முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சமவயதுத் திருமணங்களின் சிக்கல்



ரிச்சர்ட் ரீவ்ஸ் தனது நூலில் ஆண்களுக்கும் பெண்களுக்குமான மூளை வளர்ச்சி சார்ந்த வித்தியாசத்தைப் பற்றிப் பேசும்போது உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த, கவனம் செலுத்த உதவும்பல்வேறு தேவைகளை ஒரேசமயத்தில் கருதி சமநிலையுடன் முடிவெடுத்து நடக்கும் பண்பைத் தீர்மானிக்கும் மூளையின் முன்மடல் பகுதி பெண்களுக்கு ஆண்களை விட 1-2 ஆண்டுகளுக்கு முன்பே வளர்ந்து முதிர்ந்து அதிக ஆற்றல் பெற்றதாக மாறுகிறது என்று குறிப்பிடுகிறார். பெண்கள் ஆண்களை விட சீக்கிரமாகவே பூப்பெய்துவதால் ஹார்மோன்கள் சீக்கிரமாகவே வேலைசெய்வதால் அவர்களுக்கு கிடைக்கும் அனுகூலம் இது. இதன் பொருள் 20 வயது ஆண் தன் மனதளவில் 18 வயதுக்குரியவன். ஆனால் 20 வயதுப் பெண்ணோ 22 வயதினளுக்கு சமமானவள். ஒரே வயதைச் சேர்ந்த இளைஞனும் இளம்பெண்ணும் மணக்கும்போது மனதளவில் அக்கா தம்பியை மணப்பதைப் போலத்தான் அது இருக்கும். இது அப்பெண்ணால் அந்தரங்கமான விசயங்களில், உணர்ச்சிக் குவிப்பிலும் கட்டுப்பாட்டிலும் அந்த ஆணை விஞ்சிவிடவும் வழிநடத்தவும் செய்யும். உறவுக்குள் சமநிலையைக் குலைக்கும்.

சமவயது ஆணும் பெண்ணும் மணமுடிக்கும்போது உணர்வளவில் அவர்களிடையே ஏற்படும் மோதல்களையும் சமநிலையின்மையையும் அதிகமாக இன்று காண்கிறோம். நான் விருந்தினராகப் பங்கேற்ற ஒருநீயா நானாவிவாதத்தில் தமது கணவர்கள் முதிர்ச்சியற்றவர்களாக, குழந்தைகளைப் போல நடந்துகொள்வதாக பெண்கள் பரவலாக புகார் தெரிவித்தனர். அது உண்மையாகவும் தெரிந்தது. பெரும்பாலானவர்கள் சமயவயதினராக இருந்ததும் இதற்கான காரணங்களில் ஒன்று (இன்னொரு காரணம் தாழ்வுணர்வு காரணமாக இன்று ஆண்கள் தம்மைக் குழந்தைகளாக பாவிக்கும் பண்பாட்டுச் சூழல் உருவாகியுள்ளது). தன்னை விட பக்குவம், உணர்ச்சிக்கட்டுப்பாடு, கவனம் குறைவாக உள்ளவரை மணக்கும் பெண் அவரை சில விசயங்களில் மிகவும் பலவீனமானவராக உணர்ந்து தலைமைப் பண்பை எடுக்கும்போது அது சார்புநிலை கொண்ட உறவாகிறது. ஆணுடைய தாழ்வுணர்வு இன்னும் அதிகரிக்கிறது. அவன் இதை என் மனைவி எனக்குத் தாய் மாதிரி எனச் சொல்லி போலிச் சமாதானம் கொள்கிறான். இதுவே இப்படியென்றால் 25 வயதுப் பெண்ணை 22 வயது ஆண் காதலிக்கும்போது அது அவன் 27 வயதினளைக் காதலிப்பதற்கோ அவள் 20 வயதினனைக் காதலிப்பதற்கோ சமம். இன்னும் அதிகச் சமநிலையற்ற உறவாக அது மலரும்


இதை அனுபவரீதியாக உணர்ந்த நமது முன்னோர் சில ஆண்டுகளாவது வயதில் மூத்த ஆணைப் பெண்ணுக்கு மணமுடித்து வைத்தனர். நிலவுடைமைச் சமூகத்தில் ஆணுக்குள்ள நிலம்சார்ந்த பொறுப்புகளும், தங்கையின் மணத்துக்கான அசையும் சொத்துக்களைச் சம்பாதித்துக் கொடுக்கும் ஆவலும் அவர்களை இருபதுகளின் பிற்பகுதியிலோ முப்பதுகளில் மணம்புரிய வைத்திருக்கலாம். ஆனால் வயது வித்தியாசம் எந்த வயதில் திருமணமானாலும் சமநிலையைப் பேண உதவியது. ஆனால் நிலவுடைமைச் சமூகத்திலிருந்து விலகி நவமுதலீட்டிய சமூகத்திற்குள் பிரவேசித்துள்ள நாம் இந்த நுணுக்கத்தைப் புரிந்துகொள்ளத் தவறிவிட்டோம். பெண்ணியம் தொடர்ந்து ஆணைபயங்கரமானவன்’, ‘ஆபத்தானவன்’, ‘டாக்ஸிக்கானவன்எனப் பொதுமைப்படுத்துவதால் ஆண் இன்று தன் பங்குக்கு மனதளவில் தன் வயதைக் குறைத்துக் காட்டும்படியான நடவடிக்கைகளில் ஈடுபடுகிறான். ஆக 18 வயது ஆண் மூளைவளர்ச்சியில் 16 வயதினன் என்றால் அவன் கூடுதலாக தன் நடவடிக்கைகளின் வழியாக இன்னும் சில ஆண்டுகளைக் குறைத்து 14 வயது சிறுவனாகத் தன்னைப் பாவிக்கிறான். இது சமூகத்தில் அங்கீகாரம் பெற்றுத்தரும் என அவன் வியர்த்தமாக நம்புகிறான். சொல்லப்போனால் இதனால் சமூகத்தில் அவனுக்கு இடர்களும் அவப்பெயருமே அதிகமாகிறது. அடுத்து, வயது பொருட்டேயில்லை எனும் அறிவியலுக்குப் புறம்பான சிந்தனை இன்று அதிகரித்து வருகிறது. ஆம் எந்த வயது வித்தியாசத்துடனும் எதிர்பாலினத்தவர் இருவர் சேர்ந்து வெற்றிகரமாக வாழலாம், ஆனால் அதற்குள் ஒருவர் தொடர்ந்து தாழ்ந்து சென்றபடியே இருக்கவேண்டும். “டாக்ஸிக் ஆண்எனும் கருத்தாக்கம் ஏற்படுத்தும் விஷமத்தனமான எதிர்விளைவுதான் இது. எல்லாரும் டாக்ஸிக்கானவர்கள் அல்ல, யாரையும் பொதுமைப்படுத்தாதீர்கள் என நாம் வலியுறுத்தவேண்டிய காலம் வந்துவிட்டது.


இது கூடாதா, ஏன் முடியாது, சச்சின் பண்ணிக்கலையா என்பதான விவாதங்களை விட நாம் சமத்துவமான உறவை விரும்புகிறோமா எனும் கேள்வியே முக்கியம். ஆம், சிலநேரங்களில் காதலுக்காக நாம் சமத்துவத்தையும் சிறிது விட்டுக்கொடுக்கத் தலைப்படுவோம். அது நமது விருப்பம். எதைச் செய்கிறோம் எனும் தெளிவு இருந்தால் சிக்கல் குறைவாக இருக்கும்.


உசாத்துணை


Laureys, Felien et al. “The Effects of Age, Biological Maturation and Sex on the Development of Executive Functions in Adolescents.” Frontiers in physiology vol. 12 703312. 10 Sep. 2021, doi:10.3389/fphys.2021.703312


Koolschijn, P. Cédric M. P., and Eveline A. Crone. "Sex Differences and Structural Brain Maturation from Childhood to Early Adulthood." Developmental Cognitive Neuroscience, vol. 5, July 2013, pp. 106-118.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.

கவனம் திருப்பும் ஆயுதம் - ஹிட்லர், மோடி, விஜய்: ஒற்றுமையும் வேறுபாடும்

  தவெக ஒரு 'ஆட்டத்திருப்பக்' கட்சி அல்ல கவனம் திருப்பும் (distracting) கட்சி எனத் தோன்றுகிறது. ராஜ்தீப் சர்தேசாய் தன் யுடியூப் அலைவரிசையில் மோடியின் ‘திமாகி நக்சல்’ பேச்சுச் சேட்டையைப் பற்றிப் பேசும்போது அது ஒரு திட்டமிடப்பட்ட கவனத் திருப்பல் பேராயுதம் (weapon of mass distraction) என்கிறார். அமெரிக்கா முன்பு சதாம் ஹுசைன் அணுகுண்டு வைத்திருப்பதாகச் சொல்லி இராக் மீது போர் தொடுத்ததைத் தொடர்ந்து பேராபத்து ஆயுதங்கள் குறித்து உலகம் முழுக்க விவாதங்கள் நடந்தன. ஆனால் அவை உண்மையில் அமெரிக்காவின் நோக்கத்தை மறைத்து மக்களின் கவனத்தைத் திருப்புவதற்காக உருவாக்கப்பட்ட பிரச்சாரம் மட்டுமே எனப் பின்னர் தெரிய வந்தது. உலகம் முழுக்க வலதுசாரிகள் இத்தகைய கவனம் திருப்பும் பேராயுதங்களைக் கொண்டே மக்களைக் கட்டுப்படுத்தி தம் வசம் வைத்திருக்கிறார்கள், தமது மோசமான நிர்வாகம் குறித்து விவாதம் எழாமல் பார்த்துக் கொள்கிறார்கள் என்கிறார் சர்தேசாய். அவர் மோடி அண்மையில் தனக்கெதிராக ஜென் ஸீ போராட்டம் தனது நிர்வாகக் கோளாறுகளை முன்வைத்து நடந்தபோது கவனத்தைத் திருப்பும் வண்ணம் கோட்பாட்டுத் தீவிரவாதிகள் பலர் இன்று உள்ளார்...