முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

விவசாயமும் முதுகெலும்பும்




மோடி எதிர்ப்பை கருத்தியல் ரீதியாக செறிவாக முன்வைப்பவர்களுடன் (பெரும்பாலும் தென்னிந்தியர்கள்) மோடியை நேரடியாக குழப்பமின்றி எதிர்க்கும் சீக்கிய விவசாயிகளையும் இணை வைக்க வேண்டும். இவர்கள் ஒன்று மோடியை ஒரு மோசமான நிர்வாகியாக புறவயமாகப் பார்க்கிறார்கள் - இந்த எதிர்ப்பு நவீனமானது, தாராளவாத சிந்தனைக்கு நெருக்கமானது (தென்னகம்). மற்றொன்று ஒரு தந்தையின் ஸ்தானத்தில் இருந்து பிழை செய்யும் குழந்தையாகப் பார்ப்பது (சீக்கிய விவசாயிகள்). எனக்கு தனிப்பட்ட முறையில் சீக்கியர்களின் எதிர்ப்பு உத்தியே அதிகமாகப் பிடித்திருக்கிறது. ஏனென்றால் அது இதயத்தில் இருந்து வருகிறது, அதில் சீரான ஆளுமை வளர்ச்சியும் தன்னம்பிக்கையும் உறுதியும் வெள்ளந்தியான முரட்டுத்தனமும் தெரிகின்றன. எனக்கும் உனக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது, உன் அடையாளம் வேறு, என் அடையாளம் வேறு, நான் உன்னை வழிபட வேண்டிய அவசியம் எந்த காலத்திலும் வராது, நீ என் வாழ்வாதாரத்தை பறித்தால் உன்னைப் பொறுத்துக்கொள்ள மாட்டோம், எந்த மரியாதையும் தர மாட்டோம் எனும் ஒரு குரல் அதில் ஒலிக்கிறது. அவர்களுக்கு பெரிய படிப்பு, சித்தாந்த அறிவு எல்லாம் தேவையில்லை. நிலத்தில் இருந்து கிடைக்கும் நிமிர்வு அவர்களிடம் உள்ளது. விவசாயத்துடன் பிணைக்கப்பட்ட சமூகங்களின் துணிச்சலும் தற்சார்பும் மற்ற வணிக, சேவை சமூகங்களிடம் இருக்காது. இந்திரா காந்தியின் எமெர்ஜென்ஸியை மிகத் தீவிரமாக எதிர்த்து களமாடிய ஒரே மாநிலம் பஞ்சாப் தான். 1,40,000 மேற்பட்டோர் கைதாகி சிறை சென்றார்கள். ஆனாலும் அவர்களுடைய போராட்டம் முடிவுக்கு வரவில்லை. ஒப்பீட்டளவில் தமிழகமும் கேரளாவும் நெருக்கடி நிலையின் போது அமைதியாகவே போயிற்று - என்னதான் திமுக ஆட்சி கலைக்கப்பட்டு தலைவர்களும் தொண்டர்களும் உள்ளே தள்ளப்பட்டாலும் பொதுமக்கள் பொறுத்துக்கொண்டார்கள். ஒரு சமூகத்தின் பண்ட உற்பத்தி முறைக்கும், பொருளாதார அமைப்புக்கும் முற்றதிகாரத்தை அது ஏற்பதற்கும் சம்மந்தம் உள்ளது. தொழிற்சாலை, சிறுவணிகம், சேவை வேலைகள், நகரமயமாக்கலை சார்ந்திருப்பது அதிகமாக ஆக மக்களிடையே தம்மையே அறியாமல் சர்வாதிகாரிகளை விரும்பும் போக்கும் அதிகமாகும் என ஹேனா ஆரெண்ட் தெரிவிக்கிறார். இதனாலே அன்று இந்திரா காந்தியும் இப்போது மோடியும் தீவிரமாக விவசாயத்தை அழித்து நகரமயமாக்கலை பரவலாக்க முயன்றார்கள்.
தென்னகத்தோர் ஒரு பக்கம் தம் கல்வியையும் இனவுணர்வையும் கொண்டு முற்றதிகாரத்தை எதிர்த்து நின்றாலும் அநீதிகளைக் கண்டிக்கும், எதிர்த்து போராடும் துணிச்சல் இன்றி இருக்கிறார்கள். நகரமயமாக்கலும் தொழில்மயமாக்கலும் (அதனுடன் பாரபட்சமான வளர்ச்சியும்) வந்ததும் ஒருவித சுயநலம் மிகுந்துவிட்டது. இன்னொரு பக்கம், படிப்பறிவு குறைவான நகரமயப்பட்ட பிற மாநிலத்தோரும் சரி, சொந்த நிலம் இல்லாமல் விவசாயக் கூலிகளாகவும் தொழிலாளிகளாகவும் இருக்கப்பட்டோர் அதிகமாக உள்ள மாநிலத்தோரும் சரி நவீன வாழ்க்கைக்குள்ளும் இருக்க முடியாமல், வாழ்வாதாரத்தையும் இழந்து சர்வாதிகாரியான மோடியை வழிபடும் மனநிலைக்கு வருகிறார்கள். அவர்களுக்கு ஆறுதலுக்கு மதவாத வெறி தேவைப்படுகிறது. நகரமயமாக்கலால் விழுமியங்களில், பொதுநலத்தில் நம்பிக்கை இழந்த படித்த மத்திய வர்க்கமும் இந்த முற்றதிகார வழிபாட்டில் கலந்துகொண்டார்கள்.
சொந்த ஊர், சொந்த மண், அதன் உற்பத்தி முறைமையை கைவிடாமல், தொழில்மயமாக்கலின் வசதிகளையும் பயன்படுத்த தெரிந்த சமூகமே (டிராக்டரில் வந்து போராடும் சீக்கியர்) முற்றதிகாரத்தை எதிர்த்து நிற்கும் தகைமையைப் பெறுகிறார்கள் எனும் போது அவர்களிடம் இருந்து பிறர் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது. முதலில் நாம் கண்மூடித்தனமாக நகரமயமாக்கலையும் முதலீட்டியத்தையும் விழுந்து கும்பிடும் பழக்கத்தை நிறுத்த வேண்டும். நவதாராளவாதம் ஒருவித பின்காலனிய வடிவம் எனப் புரிந்துகொள்ள வேண்டும். பின்காலனியத்தின் முதல் கோரிக்கையே உள்ளூர் உற்பத்தி முறைகளை ஒழிக்க வேண்டும், எல்லாரையும் தற்சார்பற்றவர்களாக்க வேண்டும் என்பதே. நிலத்தில் இருந்து அந்நியப்பட பட நாம் சார்ந்திருக்க ஒரு அடையாளமோ, சுயகௌரவமோ இல்லாதவர்களாகி, அதனாலே சுலபத்தில் இருந்து முற்றதிகாரத்துக்கு சுலபத்தில் அடிமையாகத் தலைப்படுகிறோம்; இந்து மகாசபை, ஜனசங்கம் ஆகிய தாய் அமைப்புகளும், பின்னர் பாஜகவும் முழுக்க முழுக்க நகரங்களில் தோன்றி வளர்ந்த தீமைகள் என்பதை நாம் கவனிக்க வேண்டும். இன்றும் அதுவே நிலை. இன்றும் பெரிய மதவாத பேரணிகள், மதக்கலவரங்கள் நகரங்களிலோ சிறுநகரங்களிலோ தான் அதிகம் நிகழ்கின்றன. இதற்கு முழுக்க செவிசாய்க்காத சமூகங்கள் மட்டுமே இன்றைய காலத்தில் முதுகெம்புடன் வாழ முடியும்.
அதற்கு முழுக்க செவிசாய்க்காத சமூகங்கள் மட்டுமே இன்றைய காலத்தில் முதுகெம்புடன் வாழ முடியும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...