முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

எழுத்தாளர்களுக்கான கிராமம்

இன்றைய ஹிந்து (தமிழ்) பத்திரிகை நடுப்பக்கத்தில் அ. ராமசாமி எழுதியுள்ள “எழுத்தாளர் கிராமங்களை உருவாக்குவோம்” கட்டுரையில் உள்ள கோரிக்கைகள் மிகவும் முக்கியமானவை. 

அப்படியான கிராமங்கள் அமையுமெனில் எழுத்தாளர்கள் பரஸ்பரம் சந்தித்து உரையாடுவதற்கு மெனக்கெட தேவையிராது. வாசகர்கள், நண்பர்கள் ஆகியோர் தம் ஆதர்ச எழுத்தாளனைத் தேடி பயணிக்க வேண்டி இராது. ஓரிடத்தில் ஒரு எழுத்தாளர்கள் குழுவை காணலாம் என்பது மகிழ்ச்சியான விசயம் தானே!

எழுத்தாளர்கள் தொடர்ந்து உரையாடுவது, விவாதிப்பது, முரண்படுவது எல்லாம் சிலநேரம் கைகலப்பில் முடிவதுண்டு என்பதை நான் மறுக்கவில்லை. ஆனால் அதுவே மிகுந்த படைப்பூக்கத்தையும், எழுதுவதற்கு புதுப்புது ஐடியாக்களையும் தர வல்லது. என்னுடைய சிறந்த எழுத்துப் பருவம் சென்னையில் அப்படி பல எழுத்தாளர்களை இலக்கிய கூட்டங்களில் சந்திக்க வாய்ப்புகள் அமைந்த பத்தாண்டுகளே. எழுத்தாள நண்பர்கள் மத்தியில் இருக்கையிலே எழுத்துலகம் நிஜமானது எனும் உணர்வு ஏற்படும். அன்றாட உலகம் என்பது இதற்கு நேர்மாறானது - எந்த பொருளாதார பயனும் இல்லாத ஒரு பணிக்காக, ஒரு நாவலை எழுத ஒருவர் இரண்டு மூன்று ஆண்டுகள் இவ்வளவு எதற்காக உழைக்க வேண்டும் என அவர்களுக்குப் புரியாது. அவர்களுடைய ஒவ்வொரு நாளும் அன்றன்றைக்கான மகிழ்ச்சிக்காக, எதிர்காலத்தில் வீடு, நகைகள், கார் வாங்குவதற்காக மட்டுமே கழியும். எழுத்தாளர்களும் அதை செய்வார்கள் என்றாலும் அவர்களுடைய கணிசமான காலம் உடனே நிறைவேறாத, நிறைவேறினாலும் பொருள் பயனற்ற கனவுகளுக்காக உழைப்பதிலே செலவாகும். அதற்கான மன ஊக்கம் அப்படியானோர் மத்தியில் இருக்கையிலே அதிகமாகும். நான் பெங்களூர் வந்த பிறகு இதையே ரொம்ப மிஸ் பண்ணுகிறேன். (பேஸ்புக்கில் சக எழுத்தாளர்களை படிப்பது, அவர்களுடன் உரையாடுவது உதவுகிறது என்றாலும் வெர்ச்சுவல் உலகம் எப்போதுமே நிஜத்துக்கு ஈடல்ல.)

நிறைய எழுத்தாளர்கள் தமது இணையருக்கு, பிள்ளைகளுக்கு எதையும் விட்டுச்செல்வதில்லை என்பது உண்மை தான். நான் நாளை செத்துப் போனால் என்னை சார்ந்தோருக்கு விட்டுச்செல்ல என்னிடம் ஒன்றுமில்லை. ஒரு நெடிய மருத்துவ சிகிச்சைக்குத் தேவையான பணத்தை கூட நான் சேர்த்து வைக்கவில்லை. இது குறித்த எந்த குற்றவுணர்வும் எனக்கில்லை என்பது தான் விசித்திரம். நான் கண்டுள்ள எழுத்தாளர்களும் சாவின் விளிம்புக்கு செல்லும் வரை இப்படியான வருத்தங்கள் இல்லாமலே இருப்பார்கள். ஜி.நாகராஜனின் வாழ்க்கைக் கதையில் (சி.மோகன் எழுதியது) மனதை நடுங்க வைப்பது இப்படியான தருணமே. பு.பியில் இருந்து கா.சீ.சிவகுமார் வரை அது தானே எதார்த்தம். ஆகையால் தான் எழுத்தாளர்கள் மரணமுற்றால் அவர்களுடை இணையருக்கு வாழ்நாள் ஓய்வூதியம் வழங்க வேண்டும் எனும் அ.ராமசாமியின் கோரிக்கை அற்புதமானது. ஒரு பக்கம் ஒரு குடும்பத்தின் பகுதியாக ஒரு எழுத்தாளனைக் காண்பதில் எனக்கு உவப்பில்லை என்றாலும் அது தானே எதார்த்தம் - குடும்பத்தினரின் ஆதரவே பல எழுத்தாளர்களை பாதுகாக்கிறது எனும் போது அரசும் அக்குடும்பத்தினரையும் அங்கீகரிக்க வேண்டும். 

எழுத்தாளர்களுக்கான இலவச மருத்துவ மருத்துவ வசதி, பயணச்சலுகை போன்ற பரிந்துரைகளும் முக்கியமானவை. 

எழுத்தாளர்களுக்கு மட்டும் ஏன் இவ்வளவு வசதிகள், சலுகைகள் என சிலருக்குத் தோன்றலாம் - என் பதில் இப்படியான முயற்சிகளே நம் மண்ணில் முழுநேர எழுத்தாளர்கள் உருவாக உதவும் என்பதே.
 தமிழ் இலக்கியம் வளர வேண்டும் என்றால் முழுவாழ்க்கையையும் எழுத்துக்கு அர்ப்பணிப்போர் அவசியம். இன்று என்ன நிலைமை என்றால் எழுத்தாளர்கள் பத்திரிகைத் துறையிலோ சினிமாவிலோ பணி செய்து வயிறு வளர்க்க வேண்டி இருக்கிறது. இவர்களில் எல்லாரும் எஸ்.ரா, ஜெ.மோ அல்ல; இவர்களை இதழியலும் சினிமாவும் அப்படியே செரித்து விடுகிறது. ஒரு சினிமாவின் உருவாக்கத்துக்கு இடங்களை தேர்வு செய்வதற்காக இயக்குநர்கள் வெளிநாடுகளுக்கு பயணித்து அங்கேயே மாதக்கணக்கில் தங்குவதை பார்க்கிறோம்; ஒரு கதையை மெருகேற்ற பல பேர் இணைந்து மாதக்கணக்கில் தங்கியிருந்து விவாதிப்பதை பார்க்கிறோம். இவ்வளவு செய்தும் குப்பையான படங்களையே பெரும்பாலோர் உருவாக்குகிறார்கள் என்பது வேறு கதை. ஆனால் இந்த வசதிகளில் பத்தில் ஒரு பகுதி எழுத்தாளனுக்கு அமைந்தால் அவனால் விரிவான ஆழமான நாவல்களை எழுத முடியும். முதலில் அரசு தான் இதற்கு உதவ வேண்டும். போகப் போக கலாச்சார இயக்கங்களை தோற்றுவித்து இலக்கியத்தை மக்களுக்கு பரவலாக எடுத்து சென்று பதிப்புத் துறையை லாபகரமாக்கினால், பின்னர் அரசின் ஆதரவின்றியே இங்கேயே எழுத்தாளர்கள் செயல்படும் நிலை தோன்றும்.

அடுத்து விளையாட்டு வீரர்களுக்கு அரசு இத்தகைய பொருளாதார, கட்டமைப்பு உதவிகளை தாராளமாக செய்து தருகிறது. எழுத்தாளனுக்கு ஏன் தருவதில்லை? ஒரே காரணம் - நான் ஏற்கனவே ஒரு கட்டுரையில் சொன்னது போல - எழுத்தாளன் தேசியத்தின் அடையாளமாவதில்லை. அவன் அரசியல் உணர்வுகளுடன் இருக்கிறான். ஒரு விளையாட்டு வீரனைப் பிடித்து உலுக்கினால் அப்போதைய அரசாங்கத்தை உடனே புகழ்ந்து டிவீட் போடுவான். ஆனால் எழுத்தாளர்களில் பாதி பேர் மறுப்பார்கள். எதிர்த்து எழுதுவார்கள். அதனாலே அரசாங்கங்கள் தொடர்ந்து அவர்களை புறக்கணிக்கின்றன. இந்த நிலை மாற வேண்டும் - மாநிலங்கள் தமது பண்பாட்டு அடையாளங்களாக எழுத்தாளர்களை காண்பது அவசியம்.

எழுத்தாளர்கள் கூடி விவாதிப்பதற்கான அரங்கு, சர்வதே எழுத்தாள கூடுகைகளுக்கான ஒருங்கிணைப்பு, கருத்தரங்குகள் என அ.ராமசாமி வைத்துள்ள வேறு கோரிக்கைகளும் முக்கியமானவை. கூடுதலாக, விளையாட்டு அரங்கு, கேளிக்கை அரங்கு, அம்மா உணவகம் போன்ற உணவுக்கூடங்கள் அமைந்தால் சிறப்பு.

“கிராமம்” என சொல்லுடன் உடன்படாமல் அது சாதிய வெளி என ரவிக்குமார் உள்ளிட்டோர் கருத்து தெரிவித்ததை ஏற்கிறேன். அ.ராமசாமி சொல்லியுள்ளதைப் போல “காணி நிலம்” என்றோ கம்யூன் என்றோ நாம் இந்த குடியிருப்புகளை அழைக்கலாம்.

ஆம், இப்படியான ஒரு வாழ்விடம அமைந்தால் அங்கும் எழுத்தாளர்கள் தனித்தனி குழுக்களாகவே செயல்படுவார்கள். ஆனாலும், இலக்கியத்துக்கு அது மிகப்பெரிய எழுச்சியாக அமையும் என்பதில் எனக்கு ஐயமில்லை.

ஏதோ எனக்கு அங்கு ஒரு வீடு வேண்டும் எனும் நோக்கில் நான் இதை சொல்வதாக நினைக்க வேண்டாம் - எனக்கான வீட்டு வாடகையை மாதாமாதம் செலுத்த எனக்குத் தெரியும். நான் வேலையை இழந்து நின்றாலும் என் அம்மா உயிருடன் உள்ள வரை எனக்கு சோறிட ஒரு வீடு ஊரில் உண்டு. இந்த கோரிக்கையை வைக்கும் அ.ராமசாமிக்கும் வீடு உண்டு என நம்புகிறேன். நாங்கள் பிச்சைக்காரர்கள் அல்ல. நான் ஒரு கூட்டுக் குடியிருப்பு எனும் கனவுத்திட்டம் இலக்கிய உலகுக்கு நன்மை பயக்கும் எனும் நோக்கிலேயே எழுதுகிறேன். 

ஒரு பைசா கூட சன்மானம் எதிர்பாராமல் என்னைப் போல பலர் கடந்த எண்பது ஆண்டுகளுக்கு மேலாக இலக்கியத்துக்காக உழைத்திருக்கிறார்கள். அதனாலே இங்கு நவீன இலக்கியம் என ஒன்று இருக்கிறது. சொல்லப் போனால் இந்த மண்ணில் பிரதிபலன் எதிர்பாராமல் உழைக்கும் ஒரே இனம் எழுத்தாளர் இனம் தான். நான் அந்த இலக்கியத்துக்காகத் தான் இதைக் கேட்கிறேன்.

இப்படியான ஒரு எழுத்தாள கிராமம் தோன்றினால் எல்லா எழுத்தாளர்களும் வேலையை விட்டுவிட்டு அங்கே போய் பழியாக கிடக்க போவதில்லை. மாறாக, இப்போதைக்கு வேலை இல்லாதவர்கள், வேலை செய்ய விரும்பாதவர்கள், முழுநேரமும் எழுத்துக்கு தம்மை அர்ப்பணிப்பவர்கள் அங்கே செல்வார்கள். ஒருவர் எந்த வேலையும் செய்யாமல் முழுநாளும் பஜனை, பூஜை ஏற்பாடுகள், ஆசிரம வேலைகள் என சாமியாராக வாழ்வதில் நமக்கு எந்த பிரச்சனையும் இல்லையென்றால் அதைவிட சமூகத்துக்கு கூடுதல் பயனளிக்கக் கூடிய இந்த ஏற்பாட்டை பாராட்டுவது தானே நியாயம். எழுத்தாளர்கள் நிச்சயமாக பல்லாயிரம் கோடிகள் கறுப்புப் பணத்தை வெள்ளையாக்க (money laundering) மாட்டோம். பள்ளிக்கூடம் கட்டி குழந்தைகளை சிவசங்கர் பாபா போல பலாத்கார பண்ண மாட்டோம். ஜக்கியைப் போல வனநிலத்தை ஆக்கிரமித்து யானைகளை அழிக்க மாட்டோம். இளம்பெண்களை சாமியாராக்கி கொடுமைப்படுத்த மாட்டோம்.  மதமும், கறுப்புப்பணமும் இல்லாத எழுத்தாள கிராமங்கள் உருப்படியாகவே இருக்கும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

நலத்திட்டங்களின் அடிப்படையான பிழை

  மகளிர் உதவித் (உரிமைத்) தொகைத் திட்டத்தைக் கைவிடுவதைக் குறித்து தவெக அரசு பரிசீலிக்க வேண்டும். அதற்காகச் செலவாகும் 15,000 கோடி ரூபாயை படித்து வேலை கிடைக்காமல் இருப்போரில் வருடாந்திர குடும்ப வருமானம் ஒரு அளவுக்கு மேல் குறைவாக இருப்போருக்கு அளிக்க வேண்டும். அதேபோல முறைசாரா தொழிலாளர்களுக்கு நொடிந்த தொழில்களில் ஈடுபட்டிருப்போருக்கும் கொடுப்பதை அரசு பரிலீக்க வேண்டும். அதாவது உதவி / உரிமைத் தொகையை பாலினம் சார்ந்ததாக அல்லாமல் தொழில் சார்ந்ததாகப் பார்க்க வேண்டும். மேற்சொன்ன பெண்களும் அப்போது இத்திட்டத்திற்குள் வந்துவிடுவார்கள். சொந்தமாக வீடும் சொத்தும் கொண்ட பெண்கள் இந்த தொகையைப் பெறுவதைத் தவிர்க்க இயலும். இந்த மாற்றத்திற்கான தேவைகளாக நான் கருதுவன: 1) வர்க்கரீதியாக இது திட்டமிடப்படாததால் நிறைய குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன. 2) இதை அரசு மக்களுக்கு கொடுக்கும் லஞ்சமாக சிலர் காண்கிறார்கள். அதாவது பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் அவர்களைத் தம் வசம் இழுப்பதற்காக அரசுகள் இத்திட்டங்களைக் கொண்டு வந்துள்ளதாக அவர்கள் நினைக்கிறார்கள். இதனால் மக்கள் நலத் திட்டத்துக்கே பெயர் கெடுகிறது. 3) தொழில்...