புயல், வெள்ளம் வந்து நகரங்களும் சிறுநகரங்களும் ஊர்களும் மிதக்கும்போதெல்லாம் சூழலியல் அறிஞர்கள் வந்து புலம்புவார்கள், எச்சரிப்பார்கள். எல்லாரும் கேட்டுவிட்டு நகர்ந்துவிடுவார்கள். மீண்டும் மீண்டும் அழிவு வரும், மீண்டும் மீண்டும் யாராவது எச்சரிப்பார்கள். அரசோ சமூகமோ கண்டுகொள்ளாது. இப்போது படித்தவர்கள் எல்லாருக்குமே நகரங்களின் பிரச்சினைகள் தெளிவாகத் தெரிகிறது. வெள்ளப்பெருக்கும் தண்ணீர்ப் பஞ்சமும் மட்டுமல்ல, நிலத்தின் மீது செயற்கையாக ஏற்றப்படும் விலையும் முக்கிய காரணம். உலகம் முழுக்க வளர்ந்த நாடுகளில் நகரங்களில் மக்களால் வசிக்க முடியாதபடி போகிறது. சம்பளத்தில் பாதிக்கு மேல் வாடகைக்கு கொடுத்து தாள முடியவில்லை என்று கணிசமான இளைஞர்கள் புலம்புவதைக் கேட்கமுடிகிறது. அரசாங்கங்கள் மட்டும் வாடகைத்தாயிடம் குழந்தைப்பேறை ஒப்படைத்துவிட்டு ஜாலியாக இருக்கும் பணம்படைத்தப் பெண்ணைப் போல "வரி வாங்குறதும், மேம்போக்காக நிர்வாகம் பண்ணுறதும், அதிகாரம் பண்ணுறதும் மட்டும்தான் எங்க வேலைங்க, மிச்சத்தையெல்லாம் தனியார் பாத்துக்கும்" என்று இருக்கிறது. தனியாரோ "நாங்க என்ன அரசாங்கமா, எங்ககிட்ட ஏன் கேட்குறீங்க?" என்று தோளைக் குலுக்குகிறார்கள். எதிர்காலத்தில் சாலைகள், மின்சாரம், உணவு வினியோகம் மொத்தமாக தனியாரிடம் சென்றபிறகு அரசு இன்னும் ஜாலியாக இருக்கமுடியும்.
இன்றைய நவீன வாழ்க்கையின் அல்லல்களில் மாட்டிய தனிமனிதர்கள் இந்தச் சூழலில் என்ன நினைக்கிறார்கள் என்பதே என்னை அதிகமாகக் கவர்கிறது (வேலை,குடும்பம், வீடு என ஏற்கனவே செட்டிலாகிவிட்டு சமத்துவம், வளர்ச்சி, அறம் என ஜாலியாக ஒப்பாரி வைக்கிற கும்பலை அல்ல.) - ஆவணப்பட இயக்குநரான நண்பர் ஒருவர் நேற்று என்னிடம் சொன்னார்: "நான் இளமையில் இடதுசாரி மாணவர் அமைப்பில் இருந்தேன். அப்போது வெறித்தனமாக மார்க்ஸியம், புரட்சி, மாற்றம் என்றெல்லாம் பேசிக்கொண்டிருப்பேன். இப்போது வீட்டுக்கடன், குடும்பம் என மாட்டிக்கொண்ட பின்னர் விரும்பியபடி சுதந்திரமாக மூச்சுவிடக் கூட முடியவில்லை. அன்று எங்களுக்கு மார்க்ஸிய வகுப்பில் சொல்லித்தரப்பட்ட கோட்பாடுகள், கருத்துருவங்கள் இன்று அந்நியமாகத் தெரிகின்றன. அவற்றுக்கும் என் தனிப்பட்ட வாழ்வுக்கும் எந்தத் தொடர்பும் இல்லையெனத் தோன்றுகிறது." நமது அன்றாட வாழ்வில் இருந்து நமது கவனத்தை வெகுதொலைவுக்கு அரசியல் சிந்தனை இழுத்துச்சென்று விடுகிறது, அது போலியானது, தனிப்பட்ட வாழ்க்கைக்கு விரோதமானது, இன்னொருவருக்காக கவலைப்படும்போது அந்த நபராலே கூட நம்மைப் புரிந்துகொள்ள முடியாமல் போகிறது என்று அவர் வருத்தத்துடன் பேசிக்கொண்டிருந்தார். யாராலும் யாரையும் ஏற்றுக்கொள்ளவோ புரிந்துகொள்ளவோ முடியாதச் சூழலை இன்றைய பொருளாதாரமும், அதன் ஆதாரமாக உள்ள நகரமயக் கட்டமைப்புகளும் உருவாக்குகின்றன.
இந்தச் சிக்கல்களை சுத்தமாகப் புரிந்துகொள்ள முடியாத ஒரு கும்பல் தமிழ்நாட்டில் இருக்கிறது. அவர்கள் இன்றும் நகரங்களை சொரக்கபுரி என்றும், 'வளர்ச்சியும் முன்னேற்றமும்' நமக்கு இன்னமும் அதிகமாக வேண்டும், அதனால் ஏற்படும் பாரபட்சங்கள், ஏற்றத்தாழ்வுகளை, பேரழிவுகளைப் பொருட்படுத்தக்கூடாது என்றும் பேசிக்கொண்டிருக்கிறார்கள். நவீன வாழ்க்கையை யாராவது விமர்சித்தால் பொங்கி எழுந்துவிடுவார்கள். நடைமுறையில் இன்று மக்கள் சந்திக்கும் எந்த பிரச்சினைக்கும் சம்மந்தமில்லாத வசதியான வாழ்க்கையையோ அண்டிவாழும் சுகவாழ்க்கையையோ இவர்கள் வாழ்கிறார்கள் அல்லது நவீன வாழ்க்கையை விமர்சிப்பது தமது அரசியல் சரித்தன்மைக்கு ஆபத்தாகிவிடும் என பயப்படுகிறார்கள். நகர வாழ்க்கையில் சுதந்திரம், வளர்ச்சி, சமத்துவம் உள்ளது என இவர்கள் நம்புவதைப் பார்த்தால் நிஜமாகவே இவர்கள் நகரங்களில் தான் வாழ்கிறார்களா என வியப்பாக உள்ளது - ஒருவர் 12 மணிநேரம் வேலை பார்ப்பது, 2-3 மணிநேரங்கள் தினமும் பயணத்தில் செலவிடுவது, குடும்பத்துடன் செலவிட நேரமில்லாமல் போவது, குப்பையான உணவை மட்டுமே உண்ணும் நிலைக்குத் தள்ளப்படுவது, கடுமையான நெருக்கடியை, கண்காணிப்பை, நுண்-நிர்வாகத்தை தினமும் வேலையிடத்தில் சந்திப்பது, இவ்வளவு செய்தும் எப்போது வேன்டுமெனினும் தலைக்கு மேல் கத்தி தொங்குவதான வேலைநீக்க அச்சம் நிலவுவது ஒடுக்குமுறை இல்லையா? சம்பாதிக்கும் பணத்தில் பெரும்பகுதியை பணவீக்கத்துக்கும் வரிகளுக்கும் ஒப்புக்கொடுப்பது, சதா கடனில் தத்தளிப்பது அநீதி இல்லையா? வேலையே இல்லாமல் சிரமப்படுவது ஒரு வாழ்க்கை, வேலை பார்த்துக்கொண்டே ஏழையாக இருப்பது இன்னொரு வாழ்க்கை. எல்லா கட்டமைப்பு வசதிகளும் இருப்பது, அதே சமயத்தில் இன்றைய சாலை நாளை இருக்காது, இன்றைய வீடு நாளைய ஏரியாகும், எப்போது வேண்டுமெனினும் வீட்டுக்குள் வெள்ளம் புகுந்துவிடும், இன்று பைக்கில் போகிறவர் நாளைப் படகில் போகவேண்டும், குடிக்கும் நீர் மாசுறும், காற்று மாசாகும், வினோதமான நோய்கள் நுண்பிளாஸ்டிக், வேதியல் கலப்புகளால் தோன்றும் என்பது கொடூரம் இல்லையா? இதை எப்படி முன்னேற்றம், வளர்ச்சி என்று கொண்டாடுகிறார்கள்? இலவசமான அல்லது குறைந்த செலவில் கல்வி, மருத்துவம் தரமாகவே கிடைத்த பழைய வாழ்க்கை மருத்துவ, கல்விச் செலவுக்காக வங்கிக்கடன் வாங்கி அடிமையாகிற இன்றைய வாழ்க்கையை விட பல மடங்கு மேலானதாகத் தோன்றுகிறது. வேளாண் வாழ்க்கையில் மக்கள் இருந்தபோது வருடத்திற்கு 3 மாதங்களுக்கு மேல் ஓய்வு இருந்தது என ஒரு புள்ளிவிபரம் சொல்கிறது. இன்று ஒரு வாரம் விடுமுறை கிடைப்பதே பெரிதாக உள்ள நிலையில் நாம் சனி, ஞாயிறுகளில் கூட வாட்ஸாப், மின்னஞ்சல் வழியாக வேலை செய்தபடியே இருக்கிறோம். மாலையில் வீட்டுக்குத் திரும்பியபிறகு நள்ளிரவு வரை வேலைக்குள்ளே இருக்கிறோம். மனிதர்கள் 24 மணிநேரத்தில் 18 மணிநேரமும் வேலைபார்த்த, ஆனால் சேமித்து வைக்கவோ நிம்மதியாக வாழவோ முடியாத ஒரு காலம் முன்பு இருந்ததில்லை. இந்தச் சூழல் மக்களிடையே பரஸ்பர வெறுப்பை, சந்தேகத்தை விதைத்து, நேரத்தைப் பிடுங்கி எல்லாரையும் பிளவுபடுத்துவதால் குடும்பம், தாம்பத்தியம், பெற்றோர், குழந்தைகள், நண்பர்கள் எல்லாருமே பிளவுபடுகிறார்கள். பிளவுபடுத்தி தனிமைப்படுத்தி அவர்களை முழுநேரமாக உற்பத்தியிலும் துய்ப்பிலும் ஈடுபடுத்துவதே நவீன முதலீட்டியத்தின் உத்தி; அதற்கு ஏற்பவோ நகரத்தின் கட்டமைப்புகள் உள்ளன. இது ஒரு மாயமான வளர்ச்சி - எல்லாம் இருக்கிறது, ஆனால் எதுவுமே இல்லை. நேரம் இருக்கிறது ஆனால் இல்லை, வீடு இருக்கிறது ஆனால் இல்லை, குடும்பம் இருக்கிறது, ஆனால் இல்லை.
முன்பு யாராவது வீடு கட்டினால் அங்கு தமது அடுத்தடுத்த தலைமுறைகள் வசிக்கப்போவதாக நம்புவார்கள். இப்போதோ தாம் சாகும்வரை இருக்க முடிந்தால்போதும் என்கிறார்கள். நீண்ட காலம் வாழ்ந்தால் சுகமான, நிறைவான வாழ்க்கை என்று அன்று பாராட்டுவார்கள். இன்றோ அறுபது வயதுக்கு மேல் வாழ்வதைப் பற்றி எல்லாருக்குமே பயமும் பதற்றமும் அதிகமாகிக்கொண்டு வருகிறது. ஓய்வுக்குப் பிறகு மிகவும் வயதானவர்கள் நடக்கமுடியாமல் நடந்தபடி இளைஞர்களுடன் வேலைசெய்வதைப் பார்க்கையில் பரிதாபமாக இருக்கிறது. அவர்களிடம் கருணை காட்டுவதையே இன்றைய சூழல் அனுமதிப்பதில்லை.
இன்றைய நகரங்கள் எதிர்காலத்தில் மக்களால் குடியிருக்க முடியாதபடி பேய் நகரங்களாக இருக்கும், கைவிடப்பட்ட வீடுகள், சாலைகளை விட்டு மக்கள் சிறு நகரங்களுக்குப் பெயர்வார்கள் என்று என் நண்பர்கள் என்னிடம் சொல்லும்போதெல்லாம் எனக்கு "பெட்ரோ பரோமோ" நாவலின் காட்சிகள் நினைவுக்கு வருகின்றன. ஆனால் அந்த பேய்நகரத்திலும் "ஆகா அற்புதம், என்னவொரு வளர்ச்சி, எல்லா துன்பங்களும் மறைந்துவிட்டன" என்று ஒரு குரல் கூவிக்கொண்டிருக்கும். யார்ரா அது எனப் பார்த்தால் "பழமையின் இழிவுகளும் ஒடுக்குமுறைகளும் ஜனநாயகம் தோன்றியதும் ஒழிந்தன, நகரங்களில் புதிய பொருளாதாரம் அனைவருக்கும் சமமான உலகத்தை உண்டுபண்ணிக் கொடுத்தது" என்று சதா உணர்ச்சிவசப்படும் முற்போக்காளராக இருப்பார்.
கருத்துகள்