முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இந்துத்துவர்கள் யாரை நிஜத்தில் வெறுக்கிறார்கள்?

இந்துத்துவாவின் விரோதிகள் உண்மையில் சிறுபான்மையினர் அல்லர். இந்துக்கள்தாம். தம்மை ஏற்காத இந்துக்களை மாற்றவே இந்துத்துவர்கள் ஒரு நூற்றாண்டுக்கு மேலாகப் போராடி வந்துள்ளனர் என்பதை வரலாற்றைப் பார்த்தால் புரியும். தமிழ்நாட்டில் பாஜக ஏன் கிறித்துவ, இஸ்லாமிய குருமார்களை, சின்னங்களைத் தாக்காமல் பெரியாரைத் தாக்குகிறது? அவர்கள் ஏன் இஸ்லாமிய தலைவர்களைக் கொல்லாமல் காந்தியைக் கொன்றார்கள்? இவைதான் முக்கியமான கேள்விகள். மோடியின் இதுவரையிலான பாராளுமன்ற உரைகளை, மேடைப் பேச்சுகளை கவனித்தால் இது புரியும். அவர்கள் மசூதியை இடித்தது இஸ்லாமியர்களைத் தாக்கவோ காயப்படுத்தவோ அல்ல. இந்துக்களை அச்சுறுத்தி தம் வசப்படுத்தவே. அவர்கள் கண்முன் இருந்த பெருந்திரளான இந்துத்துவா வழிப்படாத இந்துக்களை 'நெறிப்படுத்தவே'. அவர்கள் இதுவரையிலும் அர்பன் நக்சல்கள் என்று சிறையில் அடைத்தவர்கள் அதிகமும் இந்துக்களே. தொடர்ந்து அவர்கள் அதிகம் கவலைப்படுவதும் நிறுவனமயப்படாத இந்துக்களைக் குறித்தே.

இந்து மதத்தை கிறிஸ்துவமாகவும் இஸ்லாமாகவும் மாற்றுவதே இந்துத்துவத்தின் செயல்திட்டம். மற்றமையாக்குவது அல்ல என்பது என் பார்வை. அதாவது இந்து மதத்தை இந்துக்களிடம் இருந்தே அந்நியப்படுத்துவது. மதத்தை நிறுவனமாக்குவது - ஒற்றை நம்பிக்கை, ஒற்றைக் கடவுள், ஒற்றை வேதம்.

முருகன் திமுக கையில் தமிழ் தெய்வமாகவும், மக்களின் தெய்வமாகவும், உணர்வுரீதியாக அணுகக் கூடிய தெய்வமாகவும், இந்துத்துவர்களின் கையில் பெருமத உபதெய்வமாகவும் இருப்பான். திமுகவின் கையில் முருகன் தெய்வம், பாஜகவின் கையில் முருகன் மோடியின், அண்ணாமலையின் மற்றொரு அவதாரம். ரஜினி தொடர்ந்து தன்னை சிவனின், பாபாவின் அவதாரமாக காட்ட முயன்றதைப் போல தீவிர பக்தர்களான வேறு முன்னணி நடிகர்கள் செய்ததில்லை. தெய்வத்தை கருவியாக்குவது பக்தியல்ல. அது அரசியல். அதனாலே ரஜினியால் பாஜகவுடன் இசைவாகப் போக முடிந்தது. 

இந்த இரண்டு போக்குகளுக்குமான வித்தியாசத்தை உணர்ந்திருப்பது அவசியம்! 

மீண்டும் சொல்கிறேன், பாஜக ஒரு இந்து விரோதக் கட்சி. திமுகவையும் காங்கிரஸையும் இடதுசாரிகளையும் விட இந்துமதத்தை உள்ளிருந்து செல்லரித்து உருமாற்றுவது இந்துத்துவர்களே. வரலாறு கருணை காட்டாவிடில் அவர்கள் இந்துமத்தை கிறிஸ்துவம், இஸ்லாம் போன்ற முறைப்படுத்தப்பட்ட மதமாக்கி விடுவார்கள். அதாவது இம்மதங்களின் நகலாக இந்துமதத்தை மாற்றுவார்கள். அது கொடூரமாக இருக்கும்!

இந்துத்துவத்தால் இஸ்லாத்துக்கோ கிறிஸ்துக்கோ உண்மையில் ஆபத்து குறைவே!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.

கவனம் திருப்பும் ஆயுதம் - ஹிட்லர், மோடி, விஜய்: ஒற்றுமையும் வேறுபாடும்

  தவெக ஒரு 'ஆட்டத்திருப்பக்' கட்சி அல்ல கவனம் திருப்பும் (distracting) கட்சி எனத் தோன்றுகிறது. ராஜ்தீப் சர்தேசாய் தன் யுடியூப் அலைவரிசையில் மோடியின் ‘திமாகி நக்சல்’ பேச்சுச் சேட்டையைப் பற்றிப் பேசும்போது அது ஒரு திட்டமிடப்பட்ட கவனத் திருப்பல் பேராயுதம் (weapon of mass distraction) என்கிறார். அமெரிக்கா முன்பு சதாம் ஹுசைன் அணுகுண்டு வைத்திருப்பதாகச் சொல்லி இராக் மீது போர் தொடுத்ததைத் தொடர்ந்து பேராபத்து ஆயுதங்கள் குறித்து உலகம் முழுக்க விவாதங்கள் நடந்தன. ஆனால் அவை உண்மையில் அமெரிக்காவின் நோக்கத்தை மறைத்து மக்களின் கவனத்தைத் திருப்புவதற்காக உருவாக்கப்பட்ட பிரச்சாரம் மட்டுமே எனப் பின்னர் தெரிய வந்தது. உலகம் முழுக்க வலதுசாரிகள் இத்தகைய கவனம் திருப்பும் பேராயுதங்களைக் கொண்டே மக்களைக் கட்டுப்படுத்தி தம் வசம் வைத்திருக்கிறார்கள், தமது மோசமான நிர்வாகம் குறித்து விவாதம் எழாமல் பார்த்துக் கொள்கிறார்கள் என்கிறார் சர்தேசாய். அவர் மோடி அண்மையில் தனக்கெதிராக ஜென் ஸீ போராட்டம் தனது நிர்வாகக் கோளாறுகளை முன்வைத்து நடந்தபோது கவனத்தைத் திருப்பும் வண்ணம் கோட்பாட்டுத் தீவிரவாதிகள் பலர் இன்று உள்ளார்...