முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஒரு விளக்கம்




1. வைரமுத்து விவகாரத்தில் நான் எழுதியுள்ள பதிவுகளைப் படித்தவர்களுக்குத் தெரியும் நான் எந்த இடத்திலும் அவரை நியாயப்படுத்தவோ, அவர் குற்றமற்றவர் என நிறுவவோ முயலவில்லை என்பது. ஆனால் அப்படி ஒரு தோற்றம் ஏற்பட்டுள்ளது. குற்றம் சாட்டுபவர்களின் தரப்பிலுள்ள போதாமைகளை, முரண்களை அடையாளம் காட்டுவதே என் நோக்கமாக இருந்தது. எனக்கு வைரமுத்து மீது எந்த அனுதாபமும் இல்லை, அவரை ஆதரிப்பதால் அனுகூலமும் இல்லை, நான் திமுககாரனும் அல்லன், சின்மயி மீது எந்த தனிப்பட்ட காழ்ப்பும் இல்லை. என்னளவில் என் நம்பிக்கைகளுக்கு நான் நேர்மையாகவே இருந்திருக்கிறேன். ஆனால் அதே நேரம் ஒரு விவாதத்தின் தர்க்கத்துக்கு நான் கொடுத்த முக்கியத்துவத்தை அதன் அரசியலுக்கு அளிக்கவில்லை. குற்றம் சாட்டுகிறவரின் தரப்பை பலவீனப்படுத்தி முயற்சியாக என் வாதங்கள் மாறி விட்டன. வைரமுத்து மீதான குற்றச்சாட்டுகள், அவை எழுப்புகிற ஒரு ஒழுக்கவாத ஆரவாரம், அதன் பின்னுள்ள பாசாங்கு ஆகியவை மீது நான் செலுத்திய கவனத்தை, நான் இந்த அரசியல் மீது செலுத்தவில்லை. தமிழக தேர்தலில் மூன்றாவது அணி போல நான் இவ்விவகாரத்தில் செயல்பட்டதற்கு வருந்துகிறேன். ஆகையால், மீ டூ சர்ச்சை சார்ந்து எழுதுவதை இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன். மீ டூ ஆதரவாளர்களின் தாக்கம் அல்ல, எனக்கு இவ்விசயத்தில் ஏற்பட்ட தன்னுணர்வே இம்முடிவுக்கு காரணம். ஏனென்றால அந்த இயக்கம் மீதான என் கேள்விகள், அது நம்மை ஒரு puritan சமூகமாக மாற்றுகிறது எனும் கவலைகள் தொடர்கின்றன. ஆனால் இப்பிரச்சனையின் பின் பாதிக்கப்பட்டவர்களின் வலியுடன் ஒப்பிடுகையில் இந்த தொலைநோக்கு கவலைகள் முக்கியமல்ல.   

 2. சின்மயி 2018க்குப் பிறகு பாடினாரா, டப் செய்தாரா என்பது குறித்து நான் எழுதிய பதிவில் ஒரு முக்கிய பிழை உள்ளது. அந்த தரவுகளை நான் இணையத்தில் இருந்து எடுத்திருந்தாலும், அவை சில வருடங்களுக்கு முன்பு தான் பாடிய பாடல்கள், டப் செய்த படங்களின் backlogs என சின்மயி அளித்த விளக்கம் சரியானது. இத்தரவுகளை எடுக்கும் போது 2021இல் வெளியான பாடல்கள் அனைத்தும் 2018க்கு முன்பு அவர் பாடியவை என நான் யோசிக்கவில்லை. ஏனென்றால் எல்லா பாடகர்களுக்கும் இத்தகைய தரவுகளே உள்ளன. எனில் 2018க்குப் பிறகு எந்த பாடகருக்கும் பாடல் பதிவே நடக்கவில்லையா, இங்கு அனைத்து பாடல்களும் மூன்று வருடங்களுக்கு பின்னால் பதிவானவை தாமா எனும் ஐயங்கள் எனக்கு இருந்தன. ஆனால் சின்மயியே சொன்ன பிறகு தார்மீக ரீதியாக அதை ஏற்றுக் கொள்ள வேண்டும். அப்பதிவையும் நீக்குகிறேன். (வைரமுத்துவின் பாடல்களை அவர் மிகக்குறைவாகவே பாடியிருக்கிறார் எனும் பதிவில் எந்த தகவல் பிழையும் இல்லாததால் அதை நீக்கவில்லை.)
 பதிவை நீக்கும்படி சின்மயி கோரவில்லை என்றாலும் தவறான தகவல்களை அது கொண்டிருக்கும் பட்சத்தில் அது அவருக்கு இழைக்கப்பட்ட அநீதியாகிறது; நான் அவரிடம் மன்னிப்பு கோருகிறேன்.

கருத்துகள்

silviamary.blogspot.in இவ்வாறு கூறியுள்ளார்…
எனக்கென்னவோ இந்த மன்னிப்புக் கோரல் தேவையில்லாதது என்று நினைக்கிறேன். வைரமுத்து - சின்மயி விவகாரத்தில் வைரமுத்துவை சின்மயி சம்பவம் நடந்து இவ்வளவு காலத்திற்கு அப்புறம் ஏன் அம்பலப் படுத்தினார் என்கிற கேள்வி எழுந்தபோது அதற்கான விளக்கமாக சின்மயி சொன்னது வைரமுத்து சின்மயிக்குக் கிடைக்க இருக்கும் பாடல்பாடும் வாய்ப்புகளை அவருக்கு சினிமாவில் இருக்கும் செல்வாக்கால் பறித்து விடுவார் என்று தான் சின்மயி தரப்பில் சொல்லப்பட்டது. அதற்கான பதிலாகத்தான் நீங்கள் வைரமுத்துவிற்கு இசை அமைப்பாளர்களிடம் ஒரு பாடகியின் பாடல் வாய்ப்புகளை மடைமாற்றி விடும் அளவிற்கான செல்வாக்கு ஏதும் இல்லை என்று தரவுகளுடன் விமர்சனம் செய்திருந்தீர்கள். உங்களின் விமர்சனத்தில் எந்த இடத்திலும் எதுவுமே தப்பாக தரக்குறைவாக சொல்லப் பட்டிருக்கவில்லை. வைரமுத்துவிற்கு வக்காலத்து வாங்கும் தொனியும் துளிகூட இல்லை. அப்புறம் ஏன் நீங்கள் மன்னிப்புக் கேட்க வெண்டும்? தன்னை பாலியல் ரீதியாக சீண்டிய ஒருவரிடம் சம்பவம் நடந்த பின்பும் சுமுகமாகப் பழகுகிறார்; அவரை குடும்ப விழாவிற்கு அழைத்து ஆசியும் வாங்கிக் கொள்கிறார் என்றால் சின்மயி ஒன்றும் அத்தணை நம்பகத்தனமானவராகத் தெரியவில்லையே...! சமூக வலைத்தளம் ஒன்றில் சமூகநீதி பற்றிய விவாதத்தில் ஒருத்தரை அப்போது ஆட்சியில் இருந்த ஜெயலலிதாவின் மூலம் கைது பண்ணும் அளவிற்குப் போன சின்மயி, அதே காலகட்டத்திலும் வைரமுத்துவின் மீது காவல்துறையில் ஒரு புகாரைக் கூட பதியாதது எதைக் காட்டுகிறது? சின்மயி வைரமுத்து விவகாரத்தில் முழு உண்மைகளையும் சொல்லவில்லை; அல்லது ஏதோ நிர்பந்தத்தில் தான் வைரமுத்துவை அம்பலப் படுத்துகிறார் இல்லையா?
Ram இவ்வாறு கூறியுள்ளார்…
அபிலாஷ், சபாஷ்....

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...