முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தில்லி-பஞ்சாப் ஐ.பி.எல் ஆட்டம் - ஜெயிப்பது யார்?




இன்றைய ஐ.பி.எல் போட்டி பஞ்சாப் மற்றும் தில்லி அணிகளுக்கு இடையே நடக்கிறது. பஞ்சாப் அணியின் தலைவர் ராகுல். தில்லிக்கோ ஷ்ரேயாஸ் ஐயர். இருவருமே அனுபவம் குறைவான அணித்தலைவர்கள். இருவரின் அணிகளும் கிட்டத்தட்ட சமமான திறன்களும் அனுபவமும் படைத்தவை. ஐ.பி.எல் வரலாற்றில் தில்லியை விட பஞ்சாப் அணி மேலான வெற்றி வரலாற்றைக் கொண்டுள்ளது. இன்றைய ஆட்டத்தில் யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம்?


60-40 என்கிற விகிதத்தில் தில்லி வெல்லவே வாய்ப்பதிகம் என்பது என் கணிப்பு - சென்னை தான் ஜெயிக்கும் என்கிற எனது நேற்றைய கணிப்பு பலித்தது. இன்று என்ன நடக்கும்? ஏன் தில்லி ஜெயிக்கும் என்கிறேன்?


முதலில் மட்டையாட்டம்:


அபுதாபியின் ஆடுதளம் சற்று மெத்தனமானது, குறைவான பவுன்ஸ் கொண்டது. அங்கு வேகமான பவுன்ஸான ஆடுதளங்களில் நன்றாக ஆடும் (கர்நாடகாவில் அத்தகைய ஆடுதளங்கள் அதிகம் என்பதால்) கர்நாடகாவைச் சேர்ந்த, தற்போது பஞ்சாபுக்காக ஆடும் ராகுல், கருண் நாயர், மயங்க் அகர்வால், மேக்ஸ்வெல், பூரன் போன்றோர் எப்படி சமாளிப்பார்கள் என்பது ஒரு கேள்விக்குறி. இந்த ஆடுதளச் சூழலுக்கு சமாளிக்க வாய்ப்பதிகம் உள்ள பேட்ஸ்மேன்கள் அந்த அணியில் சர்பராஸ் கானும், கிறிஸ் கெய்லுமே. ஒருவேளை ராகுல் தனது அனுபவத்தை பயன்படுத்தி தன் ஆட்டபாணியை மாற்றி ரன் அடிக்கலாம்.    


தில்லிக்காக ஆடும் ஷ்ரேயாஸ், தவன், ஹெட்மையர் ஆகியோருக்கு இந்த ஆடுதளம் ஏற்றதாக இருக்கும். அவர்கள் சுழல்பந்தை நன்றாக ஆடக் கூடியவர்கள் என்பதும் முக்கியம். பிருத்வி ஷாவால் எந்தளவுக்கு இங்கு ஆட முடியும் என்பது சந்தேகம். பண்ட் பொறுமையுடன் ஆடுவாரா? ஆனால் ரஹானேவால் இங்கு சரிவர ஆடுவதும் கிட்டத்தட்ட அசாத்தியம். அவரை ஆட வைத்தால் அது தவறான முடிவாகும்.


அடுத்து பந்து வீச்சு:


பஞ்சாப் அணியில் சுழலர்கள் முருகன் அஷ்வின் மற்றும் முஜீப் ரஹ்மான். ஆல்ரவுண்டர் சுழலர்கள் கவுதம், ஹூடா, மேக்ஸ்வெல் ஆகியோர். இவர்களில் விக்கெட் எடுக்கக் கூடியவர் முஜீப். ஆனால் அவர் தன் பந்தின் நீளம் மற்றும் வேகத்தில் கவனம் செலுத்த வேண்டும். முருகன் அஷ்வின் எனக்குப் பிடித்த சுழலர் என்றாலும் அவரது வேகமான் கால்சுழல் சற்று குறைநீளத்தில் விழக் கூடியது. அது இந்த ஆடுதளத்தில் எடுபட வாய்ப்பு குறைவு. ஆல்ரவுண்டர்களிடம் இருந்து அதிகம் எதிர்பார்க்க முடியாது என்றாலும் மேக்ஸ்வெல்லும் கவுதமும் சற்று நேர்த்தியாக வீசி ரன்களை குறைக்கலாம், ஆனால அதற்கு முதலில் பிரதான சுழல் / வேக வீச்சாளர்கள் விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும். நீஷம் ஆடக் கூடாது, ஆடினால் பந்து வீசக் கூடாது, நிச்சயமாய் அடிவாங்குவார். போரல, கோட்டரல் போன்றோரின் வேகப்பந்து வீச்சும் எடுபடுமா எனத் தெரியவில்லை. 


ஆனால் தில்லி அணியிலோ அஷ்வின், மிஷ்ரா ஆகியோர் அபாரமான, அனுபவமிக்க சுழலர்கள். லேமிச்சேன், அக்ஸர் பட்டேல் வேறு இருக்கிறார்கள். வேகவீச்சாளர்களில் கீமோ பால், மோஹித் ஷர்மாவின் பந்து வீச்சு இங்கு எடுபடும். இஷாந்த் தன் அனுபவத்தை பயன்படுத்தி சரியான நீளத்தில் வீசினால் எடுபடும். ஆனால் ரபாடாவை இங்கு ஆட வைப்பது ஆபத்து. இந்த ஆடுதளச் சூழலுக்கு ஏற்ற பந்து வீச்சு தில்லியிடமே உள்ளது.

இதனால் தான் இது தில்லிக்கான ஆட்டம் என்கிறேன்.


பார்க்கலாம்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மிச்சமுள்ள வேலை (குறுங்கதை) - ஆர். அபிலாஷ்

  வார இறுதி. காலை முதலே வேலைக்காரியை பத்து தடவைகளுக்கு மேல் அழைத்தாகி விட்டது. தவறான எண்ணென்று யாரோ திரும்பத் திரும்பச் சொல்வதுடன் தெலுங்கில் திட்டவும் செய்கிறார்கள். அவள் எண்ணை மாற்றியதுடன் எங்கே போனாள்? பாத்திரங்கள் குவிந்து கிடக்கின்றன. உணவை ஆர்டர் செய்து வாங்கி நானும் மனைவியுமாக அமைதியாக உண்டோம். பிள்ளைகள் இருவரும் என் சகோதரியின் வீட்டுக்கு விடுமுறையைக் கொண்டாடப் போயிருக்கிறார்கள். வீட்டு மணியடித்தது. நான் போய்த் திறந்தால் வேலைக்காரியின் தாயான எழுபது வயதுக் கிழவி நின்று கொண்டிருந்தார். நான் அவரைக் கண்டதும் திகைத்து ஒரு பக்கம் சாய்ந்து நின்று கொண்டேன். அவர் அலட்சியமாக என்னை விலக்கிக் கொண்டு உள்ளே நுழைந்தார். என் மனைவி தன் கையில் இருந்து தட்டைக் கீழே போட்டு விட்டுக் கத்துகிற சத்தம் கேட்டது. நான் தடுமாறியபடி உள்ளே வந்தேன். யாரை அழைப்பது, என்ன சொல்வது எனத் தெரியவில்லை.   அவர் உள்ளே சென்று வேலையை ஆரம்பித்ததுடன் சமையலறையில் யார் பொருட்களை மாற்றி வைத்தது என உரிமையுணர்வுடன் என் மனைவியை விசாரித்துக் கொண்டிருந்தார். என் மனைவி இன்னும் பேசும் இயல்பு நிலைக்கு வரவில்லை என்பதில் திகை...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

பிரபலங்களின் நோக்கம்

  நீங்கள் ஒரு பிரபலத்தின் நேர்முகத்தைப் பார்க்கிறீர்கள். அவர் தன் வாழ்வில் வெற்றி பெற சரியான உணவின்றி அலைந்து திரிந்ததைச் சொல்கிறார். நீங்கள் கண் கலங்குகிறீர்கள். அவர் தன் குடும்பத்தைப் பிரிந்து மாநகரத்தில் தனிமையில் அனாதையாக வாழ்ந்தைச் சொல்கிறார். நீங்கள் மனமுடைகிறீர்கள். இன்னொருவர் தான் தன் காதலனால் ஏமாற்றப்பட்டதைச் சொல்லி அதனால் ஏற்பட்ட மனச்சிக்கல்களை, பதற்றத்தை, காயங்களை வர்ணிக்கிறார். உங்களுக்கு இரக்கமும் ஆத்திரமும் வருகிறது. இந்த அனுபவங்களும் உணர்வுகளும் பொய்யல்ல. அவரும் நீங்களும் அடிப்படையில் மனிதர்களே. அதேநேரம், இங்கு எழுப்ப வேண்டிய முக்கியமான கேள்வியுண்டு - ஏன் இம்மாதிரியான கதையாடல்களை ஊடகங்கள் உங்கள் முன்வைக்கின்ற்ன? அவர்களின் நோக்கம் என்ன? ஒரு விசயம் உண்மையாக இருந்தாலும் அதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என வெகுஜன ஊடகம் நினைப்பதில் ஒரு உத்தேசம் இருக்குமே? பிரபலமும் நீங்களும் வர்க்கரீதியில் வெவ்வேறு இடங்களில் இருக்கிறீர்கள். இது ஒரு விலகலை ஏற்படுத்துகிறது. பிரபலங்கள் இந்த நாட்டின் பெரும்பணக்காரர்களை, அதிகார வர்க்கத்தின் பகுதியாக உள்ளார்கள். இந்த இடைவெளியை நிரப்புவது அவ...