Skip to main content

ஒரு பூவை இதழிதழாக பிய்த்தெறிவதைப் போல: கோலியின் டி20 மட்டையாட்டம்


நேற்றைய போட்டியில் (18 மே 2023) சன் ரைசர்ஸுக்கு எதிராக ஆர்.சி.பியின் மட்டையாட்டத்தை வெகுவாக ரசித்தேன். அடுத்த இரண்டு போட்டிகளிலும் இவ்வாறே ஆடி அவர்கள் இறுதிப்போட்டிக்கு போக வேண்டும், நடுவே choke ஆகக் கூடாது என்பதே என் விருப்பம். ஆர்.சி.பி போன்ற ஒரு அணி இறுதிப்போட்டிக்கு சென்றால் ஆட்டமே வண்ணமயமாகும்.

நேற்று நான் குறிப்பாக கோலியின் சதத்தை வெகுவாக ரசித்தேன். அவரது சிறந்த .பி.எல் இன்னிங்ஸ்களில் ஒன்றாக இது நிச்சயமாக வரும். அவர் அடித்த புல் ஷாட்டுகள், பிக் அப் ஷாட்டுகள் அவ்வளவு அழகாக இருந்தன. அண்மையில் தான் ரவி சாஸ்திரி கோலியும் ரோஹித்தும் இனி சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஒதுங்கிக் கொள்ள வேண்டும் என்று தன் பேட்டியில் சொன்னார். அது தலைவரை சீண்டி விட்டதோ என்னமோ, சன் ரைசர்ஸ் பந்துவீச்சை அழகியல்பூர்வமான ஒரு அறுவை சிகிச்சை பண்ணிவிட்டார். ஆடுதளம் ரொம்பவே சாதகமாக இருந்ததும் நிச்சயமாக உதவியது. பந்து சற்று நின்று வந்திருந்தாலோ அதிகமாக சுழலுக்கு திரும்பியிருந்தாலோ கோலி 40 ரன்களுக்கு மேல் தடவி இருப்பார். ஆனால் நேற்றைய போட்டி அவருக்கென்றே அமைக்கப்பட்டது. ஆடுதளத்தில் பந்து ஏதோ கையை வைத்தால் வாய்க்குள் அப்படியே போய்விடக் கூடிய பஞ்சு பஞ்சென்று செய்த இட்லியைப் போல இருந்தது.    


ஆனால் கோலி பற்றி ரவி சாஸ்திரி சொன்ன கருத்து இப்போதும் சரியே - கோலி சம்பிரதாயமான ஷாட்களை மட்டும் ஆடுபவர் அல்ல, அவர் சம்பிரதாயமான முறைமையை பின்பற்றுகிறவர். குறிப்பிட்ட நீளத்தில் திசையில் விழுந்தால் குறிப்பிட்ட ஷாட்கள், அல்லாவிடில் ஒற்றை, இரட்டை ரன்கள். இந்த ஆட்ட முறைமை ஒரு பிரச்சினை

இதைக்கொண்டே அவரால் 200 ஸ்டிரைக் ரேட்டை எட்ட முடியும். ஆனால் பந்து அதிகமாக எகிறினாலோ திரும்பினாலோ பந்து வீச்சாளர்களை அச்சுறுத்தும்படி intent காண்பிக்க கோலியால் முடியாது. அதற்கு சேவாக் பாணி மட்டையாளர் வேண்டும். இன்றைக்கு சொல்வதானால் சூர்யகுமார் போன்றவர்கள். இறங்கி வருவது, அங்கும் இங்கும் பெண்டுலம் போல நகர்ந்து நின்று விட்டு நேராக வரும் பந்தை fine leg, point, third man என அடிக்கத் தெரிய வேண்டும். வீச்சாளர்கள் உடனே சுதாரித்து பந்தை வைடாகவோ ஷார்க்காவோ வீசினால் அது மட்டையாளருக்கு சாதகமாகும். ஒவ்வொரு பந்துக்கும்நான் உன்னை அடித்து துவைக்கப் போகிறேன்எனக் காட்ட வேண்டும், செய்ய வேண்டியதில்லை. பாவ்லா முக்கியம். அவ்வப்போது அடித்துக் காட்டவும் வேண்டும். நிலைகுலைய வைக்க வேண்டும். அல்லது தோனி, டேவிட், ஹெட்மையர் போல பவர் ஹிட்டராக இருக்க வேண்டும். இது இன்றைய டி20 மட்டையாட்டத்துக்கு மிக முக்கியம். இது கோலியிடம் இல்லை. அதனாலே அவர் இந்தியாவுக்காக இனி டி20 ஆடக் கூடாது என நினைக்கிறேன்


அதே நேரம் நேற்று அவர் நிகழ்த்திய அந்த நுணுக்கமான அறுவை சிகிச்சையை வெகுவாக ரசித்தேன். நகப்பூச்சு அணிந்த நீண்ட விரல்களைக் கொண்ட ஒரு பெண் பூவின் இதழ்களை ஒவ்வொன்றாக பிய்த்தெறிவது போல எவ்வளவு அழகாக பீதியூட்டும்படி ஆடினார்!

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...