நான் அடிக்கடி யோசித்துப் பார்ப்பேன். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு எழுதிய பல கவிஞர்களும், இளங்கோவும், கம்பனும், வள்ளுவரும், தொல்காப்பியரும், காரைக்கால் அம்மையும், ஆண்டாளும், மாணிக்கவாசகரும் சமகால தமிழ் மண்ணுக்கு வந்து பார்த்தால் எப்படி வியப்படைவார்கள் என. இங்கு என்று நான் சொல்வது பழைய தென்னிந்திய மண். இங்கு பௌத்தம் செழித்திருக்கிறது. மூன்று சிறந்த பௌத்த தத்துவஞானிகளாவது இங்கிருந்து தோன்றியிருக்கிறார்கள். மிகச்சிறந்த தத்துவம், இலக்கியம் மலர்ந்திருக்கின்றன. ஆனால் இன்று எஞ்சுவது என்ன சினிமாவைத் தவிர? எனக்குத் தெரிந்து ஐரோப்பிய மொழிகளில் அவர்கள் மேம்பட்டபடி வளர்ந்தபடியே போகிறார்கள். இந்திய மொழிகள் கடந்த ஆயிரம் ஆண்டுகளாக, அதற்கும் மேலாகக் கூட வெறும் பாலைவனமாகி வருகின்றன. மிகச்சில மொழிகளே விதிவிலக்கு. அதுவும் எந்த போற்றத்தக்க மரபும் இல்லாத அந்த வெகுசில மொழிகளில் மட்டுமே நவீன காலத்தில் இலக்கியமும் சிந்தனைத் தளங்களும் வெகுமக்களிடம் கொண்டு செல்லப்பட்டு பெரும் முன்னேற்றம் கண்டுள்ளன. ஆனால் பொருளாதார தளத்தில் பெரும் வளர்ச்சி கண்டு பண்பாட்டு அறிவுத்துறைகளில் வெகுமக்களின் சமூகம் மலினமான உணர்ச்சிகளைத் தாண்டி எதையும் நாட முடியாதவர்களாக மாறி உள்ளார்கள்.
நமது மூதாதைகள், பெரும் சாதனையாளர்கள், இந்த காலத்துக்கு திரும்ப வந்து இதைப் பார்த்தால் எதற்கு இங்கு வேலை பார்த்தோம், ஒன்றுமே நிலைக்காத இடத்தில் எதற்கு பங்களித்தோம் என ஏமாற்றம் கொள்வார்கள். எனக்குத் தெரிந்து இதற்கு ஈடான வீழ்ச்சி நவீன கிரேக்கத்தில் உள்ளது. ஆனால் அங்கும் உலகறிந்த நவீன படைப்பாளிகள் உளனர். நீங்கள் யோசித்ததுண்டா ஏன் நமது பிரதமர் தமிழின் பெருமையைக் காட்ட வள்ளுவரை மேற்கோள் காட்டுகிறார் அடிக்கடி என்று? இதுவே வங்காளம் எனில் அவர் தாகூருக்கும், அவருக்குப் பின் வந்தோருக்கும் போயிருப்பார். ஆனால் நமக்கு அப்படி ஒரு நவீன இலக்கிய / பண்பாட்டு மரபு வெகுமக்கள் தளத்தில் இல்லை. ரஜினி, அஜித், விஜய்யின் திரைவசன மேற்கோள்களை மேடையிக் கூறினால் கேவலமாக இருக்காதா? அதனால் தான் கடித்துக் கடித்து செவ்விலக்கியத் தமிழைத் துப்புகிறார். வேறுவழியில்லை என்றாகும் நம் எதார்த்தம் ரஜினி, கமல், அஜித், விஜய் தானே? அவர்களைத் தாண்டி நமக்கு எந்த அக்கறையும் இல்லையே! ஆகையால் அவர் ஒவ்வொரு முறை தப்பும் தவறுமாக வள்ளுவரை மேற்கோள் காட்டுவது உலகமே நம்மால் செருப்பால் அடிப்பதற்கு சமம். ஆனால் நாமோ நாம் போற்றப்படுவதாக நினைக்கிறோம்.
அண்மையில் ஒரு நண்பரிடம் பேசும் போது ஒரு சிறந்த புனைவெழுத்தாளரைக் குறிப்பிட்டு அவர் கமலையும், மணிரத்தினத்தையும் வந்தடைய இத்தனை ஆண்டுகள் உழைக்க வேண்டி வந்தது, அதன் பிறகே திரைக்கதை எழுத்தாளராக நட்சத்திர அந்தஸ்து பெற்றார் என்றார். இதைவிட வேறு கேவலம் உண்டா? ஒரு மசாலா பட நடிகரும் இயக்குநரும் கவனித்தால் தான் அங்கீகாரமா? அவர்கள் முதலில் படிக்க வேண்டியதே இலக்கியம் தான், அதை ஒருவர் காத்திருந்து கொண்டு போகக் கூடாது. அது ஒரு அவமானம், பெருமை அல்ல. இன்னும் சொல்லப்போனால் 25 வயதுக்குள் முக்கிய படைப்பாளிகளைத் தெரிந்துகொண்டு அடுத்தடுத்த தளங்களுக்கு நகர வேண்டும். நீங்கள் ஜப்பானில் போய் நாற்பது வயதினருக்கு முராகாமியை அறிமுகப்படுத்துகிறோம் எனில் சிரிப்பார்கள். அவர் இருபது வயதில் வாசித்துக் கடக்க வேண்டியவர். நம் ஊரில் கமல் புதுமைப்பித்தன், அழகிரிசாமியைப் பற்றி சொன்னால் ஆவென வாயைப் பிளக்கிறார்கள். பிக்பாஸில் பரிந்துரைக்கபட்டால் தான் ஒரு புத்தகத்தை நம் சமூகம் அறியும் எனில் இவர்கள் ஏன் கல்வியில் சிறந்தது தமிழ்நாடு என்கிறார்கள்? நேரே பிக்பாஸ் வீட்டுக்குப் போய் படிக்கலாமே?
இன்னொரு விசயம்: மேற்சொன்ன மகத்தான செவ்வியல் படைப்பாளிகளும் சிந்தனையாளர்களும் 18ஆம் நூற்றாண்டுக்கு மேல் கண்டடையப்பட்டு சைவ, வைணவ இயக்கங்களாலும், தலித் பூர்வ பௌத்தர்களாலும் பாதுகாத்து பரப்பப்பட்டார்கள். அதற்கு காலனிய ஆதிக்கம் ஒரு பெரும் தூண்டுதல். அடுத்து இதில் இருந்து தமிழ் தேசியவாதம், திராவிட இயக்கம் தோன்றி சிலம்பையும் வள்ளுவத்தையும் பண்பாட்டு சின்னங்கள் ஆக்கினார்கள். இந்த இரு கட்டங்களும் ஒருவேளை நிகழாமல் போயிருந்தால் நாம் தமிழ் பண்பாடே எம்.ஜி.ஆர், சிவாஜியின் படங்களில் இருந்து உதித்தது என சொல்லிக் கொண்டிருந்திருப்போம்.
நல்லவேளை இதுவாவது எஞ்சியது!
கருத்துகள்