முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கீர்க்கெகாட் - கொலையா ஆன்மீகமா?

 


தத்துவத்துக்கு வருவோம். இது அல்லது அது (either or) எனும் கோட்பாடு உண்டு. இது சரியா அது சரியா என்று கேட்டால் இரண்டு எதிரெதிர் முனைகளுக்கு நடுவே ஒரு புள்ளியைக் கண்டடைவது சரி என்பது. காதலா திருமணமா? காதல் திருமணம். கடவுளா கடவுள் எதிர்ப்பா? கடவுள் இல்லையென்று சொல்லவில்லை, ஏதோ ஒரு ஆற்றலை நம்புகிறேன், கடவுள் இருந்தால் நன்றாக இருக்கும். காங்கிரஸா பாஜகவா? எனக்கு கட்சிகளில் நம்பிக்கை இல்லை, எல்லா கட்சிகளிலும் நல்லவர்கள் இருப்பார்கள், அவர்களை நம்புகிறேன். இப்படிப் பேசுவதுதான் Either Or. இதை ஹெகல் முன்வைத்தார். எதிரிடைகளின் மையத்திலே உண்மை இருக்கும் என்றார் அவர். அறிவியலா மதமா என்றால் இரண்டும் மோதுகிற இரண்டுக்குமான பொதுப்புள்ளியிலே மாற்றமும் வளர்ச்சியும் சாத்தியப்படும் என்றார் ஹெகல். ஹெகலின் தாக்கம் கொண்டவராக இருந்த கீர்க்கெகாட் பல விசயங்களில் ஹெகலையும் எதிர்க்கவும் செய்தார். குறிப்பாக இந்த கமலஹாசத்தனமான இதுவும் அதுவும் கோட்பாடு விசயத்தில்.

 சிலநேரங்களில் பகுத்தறிவை மீறி, நம்பிக்கையின் அடிப்படையில் ஒன்றை நோக்கிப் தலைகுப்புற குதிக்கும்போதே நாம் அசலான தன்னிலையை (authenticity), உண்மையை அடைகிறோம் என்றார் கீர்க்கெகாட். அவர் இதை தனது Either Or (1843) எனும் நூலில் லேசாகத் தொட்டுக் காட்டினாலும் இதன் ஆழமான விவாதம் அவரது "அச்சமும் நடுக்கமும்" (Fear and Trembling, 1843) எனும் நூலில் தான் வருகிறது. அதில் அவர் பழைய ஏற்பாட்டில் வரும் அபிரஹாம் தனது மகன் ஐசக்கை கடவுளின் கட்டளைக்கு ஏற்ப பலிகொடுக்கிற சம்பவத்தை பல கோணங்களில் விவாதிக்கிறார். ரொம்ப சுவாரஸ்யமான கதை அது, அழகான மொழியில் எழுதப்பட்ட நூலும் கூட. தன் உயிருக்கு  உயிராக நேசிக்கும் மகனை, தன் நீட்சியாகக் கருதும் மகனை அவர் கடவுளுக்கு விட்டுக் கொடுப்பதில் ஒரு நியாயப்படுத்த முடியாத அபத்தம் உள்ளது. கிறுக்குத்தனமும் பிடிவாதமும், அதனலான கவித்துவமும் உள்ளது. தன் காலத்தின் நம்பிக்கைகள், தன் உளத்தைக் கட்டமைக்கும் விழுமியங்கள், தன் சமூக இருப்பின் கட்டமைப்பை, தன் தன்னிலையை நிலைநிறுத்தும் அடிப்படையை தகர்க்கும் முடிவை அவர் எடுக்கிறார். சிறகில்லாத மனிதன் மலை உச்சியில் இருந்து குதித்துப் பறக்க முயல்வதைப் போன்ற செயல் இது. பெரும் தத்துவார்த்த சாகசம் இது. உலகியல் விசுவாசங்களுக்கு அப்பாலான விசுவாசம் இது. அதனாலே கீர்க்கெகாட் அபிரஹாமை "முடிவற்ற விசுவாசத்தின் போர்வீரன்" என்கிறார்

ஆன்மீகத்தைப் பொறுத்தமட்டில் இருவகையினரை கீரிக்கெகாட் அடையாளப்படுத்துகிறார் - () முடிவற்ற விலகல்வாதத்தின் போர்வீரன் (Knight of Infinite Resignation); () முடிவற்ற விசுவாசத்தின் போர்வீரன் (Knight of Infinite Faith). இரு தரப்பினருமே இவ்வுலக வாழ்வின் விழுமியங்கள், நம்பிக்கைகள், போக்குகளுடன் உடன்பட முடியாமல் வெளியேறியவர்கள். பொதுச்சமூகம் சினிமாவைக் கொண்டாடினாலும், இசையைக் கொண்டாடினால், காதலை, கல்யாணத்தை, வேலையை, சம்பாத்தியத்தை, சாகசத்தைக் கொண்டாடினாலும் அவர்களால் அதில் உடன்பட முடியாது. இவையெல்லாம் பொருளற்றவை என நினைப்பார்கள். வெளியேறி நிற்பார்கள். துறவிகள், ஹிப்பிகள் இதற்கு சிறந்த உதாரணம் ஆவார்கள். இவர்களுடைய 'நான் அதுவல்ல, நான் மாறுபட்டவன்' எனும் எண்ணத்தையே கீர்க்கெகாட் நகைமுரண் என்கிறார். அதாவது இந்த எண்ணப்பாடு அகத்தே நிகழ வேண்டும், புறத்தே அல்ல. அவர்கள் வெள்ளை உடை அணிகிறார்கள், நான் கறுப்புடை அணிவேன், ஏனெனில் நான் பெயரளவிலும் தோற்றத்திலும் வேறுபட்டவன் என்பது அல்ல அது. அவர்களுடைய நம்பிக்கைகள், சமூக அமைப்பு, விழுமியத்தில் நான் உடன்படவில்லை, நான் எந்த நம்பிக்கையிலும் சமூக அமைப்பிலும் விழுமியத்திலும் உடன்படப் போவதில்லை என அகத்தில் மாறுபட்டு நிற்பதே நகைமுரண். (நமது சித்தர்கள் இதற்கு சிறந்த உதாரணம் ஆவர்.)

 அடுத்த தரப்பினர் முழுமையாக வெளியேறினாலும், உலகைக் கைவிட்டாலும், உலகம் தரும் இன்பங்களைப் பொருளற்றவை என நினைத்தாலும், தமது வெளியேற்றம் என்பது தாம் வெளியேறியதைவிட மகத்தான பொருள்கொண்ட உலகைத் தமக்குத் தரும் எனும் அதர்க்கமான நம்பிக்கையை கொண்டிருப்பார்கள். இதை அபத்தம் மீதான பிடிப்பு என கீர்க்கெகாட் கூறுகிறார். ஏனென்றால் அபிரஹாம் செய்வது கொலை, மனித நெறிகளின்படி படுபாதகச் செயல். அவரால் அதை மனித மொழியில் நியாயப்படுத்தவே முடியாது. ஆனாலும் அவர் அதை ஏன் செய்கிறார் என்றால் தர்க்கத்தையும் மீறிய ஒன்றை அவர் நம்புகிறார், அது தன்னைக் காப்பாற்றும் என ஆழமாக ஏற்கிறார் (விவிலியக் கதையிலும் அவ்வாறே நடக்கிறது.). தர்க்கத்தை மீறிய ஆற்றல் இருக்கிறதா, அது கடவுளா எனும் கேள்விக்குள் கீர்க்கெட்காட் செல்வதில்லை, அவருக்கு மானிட அறத்தையும், அதன் எல்லைகளையும் மீறிச் செல்லுதலே பெரும் ஆன்மீகத் தாவலாக இருக்கிறது, அதுவே மனிதனுக்குத் தனது இருத்தலை ஆழமாக அறிய உதவும் என்கிறார் அவர். எதுவெல்லாம் புறவுலகத்துக்கு அபத்தமாகத் தெரிகிறதோ அதன் நியாயத்தை நம்புகிறவரே கீர்க்கெகாட்டைப் பொறுத்தமட்டில் ஆன்மீகவாதி

கீர்க்கெகாட் தன் காலத்து டானிஷ் சமூகத்தில் இருந்த, ஐரோப்பாவில் ஏற்பக்கப்பட்டிருந்த கத்தோலிக்க சாமியார்களும் மதத்தினரும் இத்தகைய முடிவற்ற விசுவாசத்தின் போர்வீரர்களாக இல்லை என்று நம்பினார். அவர்கள் இவ்வுலக நியதிகளையும், அதன் பலாபலன்களையும் மட்டுமே நம்பினர். அவர்கள் கடவுளையும் சொர்க்க நரகத்தையும் பற்றிப் பேசினாலும் அதற்காக எதையும் விட்டுக்கொடுக்க, அபத்தத்தை நம்பத் தயாராக இல்லை. தம் லௌகீக இன்பங்களையும் அதிகாரத்தையுமே பெரிதாக நம்பினர்.  

மனிதனை விலங்கென்றும், அவனைப் பண்பற்ற விலங்காக்கலாம் என்று கூறுகிற அறிவியல்வாதத்தையும் அவர் ஏற்கவில்லை. மனிதன் மரணத்திற்குப்பின் சொர்க்கத்துக்குச் செல்லலாம் எனும் கடவுள்வாதத்தையும் அவர் ஏற்கவில்லை. கடவுளுக்கும் விலங்குக்கும் இடையில் உள்ள நிலையை மனிதனால் தன் அபாரமான அபத்தமான விசுவாசத்தின் பெயரில் எட்ட முடியும் என அவர் கூறினார். இதை அவர் காலத்து கற்பனாவாதிகளின், அவருக்கு சில நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த நம்மூர் பக்திக் கவிஞர்களின் கடப்புநிலைவாதத்தில் வேறுவிதமான மொழியில், பரிமாணத்தில் நாம் காணமுடியும். ஆனால் அதுவும் இதுவும் ஒன்றல்ல. ஏனென்றால் இவ்வாழ்வின் தன்னிலைவாதத்தை அவர் ஏற்கவில்லை. தான் என்பது பக்தி எழுத்தில், கற்பனாவாதத்தில் முக்கியமான கருதுகோள். கீர்க்கெகாட் அவர்களிடம் இருந்து வேறுபடுகிறார். அவர் கடவுளையும் இயற்கையையும் சரணாகதிக்கான லட்சியமெனக் கூறவும் இல்லை. தன்னிலை, கடவுள் ஆகியவற்றை துவக்கமாகவும் முடிவாகவும் அவர் கருதவில்லை.

சரி, கொலை சரியா? உயிர்பலி சரியா? இது சரியெனில் கொலைக்குற்றம், தீவிரவாதம் சரியாகிவிடுமே? இதை நாம் உருவகம் எனும்படிப் புரிந்துகொள்ள வேண்டும். கீர்க்கெகாட் நிஜமகாவே சொந்தப் பிள்ளையை ஆண்டவனுக்காக பலிகொடுப்பதைப் பற்றிச் சொல்லவில்லை. தனக்கு மிகமிகப் பிடித்தமான ஒன்றைக் கைவிடுவதை, எதைக் கொடுத்துவிட்டால் பின்னர் உயிர்வாழ்வதில் பொருள் இருக்காதோ அதைக் கொடுப்பதைச் சொல்கிறார். உதாரணமாக, நான் என் சுதந்திரத்தை மகத்தானதாக நினைக்கிறேன். நான் ஒரு எழுத்தாளன். நான் எழுதுகிற ஒரு நூலின் விளைவாக நாளை நான் சிறையில் அடைக்கப்படுவேன், வாழ்நாளில் ஒருமுறை கூட எழுத முடியாத நிலை எனக்கு ஏற்படுமெனில் நான் என்ன செய்ய வேண்டும்? நான் தர்க்கவாதி, பகுத்தறிவாளர் எனில் தொடர்ந்து எழுதுவதே முக்கியம் என நினைத்து அந்த ஆபத்தான நூலை எழுதாமல் விட்டுவிடுவேன். ஆனால் ஒரு முடிவற்ற விசுவாசத்தின் போர்வீரர் அதை எழுதி தன் எழுத்து சுதந்திரத்தைக் காவுகொடுப்பார். இதனால் அவர் என்ன அடைவார் எனில் அவர் நம்மால் சொல்லில் வடிக்க முடியாத ஒரு ஆழமான நிலையை அறிவார். தன் எல்லைகளைக் கடந்து மற்றொரு உலகுக்குப் போய் மீள்வார். தன் இருத்தலின் அடியாழத்தைப் போய்ப் பார்ப்பார்

இதை எப்படி என கீர்க்கெகாட் விளக்குவதில்லை என்றாலும் நாம் அரிஸ்டாட்டிலையும் ஹைடெக்கரையும் கொண்டு அதைப் புரிந்துகொள்ள முடியும். நமது காலம் காரண-காரிய அடிப்படையில் நேர்கோட்டுப் பாதையில் பயணிக்கிறது. நான் என் வீட்டின் கீழே விழுந்து கிடக்கிறேன். நான் என் வீட்டு மொட்டை மாடியில் நிற்கிறேன். ஒன்று நான் எழுந்து மேலே ஏறிப் போயிருக்க வேண்டும். அல்லது மேலே இருந்து கீழே குதித்திருக்க வேண்டும். இப்படி எதாவது ஒன்று காரண காரிய அடிப்படையில் நடக்க வேண்டும். ஒவ்வொரு செயலுக்கும் எதிர்விளைவு உண்டு என நாம் நம்புவதாலோ நேர்கோட்டுக் காலம் தோன்றுகிறது. இதுவே பகுத்தறிவின் அடிப்படை. இதிலிருந்தே, அதாவது காலம் எனும் கருத்தாக்கத்தைச் சார்ந்தே, விழுமியம் தோன்றுகிறது. உப்பு தின்னவன் தண்ணீர் குடிப்பான். தவறு செய்தவன் தண்டனை அனுபவிப்பான். இதனாலே நீதிமன்றத்தில் நேர்கோட்டு அடிப்படையில் குற்றத்தின் கால அடிப்படையை வகுக்கிறார்கள். எப்போது எங்கே எனக் கேட்டு குற்றம் நடந்த கதையை எழுதி நிரூபிக்கிறார்கள். காலம் நேர்கோட்டில் இல்லாவிடில் குற்றங்களே சாத்தியமில்லை. அதாவது குற்றம் என்பது நாம் கற்பிதம் செய்வதே, அது நிஜம் அல்ல. குற்றம் என்பது காலம் எனும் நம் கருத்தாக்கத்தின் நீட்சியே. காரண காரியம் - காலம் - குற்றம் - விழுமியம் என இது வளர்ந்துகொண்டே போகிறது. ஒட்டுமொத்த மானுடமும் விழுமியங்களின் சங்கிலியால் கட்டப்படுகிறது. நம்மால் காலத்தை மறுத்துப் பேச முடியாதது இதனாலே. காலத்தை மறுத்தால் மொத்தச் சமூகக் கட்டமைப்பும் சிதறிவிடும். மனிதர்கள் கட்டுப்பட மாட்டார்கள்

இதன் பாதகம் என்னவெனில் நேர்கோட்டுக் காலத்துக்கு அப்பால் உள்ள இருத்தலை நாம் உணர முடியாமல் நமது இருத்தலில் இருந்து அந்நியப்பட்டவர்களாகிறோம். செயற்கையாக, மேலோட்டமாக வாழ நிர்பந்திக்கப்படுகிறோம். வாழ்க்கை வெறுமையாகிறது. அதை ஈடுகட்ட கேளிக்கை, குற்றங்களைப் பெருக்கி அவற்றில் திளைக்கிறோம். நம்மையும் பிறரையும் போரின், சுயநலத்தின் பெயரில் அழிக்கிறோம். மனிதனை 'விலங்கு' என்று அழைக்கிறோம். ஆனால் மனிதன் விலங்கு அல்ல, அவன் காலமெனும் 'விலங்கால்' கட்டப்பட்ட அப்பாவியே

இதன்படிப் பார்த்தால் கீர்க்கெகாட் நம்மைக் காலத்தின் தளைகளில் இருந்து விடுவிக்கவே முயல்கிறார் எனப் புரியும்

பி.கு: இந்திய தத்துவம், குறிப்பாக பௌத்தம், நேர்கோட்டு வடிவில் காலத்தைப் பார்க்கவில்லை, அது காலத்தைப் போதத்தின் உபவிளைவாகப் பார்க்கிறது. ஆகையால் அது நீதியை அறம் (தம்மம்) எனும் புதிய சொல்லால் எதிர்கொள்கிறது. அறம் என்பது சார்புநிலையால் தோன்றும் காலத்தையும் வெளியையும் செயல்களையும் புரிந்துகொள்ளும் பிரக்ஞை, அதற்காக உருவாக்கப்பட்ட நூதனமான அக-ஒழுங்கு (புற ஒழுங்கல்ல). கீர்க்கெகாட் பேசும் பிரச்சினைகளை நாம் இன்னும் சிறப்பாக இதற்கு முன்பே கையாண்டிருக்கிறோம். இதை இன்னொரு சந்தர்ப்பத்தில் பார்க்கலாம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...