இனிமேல் இதைப் போல நாடு முழுக்க பல வழக்குகள் தொடரப்படும். அயோத்தி வழக்கில் நீதிமன்றம் அளித்த முன்னுதாரணம் பெரிய தலைவலியாக மாறப் போகிறது.
இந்திய வரலாறெங்கும் எத்தனையோ ஆக்கிரமிப்புக் கதைகள் உள்ளன. இன்று பிரசித்தமாக உள்ள பல இந்துக்கோயில்கள் சமண, பௌத்தக் கோயில்களை உருமாற்றி ஏற்படுத்தப்பட்டவையே. நாளை அவற்றை இடித்து பௌத்த விஹாரையாக்க, சமணக் கோயிலாக்க வழக்குத் தொடுத்தால் ஒப்புக் கொள்வார்களா? மசூதிகள், தேவாலயங்கள் மட்டுமல்ல இந்துக் கோயில்களையும் கூட இடிக்க வேண்டியது தான். நாகர்களின் ஊரை அழித்து அவர்களைக் கொன்று அங்கு பாணடவர்கள் அரண்மனைகள் எழுப்பிய கதை மகாபாரத்தில் உள்ளது. நாகர் இனமக்கள் அந்த இடங்களை மீட்டுத் தரக் கேட்டால் முடியுமா? ராவணன் ஒரு தமிழ் மன்னன் என நம்புகிறவர்கள் உண்டு; சிங்களவர்கள் அவனை இந்திய ஆக்கிரமிப்பை எதிர்த்த பௌத்த சிங்கள மன்னனாக கட்டமைக்கிறார்கள். இனி இரு தரப்பும் இலங்கையில் உரிமை கோரி போரிடலாமா? யாருடையது வரலாறு முந்தையது என யாரால் முடிவு செய்ய முடியும்? தமிழகத்தின் சோழ, பாண்டிய வம்சாவளி என நம்புகிற மக்கள் தமது ராஜ்ஜியத்தை மீட்டுத் தர வேண்டும் என வழக்குத் தொடுக்கலாமா? அதற்கு வரலாற்று ஆதாரங்கள் உண்டே.
Comments