முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

குத்துச்சண்டையும் காயமும்



ஸ்பாரிங் என்றால் பயிற்சி குத்துச்சண்டை. கடந்த வாரம் முழுக்க எங்களுடைய ஜிம்மில் ஸ்பாரிங் நடந்து கொண்டிருந்தது. சில நேரம் மதியம் ஆரம்பித்து சிறு இடைவெளிகளுக்குப் பின்னர் இரவு பன்னிரெண்டு மணி வரை நடந்தது. தன் மாணவர்களுடன் எங்கள் மாஸ்டர் ஆன்டனி ஓயாமல் ஸ்பார் செய்து கொண்டிருந்தார். கடந்த வெள்ளைக்கிழமை எனக்கும் ஸ்பாரிங் உண்டு என அதற்கு முந்தின நாள் சொல்லியிருந்தார். ஒரு பக்கம் கிளர்ச்சி இன்னொரு பக்கம் பயம். அவர் நான் பயிற்சி செய்யும் போது தலையைப் பாதுகாக்காமல், guarding செய்ய மறந்தால், focus padஆல் நொங்கென காதில் அடிப்பார். அதுவே ஒரு கணம் தலைசுற்றும். ஸ்பாரிங்கின் போது இவரிடம் குத்து வாங்கினால் என்னாவது என பயந்தேன். ஆனால் எதிர்பார்த்த அளவுக்குபயங்கரமாகஇல்லை


மாஸ்டர் என்னை முதலில் நண்பர்களின் ஸ்பாரிங்கை கவனிக்க சொன்னார். அதன் பிறகு என்னிடம் மூன்று முறை ஸ்பாரிங் இடைவெளிகள் விட்டு செய்தார்.

 என்னால் நின்று குத்த முடியாது என்பதால் - அப்படி செய்தால் என் சமநிலையை இழந்து விடுவேன், ஒரே நேரத்தில் இரண்டு கைகளையும் பயன்படுத்த இயலாது - அவர் எனக்கு எதிரே ஒரு நாற்காலியில் அமர்ந்து கொண்டர். நான் ஒரு பெஞ்சில் அமர்ந்தேன். எங்களிடையே ஒரு கையை நீட்டி குத்துவிடும் அளவுக்கு தூரம். எங்களுடைய ஸ்பாரிங் சக்கர நாற்காலி குத்துச்சண்டை பாணியில் ஆரம்பித்தது (யுடியூபில் கிடைக்கும், பாருங்கள்.) - அதாவது காலாட்டம் இல்லாத, முழுக்க தலை ஆட்டம், guarding, குத்துக்களைக் கொண்ட பயிற்சிப் போட்டி. மொத்தமாக மூன்று நிமிடங்கள்


அவர் தயாரானதும் தன் கையுறைக் கைகளால் என் கையுறைக் கைகளைத் தொட்டு ஆரம்பிக்கலாம் என சைகை காட்ட வேண்டும். எனக்கு அது தெரியாது. ஏன் காத்திருக்கிறார், சரியான அவகாசம் இது என எண்ணி டொங்கென ஒரு குத்தை அவரது நெற்றியில் விட்டேன். அதன் பிறகு தான் அடடா என சங்கடமாகி விட்டது. திரும்பத் திரும்ப மன்னிப்புக் கேட்டேன். அவர் ஒருபோதும் குத்துச்சண்டையில் மன்னிப்பு கேட்கலாகாது என எச்சரித்தார். அடிப்பதும், அடிவாங்குவதுமே போட்டி. ஆரம்பித்தோம். அவர் முதலில் கார்டுக்குப் போனார். நான் தொடர்ந்து அவரது தலையைப் பாதுகாக்கும் கையுறைகள் மேலே குத்திக் கொண்டிருந்தேன். என்னால் ஊடுருவ முடியவில்லை. ஒரு நிமிடத்தில் களைத்துப் போனேன். இப்போது அவர் திரும்பக் குத்தினார். அவரது வேகம் அபாரமானது. முகத்தில் குத்திவிட்டு, ஜாபுடன் சேர்ந்து ஒரு ஹூக் பண்ணி பின்னந்தலையை தாக்குவார். தோளில் குத்துவார், கவனம் அங்கே போனதும் தலையில் குத்துவார். இதெல்லாம் நொடிகளில் நடக்கின்றன. எனக்கு மூச்சு வாங்கியதால் அவரைத் தடுக்கவே முடியவில்லை. அதனால் ஆட்டத்தை நிறுத்தி விட்டேன். “முதலிலே எல்லா பஞ்ச்களையும் இறக்கினால் இப்படித்தான் மூச்சு வாங்கும்.” என்று சொல்லி விட்டு அடுத்த ஸ்பாரிங்காக ரிங்குக்குள் போய் விட்டார்


என்னுடைய இரண்டாவது ஸ்பாரிங்கின் போது நான் ஒரு திட்டத்துடன் தயாராக இருந்தேன். உடனடியாக, ஒரே இடத்தில் மட்டும் குத்தாமல் முதலில் சில வினாடிகள் கார்ட் எடுத்தேன். கழுத்தில் ஒரு ஜேப், காதுக்கு மேல் கடைநுதலெலும்பு இருப்பதாக சொல்லப்படும் பகுதி இருக்கிறதல்லவா அங்கொரு ஹூக் விட்டு அவர் எதிர்பாராத போது முகத்தில் குத்தினேன். இப்படி மூன்று முறை அவரது பாதுகாப்பு அரணை முறியடித்து முகத்தில் அடித்தேன். இப்போது அவர் திரும்பக் குத்த ஆரம்பித்தார். அவரது குத்துக்களின் வேகத்தை சமாளித்து கார்ட் பண்ணுவது மிக மிக கடினம். இதை நான் என்னுடைய அனுபவத்திலும் பிற நண்பர்களுடன் அவர் ஸ்பாரிங் செய்ததை வைத்தும் கணித்திருந்தேன். தடுத்தாடினால் நான் காலி. அதனால் ஐந்து வினாடிகளுக்கு மேல் நான் தடுத்தாடவில்லை. முன்னே போய் தொடர்ந்து ஐந்து-ஐந்து என ஜேப்களை வேகமாக அவரது முகத்தில் விட்டேன். பெரிய நேர்த்தி எல்லாம் இல்லை, முரட்டு எகிறல் தான், ஆனால் பத்து வினாடிகளில் அவர் பின்வாங்கி சாய்ந்தார், சிரித்தார், பிறகு மீண்டும் விட்ட இடத்தில் இருந்து ஸ்பாரிங் தொடர்ந்தது. இம்முறை மூன்று நிமிடங்கள் முடிந்ததும் நான் களைக்கவில்லை


மூன்றாவது ஸ்பாரிங்கை நாங்கள் பாயிண்ட்ஸ் அடிப்படையில் வைத்துக் கொண்டோம். முகத்தில் குத்தினால் இவ்வளவு பாயிண்ட்ஸ், உடம்பில் என்றால் இவ்வளவு என்று. இந்த முறை துவக்கம் முக்கியம் என முடிவெடுத்து முதலிலேயே குத்த ஆரம்பித்தேன். உடம்பில் குத்தி விட்டு ஹூக் செய்யப் பார்த்தேன். எதிர்பார்த்ததைப் போல அவருடைய குத்துக்கள் என்னுடைய தலையில் விழுந்தன. ஆனால் அந்த ரிஸ்க் எடுக்காமல் அவரை நானும் அடிக்க முடியாது. கடந்த முறை பண்ணின தொடர் வேக குத்துக்களையும் விட்டேன். அவருடைய துல்லியமான குத்துக்கள் படுவேகமாக என்னை முறியடித்தன என்றாலும் என்னுடைய வேகமாக குத்துக்களும் அவருடைய முகத்தை வலுவாகத் தொட்டன.


 நான்சார் தான் வென்றார்என்று கூறினேன், அவர் ரொம்ப பணிவாகநீங்க தான் ஜெயிச்சீங்கஎன்றார். அவருடைய திறனுக்கும் அனுபவத்துக்கும் வலிமைக்கும் என்னை ஒரே நொடியில் நாக் அவுட் செய்திருக்க முடியும். ஆனால் நான் எவ்வளவு தூரம் போகிறேன் எனப் பார்ப்பதற்காக தன் திறனில் 5% தான் ஆடியிருக்கிறார் என அறிவேன். எனக்கு நெகிழ்வாகவும் சற்று குற்றவுணர்ச்சியாகவும் இருந்தது. அதைக் காட்டிக் கொள்ளாமல் இருந்தேன். சுற்றி நின்ற நண்பர்களும் மாஸ்டரும் என்னுடைய வேகத்தை, game awareness, தொடர்குத்துகளை, ஒவ்வொரு குத்துக்குப் பிறகும் என் கைகள் வேகமாக தலைக்கு வந்து கார்ட் எடுப்பதை சிறிது பாராட்டினார்கள். இதெல்லாம் எனக்கே தெரியவில்லையே என ஆச்சரியப்பட்டேன். சிறிது நேரம் மற்றவர்களின் ஸ்பாரிங்கைப் பார்த்து விட்டு கிளம்பினேன்.


வழியெல்லாம் பைக்கில் ஸ்பாரிங்கில் எந்த இடத்தில் என்ன நடந்தது என மனதில் திரட்ட முயன்றேன். ஆச்சரியமாக என்னால் துல்லியமாக நினைவு கொள்ள் முடியவில்லை. சண்டைப் பயிற்சியின் போது நமது இன்னொரு மனமே விழித்துக் கொள்கிறது. என்ன நடக்கிறது, எப்படி சண்டை செய்கிறோம் என்பதை நேர்கோட்டில் சிந்தித்து நாம் செய்வதில்லை. மனதில் மழை முடிந்த பின் தலையில் விட்டுவிட்டு விழும் சாரல் போல சில நினைவுத்துளிகளே மீதம் இருக்கின்றன. அவற்றைக் கொண்டு என்ன நடந்திருக்கும் என ஒருவாறு தொகுத்துக் கொண்டு அடுத்த ஸ்பாரிங்கில் எந்த இடத்தில் எப்படி அடிக்க வேண்டும் என யோசித்துக் கொண்டு வண்டியோட்டினேன். சாலையில் எந்த வண்டி போகிறது, வாகன ஒலிகள் எதுவும் எனக்குத் தெரியவில்லை. என் மனம் முழுக்க ஸ்பாரிங் தான் நடந்து கொண்டிருந்தது. எனக்குள்ளே பேசிக் கொண்டிருந்தேன்.


இரவில் மிகச்சன்னமான ஒரு தோள் வலி. அடுத்த நாள் அது பரவி தோளுக்கு மேலுள்ள பகுதியில் ஒரு மெல்லிய அழற்சியாகியது. உட்கார்வது, எழுதுவது உடல் அலுப்பைத் தந்தது. எலும்பு மூட்டு மருத்துவரைப் பார்த்தேன். எனக்கு ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு சுழற்றிக் கச்சை (rotator cuff) காயம் ஏற்பட்ட போது சிறப்பாக சிகிச்சை அளித்தவர். அவர் என்னை பல கோணங்களில் கையைத் திருப்பக் கேட்டு விட்டு ஒரு சிறிய காயம் மட்டுமேசுழற்றிக் கச்சையை ஒட்டிய தசைகள் ஸ்பாரிங்கின் போது சற்று அதிகமாக இழுபட்டிருக்கும், சண்டைப் பயிற்சியின் போது அட்ரெலினின் சுரப்பினால் எனக்கு வலி தெரிந்திருக்காது, இரவானதும் வலி வெளிவந்திருக்கும் என்றார். மருந்துகள் தந்து விட்டு, இது ஸ்பாரிங்கின் போது இயல்பு தான், தோள் தசைகள் வலுவடையும் வரை ஸ்பாரிங் மட்டும் வேண்டாம் என்றார்

அதனால் இனி அடுத்த இரு மாதங்கள் வெறும் குத்துப்பையிலும், focus padஇலும் மட்டுமே பயிற்சி. ஸ்பாரிங் பண்ண முடியாது. நான் அதை மிகவும் மிஸ் பண்ணப் போகிறேன்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...