வெங்கடேஷ் ஐயரை ஒரு வலைதள பந்துவீச்சாளராக டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணிக்கு தேர்வு பண்ணி இருக்கிறார்கள். ஆனால் ஊருக்கே தெரியும் அவர் ஒரு வீச்சாளர் அல்ல என்று. அதே நேரம், அந்த ஆறடிக்கு மேலான உயரம், தெளிவான திட்டமிடல், பந்தின் நீளம், திசையில் உள்ள நேர்த்தி, அவரது மன அமைப்பின் நிதானம் காரணமாக டி20 போட்டிகளில் அவரால் ஒரு மிதவேக வீச்சாளராகவும் சோபிக்க முடியும். தொடர்ந்து வாய்ப்பளிக்கும் பட்சத்தில் டி20 மட்டுமல்ல இந்திய ஒருநாள் அணியிலும் வெங்கடேஷால் ஒரு மட்டையாட்ட ஆல்ரவுண்டராக மலர முடியும்.
இம்முறை அவரது தேர்வுக்கு ஹர்த்திக் பாண்டியாவின் உடற்தகுதியின்மை, அவர் ஐ.பி.எல்லில் பந்தே வீசாதது அவர் குறித்த நிச்சயமின்மையை தேர்வாளர்களுக்கும் அணிக்கும் ஏற்படுத்தி உள்ளது ஒரு முக்கிய காரணம். அவர் இனி முழுமையான உடற்தகுதி, ஆட்டநிலையை அடைந்து அணிக்கு மீள ஒரு வருடமாவது ஆகும் என கணிக்கிறேன். அதுவரை அவரிடத்தில் ஷர்துலை பந்து வீச்சு ஆல்ரவுண்டராகவும், வெங்கடேஷை ஆறாவது மட்டையாட்ட வீச்சாளராகவும் ஆட வைக்க முடியும்.
இந்த டி20 உலகக்கோப்பை தொடருக்கு தேர்வாளர்கள் துணிந்து ஹர்த்திக்கை அணியில் இருந்து தூக்குவது அவசியம். அவர் இந்திய அணியில் ஆடுவதைப் பார்க்க கரகாட்டக்காரனில் காரை செந்தில், கவுண்டமணி தள்ளி வருவதைப் போல இருக்கிறது. அதை பேரீச்சம் பழத்துக்கு தற்காலிகமாக போடுவதே நியாயம்.
ஒரே சவால் தான் - வெங்கடேஷால் தொடர்ந்து ஆல் ரவுண்டராக செயல்படும் உடற்தகுதியை வளர்க்க முடியுமா? இப்போதைக்கு இரண்டு தொடர்கள் தாண்டும் முன் காயமடைந்து விடுவார் எனத் தோன்றுகிறது. அவர் கடுமையாக உழைத்து வலிமை பெற வேண்டும். இந்தியாவின் கேலிஸாக வர வேண்டிய திறன் அவருக்கு உள்ளது. நிகழுமா என பொறுத்திருந்து பார்ப்போம்.

கருத்துகள்