முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

“ஒரு முழுநேர எழுத்தாளனின் நெருக்கடிகள்” கட்டுரைக்கான ஒரு சுவாரஸ்யமான எதிர்வினையும் எனது பதிலும்:


“உங்களின் கட்டுரையில் குறிப்பிட்டிருப்பவை 100% உண்மை என்பதை நானும் அனுபவித்து உணர்ந்திருக்கிறேன். வேலை இல்லை என்றால் நிறைய எழுதலாம் என்ற எண்ணம் எனக்கும் கூட இருந்தது. ஆனால் அது உண்மை இல்லை என்பதை நான் வேலை இல்லாமல் வீட்டிலிருந்த நாட்களில் உணர்ந்து கொண்டேன். எனக்கு கொரோனாவினால் வேலை போகவில்லை. அதற்கு முன்பே வேலை போய்விட்டது. சரி எதற்கு இனிபோய் ஒரு கம்பெனியில் கடிகார முட்களைத் துரத்தும் வேலையில் சேர்ந்து வருத்திக் கொள்வது? மனைவியின் சம்பாத்யம் வருகிறது. போதும். ஓய்வில் இருந்தால் நிறைய எழுதலாம் என்று சிரத்தையாக வேலைகூட தேடவில்லை. ஆனால் நான் ஆசைப்பட்டபடி எதுவும் நடக்கவில்லை. பரபரப்பாக வேலைக்குப் போயிக் கொண்டிருந்த நாட்களை விட வேலைக்குப் போகாமல் வீட்டிலிருந்த நாட்களில் எழுதியது மிகமிகக் குறைவே...! பெரும்பாலும் முந்தைய காலங்களில் எழுதியவற்றை திருத்திக் கொண்டு தான் இருந்தேன். புதிய ஆக்கங்களுக்கான் மனநிலையே வாய்க்கவில்லை.சரி, வேலைக்கே போய்விடலாம் என்று நினைக்கும் போது கொரோனா வந்து புதிய வேலை வாய்ப்புகளையும் காலி பண்ணிவிட்டது. என்னை யாரென்று நீங்கள் அறிந்து கொள்வதற்காக ஒரே ஒரு சிறு தகவல்: நீங்கள் நடுவராக இருந்து தேர்ந்தெடுத்த சென்னைக் கதைகளின் - கிழக்குப் பதிப்பகம் நடத்திய சிறுகதைப் போட்டி - முதல் பரிசு பெற்ற சிறுகதையை எழுதியது அடியேன் தான்.”


பதில்

*****

அன்புள்ள நண்பரே


இவ்விசயத்தில் உங்களுக்கு அறிவுரைக்கும் தகுதி எனக்கு உண்டா எனத் தெரியவில்லை. இருந்தாலும் உடனே மனத்தில் படுவதை சொல்கிறேன்.


1) ஏற்கனவே எழுதியவை திருத்துவதில் தப்பில்லை. அப்போது உங்களுக்கு எழுத புது ஐடியாக்கள் கிடைக்கலாம்.


2) உங்கள் வீடருகே ஒரு நூலகம் இருந்தால் அங்கே தினமும் சில மணிநேரங்கள் செல்லும் வழக்கத்தை ஏற்படுத்துங்கள். ஐம்பது வார்த்தைகளாவது தினமும் எழுதி விட்டே வெளியே வருவேன் என உறுதி எடுங்கள். 

நான் முனைவர் பட்ட ஆய்வு செய்த காலத்தில் இந்நடைமுறையை பின்பற்றினேன். அண்ணா நூற்றாண்டு நூலகத்துக்கு மதியம் 12 மணிக்கு மேல் செல்வேன். அங்கு ஒரு அறை தனியாக சொந்த நூல்களை எடுத்து வந்து படிப்பதற்காக ஒதுக்கப்பட்டிருக்கும். அங்கே நிறைய மாணவர்கள் தகுதித் தேர்வுகளுக்காக நாள் முழுக்க தங்கியிருந்து படிப்பார்கள். அவர்கள் மத்தியில் இருப்பது ஒரு உத்வேகத்தைக்கு எனக்கு அளித்தது. தனிமை வேண்டும் எனத் தோன்றினால் மாடியில் உள்ள நூலக அறைகளுக்கு லேப்டாப்புடன் சென்று அமர்ந்து எழுதுவேன். நமக்குப் பிடித்த எழுத்தாளர்களின் நூல்களை எடுத்து அருகே வைத்துக் கொண்டு அவ்வப்போது வாசித்து உருவேற்றிக் கொண்டு எழுதலாம். 


என்னுடைய முனைவர் பட்ட ஆய்வேட்டின் 70%ஐ இப்படித்தான் எழுதி முடித்தேன். அங்கிருந்து எழுதும் போது வேலை சீக்கிரமாக முடிவதையும் கவனித்தேன். ஏனென்றால் அது ஒரு வேலை போன்ற உணர்வைக் கொடுக்கும். வீட்டில் இருந்து எழுதும் போது வரும் எதிர்மறை எண்ணங்களையும் தவிர்க்கலாம்.


இது முழுக்க அன்றாட நடைமுறை பிறழ்வதனால் வரும் பிரச்சனை தான். ஒரு புது நடைமுறையை உருவாக்கி எதிர்கொள்ளலாம்.


3) பிக்பாக்கெட்காரர்கள் கூட நிறைய பயிற்சி எடுப்பார்கள் எனக் கேள்விப்பட்டிருக்கிறேன். எனில் எழுத்தாளன் எவ்வளவு பயில வேண்டும்? தொடர்ந்து ஒரு குறிப்பிட்ட இலக்கை வைத்து நிறைய எழுதும் போது சட்டென ஒரு ஒளிக்கீற்று தோன்றும். நல்ல எழுத்து பிறக்கும். யோசித்துக் கொண்டிருந்தால் தானே எழுத்து பிறக்காது. (யோசிப்பதையும் எழுத்தாக குறிப்புகளாக மாற்றிக் கொள்ளலாம்.) 


4) இடத்துக்கும் நம் எழுத்துக்கும் ஏதோ நுணுக்கமான உளவியல் தொடர்பு இருக்கிறது என நினைக்கிறேன். பெங்களூர் வந்த பிறகு என் எழுத்தில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை இப்போது உணர்கிறேன். அதே போலத் தான் சக மனிதர்கள் மீது நாம் கொள்ளும் அக்கறை. தொடர்ந்து அவர்களால் பாதிக்கப்பட, காயப்பட நாம் நம்மை அனுமதிப்பது. 


5) உறவுகளில் ஏற்படும் உடைவுகள், மனத்தில் ஏற்படும் காயங்கள் நிச்சயமாக எழுத்தை தீவிரமாக பாதிக்கிறது. எழுத்து என்பது உணர்வெழுச்சியுடன், மிகுந்த அக்கறையுடன் வாழ்வதும் தான். ஆக தொடர்ந்து மனிதர்களை நாடி சென்று கொண்டிருக்க  வேண்டும். அதே நேரம் அவர்களுக்கு நம் மொத்த நேரத்தையும், ஆற்றலையும் கொடுக்காமலும் இருக்க பழக வேண்டும். எழுத்தாளன் மற்றவர்களுக்காக தன்னை தியாகம் பண்ணாமல் தம்மை அவனுக்கு ஒப்புக்கொடுப்பவர்களுடன் உறவை ஏற்படுத்த வேண்டும். ஒரு பாய்மரக் கப்பல் காற்றை பயன்படுத்தி நகர்வதைப் போல நம்மால் உறவுகளை ‘பயன்படுத்த’ முடிய வேண்டும். இது திட்டமிட்டு அல்ல, இயல்பாகவே தன்னிச்சையாக நிகழ வேண்டும்.


வாழ்த்துகள்!

கருத்துகள்

silviamary.blogspot.in இவ்வாறு கூறியுள்ளார்…
கமெண்ட் தானே என்று கடந்து போகாமல் பொருட்படுத்தி பதில் சொன்னதற்கு மிக்க நன்றி அபிலாஷ்.....!நானும் நூலகத்தில் அதிகம் செலவிடுகிற ஆள்தான். கொரோனோ காலத்தில் எங்கள் பகுதியில் புத்தகம் எடுத்துப் போக மட்டுமே அனுமதிக்கிறார்கள். உட்கார்ந்து வாசிக்க இன்னும் அனுமதிக்கவில்லை. யோசிக்கும் போது இந்த கொரோனோ காலத்தில் சமூகவலைத் தளங்களில் - முகநூல் மர்றும் யூ டுயூப் - போய் நான் மாட்டிக் கொண்டிருப்பதும் அதுதான் என்னுடைய பெரும்பான்மையான நேரத்தைத் தின்று கொண்டிருப்பதையும் கண்டடைந்திருக்கிறேன். அதிலிருந்து என்னை நானே மீட்டுக் கொண்டு எழுத முயற்சிப்பேன். உங்களின் பரிந்துரைகளுக்கு மிகவும் நன்றி....!

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...