிதியை மாற்றி விடுகிறது. அதிலிருந்து அவன் உணர்ச்சியற்ற கொலைக்கருவியாக உருமாறுகிறான்.
 “தேவர் மகனில்நாயகனின் இந்த உருமாற்றத்துக்கான விதையை முதல் காட்சியிலே கமல் வைத்து விடுகிறார் - நகரத்தில் படிப்பை முடித்து தன் காதலியை அழைத்துக் கொண்டு நவீன இளைஞனாக சக்தி (கமல்) ஊருக்கு வருகிறான். அப்போது தனக்கு கிடைக்கப் போகும் விமரிசையான வரவேற்பைப் பற்றி ஏற்கனவே காதலியிடம் சொல்லி வைத்திருக்கிறான். காட்சி துவங்கும் போது ரயில் வந்து நிற்கிறது. எங்கே வரவேற்பை எல்லாம் காணவில்லையே என காதலி அவனுக்கு நினைவுபடுத்துகிறாள். “வெயிட் பண்ணுஎன அவன் சொல்கிறான். சற்று நேரத்தில் எதிர்பாராத இடத்தில் இருந்து ஒரு கூட்டம் ஆட்கள் தப்பாட்டம், ஒயிலாட்டம் என முழக்கியபடி அவனை வரவேற்கத் தோன்றுகிறார்கள். மெல்ல மெல்ல அவனும் அவர்களுடன் இணைந்து ஆடியபடி தன் காதலியையும் ஆடத் தூண்டுகிறான். இந்த ஜாலியான சற்று வினோதமான காட்சியை இப்படத்தின் முக்கிய காட்சி என்பேன். ரயில் இங்கே (“பதேர் பாஞ்சாலி”, “மூன்றாம் பிறைபடங்களில் போல) வளர்ச்சியற்ற பிரதேசம் ஒன்றில் நவீனத்துவம் நிகழ்த்தும் ஊடுருவலின் உருவகம். இந்த காட்சியின் சிறப்பு என்னவென்றால் திரைக்கதையாளராக கமல் ஒரு எதிர்-ஊடுருவலையும் மேளதாளக்காரர்களின் ரயில் நிலைய வருகையினால் காட்சிப்படுத்துகிறார் - நவீனத்துவமும் பழமையும் எதிரெதிர் சந்திக்கிறது; ஒன்றைப் பார்த்து மற்றது வியக்கிறது, நகைக்கிறது, கைகுலுக்குகிறது, பிறகு இசையின் கொண்டாட்டத்தினால் எல்லாம் மறந்து இரண்டும் ஒன்று கலக்கின்றன, இறுதியாக பிரக்ஞையுடன் இரண்டுமே தாம் யாரென உணர்ந்து தனித்தனியாகின்றன.
 “தேவர் மகனில்கல்வி என்பது நவீனத்துவத்தை குறிக்கிறது; நவீனக் கல்வி பெற்ற சக்தி அதை தன் கிராமத்துக்குக் கொண்டு வருகிறான். அதைக்கொண்டுகாட்டுமிராண்டிசனங்களை திருத்த முயல்கிறான். அதில் ஓரளவு வெல்கிறான், ஓரளவு தோற்கிறான், தன்னுடைய வருகையால், தன்வழி கல்வியின், சட்டதிட்டங்கள், முறைமைகளின் வருகையால், அந்த கிராமத்தில் அதிக சேதாரங்கள் இரு பக்கங்களிலும் நேர்வதைக் காண்கிறான்; மாற்றங்களும் மலர்ச்சியும் தோன்றுவதையும் பார்க்கிறான். இன்னொரு பக்கம் சாதி சார்ந்த பண்பாட்டு வடிவங்கள், பழக்கங்கள், நம்பிக்கைகள், கோயில், கோயிலை மையமிட்ட அதிகாரம், அதிகார அமைவுகளுக்குள் ஊறிப்போன காழ்ப்பு, கோபம், வன்முறை, விட்டுக்கொடுக்காத பிடிவாதம் ஆகியவை இப்படத்தில் பழமையைக் குறிக்கின்றன. அதாவது பழமை என்பதே கெட்டது, மாற வேண்டியது, சிகிச்சை தேவைப்படுகிறது எனும் பார்வையுடனே படம் ஆரம்பிக்கிறது. ஆனால் இவ்வளவு எதிர்மறையாக இருந்தாலும் கிராம மக்களின் (ஒரு சாதிக்குள் தான்) தியாக மனப்பான்மை, பாசம், அன்பு ஆகியவற்றையும் திரைக்கதை சித்தரிக்கிறது. இந்த சித்தரிப்புடன் சக்தியின் வாழ்க்கைப்பார்வை மெல்ல மெல்ல மாறுவதையும் படம் காட்டுகிறது.
 நவீனம் - பழமை என இரண்டிரண்டாக பிரிந்திருந்து ஒன்றுடன் ஒன்று உரசிச் செல்கிற நிலையில் இரண்டும் ஒன்று கலந்திட வேண்டிய தேவையை அப்பா பெரியத்தேவரின் மரணமும், கிராம வாழ்க்கையின் நேர்மறையான அம்சங்களை சக்தி புரிந்து கொள்வதும் ஏற்படுத்துகிறது. இதுவே தான் இந்த இரண்டும், ஒத்துப் போக முடியாத இந்த எதிரெதிர் வாழ்வுநிலைகள், தம்மை ஏற்படி மாற்றி தகவமைக்கப் போகின்றன (கிராமத்தை சக்தி மாற்றுவானா அல்லது கிராமத்துக்காக சக்தியே மாறுவானா?) எனும் சுவாரஸ்யத்தை கிளப்புகிறது.
 இந்த வாழ்க்கைப்பார்வைகளுக்கு இடையிலன மோதல் நடக்கப் போகிறது என்பதை மட்டுமல்ல, அது விநோதமாக சுவாரஸ்யமாக பதற்றமாக எதிர்பாராததாக இருக்கப் போகிறது என்பதை இந்த துவக்க ரயில் காட்சி உணர்த்தி விடுகிறது. “சக்திக்குள் இப்படி ஒரு கிராமத்தான் இருக்கிறானா?” என அவன் காதலி பின்னாளில் கேட்கப்போகும் கேள்விக்கான முகாந்திரத்தையும் ஸ்டைலான கால்சராய் சட்டையும், பங்க் தலைமுடி, தாடியுடன் சக்தி குத்தாட்டம் போட்டு ஊருக்குள் வரும் இதே காட்சி ஏற்படுத்துகிறது. “சாந்து பொட்டு சந்தனப் பொட்டுஎனப் பாடி சிலம்பமாடி எதிராளிகளை பின்னர் வெளுத்து வாங்கப்போகும் சக்தியை எதிர்கொள்வதற்கும் நம்மை தயாரிக்கிறது இக்காட்சி. அப்படியே போகப் போக மிருகமாகவே மாறி மாயத்தேவரின் தலையை வெட்டக் கூடும் என்பதை சொல்லாவிட்டாலும் அப்படி இவன் செய்தாலும் வியக்க வேண்டியதில்லை எனச் சொல்லுகிறது. அந்தளவுக்கு சவாலுக்கு பின்வாங்காதவனாக சக்தி முதல் காட்சியிலிருந்தே நமக்கு காட்டப்படுகிறான்.

சக்தி ஒரு கிராமத்தானாக, “காட்டுமிராண்டியாக”, தன் சாதிசனத்திடம் இருந்து பிரிக்க முடியாத மற்றொரு மண்ணின் மகனாக மாறுவான் என்பதற்கான குறியீடாக இசையும் அதற்கேற்ற ஆட்டமும் படமுழுக்க இருக்கிறது. இந்த துவக்கக் காட்சியிலும்  சக்தி தான் வெறுக்கிற, தப்பித்து செல்ல விரும்புகிற அந்த ஒன்று (மண்ணுக்காகவும் வன்மத்துக்காக ரத்தம் சிந்தத் தவிக்கிற வெறும் தேவன் மட்டுமே அவன் எனும் கருத்து), அந்த இயல்பு  அவனுடைய ஆளுமையின் தவிர்க்கமுடியாத ஒரு பகுதிதான் என இந்த தகரதப்பட்டையும் அது அவனுக்குள் கிளர்த்துகிற ஆவேசமும் நமக்கு சுட்டுகிறது. அவனை அவர்களிடமிருந்து பிரிப்பது ஒரு சிறிய கோடு மட்டுமே, அவன் அந்தப் பக்கம் சற்றே சாய்ந்தால் என்னவாகும்? அவன் உண்மையில்அவன்இல்லை, அவனுடைய நவீனத் தோற்றம் வெறும் வேடம் மட்டுமே என அவனுக்குப் புரிய வந்தால் என்னவாகும்? இந்த கேள்விகள் நமக்கு சக்தி குத்தாட்டம் போடும் இந்த சித்திரம் மூலம் மிக நுணுக்கமாக உணர்த்தப்பட்டு விடுகின்றன.

இதற்கும் இறுதியில் இதே ரயில் நிலையத்தில் கொலைகாரனாக சக்தி சிறைக்கு செல்ல ரயிலேறும் காட்சிக்கும் கவனிக்கத்தக்க தொடர்பு ஒன்று உள்ளது. அந்த கடைசிக் காட்சியுடன் இந்த இரட்டை நிலைக்கு ஒரு முழுமை ஏற்படுகிறது. ரயிலில் வந்தவன் ரயிலில் திரும்புகிறான் என்று மட்டுமல்ல, நவீனத்தின் நம்பிக்கைகளுடன் வந்தவன் அவன் ஏற்படுத்திய சலனங்களுடன், அவன் செய்த தியாகங்களுடன் திரும்பி செல்கிறான், ஒரே சமயம் நவீனமும் பழமையும் காயப்படுகிறது, அவனது கத்தியில் இருந்து சொட்டும் ரத்தம் இரண்டின் ரத்தமும் தான் என்பதையும் இறுதிக் காட்சி நமக்கு உணர்த்துகிறது.
 சக்தி தனக்குள் பதுங்கியிருக்கும் இந்தமிருகத்தைஉள்ளூர விரும்புவதை, அதில் அவன் லயிப்பதை, அந்த சமுதாயத்தில் தனக்குள்ள இடத்தை அவன் விரும்புவதை அதை ஒருபுறம் சிலாகித்தபடியே அவன் வெறுப்பதை அடுத்தடுத்த காட்சிகள் நமக்கு காட்டுகின்றன. அவனை சண்டைக்கு இழுப்பது, சீண்டுவது, கோபப்பட வைப்பது எல்லாம் அவனது விரோதிகளுக்கு சுலபமாக இருக்கிறது. பழிவாங்கும் நோக்கில் மனித உயிர்கள் பலிவாங்கப்படுவதும் அதே நேரம் அவனை மிகவும் தொந்தரவு செய்யத்தான் செய்கிறது. அப்போது அவன் தன் கூட்டத்தாரையும் பங்காளிகளையும் கண்டு அருவருப்பு கொள்கிறான். அவர்களைத் திருத்தி நல்வழிப்படுத்துவதே படித்த இளைஞனாக அவனது பொறுப்பு என பெரியத்தேவர் (சிவாஜி) சக்திக்கு (கமலுக்கு) அறிவுரைக்கும் பிரசித்தமான காட்சியுடன் ஒரு திருப்புமுனை வருகிறது. அவன் அதற்காக நிறைய முயல்கிறான். ஆனால் அந்த முயற்சிகள் தன் ஜனங்களுக்கும் பங்காளிகளுக்கும் புரிவதில்லை என்பதையும், அவர்கள் அதனால் கூடுதலாக மூர்க்கம் கொள்வதையும் அறிகிறான். அது மட்டுமல்ல இந்த முயற்சிகள் வியர்த்தமானவை என்பதை அவனது உபமனம் உணர்ந்து கொள்கிறது. அது ரத்தக்களறியில் கூத்தாட விரும்பும் மிருகத்தின் குரல். அவன் அதற்கும் உள்ளுக்குள் செவிசாய்த்தபடியே தான் வருகிறான். அதுவே கடைசியில் அவனை கொலை செய்து சிறைக்கு செல்லச் செய்கிறது

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...