பேஸ்புக்கில் ஹேமா செபைர் ஒரு சுவாரஸ்யமான கேள்வியை எழுப்பியிருந்தார்: நான் அப்பா வந்தான் என எழுதுவதில்லை, ஆனால் அம்மா வந்தாள், போனாள், சொன்னாள் என சுலபத்தில் சொல்கிறோம். சில இடங்களில் அம்மா வந்தார், போனார் என்றும் எழுதுகிறோம். ஏன் இந்த பாகுபாடு?
இந்த கேள்விக்கு பதில் பெண்களை நாம் குடும்ப அமைப்புக்குள் குறைத்து மதிப்பிடுகிறோம் என்பது மட்டுமல்ல, அதுவும் ஒரு முக்கிய காரணம் என்றாலும். “நீ” என்று ஒருமையில் அழைப்பதில் ஒரு அன்னியோன்யம் இருக்கிறது. அது “நீங்களில்” காணாமல் போய் விடுகிறது.
வி.ஐ.பி படத்து பாட்டில் “அம்மா அம்மா
நீ எங்கே அம்மா?”
என்பதுக்கும்
“அம்மா அம்மா
நீங்க எங்கே அம்மா?”
என்பதற்கும் வித்தியாசம் உண்டு இல்லையா?
நான் என் அம்மாவை என்றுமே மரியாதைக்குரிய நபராக அல்ல, அன்புக்கும் பாசத்துக்கும் ‘உரியவளாகவே’ கண்டிருக்கிறேன். ஆனால் அப்பா என்றுமே எனக்கு தொலைவில் இருப்பவர். ஒரு பிரச்சனை என்றால் அம்மா வந்து தோளை அணைப்பதைப் போல, ஆதுரமாய் பேசுவதைப் போல அப்பா செய்ததில்லை. ஆக இந்த இடத்தில் அம்மா எனும் பாத்திரம் குறைத்து மதிப்பிடுவதற்கான குறிப்பானாக ஒருமை விகுதி வரவில்லை.
ஆனால் இதற்கும் ஒரு எல்லை வகுத்துள்ளோம் - நானோ அக்காவோ அம்மாவை ஒருமையில் அழைத்தாலும் வாடி போடி என ஏசியதில்லை. கோபத்தில் கத்தினாலும் “நீ போம்மா” என்கிற கணக்கில் பேசுவேனே தவிர மட்டம் தட்டி விட மாட்டேன். ஒருவேளை என் அம்மா நிறைய படித்து ஒரு கல்லூரியின் முதல்வராக இருந்திருந்தாலும் வீட்டில் அவரிடத்து இப்படி ஒருமையில் அழைத்தே இணக்கமாக அன்னியோன்யமாக இருந்திருப்போம் எனத் தோன்றுகிறது.
சில குடும்பங்களில் இது போல அப்பா மிக அன்னியோன்யமாய் பிள்ளைகளிடத்து இருப்பதை, அவர்கள் அவரை நோக்கி மகள்கள் “நீ போ டேடி, ஒரு லூசு டேடி” என்றெல்லாம் கொஞ்சுவதைக், கண்டிப்பதைப் பார்த்திருக்கிறேன். ஆனால் பெரும்பாலான ஆண்களுக்கு இப்படி தளைகளை உடைத்து பாசத்துடன் பிள்ளைகளிடம் பழகத் தெரியாமல் பந்தா பரமசிவமாக இருப்பதால் இந்த பன்மை விகுதி இன்றும் நிலைக்கிறது.
இதைப் பற்றி நினைக்கும் போது தி.ஜாவின் “அம்மா வந்தாள்” நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியாது. இது அம்மாவுக்கும் மகனுக்குமான பாலியல் ஈர்ப்பு கலந்த பாச உறவைப் பேசும் நாவல். உளவியலில் இதை ஈடிபல் காம்பிளக்ஸ் என்கிறார்கள். இதன் பின்னால் ஒரு கதை உள்ளது:
ஈடிபஸ் எனும் கிரேக்க இளவரசன் தன் தந்தையைக் கொன்று தாயை மணப்பான் எனும் சாபம் பெற்றவன். அவன் இந்த கொடுமையை செய்யாதிருக்கும் பொருட்டு அவனது தந்தையான மன்னர் அவன் மழலையாக இருக்கையில் அவனது காலை ஊனமாக்கி விட்டு, அவனைக் கொல்லும்படி ஒரு சேவகனிடம் கொடுத்தனுப்புகிறான். ஆனால் அவனோ கொல்லாமல் வனத்தில் விட்டு விட ஈடிபஸ் பிழைத்து ஒரு திறமையான இளைஞனாக வளர்ந்து வருகிறான். ஒருமுறை ஈடிபஸ் ஒரு கவணை வைத்து அடித்ததில் தற்செயலாக அவனது அப்பா இறந்து விடுகிறார். மன்னரைக் கொன்ற அவன் புதிய மன்னராக அரியணை ஏறுகிறான். அப்போதைய வழக்கப்படி தாயை மணக்கிறான். பின்னர் இந்த பாதகம் பற்றின உண்மை அவனுக்குத் தெரிய வர மனம் உடைந்து தன் கண்களைத் தானே பறித்து குருடாக்கி விட்டு மிச்ச வாழ்க்கையை துயரத்தில் கழிக்கிறான்.
இந்த கதையில் ஒரு நுட்பமான சேதி பதிந்திருப்பதாக உளவியல் மேதை சிக்மண்ட் பிராயிட் கருதினார் - ஒவ்வொரு ஆண் குழந்தைக்கும் இளம் பிராயம் முதற்கொண்டே தாயுடல் மீது ஈர்ப்பும் அவளை தனதாக்க வேண்டும் எனும் இச்சையும் ஏற்படுகிறது. ஆனால் அதற்கு தனது சொந்த அப்பாவே போட்டி என்பதால் ஆண் குழந்தை தனது ஆசையை வெளியே காட்ட அஞ்சுகிறான். ஒருவேளை எதிர்காலத்தில் தன்னால் தன் அப்பாவுக்கு எந்த ஆபத்தும் வரக்கூடாது எனப் பதறுகிறான். இந்த அச்சமும் பதற்றமும் அவனது மனதுக்குள் அமுக்கப்பட்டு சமூகத்தால் ஏற்கத்தக்க உணர்ச்சிகளாக கருத்துருக்களாக பின்னர் வெளிப்படுகின்றன என பிராயிட் சொன்னார். வளர்ந்து அம்மாவுக்கு சமானமாக இச்சிக்கத்தக்க, நேசிக்கத்தக்க ஒரு பெண்ணை அவன் தேர்ந்தெடுத்து நேசித்து உறவுகொள்ளும் இயல்பு வாழ்க்கைக்கு சென்றால் நல்லது. அப்போது அவன் முதிர்ந்து விட்டான் என அர்த்தம். ஆனால் சில ஆண்களால் இது ஒருபோதும் முடிவதில்லை. அவர்களின் வாழ்க்கை பூரா வயதில் மூத்த ஆண்களுடன் போட்டி பொறாமையுணர்விலும் மூத்த பெண்களிடத்து ஈர்ப்பிலும் கழியும். தாய் மீதான இச்சை ஒரு விடுபடாத புதிராக அவனுக்குள் நிலைத்திருக்கும். இது சமூகத்துடன் தொடர்ந்து முரண்படுகிறவனாக, முரடனாக, குற்றவாளியாக அவனை மாற்றும். அவன் என்றுமே நிம்மதி பெற முடியாது. இந்நிலையை பிராயிட் ஈடிபல் காம்பிளக்ஸ் என்றார்.
இந்த கோணத்தில் இருந்து யோசிக்கையில் ஒருமையில் அம்மாவை அழைப்பதில் உள்ள லாபம் நமக்குப் புரிகிறது - ஒரு நித்திய இளமையை இந்த ஒருமை அவளுக்கு வழங்குகிறது. ஒரு மகனைப் பொறுத்தவரையில் தனக்கு சமானமானவளாக தன் அம்மாவைக் கருத முடிகிறது. அவளுடைய அழகையும் இளமையையும் கற்பனையில் மொழியில் நீடித்திருக்க செய்ய முடிகிறது. “அவள், இவள், வந்தாள், போனாள்” எனும் சொற்கள் அவனுக்கு புலனின்பம் அளிக்கின்றன. “அம்மா வந்தாள்” என தலைப்பு அமைவதற்குப் பின்னால் இவ்வளவு உளவியல் இருக்கிறது.
இதை மற்றொரு முக்கிய விசயத்தை சொல்லியே நான் முடிக்க வேண்டும் - ஒரு மகனுக்கு தன் தாய் மீது ஆசை வர முடியும், அதை ஏற்காமல் அவன் தள்ளிப்போடுகிறான், மனதுக்குள் புதைக்கிறான் எனும் கருத்தை நான் ஏற்கவில்லை. பிராயிடுக்கு அடுத்து வந்த உளவியல் மேதையான லக்கான் தான் இதற்கு ஒரு தெளிவான விளக்கத்தைக் கொடுத்தார். அவர் தாயுடலை இந்த உலகின் அழகுணர்ச்சி, படைப்பூக்கம், இயற்கையின் கட்டற்ற நிலை, நெகிழ்வு, கற்பனை போன்றவற்றுக்கான உருவகமாகக் கண்டார். தந்தை இதற்கு நேர் எதிராக அதிகார சமூக அமைப்புகளின் உருவகம். நாம் பின்னதை மறுத்தோ அழித்தோ தான் முன்னதை அடைய முடியும். இதன்படி நாம் அம்மா எனும் போது இயற்கை நமக்கு வழங்கிய பேரன்பாலும் கட்டற்ற நிலையாலும் ஆன ஒரு மனவுலகையே குறிக்கிறோம்.
இயற்கையை ஏன் அவர், இவர் என அழைக்கணும்? நிலவே என்னிடம் நெருங்காதே என்றுதானே சொல்கிறோம், நெருங்காதீங்க என்றா?
இப்படி பிராயிடில் இருந்து லக்கானின் பஞ்சாயத்துக்கு இந்த பிரச்சனையைக் கொண்டு வந்தாலும் தீர்ப்பு “வந்தாள்” எனச் சொல்லலாம் என்பதே.
பி.கு: கடும்போக்கு பெண்ணியவாதிகள் இந்த தீர்ப்பை ஏற்க மாட்டார்கள் என்பதால் அவர்களை “அவர்”, “இவர்” என்றே அழைப்போம். அவர்கள் இந்த உலகின் ‘தந்தையர்’.

கருத்துகள்