முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஈ ஸாலா ...



கர்நாடக தேர்தல் கருத்துக் கணிப்புகள் பற்றி ஒரு நண்பர் உற்சாகமாகப் பேசிக்கொண்டிருந்தார். ஆனால் எனக்கு இதை எப்படி எடுத்துக் கொள்வது எனத் தெரியவில்லை. காங்கிரஸ் 110க்கு மேல் வாங்கி எந்த சிக்கலும் இல்லாமல் ஆட்சிக்கு வருமா இல்லை 80-85 என்று இரு கட்சிகளும் டிக்கிலோனா பண்ணி மூன்றாவது அணி, கட்சி தாவும் ஹை ஜம்ப் பேர்வழிகள் எல்லாம் பாஜகவின் ஐந்து நட்சத்திரம் விடுதிகள் இருந்து சரக்கடித்து பேரம் பேசி அதையே டிவியில் காட்டி நம்மைக் கடுப்படிப்பார்களா?
கர்நாடகா முழுக்க ஒரே மனநிலை இல்லை, ஒவ்வொரு பகுதி ஒவ்வொரு அரசியல் முடிவுடன் இருக்கிறது என்கிறார்கள். பொதுவாக ஆளும் பொம்மை அரசு மீது மிகுந்த அதிருப்தி இருந்தாலும் நான் வசிக்கும் பகுதியில் பெரிய அலை ஒன்றையும் காண முடியவில்லை. நான் பார்க்கும் இடங்களில் எல்லாம் அதே மதவெறுப்பையே காண முடிகிறது. ஒருவேளை எனக்கு கன்னடம் தெரிந்து உளவட்டங்களீல் இருந்தால் நாடி பிடித்து பார்த்திருப்பேன். அதனால் நான் சொல்வதெல்லாம் மேம்போக்காக தெரிவதையும் செய்திகளையும் வைத்தே. தமிழகத்தில் தேர்தலுக்கு முன்பே ஒரு மனவோட்டம் வெளிப்படையாகத் தெரியும் - இங்கு அப்படி இல்லை என்கிறேன்.
அப்புறம் கர்நாடக காங்கிரஸ் ஏன் ரேவதிக்கு விவாகரத்து விண்ணப்பம் வாங்கி வரும் மோகனைப் போன்றே முகத்தை வைத்திருக்கிறது? ஏன் உற்சாகம், துடிப்பு ஏதும் இல்லை? என் வீட்டில் இருந்து வாக்காளர் அட்டை வாங்கித் தருகிறோம் என்று காங்கிரஸ்காரர்களே ஏற்பாடு பண்ணித் தந்தார்கள். ஆனால் ஏன் இன்னும் அட்டை வரலே நாங்களே கேட்டால் கூட இதோ இதோ வந்திருங்க என்கிறார்கள். இலவசமா வாக்குகள் வேணாமாய்யா? ஏன் இப்படி காலை நகர சாலைகளில் நடைபயணம் புறப்பட்ட பசுமாடு மாதிரியே இருக்கீங்கப்பா? நீங்க தானே ஜெயிக்கப் போறீங்க? பறந்து பறந்து வேலை செய்ய வேணாம்?
எங்கள் பகுதியில் ரகு அண்ணா என காங்கிரஸ் தலைவர் இருக்கிறார். ராகுல் காந்தி கைது என நாடே பரபரப்பாக இருந்த நாட்களில் அவருக்கு பிறந்த நாள் வந்ததால் தினமும் இரவானால் பிரியாணி வினியோகம், பட்டாசு வெடித்து கொண்டாட்டம் என அவருடைய ஆதரவாளர்கள் அதகளம் பண்ணிக்கொண்டிருந்தார்கள். நம்மூரில் எடப்பாடியை கைது பண்ணுவதாக சொன்னால் கூட அதிமுகவினர் முகத்தை தொங்க போட்டுக்கொண்டாவது இருப்பார்கள். ஜெயா கைது என்றால் சொல்லவே வேண்டாம். இங்கே எதற்கெடுத்தாலும் ஸ்வீட் எடு, கொண்டாடு தான். எனக்கு இவர்களின் அரசியலே புரியவில்லை - எவ்வளவு பெரிய வாய்ப்பு. நான் ரகு அண்ணா இடத்தில் இருந்திருந்தல் ஒரு பந்தல் போட்டு ராகுலுக்காக சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் பண்ணி இருப்பேன். இவர்கள் சாகும் வரை பிரியாணி போராட்டம், போஸ்டர் என அதகளம் பண்ணுகிறார்கள். எனக்கு சத்தியமாகப் புரியவில்லை.
ஒருவேளை இந்த திரைக்குப் பின்னால் பெரிய வேலைகள் நடந்து கொண்டிருக்கலாம். வாக்காளர் அட்டை கிடைத்தால் நான் முதன்முதலாக ஒரு அந்நிய மாநிலத்தில் வாக்களிப்பேன்.
என்னதான் காங்கிரஸ் மீது எனக்கு கருத்தியல் மாறுபாடுகள் இருந்தாலும் அவர்கள் ஆட்சியைப் பிடிப்பது பெரிய ஆறுதலாக அமையும். இங்குள்ள சூழல் மாறும். இது பொதுவாக எளிமையான ஜாலியான மக்களைக் கொண்ட மாநிலம். இவர்களுக்கு வெறுப்பரசியல் எல்லாம் பொருந்தவில்லை. மாலை ஏழு மணியானால் இந்த குளிருக்கு லைட்டாக சரக்கு போட்டுக்கொண்டு தூங்கப் போய்விடுவார்கள், அதிர்ந்தே பேச மாட்டார்கள். இங்குள்ள மதவெறுப்பு அதனாலே என்னை ஆச்சரியப்படுத்தியது. அதனாலே காங்கிரஸே இவர்களுக்கு மனசுக்கேத்த மகராசி!
மேலும், இங்கு வாழும் ஒவ்வொரு நாளும் மனதில் ஒரு சின்ன பயம் இருந்து கொண்டிருக்கிறது. எங்கள் வீட்டுக்கு பக்கத்தில் உள்ள ஒரு மலையாளி உணவகத்தில் மாட்டுக்கறி இருக்கிறதா என்று கேட்க முடியாது. ஸ்பெஷல் இருக்குதா என்றே கேட்கணும். "மாடு" என்று கேட்டாலே கடைக்கார சேட்டனின் முகத்தில் ஒரு மிரட்சி தெரியும். இல்லை என்று சொல்லி விடுவார். ஸ்பெஷல் என்றால் இருக்குது என்பார். இத்தனைக்கும் இங்கு வாழும் உள்ளூர் மக்களிடம் எந்த முரட்டுத்தனமும் இராது. அந்நிய மொழிக்காரர்கள் மீது ஒருவித அசூயை உண்டென்றாலும் கூட. இந்த பயம், வெறுப்பு எல்லாம் எங்கிருந்து தோன்றுகிறது என வியப்பேன்.
ஏற்கனவே வேலையிழப்பு, பணவீக்கம், விலைவாசி ஏற்றம், வெக்கை அதிகரிப்பு என ஆயிரம் பிரச்சினைகள். இதில் குழந்தைகள் தம் மதநம்பிக்கைப்படி ஆடையணிந்து வருவதற்கு எவ்வளவு பிரச்சினைகள் பண்ணினார்கள். பழைய படங்களில் வில்லன் நம்பியாருக்கு ரொம்ப பாவமாக அடிக்கடி முந்தானையை எடுத்து எடுத்து தலையை மூடிக்கொண்டு கண்ணீர் வடித்தபடி, ஆனால் கணவனையே எதிர்க்காமல் ஒரு மனைவி வருவாரே இந்த மக்களுக்கு பாஜக அப்படித்தான் இருக்கிறது. என்னைப் போன்றவர்களுக்கு இங்கே இருந்து அரசியலைப் பேசவே அச்சமாக இருக்கிறது.
அதனால் ஈ ஸாலா காங்கிரஸே வரட்டும்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...