முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தல்ஸ்தாயும் தஸ்தாவஸ்கியும்: ஒரு எளிய அறிமுகம் (2)

 

தல்ஸ்தாயின் வாழ்க்கையை தலைகீழாக்கினால் தஸ்தாவஸ்கியின் வாழ்க்கை வருகிறது. என்ன ஒரே வித்தியாசம் இளமையின் செல்வந்த வாழ்க்கை என்றுமே தஸ்தாவஸ்கிக்கு கிடைக்கவில்லை. ஆனால் தல்ஸ்தாய் தன் ஐம்பதுகளுக்குப் பின்னால் நகரத் தொடங்கிய தூய அன்பு நிலை, வறுமையின் எளிமை, எளிய மக்களுடனான ஒன்றிணைந்த வாழ்க்கை, சக மனிதனை எந்த தடையுமின்றி நேசிப்பது, உச்சபட்ச தீமை சூழ்ந்த நிலையிலும் அன்பின், பரிவின் வழியாக தன்னை தூய்மைப்படுத்திக் கொள்வது தஸ்தாவஸ்கிக்கு தன் இருபது, முப்பதுகளிலே வாய்த்தது. அதற்காக அவர் தல்ஸ்தாயை போல முயற்சிக்கவில்லை, வாழ்க்கை அவரை கடும் இருட்டில், துன்பத்தில், பேரிழப்புகளின் பள்ளத்தாக்கில் தள்ளியது. தஸ்தாவஸ்கி அளவுக்கு துரதிஷ்டங்களாய் ஆட்பட்ட மற்றொரு எழுத்தாளன் ஐரோப்பிய வரலாற்றில் இருக்க முடியாது. அந்த நரக வாழ்க்கையின் ஊடாக அவர் உலகமே இன்றளவும் போற்றும் பெரும் நாவல்களை எழுதினார். மானுட அறம், தீமை, தனிமனித இருப்பு, சமகால வரலாறு, ஆண்-பெண் உறவு, தீவிர போராட்ட அரசியலின் மற்றொரு பக்கம், குற்றவியல், மெய்யியல், உளவியல் என தஸ்தாவஸ்கி தன் காலத்தின் ஆன்மாவைத் தொட்ட பல பிரச்சனைகளைப் பற்றி தனித்துவமாக ஆழமாய் எழுதினார்.

 தல்ஸ்தாய் புறவுலகின் எழுத்தாளர்  என்றார், தஸ்தாவஸ்கி அக உலகின் எழுத்தாளர். தல்ஸ்தாய் உளவியல் எதார்த்தவாத புனைவெழுத்தாளர் என்றால் தஸ்தாவஸ்கி மீ-எதார்த்த எழுத்தாளர்.


 தல்ஸ்தாய் எதையும் நிதானமாக, சமநிலையுடன் அணுகுபவர் என்றார் தஸ்தாவஸ்கி எதையும் உச்சநிலையில், பித்தின் மறுஎல்லையில் வைத்துப் பார்ப்பவர்.


 தல்ஸ்தாயின் உலகின் அன்றாடங்களின் தடங்கள் பதிந்த பொருண்மையான உலகம் என்றால் தஸ்தாவஸ்கியினுடையது அன்றாடத்தில் இருந்து விலகிய அதே நேரம் சமூக சீரழிகளைப் பேச மறக்காத ஒரு கனவுலகம்.

 தல்ஸ்தாய் ஒழுக்கம், நம்பிக்கைகள், மனநிலை, விழுமியங்கள், தத்துவம் என எதிலும் ஒரு இருமையை கட்டமைப்பவர், அதன் பின் அந்த ஒருமையில் உள்ள உண்மைகளுக்கு சமமான முக்கியத்துவம் அளித்து சமநிலையாக்குபவர். ஆனால் தஸ்தாவஸ்கி இந்த இருமையை தொடர்ந்து உடைப்பவர்; இருமைகளற்ற ஒரு மகத்தான மெய்யியல், அறத்தால் கட்டப்பட்ட உலகைக் காட்டுபவர். .தா., அவர் ஒரு விலைமகளை கர்த்தருக்கு நிகரான ஒரு பெண்ணாகக் காட்டும் போது நமக்கு அது மிகையென்றோ கலகம் என்றோ படாது. எந்த சரி தவறும் இல்லாத ஒரு கவித்துவ நிலையை, உணர்ச்சியின் கொதி நிலையில் தொடர்ந்து இருக்கும் மனிதர்களின் வாழ்வை அவர் காட்டினார். ஆகையால் தல்ஸ்தாயைப் போல தஸ்தாவஸ்கி ஒரு போதகராக நமக்குத் தோன்ற மாட்டார்.


பத்தொன்பதாம்-இருபதாம் நூற்றாண்டில் மிகப்பெரிய புகழின் வெளிச்சத்தைப் பெற்ற தல்ஸ்தாயின் படைப்புகள் கடந்த ஐம்பதாண்டுகளில் மெல்ல வாசகர்களின் கவனத்தில் இருந்து நழுவிச் செல்ல, அந்த இடத்தை இன்று தஸ்தாவஸ்கி அடைந்திருக்கிறார். தல்ஸ்தாய் மற்றும் தஸ்தாவஸ்கி வாசகர்களுக்கு இடையில் யார் மேல் எனும் வாதம் ஒரு போதும் முடிவடையாதது.


தல்ஸ்தாயும் தஸ்தாவஸ்கியும் தாம் வாழ்ந்த காலத்தில் பரஸ்பரம் அறிந்து கொண்டிருந்தனர், பரஸ்பரம் மதிப்பு கொண்டிருந்தனர். தல்ஸ்தாயின்போரும் வாழ்வும்தஸ்தாவஸ்கிக்கு மிகவும் பிடித்த படைப்பாக இருந்தது. தல்ஸ்தாய் ரயில் நிலையத்தில் தன் இறுதி இரு நாட்களில் இருக்கும் போது அவர் கூட எடுத்து வந்திருந்த நாவல் தஸ்தாவஸ்கியின்  “கரமசோவ் சகோதரர்கள்”. அவர் மரணிக்கும் போது கையில் இந்த நாவல் இருந்தது.


தல்ஸ்தாயை சந்திக்க தஸ்தாவஸ்கி அவர் வாழ்ந்த காலத்தில் மிகவும் முயன்றார். ஆனால் சந்தர்ப்பவசத்தால் ஒவ்வொரு முறையில் இந்த வாய்ப்புகள் தட்டிப் போனது. இறுதியாக அவர் தல்ஸ்தாயை அவரது பண்ணைக்கு சென்று சந்திக்க நினைத்த போது அவர் தனித்து சமூகத்திடம் இருந்து விலகி வாழ்வதாக சொல்லப்பட தஸ்தாவஸ்கி தன் முடிவை மாட்டிக்கொண்டார். பின்னர் தஸ்தாவஸ்கி 1881யில் இறந்து போன போது தல்ஸ்தாய்நான் அவரை சந்திக்காவிடிலும் அவரது ஆன்மாவை நான் அறிந்திருந்தேன். அந்த விதத்தில் அவர் என் நண்பரேஎனச் சொன்னார்.


சரி, நாம் ஆரம்பித்த இடத்துக்கே வருவோம் - இப்படி வானத்துக்கு கீழ் அனைத்து விசயங்களையும் எழுதக் கூடிய மேதைகளை, போதகர்களாக, ஆய்வாளர்களாக, கருத்தாளர்களாக, சமூக விமர்சகர்களாக, (தல்ஸ்தாயைப் போல) ஒரு பெரும் சமூகத்தையே, காந்தியடிகளைப் போன்று பெரும் தலைவர்கள் உருவாகக் காரணமாக நாவலாசிரியர்கள் இருந்த காலம் முடிந்து போனது. இதைப் பற்றி தனது Writer on Holiday எனும் கட்டுரையில் ரொலண்ட் பார்த் பேசும் போது எழுத்தாளன் எனும் பிம்பம் அல்லது இருப்பு பதிப்பாளர்களால் திட்டமிட்டு உருவாக்கப்பட்டது என்கிறார். இதைக் கொண்டு புத்தகங்களுக்கு, புனைவுக்கு என தனி மதிப்பொன்று உருவாக்கப்பட்டது, ஒரு நாவலைப் போன்று நாவலாசிரியனும் ஒரு புனைவாக, தொன்மமாக கட்டமைக்கப்பட்டான் என்கிறார். இதற்கு உதாரணமாக அவர் எழுத்தாளன் விடுமுறையின் போது வெளிநாட்டுக்கு செல்லும் புகைப்படங்களைக் குறிப்பிடுகிறார்; இவற்றில் எழுத்தாளன் எழுதியபடி இருக்கிறான். ஆனால் சாதாரண மக்களோ பயணங்களின் போது உல்லாசமாக எந்த வேலையும் செய்யாமல் இருக்கிறார்கள். இந்த மக்கள் விடுமுறை முடிந்து வேலைக்கு செல்லும் போது எழுத்தாளன் தன் வீட்டுக்கு சென்று விடுமுறையில் இருப்பான், ஆனால் அவன் அப்போதும் தன் நாவலில் வேலை செய்து கொண்டிருப்பான். இதை தொடர்ந்து பத்திரிகைகளில் சித்தரிப்பதன் வழி நாவலாசிரியன் குறித்த ஒரு வசீகரமான பிம்பம் உருவாக்கப்பட்டது என்கிறார் பார்த்


 இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நாவல் என்பது வணிக நாவல், இலக்கிய நாவல் என தெளிவாக வரையறுக்கப்பட்டது. முன்பே இந்த வரையறை இருந்தாலும் இந்த நூற்றாண்டில் தான் இலக்கிய நாவல் ஒரு சிறுபான்மையினர் படிக்கும் கலை வடிவமாகவும், வணிக நாவல் பல கோடி பேர் துய்க்கிற ஒரு தற்காலிக பொழுதுபோக்காகவும் இருந்த வித்தியாசங்கள் அழிக்கப்பட்ட்டு கலையும் வணிகமும் வேறுவேறுதான், ஆனால் ஒன்றும் தான் எனும் இடத்தை வந்து சேர்ந்திருக்கிறோம். இதன் விளைவு இரண்டிலும் ஒரு சிறப்புத்தேர்ச்சி (specialization) வந்து விட்டது. வாசிப்பு வாழ்க்கையை மாற்றியமைக்கும், சமூகத்தில் புரட்சியை, பெரும் மாற்றங்களைக் கொண்டு வரும், தீமையை ஒழிக்கும் எனும் நம்பிக்கைகள் தளர்ந்து விட்டன. இன்று இலக்கிய நாவல் ஒரு பர்கர், ஐஸ் கிரீம் போல ஒரு பண்டமாகி விட்டது (ஆனால் வாசிப்பனுபவம் மாறவில்லை.) இலக்கிய நாவலாசிரியனின் இடமும் வெகுவாக சுருங்கி விட்டது. ஆகையால் தான் இன்று நாவல்கள் ஆயிரம், ரெண்டாயிரம் பக்கங்களில் எழுதப்படுவதில்லை. ஒரு நாவலுக்குள் கதையோட்டத்துக்கு நேரடியாக தொடர்பில்லாத எதையும் இன்று கொண்டு வர முடியாது. பலகுரல் தன்மையுடன், சிக்கலான களத்துடன் அமைக்கப்படும் பின்நவீன நாவல்களில் கூட இன்று ஒரு வேகம் வந்து விட்டது. தல்ஸ்தாயின்போரும் வாழ்வும்போன்ற நாவல்களை நாம் இன்று படிப்பதோ எழுதுவதோ இல்லை. சமகால நாவல்களில் இருந்து தல்ஸ்தாயின் செவ்வியல் நவீன நாவல்களுக்கு பின்னோக்கி செல்லும் வாசகர்கள் இதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.  


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...