முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஆபரேஷன் சிந்தூர் - ஈவிரக்கமற்ற போர்வெறி




ஈவிரக்கமற்ற போர்வெறி

இந்திய சேனல்கள் இந்தியா பாகிஸ்தானின் தீவிரவாத முகாம்களில் குண்டு போட்டதாகச் சொல்கின்றன. ஸ்கைநியூஸில் பாகிஸ்தானின் தகவல் தொடர்பு அமைச்சர் "தாக்குதல் நடத்தப்பட்ட பொதுமக்கள் வசிக்கும் பகுதியில். பெண்கள், குழந்தைகள் கொல்லப்பட்டனர். நாளையே சர்வதேச ஊடகவியலாளர்களை அழைத்துப் போய் காட்டப் போகிறேன். பாகிஸ்தான் மறுதாக்குதல் தொடுக்கும்." என்கிறார். டைம்ஸ் ஆப் இந்தியா செய்தியில் பாகிஸ்தான் தரப்பில் இருந்து சொல்லப்படும் தகவலில் இருந்து பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 26 பேர்கள் கொல்லப்பட்டுள்ளனர் எனச் சொல்கிறார்கள். 41 பேர்கள் காயம்பட்டு சிகிச்சையில் இருக்கிறார்கள். இதுவரை நமக்குக் கிடைத்துள்ள படங்களில் இருந்து இந்திய அரசு குண்டுபோட்ட இடங்களில் குடியிருப்புகளும் அடங்கும், அப்பகுதியில் பொதுமக்கள் இருந்தார்கள் எனத் தெரிகிறது. நெருப்பு வானுயர எரிய அங்கு மக்கள் பைக்கில் போவதைக் காட்டுகிறார்கள். தீவிரவாதிகள் அங்கு இருந்தார்களோ இல்லையோ குடியிருப்புகள் உள்ள பகுதியில் குண்டு போட்டால், குடியிருப்பு கட்டிடங்கள் இடிந்து விழுந்தால் அதில் சிக்கி மக்கள் சாவார்கள் தானே? அவர்கள் என்ன தப்பு செய்தார்கள் தம் உயிரைப் பறிகொடுக்க?

பாகிஸ்தானும் விரைவில் நமது எல்லையோர மாநிலங்களில் விமானத் தாக்குதல் நடத்தினால் இதே போல மக்கள் கொல்லப்பட்டால் என்னவாகும்?

போரை ஆரம்பிப்பது சுலபம். ஆனால் அதன் முடிவில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டால் அதற்கு யார் பொறுப்பாவது? யார் நம் மனத்தில் ஏற்படும் அந்தக் காயங்களை ஆற்றுவது? உடைந்த குடும்பங்கள், அழிந்த வருமான மார்க்கங்கள், வீடுகள், விவசாய நிலங்கள், கட்டமைப்புகளை யார் சரிபண்ணுவார்கள்? இறந்த குழந்தைகளுக்கு யார் பதில் சொல்வார்கள்? இதெல்லாம் எந்த விதத்தில் நியாயம்? நெஞ்சில் ஈவிரக்கமற்றவர்களே போரை நியாயப்படுத்த முடியும்.

என்னை மிகவும் வருத்துவது ஒன்றிய அரசு போர் போர் என முழங்கியதும் ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் திரண்டு போய் தோளோடு தோள் நின்று ஆம் போர் எனக் கூறுவதும், உச்சநீதிமன்றமும் போர் போர் என முழங்குவதுமாகும். நியாயமாக எதிர்க்கட்சியினரே ஆளுங்கட்சியை நிதானப்படுத்த வேண்டும், நெறிப்படுத்த அழுத்தம் போட வேண்டும். துணை ராணுவமாக தம்மைக் கருதக் கூடாது. இங்கே தேசியவாத அலையில் மீன்பிடிக்கவே எதிர்க்கட்சிகளும் விரும்புகின்றன, அல்லது தமக்கு எதிராக சூழல் மாறக் கூடாது என அஞ்சுகின்றன என்று கூறலாம். ஆனால் எனக்கு எதிர்க்கட்சியின் கொள்கையும் போர் முழுக்கம்தான் எனத் தோன்றுகிறது. எனில் இவர்கள் எப்படி எதிர்க்கட்சியாக முடியும்? எதிர்க்கட்சியெனில் கொள்கை ரீதியாகவும் போருக்கு மாற்றுத்திட்டம் அவர்களுக்கு இருக்க வேண்டும் அல்லவா? இதேபோலொரு குண்டுவீச்சில் அவர்களுடைய வீட்டுப் பெண்களும், குழந்தைகளும் இறந்தால் மகிழ்ச்சியாக ஏற்றுக் கொள்வார்களா?

தேசப்பாதுகாப்பு, திரும்ப அடிப்போம் என்று முழக்கம் கேட்டால் இவர்களுடைய அடிப்படையான அறமும் இரக்கமும் காணாமல் போகுமெனில் என்னமாதிரி மனிதர்கள் இவர்கள்?

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.

கவனம் திருப்பும் ஆயுதம் - ஹிட்லர், மோடி, விஜய்: ஒற்றுமையும் வேறுபாடும்

  தவெக ஒரு 'ஆட்டத்திருப்பக்' கட்சி அல்ல கவனம் திருப்பும் (distracting) கட்சி எனத் தோன்றுகிறது. ராஜ்தீப் சர்தேசாய் தன் யுடியூப் அலைவரிசையில் மோடியின் ‘திமாகி நக்சல்’ பேச்சுச் சேட்டையைப் பற்றிப் பேசும்போது அது ஒரு திட்டமிடப்பட்ட கவனத் திருப்பல் பேராயுதம் (weapon of mass distraction) என்கிறார். அமெரிக்கா முன்பு சதாம் ஹுசைன் அணுகுண்டு வைத்திருப்பதாகச் சொல்லி இராக் மீது போர் தொடுத்ததைத் தொடர்ந்து பேராபத்து ஆயுதங்கள் குறித்து உலகம் முழுக்க விவாதங்கள் நடந்தன. ஆனால் அவை உண்மையில் அமெரிக்காவின் நோக்கத்தை மறைத்து மக்களின் கவனத்தைத் திருப்புவதற்காக உருவாக்கப்பட்ட பிரச்சாரம் மட்டுமே எனப் பின்னர் தெரிய வந்தது. உலகம் முழுக்க வலதுசாரிகள் இத்தகைய கவனம் திருப்பும் பேராயுதங்களைக் கொண்டே மக்களைக் கட்டுப்படுத்தி தம் வசம் வைத்திருக்கிறார்கள், தமது மோசமான நிர்வாகம் குறித்து விவாதம் எழாமல் பார்த்துக் கொள்கிறார்கள் என்கிறார் சர்தேசாய். அவர் மோடி அண்மையில் தனக்கெதிராக ஜென் ஸீ போராட்டம் தனது நிர்வாகக் கோளாறுகளை முன்வைத்து நடந்தபோது கவனத்தைத் திருப்பும் வண்ணம் கோட்பாட்டுத் தீவிரவாதிகள் பலர் இன்று உள்ளார்...