முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சி.சு செல்லப்பா நினைவோடை



எனக்கு நினைவோடைகளில் படிப்பதில் ஒரு தனி ஆர்வம். இலக்கியச் சூழல் என்றைக்குமே சில விசயங்களில் ஒரே மாதிரித்தான் இருக்கும் என்பதால் 50-60 ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததைப் படிப்பது கூட பயனளிக்கும், எழுத்தாளர்களை, குழுக்களை, அவர்களின் நடத்தை, மனப்போக்குகளை அணுக்கமாகப் புரிந்துகொள்ள. மேலும் அபூர்வமானதொரு இன்பமும் இத்தகைய நினைவுக் குறிப்புகளில் உண்டு. பழைய காலப் படங்களில் மாரில் பாய்ந்த கத்தியை உருவி விட்டு ரத்தம் வழியவழியப் பேசுவார்களே அதைப் பார்ப்பது போல.

சுந்தர ராமசாமியிடம் அரவிந்தன் சி.சு செல்லப்பா குறித்து நேர்காணல் எடுத்து அதை அப்படியே பிரசுரித்ததே இந்தப் புத்தகம். அதனாலே துண்டுத்துண்டாய் நினைவுகள் முன்னுக்குப் பின்னாய் பாய்கிற தோரணையில் அமைந்திருக்கிறது. செல்லப்பாவைக் குறித்த பகுதிகளைவிட க.நா.சுவைக் குறித்த பகுதிகள் அபாரமாய் வந்திருக்கின்றன. தருமு சிவராமு எனப்படும் பிரமிளின் ஆளுமையும் முக்கியமாக வருகிறது. அதைப் படிக்கையில் தமிழ்ச்சூழலில் அவர் ஏற்படுத்திய கசப்பைப் புரிந்துகொள்ள முடிகிறது. நான் முன்பு ஒரு பைட்டர் மீனை வளர்த்தேன். எனக்கு மீன் வளர்ப்பு குறித்த அறிவு இல்லை. ஆகையால் அதன் வர்ண எழிலைப் பார்த்து வாங்கி வந்து மற்ற மீன்களுடன் சேர்த்துப் போட்டேன். அது எந்த மீனுடனும் சேரவில்லை என்பதைக் கவனித்தேன். அது ஒரு பக்கமும் மற்ற மீன்கள் கூட்டமாய் இன்னொரு பக்கமும் நிற்கும். சரி, முரட்டுப் பீஸ் போல என நினைத்து விட்டேன். ஒவ்வொரு நாளும் அது ஒரு மீனைப் போட்டுத் தள்ளியது. சற்றே பெரிய மீன்களைச் சிறுகச்சிறுகக் கடித்து துன்புறுத்தியது. ஒருநாள் நான் எட்டிப் பார்த்தால் அது மட்டுமே தனியே நீந்திக் கொண்டிருந்தது. பிரமிள் இப்படிப் பலரைக் கடித்திருக்கிறார். தனியாகச் சுற்றிக் கொண்டிருந்திருக்கிறார். சி.சு செல்லப்பாவை மட்டுமே அவர் அதிகமாகத் துன்புறுத்தவில்லை என்று சு.ரா சொல்கிறார். மென்மையாகச் சாடுகிறார். அதற்கு சி.சு செல்லப்பா பிரமிள் மீது அபாரமான நம்பிக்கையும் வாஞ்சையும் கொண்டிருந்தது ஒரு காரணம் எனத் தோன்றுகிறது. அவர் எவ்வளவு முதுகில் குத்தினாலும் செல்லப்பா அவர் மீது வைத்த நம்பிக்கையை இழக்கவில்லை. பைட்டர் மீன்களுக்கு தம்மைப் பொறுத்துக்கொண்டு நம்பிக்கை வைப்பவர்களைப் பிடிக்கும்.

மௌனியின் கதைகளின் முக்கியத்துவத்தை தமிழ் வாசகர்களுக்குப் புரிய வைத்து இலக்கியப் புலத்தில் அவரை நிறுவ வேண்டும் எனும் நோக்கில் சி.சு செல்லப்பா "எழுத்தில்" எழுதிய கட்டுரைத் தொடர் குறித்த தகவல் எனக்கு முக்கியம் எனத் தோன்றியது. மௌனி "என்னை விட இவன் பல மடங்கு என் கதைகளைப் பற்றி எழுதுகிறான்" எனும் நக்கலுடன் இதைக் கடக்கிறார். பொதுவாகப் படைப்பாளிகளுக்குத் தம் புனைவு பகுப்பாய்வு செய்யப்படுவது பிடிக்காது. அது வேறு விசயம். செல்லப்பாவை எது செலுத்தியது? வாசகர்களோ விமர்சகர்களோ ஒரு அபூர்வமான சாதனையைக் கவனிக்கவில்லையே எனும் வருத்தம். ஆனால் அப்படி ஒன்றை எந்த விமர்சகராலும் செய்ய முடியாது - விமர்சனம் டார்ச் அடிப்பதைப் போலத்தான். பார்க்கிறவர்களுக்கு சில விசயங்கள் தெரியும். ஆனால் அதனால் எதையும் மாற்ற முடியாது. சிலநேரங்களில் ஒரு தற்செயலான பாராட்டு வாசகத்தையோ பகடியையோ வாசகர்கள் பிடித்துத் தொங்கிக் கொண்டிருப்பர். வாசிப்பு எதனாலும் கட்டுப்படுத்த முடியாத ஒரு பேராறு. அதை யாரும் திருத்தக் கூடாது. நாம் என்ன சொன்னாலும் அது ஒரு போக்கில்தான் ஓடிக் கொண்டிருக்கும்.

சு.ராவைப் படிக்கிறவர்களுக்கு அவருக்கும் அவரது தகப்பனாருக்குமுள்ள கசப்பான உறவைப் பற்றித் தெரியும். அப்பா என்பவர் காப்காவின் படைப்புகளில் போல இதிலும் ஒருவித சமூக அதிகாரக் குறியீடு. வீடு ஒரு படிநிலைச் சமூகம். மீறுகிற தனிமனிதரைக் கண்காணித்து வேட்டையாடிச் சதா தலைகுனிய வைக்கும் கொட்டடிதான் குடும்பம். இதை ஒரு பதின்வயதினரின் மனநிலையில் இருந்து அவர் சதா பார்த்துக் கொண்டிருந்தார். அவரது பல கதைகளில் அப்பா வெவ்வேறு ரூபங்களெடுத்து வருவார். இந்தச் சிறிய நூலில் அவர் தனக்கு சி.சு செல்லப்பா மீதிருந்த தன்னிசையான கசப்பை, பிடிப்பின்மயைப் பற்றிச் சொல்லும்போது அதற்கு ஒரு காரணம் செல்லப்பாவின் மரபான மனோபாவம் என்கிறார். செல்லப்பா சதா தன்னை அடுத்தவர்களுக்கு மேலே ஒரு இடத்தில் வைத்துக் கேலி செய்வதாக, அறிவுரைப்பதாக அவருக்குத் தோன்றுகிறது. க.நா.சுவோ ஒருவித பதின்வயதுக் கலகக்காரரின் மனநிலையைக் கொண்டிருக்கிறார். சு.ரா தனது (இடது தாராளவாத) நம்பிக்கைகள் காரணமாய் இத்தகைய மரபான மனிதர்களைத் தன்னால் தாங்கிக் கொள்ள முடியாததாகச் சொல்கிறார். செல்லப்பாவிடம் அவர் தனது தந்தையையே கண்டதாக எனக்குத் தோன்றுகிறது. செல்லப்பாவின் இடத்தில் இருந்து உலகை அவரால் காண முடியாதது இதனால்தான் என நினைக்கிறேன். அப்படிச் செய்தால் சு.ரா தன் மனதுக்குள் சுமந்த அந்த இளைஞனை மறுக்க வேண்டியிருக்கும். தன்னை, தன் தீமையை நோக்கி, தன் கீழ்மைகளை நோக்கி அவர் பயணிக்க வேண்டியிருந்திருக்கும். இது எந்த எழுத்தாளருக்கும் கடினமானது. நாம் இருமைகளைக் கட்டமைத்து நம் கதைகளை அவற்றின் மீது ரத்தமும் சதையுமாய் உருவாக்கி வளர்க்கிறோம். ஒருவர் இதை உடைக்கும்போது அவர் தன் எழுத்து வாழ்வை முழுக்க மாற்றியமைக்க வேண்டியிருக்கும். புறமிருந்து உள் நோக்கித் திரும்ப வேண்டியிருக்கும். சு.ரா அதைக் கடைசி வரை விரும்பவில்லை எனத் தோன்றுகிறது.

இந்நூலை அதன் இறுதிப் பகுதியை ஆரம்பத்தில் கொடுத்து, ஆரம்பப் பகுதியை இறுதியாக்கி சில பகுதிகளை வெட்டி ஒட்டியிருந்தால் இன்னும் சுவாரஸ்யமான மனத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் கதையோட்டத்தை அது பெற்றிருக்கும். அதாவது சி.சு செல்லப்பாவின் சிறப்புகளைப் பற்றி முதலில் பேசிவிட்டு அவரிடம் தனக்குப் பிடிக்காதவற்றைச் சொல்லும்போது உயரத்தைக் காட்டி பள்ளத்தில் சென்று முடிவதாக, எழுச்சியில் இருந்து வீழ்ச்சிக்குப் போவதாக இருக்கும். ஏனோ சு.ரா அதை விரும்பியிருக்கவில்லை எனத் தெரிகிறது.

கடைசியாக, அட்டையில் மருதுவின் அந்த ஓவியம் எவ்வளவு அட்டகாசமாக இருக்கிறது. கசங்கலாக, வரலாற்றில் பாதி அழிந்தும் தேய்ந்து அழிய மறுக்கிற ஒரு மனிதராக சி.சு செல்லப்பாவின் சித்திரத்துக்கு அவ்வளவு பொருத்தமாக.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மிச்சமுள்ள வேலை (குறுங்கதை) - ஆர். அபிலாஷ்

  வார இறுதி. காலை முதலே வேலைக்காரியை பத்து தடவைகளுக்கு மேல் அழைத்தாகி விட்டது. தவறான எண்ணென்று யாரோ திரும்பத் திரும்பச் சொல்வதுடன் தெலுங்கில் திட்டவும் செய்கிறார்கள். அவள் எண்ணை மாற்றியதுடன் எங்கே போனாள்? பாத்திரங்கள் குவிந்து கிடக்கின்றன. உணவை ஆர்டர் செய்து வாங்கி நானும் மனைவியுமாக அமைதியாக உண்டோம். பிள்ளைகள் இருவரும் என் சகோதரியின் வீட்டுக்கு விடுமுறையைக் கொண்டாடப் போயிருக்கிறார்கள். வீட்டு மணியடித்தது. நான் போய்த் திறந்தால் வேலைக்காரியின் தாயான எழுபது வயதுக் கிழவி நின்று கொண்டிருந்தார். நான் அவரைக் கண்டதும் திகைத்து ஒரு பக்கம் சாய்ந்து நின்று கொண்டேன். அவர் அலட்சியமாக என்னை விலக்கிக் கொண்டு உள்ளே நுழைந்தார். என் மனைவி தன் கையில் இருந்து தட்டைக் கீழே போட்டு விட்டுக் கத்துகிற சத்தம் கேட்டது. நான் தடுமாறியபடி உள்ளே வந்தேன். யாரை அழைப்பது, என்ன சொல்வது எனத் தெரியவில்லை.   அவர் உள்ளே சென்று வேலையை ஆரம்பித்ததுடன் சமையலறையில் யார் பொருட்களை மாற்றி வைத்தது என உரிமையுணர்வுடன் என் மனைவியை விசாரித்துக் கொண்டிருந்தார். என் மனைவி இன்னும் பேசும் இயல்பு நிலைக்கு வரவில்லை என்பதில் திகை...

சினிமாவும் சர்வாதிகாரமும்: யோசா சொல்வதென்ன?

  காட்சி ஊடகம் நமக்குப் பொழுதுபோக்க உதவுகிறது என்றாலும் அது அடிப்படையில் மனிதரைச் சிந்திக்க விடாமல் செய்து செயலூக்கத்தை ஒழிக்கிறது, இது சர்வாதிகாரத்தை நோக்கி இட்டுச் செல்கிறது என்று சில மாதங்களுக்கு முன் நான் விஜய்யின் வருகையை ஒட்டி ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். இன்று தற்செயலாக மரியோ பார்கஸ் யோசாவின் ஒரு கட்டுரையைப் படித்தால் அதில் அவர் கிட்டத்தட்ட அதே கருத்தைத்தான் சொல்கிறார். காட்சி ஊடகங்களின் ஆதிக்கம் உள்ள சமூகம் சர்வாதிகாரத்துக்கு எதிராகச் செயல்பட முடியாமல் முடங்கும் என்கிறார்: (...) making the present unreal, turning actual history into fiction has the effect of demobilising the citizen, making him or her feel exempt from any civic responsibility, encouraging the conviction that it is beyond anyone's reach to intervene in a history whose screenplay is already written. Along this path we may well slide into a world where there are no citizens, only spectators, a world where, although formal democracy may be preserved, we will be resigned to the kind of lethargy dictatorships asp...

பிரபலங்களின் நோக்கம்

  நீங்கள் ஒரு பிரபலத்தின் நேர்முகத்தைப் பார்க்கிறீர்கள். அவர் தன் வாழ்வில் வெற்றி பெற சரியான உணவின்றி அலைந்து திரிந்ததைச் சொல்கிறார். நீங்கள் கண் கலங்குகிறீர்கள். அவர் தன் குடும்பத்தைப் பிரிந்து மாநகரத்தில் தனிமையில் அனாதையாக வாழ்ந்தைச் சொல்கிறார். நீங்கள் மனமுடைகிறீர்கள். இன்னொருவர் தான் தன் காதலனால் ஏமாற்றப்பட்டதைச் சொல்லி அதனால் ஏற்பட்ட மனச்சிக்கல்களை, பதற்றத்தை, காயங்களை வர்ணிக்கிறார். உங்களுக்கு இரக்கமும் ஆத்திரமும் வருகிறது. இந்த அனுபவங்களும் உணர்வுகளும் பொய்யல்ல. அவரும் நீங்களும் அடிப்படையில் மனிதர்களே. அதேநேரம், இங்கு எழுப்ப வேண்டிய முக்கியமான கேள்வியுண்டு - ஏன் இம்மாதிரியான கதையாடல்களை ஊடகங்கள் உங்கள் முன்வைக்கின்ற்ன? அவர்களின் நோக்கம் என்ன? ஒரு விசயம் உண்மையாக இருந்தாலும் அதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என வெகுஜன ஊடகம் நினைப்பதில் ஒரு உத்தேசம் இருக்குமே? பிரபலமும் நீங்களும் வர்க்கரீதியில் வெவ்வேறு இடங்களில் இருக்கிறீர்கள். இது ஒரு விலகலை ஏற்படுத்துகிறது. பிரபலங்கள் இந்த நாட்டின் பெரும்பணக்காரர்களை, அதிகார வர்க்கத்தின் பகுதியாக உள்ளார்கள். இந்த இடைவெளியை நிரப்புவது அவ...