“உங்களின் கட்டுரையில் குறிப்பிட்டிருப்பவை 100% உண்மை என்பதை நானும் அனுபவித்து உணர்ந்திருக்கிறேன். வேலை இல்லை என்றால் நிறைய எழுதலாம் என்ற எண்ணம் எனக்கும் கூட இருந்தது. ஆனால் அது உண்மை இல்லை என்பதை நான் வேலை இல்லாமல் வீட்டிலிருந்த நாட்களில் உணர்ந்து கொண்டேன். எனக்கு கொரோனாவினால் வேலை போகவில்லை. அதற்கு முன்பே வேலை போய்விட்டது. சரி எதற்கு இனிபோய் ஒரு கம்பெனியில் கடிகார முட்களைத் துரத்தும் வேலையில் சேர்ந்து வருத்திக் கொள்வது? மனைவியின் சம்பாத்யம் வருகிறது. போதும். ஓய்வில் இருந்தால் நிறைய எழுதலாம் என்று சிரத்தையாக வேலைகூட தேடவில்லை. ஆனால் நான் ஆசைப்பட்டபடி எதுவும் நடக்கவில்லை. பரபரப்பாக வேலைக்குப் போயிக் கொண்டிருந்த நாட்களை விட வேலைக்குப் போகாமல் வீட்டிலிருந்த நாட்களில் எழுதியது மிகமிகக் குறைவே...! பெரும்பாலும் முந்தைய காலங்களில் எழுதியவற்றை திருத்திக் கொண்டு தான் இருந்தேன். புதிய ஆக்கங்களுக்கான் மனநிலையே வாய்க்கவில்லை.சரி, வேலைக்கே போய்விடலாம் என்று நினைக்கும் போது கொரோனா வந்து புதிய வேலை வாய்ப்புகளையும் காலி பண்ணிவிட்டது. என்னை யாரென்று நீங்கள் அறிந்து கொள்வதற்காக ஒரே ஒரு சிறு தகவல்: நீங்கள் நடுவராக இருந்து தேர்ந்தெடுத்த சென்னைக் கதைகளின் - கிழக்குப் பதிப்பகம் நடத்திய சிறுகதைப் போட்டி - முதல் பரிசு பெற்ற சிறுகதையை எழுதியது அடியேன் தான்.”
பதில்
*****
அன்புள்ள நண்பரே
இவ்விசயத்தில் உங்களுக்கு அறிவுரைக்கும் தகுதி எனக்கு உண்டா எனத் தெரியவில்லை. இருந்தாலும் உடனே மனத்தில் படுவதை சொல்கிறேன்.
1) ஏற்கனவே எழுதியவை திருத்துவதில் தப்பில்லை. அப்போது உங்களுக்கு எழுத புது ஐடியாக்கள் கிடைக்கலாம்.
2) உங்கள் வீடருகே ஒரு நூலகம் இருந்தால் அங்கே தினமும் சில மணிநேரங்கள் செல்லும் வழக்கத்தை ஏற்படுத்துங்கள். ஐம்பது வார்த்தைகளாவது தினமும் எழுதி விட்டே வெளியே வருவேன் என உறுதி எடுங்கள்.
நான் முனைவர் பட்ட ஆய்வு செய்த காலத்தில் இந்நடைமுறையை பின்பற்றினேன். அண்ணா நூற்றாண்டு நூலகத்துக்கு மதியம் 12 மணிக்கு மேல் செல்வேன். அங்கு ஒரு அறை தனியாக சொந்த நூல்களை எடுத்து வந்து படிப்பதற்காக ஒதுக்கப்பட்டிருக்கும். அங்கே நிறைய மாணவர்கள் தகுதித் தேர்வுகளுக்காக நாள் முழுக்க தங்கியிருந்து படிப்பார்கள். அவர்கள் மத்தியில் இருப்பது ஒரு உத்வேகத்தைக்கு எனக்கு அளித்தது. தனிமை வேண்டும் எனத் தோன்றினால் மாடியில் உள்ள நூலக அறைகளுக்கு லேப்டாப்புடன் சென்று அமர்ந்து எழுதுவேன். நமக்குப் பிடித்த எழுத்தாளர்களின் நூல்களை எடுத்து அருகே வைத்துக் கொண்டு அவ்வப்போது வாசித்து உருவேற்றிக் கொண்டு எழுதலாம்.
என்னுடைய முனைவர் பட்ட ஆய்வேட்டின் 70%ஐ இப்படித்தான் எழுதி முடித்தேன். அங்கிருந்து எழுதும் போது வேலை சீக்கிரமாக முடிவதையும் கவனித்தேன். ஏனென்றால் அது ஒரு வேலை போன்ற உணர்வைக் கொடுக்கும். வீட்டில் இருந்து எழுதும் போது வரும் எதிர்மறை எண்ணங்களையும் தவிர்க்கலாம்.
இது முழுக்க அன்றாட நடைமுறை பிறழ்வதனால் வரும் பிரச்சனை தான். ஒரு புது நடைமுறையை உருவாக்கி எதிர்கொள்ளலாம்.
3) பிக்பாக்கெட்காரர்கள் கூட நிறைய பயிற்சி எடுப்பார்கள் எனக் கேள்விப்பட்டிருக்கிறேன். எனில் எழுத்தாளன் எவ்வளவு பயில வேண்டும்? தொடர்ந்து ஒரு குறிப்பிட்ட இலக்கை வைத்து நிறைய எழுதும் போது சட்டென ஒரு ஒளிக்கீற்று தோன்றும். நல்ல எழுத்து பிறக்கும். யோசித்துக் கொண்டிருந்தால் தானே எழுத்து பிறக்காது. (யோசிப்பதையும் எழுத்தாக குறிப்புகளாக மாற்றிக் கொள்ளலாம்.)
4) இடத்துக்கும் நம் எழுத்துக்கும் ஏதோ நுணுக்கமான உளவியல் தொடர்பு இருக்கிறது என நினைக்கிறேன். பெங்களூர் வந்த பிறகு என் எழுத்தில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை இப்போது உணர்கிறேன். அதே போலத் தான் சக மனிதர்கள் மீது நாம் கொள்ளும் அக்கறை. தொடர்ந்து அவர்களால் பாதிக்கப்பட, காயப்பட நாம் நம்மை அனுமதிப்பது.
5) உறவுகளில் ஏற்படும் உடைவுகள், மனத்தில் ஏற்படும் காயங்கள் நிச்சயமாக எழுத்தை தீவிரமாக பாதிக்கிறது. எழுத்து என்பது உணர்வெழுச்சியுடன், மிகுந்த அக்கறையுடன் வாழ்வதும் தான். ஆக தொடர்ந்து மனிதர்களை நாடி சென்று கொண்டிருக்க வேண்டும். அதே நேரம் அவர்களுக்கு நம் மொத்த நேரத்தையும், ஆற்றலையும் கொடுக்காமலும் இருக்க பழக வேண்டும். எழுத்தாளன் மற்றவர்களுக்காக தன்னை தியாகம் பண்ணாமல் தம்மை அவனுக்கு ஒப்புக்கொடுப்பவர்களுடன் உறவை ஏற்படுத்த வேண்டும். ஒரு பாய்மரக் கப்பல் காற்றை பயன்படுத்தி நகர்வதைப் போல நம்மால் உறவுகளை ‘பயன்படுத்த’ முடிய வேண்டும். இது திட்டமிட்டு அல்ல, இயல்பாகவே தன்னிச்சையாக நிகழ வேண்டும்.
வாழ்த்துகள்!
கருத்துகள்