முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

"எழுத்தாளராக இருப்பது எப்படி?" - மா. அண்ணாமலை விமர்சனம்


 

நூல் : எழுத்தாளராக இருப்பது

எப்படி?
ஆசிரியர் : ஆர். அபிலாஷ்
வெளியீடு : எழுத்து பிரசுரம்
பக்கங்கள் : 332
வகை : துறைசார் நூல்
எழுத்தாளர் என்ற ஒற்றை வார்த்தையை சிறு செடியாய்க் கொண்டு 332 பக்கத்தில் கிளைகள், சிறுகிளைகள், குறுங்கிளைகள் என அடர்த்தியான ஒரு பெருமரமாய் வளர்த்திக் காட்டியுள்ளார் அபிலாஷ். அபிலாஷிடம் எனக்குள்ள சிக்கலே இருமுறை படிக்க வைப்பது. இந்நூலையும் அவ்வாறே செய்வித்தார். அந்தளவிற்கு தரமானதுதான். எழுத்துத்துறை பற்றி இதற்கு முன்னர் சி. சரவண கார்த்திகேயனின் 'ரைட்டர் ' நூலும், பாராவின் 'எழுதுதல் பற்றிய குறிப்புகளும்' அறிமுகமாகி இருந்தன. இரண்டுமே தன் அனுபவ குறிப்புகள். இந்நூலும் அனுபவங்களை அடிக்கடி பேசினாலும் ஒரு எழுத்தாளனின் சிக்கல்களை ஆழ்ந்து பேசி இருப்பதால் அவற்றிலிருந்து வேறுபடுகிறது. கூடவே தத்துவார்த்தமான பார்வையும் இணைந்து தமிழ் இலக்கிய, வெகுஜன, வணிக எழுத்தாளர்களின் இருப்பைப் பேசுகிறது.
ஒரு எழுத்தாளனை எழுதுவதற்கு ஆயத்தப்படுத்தி; அவன் எழுத்துக்களை வளர்த்தி; அதன் மூலமாக எழுத்தாளனின் நம்பிக்கையை கூட்டி பின் அதற்காக அகங்காரம் கொள்ள வேண்டாம் என முடித்திருக்கிறார். நூலின் இறுதியில் எனக்கு சந்தேகம் எழுகிறது. அதாவது நூலின் இறுதி வரிகள் இவ்வாறு முடிகின்றன‌. ' எழுத்துக்கும் எழுதுபவனுக்கும் மதிப்பு உள்ளதாய் எண்ணுவது வெறும் பார்வை மயக்கம்தான்'. எனில் எதற்கு இந்த 330 பக்க புத்தகம் ? பிறகு ஏன் ஒரு அறிவார்ந்த சமூகம் மேலெழும்பி வர இத்தனை ஆயிரம் பக்கங்கள் எழுதப்பட வேண்டும்? ஒருவேளை எழுத்தாளன் தானொரு படைப்பு பிரம்மா என்ற எண்ணத்தோடு அலையக்கூடாது என்பதற்கான முட்டுக்கட்டை என நாம் இதை எடுத்துக் கொள்ளலாமா? தெரியவில்லை.
எழுத்தாளனின் அத்தனை உருமாற்றங்கள், மனமாற்றங்கள், தொல்லைகள், வாய்ப்புகள் பற்றி நேரடியாகவும் வாழ்வியல் நிகழ்வுகள் மூலமும் சொல்லியிருக்கிறார். இளம் எழுத்தாளர்களுக்கு ஏதும் இருக்கிறதா? நிறைய இருக்கின்றது. ஆனால் அத்தனையையும் உணர அவர்கள் தொடர்ந்து எழுதிக் கொண்டே இருக்க வேண்டும் என்கிறார். நூலில் என்னை முதலில் வியக்க வைத்தது நூல் முழுக்க வியாபத்திருக்கும் ஜெயமோகன். ஒருவேளை இது ஜெயமோகன் என்னும் எழுத்தாளரின் புகழ் பாடும் நூலோ என்ற எண்ணமும் எழுகிறது. ஆனால் நூலை முழுதும் வாசிக்கும் போது அது ஆர் அபிலாஷ் எனும் எழுத்தாளரிடம் ஜெயமோகன் என்னும் முன்னோடி எழுத்தாளர் செலுத்தியிருக்கும் தாக்கமே என அறிய முடிகிறது. இதில் வியக்க என்ன இருக்கிறது என்றால் சமீபமாக அபிலாஷை விட ஜெயமோகனை எதிர் முனையில் வைத்து விமர்சித்தது யாரும் இல்லை. ரமேஷ் பிரேதன் அஞ்சலி குறிப்பு, ஜெயமோகனின் சமீபத்திய ஒரு கோடி ரூபாய் இலக்கிய பரிசு அறிவிப்பு, வைரமுத்துவிற்கான ஞானபீட பரிசு அறிவிப்பிற்கான ஜெயமோகனின் எதிர்வினை என எல்லாவற்றிலும் அவரை எதிர் நிறுத்தி கருத்து வெளியிட்டிருக்கிறார். அதனாலேயே இது வியப்பாக இருந்தது. என்னதான் ஜெயமோகனை எதிர்த்தாலும் எழுத்தாளன் எனும் மோன வாழ்வில் ஜெயமோகனின் செயல்கள் போற்றப்பட வேண்டும் என எண்ணியிருக்கிறார் போலும்.
இரண்டாவதாக என்னைக் கவர்ந்த மற்றொன்று எழுத்தாளன் என்பதால் எதையும் தலையில் சுமையாக சுமந்து கொள்ள வேண்டாம் என்பது. அதனை 'எழுத்துக்காக வாழ்வு அல்ல; செறிவாய் வாழ்வதற்கே எழுத்து' என்கிறார். இது ஒரு விதத்தில் சுதந்திர உணர்வை அளிக்கும் என்கிறார். எழுத்தாளர் என்பதால் அவனை சுற்றிய ஒரு ஒளிவட்டம் வேண்டாம் என்கிறார். இவரே தான் அறிவுஜீவிகள் இருப்பு நமக்கு வேண்டும் என்கிறார். ஏனெனில் ஒரு பிரச்சனையின் கோணத்தை அதன் அடி ஆழத்திலிருந்து பார்ப்பவர்கள் அவர்கள். மதப் பிரச்சினைகளுக்கு மதம் மட்டுமோ மத அமைப்புகளோ மட்டுமே காரணமல்ல. அவர்களை இயக்கும் கார்ப்பரேட் முதலாளித்துவமும் இணைந்திருப்பதை சிந்திக்க வேண்டும் என்கிறார். இது எல்லா பிரச்சனைகளையும் வேறு கோணத்தில் சிந்திப்பதால் நடக்கும் என்கிறார். அதேபோன்று ஏன் தமிழ் எழுத்தாளர் மதிக்கப்படுவதில்லை? என்ற கட்டுரையில்
தமிழவனின் அமைப்பியல் கொள்கையும்; ஜெயமோகனின் பஞ்சம், வறுமை போன்ற கொள்கைகளும் வருக்கின்றன. எனக்கென்னவோ இந்திய முழுக்கவே குறிப்பிட்ட காலம் வரை கல்வி ஒரு குறிப்பிட்ட சாராரிடமே இருந்ததே காரணம் என்பேன்‌. எழுத்தாளர் அ. வெண்ணிலா பெண் எழுத்தாளர்களை தொகுத்து வெளியிட்டிருக்கும் 'மீதமிருக்கும் சொற்கள் ' என்ற நூலில் கிட்டத்தட்ட 1930 களிலிருந்து தற்போது வரை உள்ள பெண் எழுத்தாளர்களை அடையாளப்படுத்தி இருக்கிறார். அதில் கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் அதாவது 1980கள் வரை கல்வி வாய்ப்பை பெற்றவர்களில் மேல் தட்டு வர்க்க பெண்களே இருக்கின்றனர். பின்னரே ஏனைய சமூகப் பெண்கள் எழுத்தாளர்களாக வருகின்றனர். அதுவும் குறைவான எண்ணிக்கையிலேயே. நிலைமை இப்படி இருக்க இனி வருங்காலங்களில்தான் அந்நிலைகள் மாறும்.
எழுத்து பொதுமைப்படுத்தப்பட்டதால் அது மதிப்பிழந்து இருக்கிறது என்கிறார். எனக்கு அதில் உடன்பாடில்லை‌‌. நல்ல வாசகன் நல்ல எழுத்தாளனை அடையாளம் கண்டு கொள்கிறான். அது எழுத்தின் மூலமாகத்தான் நடக்கிறது என என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்‌. நானும் கூட அபிலாஷ் எனக்கு அறிமுகமான புதிதில் என்னடா இவ்வளவு நீளமாக இருக்கிறது என்று அவரின் கட்டுரைகளை கடந்து போயிருக்கிறேன். ஆனால் ஏதோ ஒரு புள்ளியில் அவரின் எழுத்தில் உள்ள நேர்மையை கண்டறிந்தேன். இப்பொழுது அவர் எழுதும் பெரும்பாலான கட்டுரைகளை வாசித்து விடுகிறேன். அப்படியேதான் போகன் சங்கரை முகநூலிலும் புத்தகங்களின் வாயிலாகவும் பின்தொடர்கிறேன். பெரும்பாலான எழுத்தாளர்களை சமூக ஊடகங்கள்தான் எனக்கு அறிமுகம் செய்திருக்கின்றன. இது பொதுமைப்படுத்தாமல் நிகழ்ந்திருக்குமா எனத் தெரியவில்லை.
ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம் கேமரா செல்போன்களின் மூலம் புகைப்படம் எடுத்து சமூக ஊடகங்களில் வெளியிடுதல் பற்றி வினா எழுப்பும்போது, 'எல்லோரும் எடுக்கட்டுமே; நல்லதை அவர்களே முடிவு செய்யட்டும்.அது ஒரு திறப்பு ' என்கிறார். நான் இதை ஜனநாயகப்படுத்துதல் என்பேன்.
'நதியும் நீரும் நீரின் பல வடிவங்கள்: கே என் செந்திலின் வாசகசாலை பேட்டியும் கருத்துகளும்' என்ற கட்டுரையில் கே என் செந்தில் சமகால எழுத்தாளர்கள் சிலரை குற்றஞ்சாட்டியதற்கு 'காலாவதியாகிப்போன ஒரு குறுகின பார்வையின் எச்சமாய் செந்தில் தன்னை வைத்துக் கொள்வது மிகவும் வருந்தத்தக்கது ' என்கிறார். எனில் 'பொதுவான எதுவும் அதிகாரம் அற்றதாகும் எனும் பொருளில் எழுத்து தன் அசலான சமூக அதிகாரத்தை மெல்ல மெல்ல இழந்து வருகிறது. இன்று எழுத்துக்குள்ள அதிகாரம் பெயரளவிலான ஒன்றுதான்' என்கிறார். இந்த முரணை எப்படி விளங்கிக் கொள்வது என்று தெரியவில்லை.
தற்போதுள்ள சமூக ஊடகச் சூழலில் திறமையான எழுத்தாளர்கள், அரைகுறையாய் எழுதும் என் போன்றோரின் கூட்டத்தில் சிக்குண்டு இருக்கிறார்கள். அதைத்தான் அபிலாஷ் அப்படிச் சொல்கிறார் என்று நினைக்கிறேன். ஆனால் அத்திறமையான எழுத்தாளர்கள் தங்களின் எழுத்துகளின் மூலம் வாசகர்களை அடைந்து விடுகிறார்கள். வாசகனும் விரைவிலேயே தரமான எழுத்தை நோக்கி நகர்ந்து விடுகிறான்.
நூல் முழுக்க நிறைய சுவாரசியங்கள் விரவிக் கிடந்தாலும் என்னைக் கவர்ந்தது எழுத்தாளர்களுக்கு இடையில் நிகழும் சச்சரவுகள். அதற்கு, 'எழுத்தாளன் என்பவன் கூருணர்வு மிக்கவன். சின்ன சீண்டலுக்கும் கொதித்தெழுந்துவிடுவான். ஆனால் அது நீர்க்குமிழியாய் கண நேரத்தில் காணாமல் போகும்' என்கிறார். எனக்கு அபிலாஷிடம் பிடித்தது தோழமையான அவரது எழுத்து. சிக்கலான விஷயங்களைப் பேசினாலும் அதை மென்மையாய் நண்பனிடத்தில் சொல்லும் உரிமையோடு சொல்கிறார். ஆசிரியர் பணியில் இருப்பதால் இது அவருக்கு வாய்த்திருக்கிறது என்று நினைக்கிறேன்.
முடிவாக எழுத்தாளனும் மனிதனே. அவனையோ அவன் படைப்பையோ காலாதீதமாக அவன் பார்க்க வேண்டாம். எழுதுங்கள் உங்களின் மனம் சொல்லுவதை நேர்மையாய் படையுங்கள். முக்கியமாக எழுதும் போது மட்டும் எழுத்தாளனாக இருங்கள். மற்ற வேளைகளில் உங்களின் அன்றாடங்களை செம்மையாக செய்து உயிர் வாழுங்கள் என்கிறார்.
'ஏய்... என்னப்பா எழுத்தாளனைப் பற்றி இம்மதிப்புரையில் எதுவுமில்லை' என்கிறீர்களா? . எழுதுங்கள். தொடர்ந்து எழுதுங்கள். உங்கள் எழுத்தே உங்களை வானளவு உயர்த்தும். இதுவும் அபிலாஷ் சொன்னதுதான். அது ஒன்றே எழுத்தாளனுக்கு எல்லாவற்றையும் கொண்டு வரும்.
நன்றி அபிலாஷ்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மிச்சமுள்ள வேலை (குறுங்கதை) - ஆர். அபிலாஷ்

  வார இறுதி. காலை முதலே வேலைக்காரியை பத்து தடவைகளுக்கு மேல் அழைத்தாகி விட்டது. தவறான எண்ணென்று யாரோ திரும்பத் திரும்பச் சொல்வதுடன் தெலுங்கில் திட்டவும் செய்கிறார்கள். அவள் எண்ணை மாற்றியதுடன் எங்கே போனாள்? பாத்திரங்கள் குவிந்து கிடக்கின்றன. உணவை ஆர்டர் செய்து வாங்கி நானும் மனைவியுமாக அமைதியாக உண்டோம். பிள்ளைகள் இருவரும் என் சகோதரியின் வீட்டுக்கு விடுமுறையைக் கொண்டாடப் போயிருக்கிறார்கள். வீட்டு மணியடித்தது. நான் போய்த் திறந்தால் வேலைக்காரியின் தாயான எழுபது வயதுக் கிழவி நின்று கொண்டிருந்தார். நான் அவரைக் கண்டதும் திகைத்து ஒரு பக்கம் சாய்ந்து நின்று கொண்டேன். அவர் அலட்சியமாக என்னை விலக்கிக் கொண்டு உள்ளே நுழைந்தார். என் மனைவி தன் கையில் இருந்து தட்டைக் கீழே போட்டு விட்டுக் கத்துகிற சத்தம் கேட்டது. நான் தடுமாறியபடி உள்ளே வந்தேன். யாரை அழைப்பது, என்ன சொல்வது எனத் தெரியவில்லை.   அவர் உள்ளே சென்று வேலையை ஆரம்பித்ததுடன் சமையலறையில் யார் பொருட்களை மாற்றி வைத்தது என உரிமையுணர்வுடன் என் மனைவியை விசாரித்துக் கொண்டிருந்தார். என் மனைவி இன்னும் பேசும் இயல்பு நிலைக்கு வரவில்லை என்பதில் திகை...

சினிமாவும் சர்வாதிகாரமும்: யோசா சொல்வதென்ன?

  காட்சி ஊடகம் நமக்குப் பொழுதுபோக்க உதவுகிறது என்றாலும் அது அடிப்படையில் மனிதரைச் சிந்திக்க விடாமல் செய்து செயலூக்கத்தை ஒழிக்கிறது, இது சர்வாதிகாரத்தை நோக்கி இட்டுச் செல்கிறது என்று சில மாதங்களுக்கு முன் நான் விஜய்யின் வருகையை ஒட்டி ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். இன்று தற்செயலாக மரியோ பார்கஸ் யோசாவின் ஒரு கட்டுரையைப் படித்தால் அதில் அவர் கிட்டத்தட்ட அதே கருத்தைத்தான் சொல்கிறார். காட்சி ஊடகங்களின் ஆதிக்கம் உள்ள சமூகம் சர்வாதிகாரத்துக்கு எதிராகச் செயல்பட முடியாமல் முடங்கும் என்கிறார்: (...) making the present unreal, turning actual history into fiction has the effect of demobilising the citizen, making him or her feel exempt from any civic responsibility, encouraging the conviction that it is beyond anyone's reach to intervene in a history whose screenplay is already written. Along this path we may well slide into a world where there are no citizens, only spectators, a world where, although formal democracy may be preserved, we will be resigned to the kind of lethargy dictatorships asp...

பிரபலங்களின் நோக்கம்

  நீங்கள் ஒரு பிரபலத்தின் நேர்முகத்தைப் பார்க்கிறீர்கள். அவர் தன் வாழ்வில் வெற்றி பெற சரியான உணவின்றி அலைந்து திரிந்ததைச் சொல்கிறார். நீங்கள் கண் கலங்குகிறீர்கள். அவர் தன் குடும்பத்தைப் பிரிந்து மாநகரத்தில் தனிமையில் அனாதையாக வாழ்ந்தைச் சொல்கிறார். நீங்கள் மனமுடைகிறீர்கள். இன்னொருவர் தான் தன் காதலனால் ஏமாற்றப்பட்டதைச் சொல்லி அதனால் ஏற்பட்ட மனச்சிக்கல்களை, பதற்றத்தை, காயங்களை வர்ணிக்கிறார். உங்களுக்கு இரக்கமும் ஆத்திரமும் வருகிறது. இந்த அனுபவங்களும் உணர்வுகளும் பொய்யல்ல. அவரும் நீங்களும் அடிப்படையில் மனிதர்களே. அதேநேரம், இங்கு எழுப்ப வேண்டிய முக்கியமான கேள்வியுண்டு - ஏன் இம்மாதிரியான கதையாடல்களை ஊடகங்கள் உங்கள் முன்வைக்கின்ற்ன? அவர்களின் நோக்கம் என்ன? ஒரு விசயம் உண்மையாக இருந்தாலும் அதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என வெகுஜன ஊடகம் நினைப்பதில் ஒரு உத்தேசம் இருக்குமே? பிரபலமும் நீங்களும் வர்க்கரீதியில் வெவ்வேறு இடங்களில் இருக்கிறீர்கள். இது ஒரு விலகலை ஏற்படுத்துகிறது. பிரபலங்கள் இந்த நாட்டின் பெரும்பணக்காரர்களை, அதிகார வர்க்கத்தின் பகுதியாக உள்ளார்கள். இந்த இடைவெளியை நிரப்புவது அவ...