முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பாலச்சந்தரின் காட்சிமொழி: கூடைப்பந்து












இயக்குநரின் பாலச்சந்தரின் படக் காட்சிகளில் உருவகங்கள் தடுக்கி விழ வைக்கும் அளவுக்கு இருக்கும் என்பது நாம் அறிந்ததே. அண்மையில் அவரது “வானமே எல்லை” படத்தை மீண்டும் பார்த்துக் கொண்டிருக்கையில் ஒரு சுவாரஸ்யமான விசயத்தை கவனித்தேன்: பாத்திரங்களின் முன்கதை கூறல், பிளேஷ்பேக், எண்ணவோட்டத்தை சுருக்கமாக கச்சிதமாக சொல்வதற்கு இந்த உருவகங்கள் - குறிப்பாக பின்னணியில் வரும் பொருட்களை foreground பண்ணுவது - அவருக்கு வெகுவாக உதவுகிறது. முன்னர் நான் இந்த பாணி ஒரு கவர்ச்சிக்காக, ஸ்டைலுக்காக அவர் பயன்படுத்துவது என தவறாக நினைத்திருந்தேன். வேறு இயக்குநர்களை விட அதிக பாத்திரங்களை ஒரு கதைக்குள் கொண்டு வருபவராக பாலச்சந்தர் இருக்கிறார், ஆனால் இப்பாத்திரங்களின் போக்கில் மையக் கதையை தொலைக்காமல் கராறாக, சிக்கனமாக அவர்களை இந்த காட்சிமொழியே அவருக்கு வெகுவாக உதவுகிறது. “வானமே எல்லையில்”ஊழல் பெருச்சாளியான நீதிபதி ஒருவர் தன் மகன் தனது சீர்கேட்டுக்கு எதிராக கத்தி கொந்தளித்துக் கொண்டிருப்பதை வீட்டில் இருந்து பார்த்துக் கொண்டிருக்கிறார். வெளியே மழை கொட்டிக் கொண்டிருக்கிறார். மகன் முழுக்க நனைந்த நிலையில் இளமையின் ஆவேசத்துடன் அப்பாவின் நடவடிக்கையால் புண்பட்டு கத்துகிறான். அம்மா அவனை சமாதானப்படுத்துகிறாள். நீதிபதி ஒன்றையும் சொல்வதில்லை. அவர் பாட்டுக்கு பொறுமையாக கண்னாடியைப் பார்த்தபடி சவரம் செய்து கொண்டிருக்கிறார். இது போதும்! ஆளாளுக்கு முழநீளத்துக்கு வசனம் பேசி தம் தரத்தை நியாயப்படுத்த ஒரு காட்சியை அவர் வைக்கத் தேவையில்லை. 


இப்படியான ஏராளமான ‘பேசும்’ காட்சிகளை பாலச்சந்தர் உருவாக்கி இருக்கிறார். இக்காட்சிகளில் வசனங்களை எடுத்து விட்டு இசையால் நிரப்பினால் கூட பார்வையாளர்களுக்கு அந்த உணர்ச்சிகளும் பிரச்சனைகளும் புரிந்து போகும். ஆனால் பாலச்சந்தர் பஞ்ச் வசனங்களை வைப்பதாலே நமக்கு சற்று மிகையாகத் தெரிகிறது. 


மேற்சொன்னதை விட எனக்குப் பிடித்த மற்றொரு காட்சி “வானமே எல்லையில்” வருகிறது. படம் முழுக்க ஆனந்த பாபு, பப்லுவின் பாத்திரங்கள் மோதிக் கொண்டே இருக்கும், ஆனால் சீக்கிரமே சமாதானமாகி சேர்ந்து விடுவார்கள். இந்த குறிப்பிட்ட காட்சியில் தற்கொலைக்காக காத்திருப்பவர்கள் காதல் செய்யலாமா கூடாதா என்பது குறித்த சச்சரவு அவர்களுக்குள் தோன்றுகிறது. கவுதம் வந்து விலக்கி விட சமாதானமாகிறார்கள். இது தான் காட்சி. காட்சி துவங்கும் போது இருவருமாக கூடைப்பந்து ஆடுகிறார்கள். ஒருவர் பேச மற்றவர் பதில் சொல்ல பந்து கூடைக்குள் விழுந்தபடி இருக்கிறது. அடுத்து பந்தை தரையில் தட்டிக் கொண்டே கத்தி கூச்சல் போட ஆரம்பிக்கும் அவர்கள் கூடைப்பந்து கோர்ட்டுக்கு வெளியே போகிறார்கள். இக்காட்சி முழுக்க கூடைப்பந்து தான் foreground ஆகும் பொருள். கவுதம் உள்ளே வந்து அவர்களை சமாதானப்படுத்த அவர்கள் மீண்டும் கோர்ட்டுக்குள் வந்து பந்தை தரையில் தட்டிக் தட்டி விளையாட ஆரம்பிக்கிறார்கள். இருவருக்கும் இடையிலான உரையாடலில் வரும் தொந்தரவு, அதனால் ஒரு மோதல், அது மீண்டும் இயல்புநிலை அடைவதை எவ்வளவு அழகாக அவர் இந்த கூடைப்பந்தால் காட்டி விட்டார் பாருங்கள். வசனங்களை நீக்கி விட்டு பின்னணி இசையுடன் மட்டும் பார்த்தால் அக்காட்சி இன்னும் கூர்மையாக வலுவாக ஒரு உலக சினிமா காட்சியைப் போல் இருக்கும் என நினைக்கிறேன். ஆனால் வெகுஜன சினிமாவின் கட்டாயம் இயக்குனரை அங்கு அதிக வசனங்களை திணிக்க வைக்கிறது.  


தமிழில் இப்படி பின்னணியை, பொருட்களை கதைசொல்ல காட்சி பூர்வமாக பயன்படுத்திய மற்றொரு இயக்குநர் ஶ்ரீதர். அவருடைய திரையுலகும் உன்னிப்பாக கவனித்து அலசத்தக்கது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.

கவனம் திருப்பும் ஆயுதம் - ஹிட்லர், மோடி, விஜய்: ஒற்றுமையும் வேறுபாடும்

  தவெக ஒரு 'ஆட்டத்திருப்பக்' கட்சி அல்ல கவனம் திருப்பும் (distracting) கட்சி எனத் தோன்றுகிறது. ராஜ்தீப் சர்தேசாய் தன் யுடியூப் அலைவரிசையில் மோடியின் ‘திமாகி நக்சல்’ பேச்சுச் சேட்டையைப் பற்றிப் பேசும்போது அது ஒரு திட்டமிடப்பட்ட கவனத் திருப்பல் பேராயுதம் (weapon of mass distraction) என்கிறார். அமெரிக்கா முன்பு சதாம் ஹுசைன் அணுகுண்டு வைத்திருப்பதாகச் சொல்லி இராக் மீது போர் தொடுத்ததைத் தொடர்ந்து பேராபத்து ஆயுதங்கள் குறித்து உலகம் முழுக்க விவாதங்கள் நடந்தன. ஆனால் அவை உண்மையில் அமெரிக்காவின் நோக்கத்தை மறைத்து மக்களின் கவனத்தைத் திருப்புவதற்காக உருவாக்கப்பட்ட பிரச்சாரம் மட்டுமே எனப் பின்னர் தெரிய வந்தது. உலகம் முழுக்க வலதுசாரிகள் இத்தகைய கவனம் திருப்பும் பேராயுதங்களைக் கொண்டே மக்களைக் கட்டுப்படுத்தி தம் வசம் வைத்திருக்கிறார்கள், தமது மோசமான நிர்வாகம் குறித்து விவாதம் எழாமல் பார்த்துக் கொள்கிறார்கள் என்கிறார் சர்தேசாய். அவர் மோடி அண்மையில் தனக்கெதிராக ஜென் ஸீ போராட்டம் தனது நிர்வாகக் கோளாறுகளை முன்வைத்து நடந்தபோது கவனத்தைத் திருப்பும் வண்ணம் கோட்பாட்டுத் தீவிரவாதிகள் பலர் இன்று உள்ளார்...