முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

லாக் டவுனும் எடைக்குறைப்பும்




இந்த லாக்டவுனில் சிலர் பிரபலங்கள் மூச்சைப் பிடித்து டயட் இருந்து எடை குறைத்து அந்தஎப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேனேபடங்களை இன்ஸ்டாவில் பதிவேற்றில் பரபரப்பை ஏற்படுத்த இன்னும் பல பிரபலமல்லாதவர்களும் கூட தங்கள் உணவுப்பழக்கம், எடை குறைப்பு ஆகியவற்றில் மிகுந்த அக்கறை எடுத்து வருவதைப் பார்க்கிறேன். அவர்களிடம் ஏன் இந்த திடீர் லட்சியம், திடீர் தன்முனைப்பு, வெறி எனக் கேட்டால் அவர்கள் பொதுவாக சொல்வதுலாக்டவுனில் வெளியே செல்லத் தேவையில்லை, வீட்டு உணவை உண்ணலாம், கட்டுப்பாடாய் இருக்கலாம், அது எளிதாக இருக்கிறதுஎன்பது. இதை ரிவர்ஸில் பார்த்தால் வெளியே அதிகம் செல்வது, அதனாலே வெளி உணவை கட்டுப்பாடின்றி புசிப்பது எடை அதிகமாகக் காரணமாகிறது.

 இந்த தரப்பு எல்லாருக்கும் பொருந்தி வராது - என்னை எடுத்துக் கொள்ளுங்கள்; லாக்டவுனில் என் எடை அதிகரித்து விட்டது. இத்தனைக்கும் நாம் மிகக் கட்டுப்பாடாக சாப்பிட்டேன். ஏனென்றால் லாக்டவுனுடன் நான் அசைவது அப்படியே நின்று விட்டது. (அதன் பிறகு நான் கிரித்திகாதரனின் பரிந்துரைப்படி நனிசைவ  டயட் இருந்து எடையை குறைத்தது வேறு கதை.) இன்னும் சிலருக்கு வேறு பல சிக்கல்கள் இருக்கலாம். பொதுவாக வெளியே போவது நமது ஆரோக்கியத்திற்கு உலை வைக்கிறது எனும் ஒரு கருத்தை எடுத்துக் கொண்டால் அது சில சுவாரஸ்யமான முடிவுகளைத் தருகிறது:


1) பஜ்ஜி, சொஜ்ஜி, பர்கர் என டீ வேளையில் தின்றவர்கள், கிடைக்கும் வாய்ப்பிலெல்லாம் பிரியாணியை முழுங்கியவர்கள், ஓட்டலில் அதிக எண்ணெய், மைதாமாவால் செய்யப்பட்ட பண்டங்களை அதிகமாய் உண்டவர்கள் இப்போது அதெல்லாம் கிடைக்காமல் வாழ்க்கையில் முதன்முதலாக எளிய வீட்டு உணவுடன் திருப்திப்படுகிறார்கள். (சிலர் வெளியே வாங்கி வந்து கொறிப்பது வேறு விசயம்.) எனில் வெளி உலகம் நம்மை அதிக எடை போடச் செய்து பல மெட்டோபோலிக் வியாதிகளுக்கு வழிவகுக்கிறதா?


2) இந்த eating out கலாச்சாரமே இந்தியாவில் கடந்த இருபது வருடங்களில் வந்தது. அமெரிக்கர்களுக்கு இது வெகுமுன்பே அறிமுகமாகி விட்டது. Fast Food Nation என்ற தனது நூலில் எரிக் ஸ்குலோசர் எப்படி அமெரிக்காவில் (முன்பிருந்த ரயில் பாதைகளை ஒழித்து) பரவலாக சாலைகள் அமைக்கப்பட்டது, எப்படி அது கார்களை எல்லாருமே வாங்குவதற்கு முன்கூறாக அமைந்தது, இதனால் மக்கள் அதிகமாய் காரில் பயணிக்க துரித உணவு கலாச்சாரம் அமெரிக்க அன்றாட வாழ்க்கையில் நுழைந்தது என விளக்குகிறார். இந்த துரித உணவுப் பழக்கம் அமெரிக்கர்களில் கணிசமானோரை விரைவில் அதிக எடை கொண்டவர்களாக, மெட்டோபோலிக் நோய்களால் அவதிப்படுகிறவர்களாக மாற்றியது. பின்னர் இவர்களுக்கு சிகிச்சை அளித்த, மருந்துகள் கண்டுபிடிக்க பல புதிய ஆய்வாளர்கள், கார்ப்பரேட் மருத்துவர்கள் தோன்றினார்கள். அதாவது நோயைத் தோற்றுவித்ததும் அதற்கு மருந்துகளை கண்டுபிடித்து சிகிச்சைகளை வழங்கி கோடானுகோடி மதிக்கத்தக்க வணிகமாக மருத்துவத்தை மாற்றினது வரை ஒவ்வொன்றுக்கும் பேராசை மிக்க கார்ப்பரேட்டுகளே காரணம். ஆம், போக்குவரத்துக்கான கட்டமைப்புகள் வளர்ச்சிக்கு அவசியமே - ஆனால் மக்கள் கார்களை அதிகம் வாங்கும்படி நெருக்கடி அளிக்க பொதுப்போக்குவரத்தை ஒழித்து, அடுத்து வெளியே அதிகம் இருக்க நேரும் மக்களை தூண்டிலிட்டு சரியாக துரித உணவுகளுக்கு அடிமையாக்குவது எந்த வகையான வளர்ச்சி? கட்டற்ற சந்தை வணிகத்தின் மிகப்பெரிய சிக்கல் இது. இந்தியாவில் கடந்த இரு பத்தாண்டுகளில் இதே வரலாறு தான் கார்ப்பரேட்டுகளால் நிகழ்த்தப்படுகிறது


3) இங்கு ஏழைகளும் மத்திய வர்க்கமும் அதிகம், மக்கள் தொகை அமெரிக்காவை விட பல மடங்கு பெரிது என்பதால் நம்மை அவ்வளவு துரிதமாக அடிமையாக்க முடியவில்லை. இங்கு மத்திய வர்க்கத்துக்கு ஏற்றபடியே வெளி உணவுக் கலாச்சாரம் தோன்றியது; அது நிச்சயம் அமெரிக்க உணவுப்பண்பாட்டுக்கு இணையாக நம் உடல் நலத்தை சீரழிக்கிறது எனலாம். இன்று பல மாணவர்கள் காலை உணவாக சமோசா சாப்பிடுவதை நான் வியப்பாகப் பார்க்கிறேன். முன்பு என் ஊரில் சில வீடுகளில் தான் சர்க்கரை இருக்கும், பலர் கருப்பட்டி பயன்படுத்துவார்கள். இன்றோ நாம் முன்பை விட நூறு மடங்கு அதிக சர்க்கரையை உணவுகள் வழி சிறு சிறுக ஒரே நாளில் எடுத்துக் கொள்கிறோம். எண்ணெய்யை விட சர்க்கரையே மிகப்பெரிய உயிர்க்கொல்லி என இன்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள். இதுவே நமது இன்றைய சர்க்கரை நோய், ரத்தக்கொதிப்பு, ரத்தக்கொழுப்பு என இதயத்துக்கு உலை வைக்கும் பல வியாதிகளுக்குக் காரணம் என்றால் இதற்கு யார் பொறுப்பாக வேண்டும் - சமூகமா தனிமனிதனா?

4) நாம் ஆரோக்கியம் பற்றி அதிகமும் பரிந்துரைகளுக்கு நாடுவது மருத்துவர்களை. அவர்களோ அமெரிக்க கார்ப்பரேட் கலாச்சாரத்துக்கு அடிமைகள். சமூக கட்டமைப்புகள் தனிமனிதனின் பழக்கங்களை வடிவமைப்பதைப் பற்றி சிந்திக்காதவர்கள். அவர்கள்குறைவாக அளவாக சாப்பிடுங்கள்எனத் திரும்பத் திரும்பக் கூறுகிறார்கள். ஆனால் ஊரே தவறாக சாப்பிடும் போது நீங்கள் மட்டும் எப்படி சரியாக உணவருந்த முடியும்? மனிதன் ஒரு சமூக விலங்கு அல்லவா? “பிரியாணி சாப்டுவோமா?” என நண்பனோ காதலியோ கேட்கும் போது ஒரு தனிமனிதன்இல்லை நான் காய்கனிகள் மட்டும் சாப்டுறேன்என சொல்ல முடியுமா? உணவு மனிதனை ஒன்றிணைக்கும் ஒரு முக்கியமான குறியீடு. ஒன்றாக சாப்பிட்டே வளர்ந்தவர்கள் நாம்

5) ஒருவர் பசிக்கிறது என வெளியே கிளம்பினால் ஆரோக்கியமான உணவுக்கடைகள் என எதுவுமே அவர் கண்ணில் படாது. கிடைப்பதைத் தானே அவர் சாப்பிட முடியும். அரசு ஒரு பக்கம் உடல் நலத்துக்கு ஊறான உணவுகளை ஊக்கப்படுத்தி விட்டு, அதை நம்பி பல தொழில்கள் செயல்படும் நிலையை ஏற்படுத்தி விட்டுஎதை சாப்பிடுவது என்பது உங்கள் பொறுப்புஎன்பது பொதுவிடத்தில் சாராயத்தை விற்றுவிட்டு குடிக்காதீர்கள், குடி உடலுக்கு, சமூகத்துக்குக் கேடு என விளம்பரம் செய்வதைப் போல. ஒரு உதாரணம் சொல்கிறேன் - சென்னையில் டாஸ்மாக் உள்ளதால், தனியார் பார்கள் குறைவு என்பதால், டாஸ்மாக் ஒரு குறிப்பிட்ட நேரத்திலேயே இயங்கும் என்பதால் அங்கு மக்கள் குடிப்பதில் ஒரு சிறிய கட்டுப்பாடு உள்ளது (இந்த நெருக்கடியை ஒற்றை வரியாக வைத்து தானேஇதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா?” எடுக்கப்பட்டது.) ஆனால் பெங்களூரில் தனியார் தான் மதுவை விற்கிறது, கடைகள் இரவு பன்னிரெண்டு வரை, சில நேரம் அதற்கு மேல் கூடத் திறந்திருக்கும். ஒரே தெருவில் மூன்று, நான்கு மதுக்கடைகள் இருப்பது சாதாரணம். இதோடு பப்கள், அவை கொண்டாடப்படும் ஒரு போலிக் கலாச்சாரம் வேறு. இங்கு சென்னையை விட மக்கள் ஐம்பது மடங்கு அதிகம் குடிக்கிறார்கள் என என் அனுபவத்தில் சொல்வேன். ஏனென்றால் இங்கே மதுவை வாங்குவது ஒரு பாட்டில் தண்ணீரை வாங்குவதைப் போல. இந்த லாக் டவுனின் போது கூட உடற்பயிற்சி நிலையங்கள், கல்வி நிலையங்களைத் திறக்காத அரசு எவ்வளவு அவசரமாக மதுக்கடைகளைத் திறந்தது பார்த்தீர்களா?


6) ஒரு பொறுப்பான அரசு மது, துரித உணவு, ஆரோக்கியமற்ற உணவு போன்றவற்றைத் தடை செய்ய வேண்டும் எனச் சொல்ல மாட்டேன். ஆனால் இவற்றின் மீது பல மடங்கு அதிக வரியைப் போட்டால் ஆரோக்கியமற்ற பல உணவுகளை மட்டும் எடுத்துக் கொள்வதை மக்கள் குறைப்பார்கள். மைதா விலையை கிலோ முப்பதில் இருந்து 200க்கு உயர்த்தலாம். இதையே ரீபைண்ட் ஆயிலுக்கும் சொல்லலாம். அதே போல துரித உணவுக் கடைகளை பெரிய மால்களில் மட்டுமே வைக்க வேண்டும் என சட்டமிடலாம். பொரித்த தின்பண்டங்களை பொதுவிடங்களில் விற்பதற்கு கட்டுப்பாடு கொண்டு வரலாம். பதிலாக வேக வைத்த, பாரம்பரிய உணவுகளைக் கொண்டு வரச் சொல்லலாம். அதே நேரம் ஆரோக்கியமான உணவுகளுக்குத் தேவையான பொருட்களை பெருமளவில் விலைகுறைக்கலாம். இதை செயல்படுத்தினால் பத்தே ஆண்டுகளில் கணிசமான மத்திய, மேல் மத்திய வர்க்கத்தினரின் உடல் நிலை சீராகி விடும், நாம் மருந்துகளை உண்பது, அறுவை சிகிச்சை செய்வது, டயட் இருப்பது எல்லாம் தேவையிருக்காது

7) இந்த விஷச் சூழலால் அதிகம் பாதிக்கப்படுவது மத்திய வர்க்கத்தினர் தான். அண்மையில் துர்க்கா ஸ்டாலினின் பேட்டி ஒன்றைப் பார்த்தேன் - அதில் அவர் கலைஞர் தான் வாழ்ந்திருந்த போது வெளி உணவுகளையோ உட்கொள்ள மாட்டார், அவர் மட்டுமல்ல குடும்பத்தினர் அனைவரும் வீட்டில் உணவருந்துவதை பழக்கமாகவே வைத்துள்ளார்கள் என்றார். பல பணக்காரர்கள் இப்படி புத்திசாலித்தனமாக கவனமாக இருக்கிறார்கள். கணவன் மனைவி இருவரும் மூன்று மணிநேரங்கள் பயணித்து, பத்து மணி நேரம் வேலை பார்க்க நேரும் மத்திய வர்க்க நிலையில் இருப்பவர்களுக்கு இது சுலபம் அல்ல

8) அதாவது இன்றைய நவதாராளவாதப் பொருளாதாரம் நம்மை அதிகமாய் பயணிக்க, அதிக நேரம் வேலை செய்து, அதிகமான பதற்றத்தில் இருக்கச் செய்து அதில் இருந்து விடுதலையாக துரித உணவுகளைப் புசிக்கவும் மது அருந்தவும் செய்கிறது. இது நம்மை மெதுவாகக் கொல்லும் விடம்


இந்த லாக் டவுன் காலம் இந்த உண்மையை நம் பொட்டில் அறைந்து புரிய வைத்திருக்கிறதுஇந்த பெருந்தொற்று முடிந்ததும் நாம் மீண்டும் அந்த விஷச்சூழலுக்குள், மோசமாய் உண்ணும் சமூக அழுத்தத்துக்குள் தள்ளப்படுவோம். டாக் டவுன் விலக்கப்பட்டதும், எந்தெந்த உணவுகளை எப்படி விற்கலாம், துரித உணவுகளை பொதுச்சமூகத்துக்கு, குறிப்பாக இளைஞர்களுக்கு உடனே கிடைக்காமல் செய்வது, போக்குவரத்து இடர்களைக் குறைத்து, மக்கள் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள்ளாகவே வேலை பார்க்கும்படி செய்வது, பாரம்பரியமில்லாத உணவுகளின் விலைகளை அதிகப்படுத்தி அவற்றை மக்களிடம் இருந்து விலக்குவது போன்றவற்றை அரசு மட்டுமல்ல உணவகங்கள் நடத்துபவர்கள், பொதுமக்கள் தீவிரமாக பரிசீலிக்க வேண்டும்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மிச்சமுள்ள வேலை (குறுங்கதை) - ஆர். அபிலாஷ்

  வார இறுதி. காலை முதலே வேலைக்காரியை பத்து தடவைகளுக்கு மேல் அழைத்தாகி விட்டது. தவறான எண்ணென்று யாரோ திரும்பத் திரும்பச் சொல்வதுடன் தெலுங்கில் திட்டவும் செய்கிறார்கள். அவள் எண்ணை மாற்றியதுடன் எங்கே போனாள்? பாத்திரங்கள் குவிந்து கிடக்கின்றன. உணவை ஆர்டர் செய்து வாங்கி நானும் மனைவியுமாக அமைதியாக உண்டோம். பிள்ளைகள் இருவரும் என் சகோதரியின் வீட்டுக்கு விடுமுறையைக் கொண்டாடப் போயிருக்கிறார்கள். வீட்டு மணியடித்தது. நான் போய்த் திறந்தால் வேலைக்காரியின் தாயான எழுபது வயதுக் கிழவி நின்று கொண்டிருந்தார். நான் அவரைக் கண்டதும் திகைத்து ஒரு பக்கம் சாய்ந்து நின்று கொண்டேன். அவர் அலட்சியமாக என்னை விலக்கிக் கொண்டு உள்ளே நுழைந்தார். என் மனைவி தன் கையில் இருந்து தட்டைக் கீழே போட்டு விட்டுக் கத்துகிற சத்தம் கேட்டது. நான் தடுமாறியபடி உள்ளே வந்தேன். யாரை அழைப்பது, என்ன சொல்வது எனத் தெரியவில்லை.   அவர் உள்ளே சென்று வேலையை ஆரம்பித்ததுடன் சமையலறையில் யார் பொருட்களை மாற்றி வைத்தது என உரிமையுணர்வுடன் என் மனைவியை விசாரித்துக் கொண்டிருந்தார். என் மனைவி இன்னும் பேசும் இயல்பு நிலைக்கு வரவில்லை என்பதில் திகை...

சினிமாவும் சர்வாதிகாரமும்: யோசா சொல்வதென்ன?

  காட்சி ஊடகம் நமக்குப் பொழுதுபோக்க உதவுகிறது என்றாலும் அது அடிப்படையில் மனிதரைச் சிந்திக்க விடாமல் செய்து செயலூக்கத்தை ஒழிக்கிறது, இது சர்வாதிகாரத்தை நோக்கி இட்டுச் செல்கிறது என்று சில மாதங்களுக்கு முன் நான் விஜய்யின் வருகையை ஒட்டி ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். இன்று தற்செயலாக மரியோ பார்கஸ் யோசாவின் ஒரு கட்டுரையைப் படித்தால் அதில் அவர் கிட்டத்தட்ட அதே கருத்தைத்தான் சொல்கிறார். காட்சி ஊடகங்களின் ஆதிக்கம் உள்ள சமூகம் சர்வாதிகாரத்துக்கு எதிராகச் செயல்பட முடியாமல் முடங்கும் என்கிறார்: (...) making the present unreal, turning actual history into fiction has the effect of demobilising the citizen, making him or her feel exempt from any civic responsibility, encouraging the conviction that it is beyond anyone's reach to intervene in a history whose screenplay is already written. Along this path we may well slide into a world where there are no citizens, only spectators, a world where, although formal democracy may be preserved, we will be resigned to the kind of lethargy dictatorships asp...

பிரபலங்களின் நோக்கம்

  நீங்கள் ஒரு பிரபலத்தின் நேர்முகத்தைப் பார்க்கிறீர்கள். அவர் தன் வாழ்வில் வெற்றி பெற சரியான உணவின்றி அலைந்து திரிந்ததைச் சொல்கிறார். நீங்கள் கண் கலங்குகிறீர்கள். அவர் தன் குடும்பத்தைப் பிரிந்து மாநகரத்தில் தனிமையில் அனாதையாக வாழ்ந்தைச் சொல்கிறார். நீங்கள் மனமுடைகிறீர்கள். இன்னொருவர் தான் தன் காதலனால் ஏமாற்றப்பட்டதைச் சொல்லி அதனால் ஏற்பட்ட மனச்சிக்கல்களை, பதற்றத்தை, காயங்களை வர்ணிக்கிறார். உங்களுக்கு இரக்கமும் ஆத்திரமும் வருகிறது. இந்த அனுபவங்களும் உணர்வுகளும் பொய்யல்ல. அவரும் நீங்களும் அடிப்படையில் மனிதர்களே. அதேநேரம், இங்கு எழுப்ப வேண்டிய முக்கியமான கேள்வியுண்டு - ஏன் இம்மாதிரியான கதையாடல்களை ஊடகங்கள் உங்கள் முன்வைக்கின்ற்ன? அவர்களின் நோக்கம் என்ன? ஒரு விசயம் உண்மையாக இருந்தாலும் அதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என வெகுஜன ஊடகம் நினைப்பதில் ஒரு உத்தேசம் இருக்குமே? பிரபலமும் நீங்களும் வர்க்கரீதியில் வெவ்வேறு இடங்களில் இருக்கிறீர்கள். இது ஒரு விலகலை ஏற்படுத்துகிறது. பிரபலங்கள் இந்த நாட்டின் பெரும்பணக்காரர்களை, அதிகார வர்க்கத்தின் பகுதியாக உள்ளார்கள். இந்த இடைவெளியை நிரப்புவது அவ...