முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அவன் கெட்டவன் என்பதால் நான் நல்லவன்


 

நேற்று ஒரு இலக்கிய நண்பரிடம் உரையாடும்போது அவர் வைரமுத்து VS தீவிர இலக்கியம் என ஒரு டிராக்கில் சென்றார்; அயல்மொழியினர் இவர் படைப்புகளை மொழியாக்கத்தில் படித்த்தால் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்று அங்கலாய்த்தார். நான் அவரிடம் அக்கவலை மிகையானது என்றேன்.

புத்தக வாசிப்பு சிறந்த படைப்புகளை யாரோ முன்வைத்து அதைப் பலரும் படித்து நடப்பதல்ல. சந்தைப்படுத்துதலும் பரிந்துரைகளும் ஒரு புத்தகத்தைக் கொண்டு சேர்க்க உதவும். ஆனால் அதைத் தாண்டியும் வாசிப்பு நிகழும். அதுதான் அசல் வாசிப்பு. இதையெல்லாம் நெறிப்படுத்த முடியாது, அதைச் செய்யவும் கூடாது. ஏனென்றால் இலக்கியம் என்பது அரசியல் அல்ல. அது புறமேயிருந்து நிர்வகிக்க வேண்டியது அல்ல. அது சுதந்திரமாக இயங்க வேண்டும்.
வைரமுத்துவுக்கு என்று ஒரு இடம் இருக்கும். அவரை வாசிக்கிறவர்கள் இருப்பார்கள். இலக்கிய வாசகர்கள் என்ன நடந்தாலும் அவர் எழுத்தை ஏற்கப் போவதில்லை. எந்த மொழிக்குச் சென்றாலும் இதுவே நடக்கும். ஒருவேளை அவரது சில எழுத்துக்களில் உள்ள நாட்டார் கூறுகளுக்காக அவரைச் சிலர் படிக்கலாம். இந்த ஞானபீடம் வரும் முன்பே அவர் ஒரு முக்கியமான ஆங்கிலப் பதிப்பகம் மூலமாக தன் புனைவொன்றை மொழியாக்கத்தில் கொண்டு வந்தார். OUPக்கும் தமிழ்நாட்டு பாடநூல் கழகத்துக்குமான இணைவாக்கம் இப்பணி. பாடநூல் கழகம் ஒருவேளை மொழியாக்கத்துக்கோ பதிப்புக்கோவான நிதியை அளித்திருக்கலாம், ஒருங்கிணைப்பில் உதவியிருக்கலாம். சர்வதேசப் புத்தக விழாவின்போது நூல் வெளியீடு தடபுடலாக நடந்தது என நினைக்கிறேன். இதுவும் வைரமுத்துவுக்கு அல்ல, ஒரு இலக்கிய படைப்பாளிக்கே நடந்திருக்க வேண்டும் என சிலர் கூறலாம். இங்குதான் நாம் எதை விவாதிக்க வேண்டும் என முடிவெடுக்க வேண்டும் - வைரமுத்து vs இலக்கிய படைப்பாளிகள் எனும் எதிரிடையையா அல்லது இந்த செயலாக்கத்தில் உள்ள சிக்கலை, அரசியலை, லாபியிங்கைக் குறித்தா?
உண்மையான பிரச்சினை பின்னதுதான். நான் தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் மொழியாக்கத்துக்கான பரிந்துரைப் பட்டியலைக் கண்டிருக்கிறேன். அதில் பல விடுபடல்களும் தவறான தேர்வுகளும் உள்ளன. அது மட்டுமல்ல, ஒட்டுமொத்தமாக இத்தகைய பணிகளில் வெளிப்படையான முறைமைகள் உண்டா, தேர்வுக்கான நியாயங்களைச் சொல்கிறார்களா எனும் கேள்விகளே அவசியமானவை. நம் ஆட்களை உள்ளே வைப்பது, அவர்களைக் கொண்டு நம்மை உள்ளே கொண்டு போவது எழுத்தாளர்களுக்கான பணி அல்ல. ஒரு ஜனநாயகச் சமூகத்தில் எல்லாம் வெளிப்படையாக, நேர்மையாக இருக்க வேண்டும். வெகுஜனப் படைப்பாளிகளைத் தாராளமாக மொழியாக்கட்டும், ஆனால் அதற்கான வரைமுறைகளை சம்மந்தப்பட்ட நிறுவனங்கள் வெளியே சொல்ல வேண்டும். முக்கியமாக இதில் பொறுப்பில் உள்ளவர்களுக்கு தமிழில் படிக்கத் தெரிய வேண்டும்.
சரியான படைப்புகள் மொழியாக்கப்பட வேண்டும் என்பதைவிட அனைத்து முக்கியமான படைப்பாளிகளுக்கும், அதாவது வாசகர்களாலும் விமர்சகர்களாலும் அங்கீகரிக்கப்பட்டவர்களுக்கு, எளிதில் அணுகி தம் படைப்புகளை மொழியாக்கச் செய்வதற்கான ஒரு நடைமுறை வேண்டும். தகுதியானவர்களுக்கு இடையே சமத்துவம் வேண்டும்.
இதையேதான் நான் சில தனியார் விருதுகள் விசயத்திலும் சொல்கிறேன். அரசு நிறுவனங்களுக்கு இணையாக அங்கும் பல குழப்பங்கள், லாபியிங், முறையற்ற போக்குகள் உள்ளன. அங்கும் நடைமுறை வெளிப்படையாக இல்லை. சொல்லப்போனால் சாகித்ய அகாடெமி இவர்களைவிட பல மடங்கு மேலானது என்று சொல்வேன். அங்கு ஏதோ ஒரு நடைமுறையாவது உள்ளது. அங்கு தேர்வுக் குழுவில் தமிழில் படிக்கிறவர்களாவது இருக்கிறார்கள். அந்த நடைமுறைக்குள் நீங்கள் அரசியல் செய்வது, லாபியிங் செய்யலாம். ஆனால் தனியார் விருதுகள் சொந்த சாதி, மதத்துக்குள் கல்யாணம் பண்ணி வைப்பதைப் போல அது செய்வதில்லை. பழைய படங்களில் சொல்வார்கள், 'இந்தப் பொண்ணு பொறந்தப்பவே முடிவு பண்ணிட்டோம், இவனுக்குத்தான் அவளைக் கட்டி வைக்கணமுன்னு' என்று. தனியார் விருதுகள் இப்படி முன்தீர்மானமாகின்றன. சாகித்ய அகாடெமியில் கொஞ்சமாவது ஜனநாயகத்தன்மை உள்ளது, தனியாரில் சுத்தமாக இல்லை. ஒன்று நாம் இதை விமர்சிக்க வேண்டும் அல்லது புறக்கணிக்க வேண்டும்.
ஒப்பிடுகையில் வைரமுத்து vs இலக்கியவாதிகள் என்பது ஒரு மிகச்சின்ன பிரச்சினை. அது பூதாகரமாக்கப்படுவது இன்னும் சுவாரஸ்யமானது. அதில் ஒரு முக்கியமான சங்கதி உள்ளது - பொதுவாக அரசியல்வாதிகள் தாம் இத்தகைய இருமையைக் கட்டமைப்பார்கள். பூதாகரப்படுத்துவார்கள். அவர்களுக்கு ஒரு உத்தேசம் இருக்கும். ஒரு இடத்தில் இருந்து சிலரை அப்புறப்படுத்தி தம்மவர்களை அமர வைக்க வேண்டும் என நினைப்பார்கள். "அதோ பார் அவனை அடி, அல்லாவிட்டால் அவன் நம்மை அடித்துவிடுவான்" என்பார்கள். நம் மதம், நம் சாதி ஒழிந்துவிடும், அவர்களை நம்மை நசுக்குவார்கள் என்று பயத்தைக் கிளப்புவார்கள். கடைசியில் இதைவைத்து அவர்களே லாபமீட்டுவார்கள். யாரும் யாரையும் நசுக்கவோ ஒழிக்கவோ போவதில்லை என்பதைத் தாமதமாகப் புரிந்துகொள்வோம்.
அடுத்து, நமக்கென்று ஒரு தேசிய, சர்வதேசிய சந்தையே இல்லை. அங்கு வைரமுத்து போய்த்தான் நம் மானத்தை வாங்கப் போகிறாரா? அங்கு மானமே இல்லையே இழப்பதற்கு?
நமது முன்னோடிகள், சமகாலப் படைப்பாளிகள்ப் பற்றி நாம் ஆங்கில நாளிதழ்களில் பரவலாக எழுத வேண்டும். புத்தகங்கள் எழுத வேண்டும். அதைக் கல்விப் புலத்துக்குள் கொண்டு போக வேண்டும். சமகாலம் என்று நான் சொன்னது இளைஞர்களையும் சேர்த்துதான். 1950-60களில் பிறந்தவர்களை மட்டுமல்ல. வரவர தமிழில் சமகாலம் என்றாலே எதோ முதியோர் இல்லம் போல ஒரு பிம்பம் வருகிறது. நல்ல படைப்புகளைத் தரும் சமகாலப் படைப்பாளிகளை அவர்களுடைய வயதைப் பாராமல் பாராட்டி நாம் ஆங்கிலத்தில் எழுதி அதை கல்விப் புலத்துக்குள் கொண்டு போக வேண்டும். நான் இதற்காக முன்பு முயன்றிருக்கிறேன். ஆனால் கல்வித்திட்டத்துக்குள் கொண்டு போகலாம் என்றால் படைப்புகளுக்குச் சரியான மொழியாக்கம் இருக்காது, கல்விப்புலக் கட்டுரைகள் கிடைக்காது. நாம் செய்ய வேண்டிய இத்தகையப் பணிகளிலும் கூட லாபியிங், அரசியல், குழு நடவடிக்கை என்றே இயங்குகிறோம். சின்னச்சின்னக் குழுக்களில் இருந்தபடி நாங்கள் மட்டுமே இலக்கியவாதிகள் என்று நாம் கோரினால் உருப்படவே மாட்டோம்.
இருமைக் கட்டமைப்பு அரசியல்வாதியின் பணி. அதைச் செய்யாமல் நாம் சமத்துவமாக நடந்துகொண்டு உருப்படியான காரியங்களைச் செய்ய வேண்டும். நாம் இப்போது என்ன செய்கிறோம் என்றால் அரசியல்வாதியின் முறைமைகளை, தந்திரங்களைப் பின்பற்றுகிறோம். அரசியல்வாதிகளுக்கு நெருக்கமான அதிகாரிகளுக்கு நாமும் நெருக்கமாகிறோம். பதவியில் உள்ள அரசியல்வாதிகளுக்கு இணக்கமாகச் சிந்திக்கிறோம், அவர்களுடனே பழக விரும்புகிறோம், அதை விளம்பரப்படுத்தவும் செய்கிறோம். அவர்கள் அரசியல் அதிகாரத்தை இழந்ததும் நாமும் மௌனமாகி அடுத்து எங்கு போய் கடைவிரிக்கலாம் என யோசிக்கிறோம். நாம் ஒரு 'கிட்டத்தட்ட அரசியல்வாதியாகிறோம்'. அதாவது வைரமுத்துவும் சினிமாக்காரர்களும் போன பாதையிலே நம் இலக்கியப் படைப்பாளிகளும் இன்று போக முயல்கிறார்கள். மாநில அளவிலும் தேசிய அளவிலும். சர்வதேச அளவில் செய்தால் ஒரு அனுகூலம் நீங்கள் வெளிநாடு வாழ் ஆதரவாளர்களிடம் நிதி திரட்டி இன்னும் பெரிய அதிகார வட்டத்தை அமைக்கலாம் என்பது. இம்மாதிரி இரட்டைக் குதிரை சவாரி செய்வோர் முழுநேர அரசியலைக் குறித்தும் சிந்தித்துக் கொண்டிருப்பார்கள். இது ஒரு வீழ்ச்சிதான். இத்தகைய சிந்தனையே வீழ்ச்சிதான்.
மீண்டும் சொல்கிறேன். கூட்டம் நடத்துவது, பரப்புரை செய்வது பிரச்சினை அல்ல. அரசியல்வாதியின் தந்திரங்களைப் பயன்படுத்துவதும் அதிகாரத்தைக் குவிப்பதும் மட்டுமே சிக்கல். ஸ்டாலினிய சோவிய ரஷ்யாவின் இலக்கிய நிலையைப் பற்றிப் படித்தவர்களுக்குத் தெரியும், நமது இன்றைய இலக்கியச் சூழல் அதைப் போன்றே மாறி வருகிறது என்று. வைரமுத்து ஒரு பிரச்சினை இல்லை. நாம் நம்மவர்கள்-மற்றமையர் என மனதுக்குள் யோசித்து கருத்துக்களை யோசித்துப் பழகிக் கொள்வது நல்லதல்ல. மெல்லமெல்ல நம் மனம் அதற்கு ஏற்ப உருமாறி விடும். இதையெல்லாம் செய்ய ராஜாவும் அண்ணாமலையும் சீமானும் இன்னும் பல யுடியூபர்களும் இருக்கிறார்கள். நாம் அவர்களைப் பிரதியெடுத்து குட்டி ராஜாக்களாக, அண்ணாமலைகளாக, சீமான்களாக மாறக் கூடாது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மிச்சமுள்ள வேலை (குறுங்கதை) - ஆர். அபிலாஷ்

  வார இறுதி. காலை முதலே வேலைக்காரியை பத்து தடவைகளுக்கு மேல் அழைத்தாகி விட்டது. தவறான எண்ணென்று யாரோ திரும்பத் திரும்பச் சொல்வதுடன் தெலுங்கில் திட்டவும் செய்கிறார்கள். அவள் எண்ணை மாற்றியதுடன் எங்கே போனாள்? பாத்திரங்கள் குவிந்து கிடக்கின்றன. உணவை ஆர்டர் செய்து வாங்கி நானும் மனைவியுமாக அமைதியாக உண்டோம். பிள்ளைகள் இருவரும் என் சகோதரியின் வீட்டுக்கு விடுமுறையைக் கொண்டாடப் போயிருக்கிறார்கள். வீட்டு மணியடித்தது. நான் போய்த் திறந்தால் வேலைக்காரியின் தாயான எழுபது வயதுக் கிழவி நின்று கொண்டிருந்தார். நான் அவரைக் கண்டதும் திகைத்து ஒரு பக்கம் சாய்ந்து நின்று கொண்டேன். அவர் அலட்சியமாக என்னை விலக்கிக் கொண்டு உள்ளே நுழைந்தார். என் மனைவி தன் கையில் இருந்து தட்டைக் கீழே போட்டு விட்டுக் கத்துகிற சத்தம் கேட்டது. நான் தடுமாறியபடி உள்ளே வந்தேன். யாரை அழைப்பது, என்ன சொல்வது எனத் தெரியவில்லை.   அவர் உள்ளே சென்று வேலையை ஆரம்பித்ததுடன் சமையலறையில் யார் பொருட்களை மாற்றி வைத்தது என உரிமையுணர்வுடன் என் மனைவியை விசாரித்துக் கொண்டிருந்தார். என் மனைவி இன்னும் பேசும் இயல்பு நிலைக்கு வரவில்லை என்பதில் திகை...

சினிமாவும் சர்வாதிகாரமும்: யோசா சொல்வதென்ன?

  காட்சி ஊடகம் நமக்குப் பொழுதுபோக்க உதவுகிறது என்றாலும் அது அடிப்படையில் மனிதரைச் சிந்திக்க விடாமல் செய்து செயலூக்கத்தை ஒழிக்கிறது, இது சர்வாதிகாரத்தை நோக்கி இட்டுச் செல்கிறது என்று சில மாதங்களுக்கு முன் நான் விஜய்யின் வருகையை ஒட்டி ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். இன்று தற்செயலாக மரியோ பார்கஸ் யோசாவின் ஒரு கட்டுரையைப் படித்தால் அதில் அவர் கிட்டத்தட்ட அதே கருத்தைத்தான் சொல்கிறார். காட்சி ஊடகங்களின் ஆதிக்கம் உள்ள சமூகம் சர்வாதிகாரத்துக்கு எதிராகச் செயல்பட முடியாமல் முடங்கும் என்கிறார்: (...) making the present unreal, turning actual history into fiction has the effect of demobilising the citizen, making him or her feel exempt from any civic responsibility, encouraging the conviction that it is beyond anyone's reach to intervene in a history whose screenplay is already written. Along this path we may well slide into a world where there are no citizens, only spectators, a world where, although formal democracy may be preserved, we will be resigned to the kind of lethargy dictatorships asp...

பிரபலங்களின் நோக்கம்

  நீங்கள் ஒரு பிரபலத்தின் நேர்முகத்தைப் பார்க்கிறீர்கள். அவர் தன் வாழ்வில் வெற்றி பெற சரியான உணவின்றி அலைந்து திரிந்ததைச் சொல்கிறார். நீங்கள் கண் கலங்குகிறீர்கள். அவர் தன் குடும்பத்தைப் பிரிந்து மாநகரத்தில் தனிமையில் அனாதையாக வாழ்ந்தைச் சொல்கிறார். நீங்கள் மனமுடைகிறீர்கள். இன்னொருவர் தான் தன் காதலனால் ஏமாற்றப்பட்டதைச் சொல்லி அதனால் ஏற்பட்ட மனச்சிக்கல்களை, பதற்றத்தை, காயங்களை வர்ணிக்கிறார். உங்களுக்கு இரக்கமும் ஆத்திரமும் வருகிறது. இந்த அனுபவங்களும் உணர்வுகளும் பொய்யல்ல. அவரும் நீங்களும் அடிப்படையில் மனிதர்களே. அதேநேரம், இங்கு எழுப்ப வேண்டிய முக்கியமான கேள்வியுண்டு - ஏன் இம்மாதிரியான கதையாடல்களை ஊடகங்கள் உங்கள் முன்வைக்கின்ற்ன? அவர்களின் நோக்கம் என்ன? ஒரு விசயம் உண்மையாக இருந்தாலும் அதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என வெகுஜன ஊடகம் நினைப்பதில் ஒரு உத்தேசம் இருக்குமே? பிரபலமும் நீங்களும் வர்க்கரீதியில் வெவ்வேறு இடங்களில் இருக்கிறீர்கள். இது ஒரு விலகலை ஏற்படுத்துகிறது. பிரபலங்கள் இந்த நாட்டின் பெரும்பணக்காரர்களை, அதிகார வர்க்கத்தின் பகுதியாக உள்ளார்கள். இந்த இடைவெளியை நிரப்புவது அவ...