முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அம்மா வந்தாளா வந்தாரா?



பேஸ்புக்கில் ஹேமா செபைர் ஒரு சுவாரஸ்யமான கேள்வியை எழுப்பியிருந்தார்: நான் அப்பா வந்தான் என எழுதுவதில்லை, ஆனால் அம்மா வந்தாள், போனாள், சொன்னாள் என சுலபத்தில் சொல்கிறோம். சில இடங்களில் அம்மா வந்தார், போனார் என்றும் எழுதுகிறோம். ஏன் இந்த பாகுபாடு? 


இந்த கேள்விக்கு பதில் பெண்களை நாம் குடும்ப அமைப்புக்குள் குறைத்து மதிப்பிடுகிறோம் என்பது மட்டுமல்ல, அதுவும் ஒரு முக்கிய காரணம் என்றாலும். “நீ” என்று ஒருமையில் அழைப்பதில் ஒரு அன்னியோன்யம் இருக்கிறது. அது “நீங்களில்” காணாமல் போய் விடுகிறது.
வி.ஐ.பி படத்து பாட்டில் “அம்மா அம்மா 
நீ எங்கே அம்மா?”
என்பதுக்கும்
“அம்மா அம்மா
நீங்க எங்கே அம்மா?”
என்பதற்கும் வித்தியாசம் உண்டு இல்லையா?

 நான் என் அம்மாவை என்றுமே மரியாதைக்குரிய நபராக அல்ல, அன்புக்கும் பாசத்துக்கும் ‘உரியவளாகவே’ கண்டிருக்கிறேன். ஆனால் அப்பா என்றுமே எனக்கு தொலைவில் இருப்பவர். ஒரு பிரச்சனை என்றால் அம்மா வந்து தோளை அணைப்பதைப் போல, ஆதுரமாய் பேசுவதைப் போல அப்பா செய்ததில்லை. ஆக இந்த இடத்தில் அம்மா எனும் பாத்திரம் குறைத்து மதிப்பிடுவதற்கான குறிப்பானாக ஒருமை விகுதி வரவில்லை.
ஆனால் இதற்கும் ஒரு எல்லை வகுத்துள்ளோம் - நானோ அக்காவோ அம்மாவை ஒருமையில் அழைத்தாலும் வாடி போடி என ஏசியதில்லை. கோபத்தில் கத்தினாலும் “நீ போம்மா” என்கிற கணக்கில் பேசுவேனே தவிர மட்டம் தட்டி விட மாட்டேன். ஒருவேளை என் அம்மா நிறைய படித்து ஒரு கல்லூரியின் முதல்வராக இருந்திருந்தாலும் வீட்டில் அவரிடத்து இப்படி ஒருமையில் அழைத்தே இணக்கமாக அன்னியோன்யமாக இருந்திருப்போம் எனத் தோன்றுகிறது. 
 சில குடும்பங்களில் இது போல அப்பா மிக அன்னியோன்யமாய் பிள்ளைகளிடத்து இருப்பதை, அவர்கள் அவரை நோக்கி மகள்கள் “நீ போ டேடி, ஒரு லூசு டேடி” என்றெல்லாம் கொஞ்சுவதைக், கண்டிப்பதைப் பார்த்திருக்கிறேன். ஆனால் பெரும்பாலான ஆண்களுக்கு இப்படி தளைகளை உடைத்து பாசத்துடன் பிள்ளைகளிடம் பழகத் தெரியாமல் பந்தா பரமசிவமாக இருப்பதால் இந்த பன்மை விகுதி இன்றும் நிலைக்கிறது.

இதைப் பற்றி நினைக்கும் போது தி.ஜாவின் “அம்மா வந்தாள்” நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியாது. இது அம்மாவுக்கும் மகனுக்குமான பாலியல் ஈர்ப்பு கலந்த பாச உறவைப் பேசும் நாவல். உளவியலில் இதை ஈடிபல் காம்பிளக்ஸ் என்கிறார்கள். இதன் பின்னால் ஒரு கதை உள்ளது:
 ஈடிபஸ் எனும் கிரேக்க இளவரசன் தன் தந்தையைக் கொன்று தாயை மணப்பான் எனும் சாபம் பெற்றவன். அவன் இந்த கொடுமையை செய்யாதிருக்கும் பொருட்டு அவனது தந்தையான மன்னர் அவன் மழலையாக இருக்கையில் அவனது காலை ஊனமாக்கி விட்டு, அவனைக் கொல்லும்படி ஒரு சேவகனிடம் கொடுத்தனுப்புகிறான். ஆனால் அவனோ கொல்லாமல் வனத்தில் விட்டு விட ஈடிபஸ் பிழைத்து ஒரு திறமையான இளைஞனாக வளர்ந்து வருகிறான். ஒருமுறை ஈடிபஸ் ஒரு கவணை வைத்து அடித்ததில் தற்செயலாக அவனது அப்பா இறந்து விடுகிறார். மன்னரைக் கொன்ற அவன் புதிய மன்னராக அரியணை ஏறுகிறான். அப்போதைய வழக்கப்படி தாயை மணக்கிறான். பின்னர் இந்த பாதகம் பற்றின உண்மை அவனுக்குத் தெரிய வர மனம் உடைந்து தன் கண்களைத் தானே பறித்து குருடாக்கி விட்டு மிச்ச வாழ்க்கையை துயரத்தில் கழிக்கிறான்.
 இந்த கதையில் ஒரு நுட்பமான சேதி பதிந்திருப்பதாக உளவியல் மேதை சிக்மண்ட் பிராயிட் கருதினார் - ஒவ்வொரு ஆண் குழந்தைக்கும் இளம் பிராயம் முதற்கொண்டே தாயுடல் மீது ஈர்ப்பும் அவளை தனதாக்க வேண்டும் எனும் இச்சையும் ஏற்படுகிறது. ஆனால் அதற்கு தனது சொந்த அப்பாவே போட்டி என்பதால் ஆண் குழந்தை தனது ஆசையை வெளியே காட்ட அஞ்சுகிறான். ஒருவேளை எதிர்காலத்தில் தன்னால் தன் அப்பாவுக்கு எந்த ஆபத்தும் வரக்கூடாது எனப் பதறுகிறான். இந்த அச்சமும் பதற்றமும் அவனது மனதுக்குள் அமுக்கப்பட்டு சமூகத்தால் ஏற்கத்தக்க உணர்ச்சிகளாக கருத்துருக்களாக பின்னர் வெளிப்படுகின்றன என பிராயிட் சொன்னார். வளர்ந்து அம்மாவுக்கு சமானமாக இச்சிக்கத்தக்க, நேசிக்கத்தக்க ஒரு பெண்ணை அவன் தேர்ந்தெடுத்து நேசித்து உறவுகொள்ளும் இயல்பு வாழ்க்கைக்கு சென்றால் நல்லது. அப்போது அவன் முதிர்ந்து விட்டான் என அர்த்தம். ஆனால் சில ஆண்களால் இது ஒருபோதும் முடிவதில்லை. அவர்களின் வாழ்க்கை பூரா வயதில் மூத்த ஆண்களுடன் போட்டி பொறாமையுணர்விலும் மூத்த பெண்களிடத்து ஈர்ப்பிலும் கழியும். தாய் மீதான இச்சை ஒரு விடுபடாத புதிராக அவனுக்குள் நிலைத்திருக்கும். இது சமூகத்துடன் தொடர்ந்து முரண்படுகிறவனாக, முரடனாக, குற்றவாளியாக அவனை மாற்றும். அவன் என்றுமே நிம்மதி பெற முடியாது. இந்நிலையை பிராயிட் ஈடிபல் காம்பிளக்ஸ் என்றார்.

இந்த கோணத்தில் இருந்து யோசிக்கையில் ஒருமையில் அம்மாவை அழைப்பதில் உள்ள லாபம் நமக்குப் புரிகிறது - ஒரு நித்திய இளமையை இந்த ஒருமை அவளுக்கு வழங்குகிறது. ஒரு மகனைப் பொறுத்தவரையில் தனக்கு சமானமானவளாக தன் அம்மாவைக் கருத முடிகிறது. அவளுடைய அழகையும் இளமையையும் கற்பனையில் மொழியில் நீடித்திருக்க செய்ய முடிகிறது. “அவள், இவள், வந்தாள், போனாள்” எனும் சொற்கள் அவனுக்கு புலனின்பம் அளிக்கின்றன. “அம்மா வந்தாள்” என தலைப்பு அமைவதற்குப் பின்னால் இவ்வளவு உளவியல் இருக்கிறது.

இதை மற்றொரு முக்கிய விசயத்தை சொல்லியே நான் முடிக்க வேண்டும் - ஒரு மகனுக்கு தன் தாய் மீது ஆசை வர முடியும், அதை ஏற்காமல் அவன் தள்ளிப்போடுகிறான், மனதுக்குள் புதைக்கிறான் எனும் கருத்தை நான் ஏற்கவில்லை. பிராயிடுக்கு அடுத்து வந்த உளவியல் மேதையான லக்கான் தான் இதற்கு ஒரு தெளிவான விளக்கத்தைக் கொடுத்தார். அவர் தாயுடலை இந்த உலகின் அழகுணர்ச்சி, படைப்பூக்கம், இயற்கையின் கட்டற்ற நிலை, நெகிழ்வு, கற்பனை போன்றவற்றுக்கான உருவகமாகக் கண்டார். தந்தை இதற்கு நேர் எதிராக அதிகார சமூக அமைப்புகளின் உருவகம். நாம் பின்னதை மறுத்தோ அழித்தோ தான் முன்னதை அடைய முடியும். இதன்படி நாம் அம்மா எனும் போது இயற்கை நமக்கு வழங்கிய பேரன்பாலும் கட்டற்ற நிலையாலும் ஆன ஒரு மனவுலகையே குறிக்கிறோம். 
இயற்கையை ஏன் அவர், இவர் என அழைக்கணும்? நிலவே என்னிடம் நெருங்காதே என்றுதானே சொல்கிறோம், நெருங்காதீங்க என்றா?
இப்படி பிராயிடில் இருந்து லக்கானின் பஞ்சாயத்துக்கு இந்த பிரச்சனையைக் கொண்டு வந்தாலும் தீர்ப்பு “வந்தாள்” எனச் சொல்லலாம் என்பதே.

பி.கு: கடும்போக்கு பெண்ணியவாதிகள் இந்த தீர்ப்பை ஏற்க மாட்டார்கள் என்பதால் அவர்களை “அவர்”, “இவர்” என்றே அழைப்போம். அவர்கள் இந்த உலகின் ‘தந்தையர்’.

கருத்துகள்

https://antonyfrancisomd.blogspot.com/ இவ்வாறு கூறியுள்ளார்…
"இதைப் பற்றி நினைக்கும் போது தி.ஜாவின் “அம்மா வந்தாள்” நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியாது. இது அம்மாவுக்கும் மகனுக்குமான பாலியல் ஈர்ப்பு கலந்த பாச உறவைப் பேசும் நாவல்." நான் நாவலைப் படித்திருக்கிறேன். ஆனால் அதில் ஈடிபஸ் காம்ப்ளக்ஸ் இருப்பது போன்ற உணரவில்லை. அம்மாவுக்கு திருமணத்திற்கு மீறிய ஒரு உறவு இருக்கிறது. அது மகனுக்குள் ஏற்படுத்தும் குழப்பங்களை கூறுவதாக மட்டுமே நினைவில் வைத்திருக்கிறேன். மீண்டும் ஒரு முறை வாசிக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.
https://antonyfrancisomd.blogspot.com/ இவ்வாறு கூறியுள்ளார்…
இது அம்மாவுக்கும் மகனுக்குமான பாலியல் ஈர்ப்பு கலந்த பாச உறவைப் பேசும் நாவல். உளவியலில் இதை ஈடிபல் காம்பிளக்ஸ்.... எனது எளிய வாசிப்பில் ஒரு தாயின் திருமணத்தை மீறிய உறவைத் தெரிந்துகொள்ளும் மகனின் உணர்வுகளையும், அவன் வாழ்வில் ஏற்படுத்தும் விளைவுகளையும் பற்றிய கதை என்றே நினைத்திருந்தேன். கொஞ்சம் உங்கள் கருத்தை விளக்கி சொல்லுங்கள் தயவு செய்து! நன்றி

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இன்று அவளது ஐம்பதாவது திருமண நாளாக இருக்க வேண்டும் (ஆன் கார்ஸன் கவிதைகள் 3)

  ரொமானிய சுவரை நோக்கி உரையாற்றுகிறது குளிர் - ஆன் கார்ஸன் - தமிழில் ஆர். அபிலாஷ் ஒளி மட்டற்று ( சிறைப்படுத்தப்பட்டது ) மேலும் , நிழல்கள் விழக் காத்திருக்கின்றன தலைமறைப்புகளைப் போல . மூளை தட்டுகிறது இருமுறைகள் உப்புக்காக .   WOULD BE HER 50TH WEDDING ANNIVERSARY TODAY Cold orates upon a Roman wall. Light is extreme (caught) and shadows wait like hoods to drop. Brain taps twice for salt. Was it Ovid who said, There is so much wind here stones go blank. (Excerpt From Decreation, Anne Carson) வாசகக் குறிப்பு : இதுவும் ஒரு கீறல் ஓவியம் போன்ற கவிதைதான் . விளக்கக் குறிப்புகளோ விவரணைகளோ இல்லை . கதையாடல் கவிதையென்றாலும் யார் , என்ன , எப்படி , ஏன் ஆகிய தகவல்களை நாமே அனுமானிக்க வேண்டும் . இப்போது ஒவ்வொரு சொல்லும் ஒரு உருவகமாகிறது ( ஏனெனில் தலைப்பில் உள்ள திருமண பந்தம் குறித்த விபரம் இதைக் குறியீடாக்காமல் தடுக்கிறது ). ஐம்பதாவது திருமண நாளெனில் அவருக்கு வயது 70 இருக்குமா ? அவர் ரொமானிய வரலாற்றுச் சின்னங்களைக் காண வந்...

இருளின் காலம்

ஊடகவியலாளர்களைக் கொத்துக்கொத்தாகக் கைது பண்ணுகிறார்கள் எனும்போதே நெருக்கடி நிலை ஆரம்பித்துவிட்டது ஊர்ஜிதம் ஆகிறது. அதுவும் போராட்டங்களைப் பதிவு பண்ணுவதற்குப் போனவர்களை. ஒட்டுமொத்தமாக போராடுபவர்களைத் தூக்கிச் சிறையில் வைப்பது, அவர்களைக் குறித்த விபரங்கள், காணொளிகள், செய்திகள் வெளிவராமல் பார்ப்பதே பாஜக அரசின் திட்டம். இனி அடுத்து என்னவெல்லாம் செய்வார்கள்? எதிர்க்கட்சிகளின் செயல்பாட்டாளர்களை கண்ட இடத்தில் கைது, மறைமுகமாக பல ஊடகங்கள் முடக்கம், மக்கள் சில பகுதிகளில் பயணிக்க மறைமுகத் தடை, எந்தெந்த விசயங்கள் ஊடகங்களில் பேசப்படலாம் என்பதற்கான மறைமுக அறிவுறுத்தல் எனப் போகும். முடிவில் எதிர்க்கட்சிகள் தாம் ஆளும் மாநிலங்களில் போராடினால் ஆட்சிக் கலைப்பு நடக்கும். ஆளுநர் ஆட்சி வரும். இப்போதைக்கு நீதிமன்றங்கள் பிணை வழங்குவதால் சிறிது அவகாசம் போராளிகளுக்கும் எதிர்க்கட்சியினருக்கும் கிடைத்துள்ளது. வெளிவர முடியாத சட்டங்களில் கைது நடக்கும்போது நிலைமைத் தீவிரமாகும். ராகுல் காந்தி இப்போராட்டங்களை முன்னறிந்து பாராளுமன்றத்தில் பேசியது நினைவுக்கு வருகிறது. அதாவது கரப்பான்கள் தோன்றும் முன்பே இப்படியான போராட்ட...

தமிழ்நாடு ஏன் க்யானேஷ் குமாருக்கு எதிராகப் பொங்குவதில்லை?

  சினிமா போதையின் பிரச்சினைகளைப் பற்றி தமிழ்நாட்டு எழுத்தாளர்களே தொடர்ந்து அழுது புலம்பி சபித்து சமாதானமாகி இருக்கிறார்கள் இதுவரை. ஆனால் இப்போது முதன்முறையாக வெகுமக்கள் இடையில் சினிமா வெறியர்கள் அரசியல்மயமாவதற்கு எதிர்ப்பு வந்திருக்கிறது. குறிப்பாக 40-70 வயதுக்கு உட்பட்டோர் பேசுவதைக் கேட்டால் புரியும். அரசியல் நோக்கர்களும் இதனால் கசப்படைகிறார்கள். தமிழ்நாட்டினர் எப்படி மூளைச்சலவை செய்யப்பட்டனர் என திருப்பூர் குணாவும், ஜீவாவும், ஆர்.கே. சண்முகவேலும் சேர்ந்து ஒரு புத்தகமே எழுதியிருக்கிறார்கள் ("டிஜிட்டல் போதையில் நாம் யாரையும் தேர்ந்தெடுக்கவில்லை"). அவர்கள் சமூகவலைதளச் செயல்பாடுகளும் தரவுப் பகுப்பாய்வுத் தொழில்நுட்பமும் விஜய்யின் வெற்றிக்கு எப்படிப் பயன்பெற்றன என்றே பிரதானமாகப் பேசினாலும் விஜய்யின் சினிமாப் புகழ் அவரை வைத்து நடந்த டிஜிட்டல் பிரச்சாரத்துக்கு அடிப்படை என்பதை அவர்கள் மறுக்கவில்லை. கடந்த தேர்தலின் போதிருந்தே 'தற்குறி' எனும் சொல் இதற்கென மக்களால் பரவலாகப் பயன்படுத்தப்படுவதையும் பார்க்கிறோம். 'தற்குறி' சினிமா ரசிக மனநிலை, சினிமா மந்தைத்தனம் ஆகியவற்றை...