முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

"பெரிய மனிதர்"

 


"பெரிய மனிதர்" க.நா.சுவின் குறுநாவல். அவரது நாவல்களைப் படிக்கையில் இன்னும் சிறப்பாக எழுதப்பட்டிருக்க வேண்டிய சிறப்பான படைப்புகள் என்று தோன்றும். "பெரிய மனிதரும்" அப்படியான ஒன்றே. ஈவிரக்கம் இல்லாத ஒரு பணக்காரரின் நினைவுக் குறிப்புகள் என்று இதை வர்ணிக்கலாம். 45 வயதை எட்டிய நிலையில் தனக்கு ஒரு நிச்சயமின்மை, எதிலும் கசப்பு தோன்றுவதை அவர் உணர்கிறார். கசப்பு ஒரு பெரும் பந்தாக தன்னை நோக்கி உருண்டு வருவதாக அவருக்குத் தோன்றுகிரது. அவரிடம் மலைமலையாகப் பணம் உள்ளது. அவரது மனைவி, மக்கள் அவருடன் உள்ளனர். அவருக்குப் பல பங்களாக்களும் கார்களும் வேலையாட்களும் உண்டு. ஆனால் உள்ளார்ந்த துக்கம் அவரைச் சூழ்கிறது. அவர் தன் அந்தஸ்து, அடையாளம், வாழ்க்கை என ஒவ்வொன்றாகக் கசந்து சபித்துக் கொண்டும் மறுத்துக் கொண்டும் வருகிறார். அதற்காக அவர் இவற்றையெல்லாம் துறக்கப் போகிறார் என்றில்லை. அவர் தன் பணம், அந்தஸ்து, சாதனைகளைக் குறித்துப் பெருமைப்பட்டுக் கொண்டும் அவற்றைக் காப்பாற்ற வேண்டும் எனத் துடித்துக் கொண்டும் இருக்கிறார். ஒரு கட்டத்தில் அவருக்குத் தன் துன்பத்துக்குக் காரணம் தன் வாழ்வில் அன்பு இல்லாததுதான், யாரும் தன்னை நேசிக்காமல் பணம் உற்பத்தி செய்யும் எந்திரமாக மட்டுமே நடத்துவதே எனத் தோன்றுகிறது. அன்புக்காகத் தான் ஏங்குவது யார் கண்ணுக்கும் படவில்லை என்று அவர் தவித்தாலும் அதைக் குறித்து அவர் ரொம்பவும் அலட்டிக் கொள்பவராகவும் அடுத்துத் தெரியவில்லை, அவர் அதைச் சரிசெய்ய எந்த முயற்சியும் எடுப்பதில்லை. அடிப்படையில் அவருக்கு அதில் நம்பிக்கையும் இல்லை. தன் அவநம்பிக்கையால் வரும் கசப்பை மட்டும் அவருக்கு விட்டுத் தொலைக்க வேண்டும். அது எப்படியென்று அவருக்குத் தெரியவில்லை.

அவர் அடுத்துப் பெண்களைக் குறித்துச் சிந்திக்கிறார். இந்தியாவுக்குச் சுதந்திரம் கிடைக்கும் முன்பு அவர் இளைஞராக ஒரு தனியார் நிறுவனத்தில் குமாஸ்தாவாகப் பணிசெய்கிறார், இந்நிறுவனம் ஒரு வெள்ளைக்காரருக்குடையது. இந்த "துரை" ஒரு இளம் விதவையைக் கண்டு ஆசைப்பட்டு அவளை மணக்கும்படி இவரைக் கேட்டுக் கொள்கிறார். இதை நாவலில் க.நா.சு குறிப்புணர்த்திவிட்டுப் போகிறார். அவரும் சிரம் தாழ்ந்து இதைச் செய்கிறார். கல்யாணத்துக்கு அடுத்த நாள் அவருக்கு உதவி மேலாளர் பதவி உயர்வும் அடுத்தடுத்த ஆண்டுகளில் வேறு பதவி உயர்வுகளும் கிடைக்கின்றன. இந்தியச் சுதந்திரத்திற்குப் பின் துரை இங்கிலாந்துக்குத் திரும்ப நிறுவனத்தின் மொத்தப் பொறுப்பும் கதைசொல்லியிடம் வருகிறது. ஊரார் இதைக் குறித்து கேலி பேசினாலும் அவர் கவலைப்படுவதில்லை. பணமும் அந்தஸ்தும் அதிகாரமும் பெரும் கோட்டைச்சுவராக எழும்பி அவரை உலகிடம் இருந்து பாதுகாக்கிறது. கிட்டத்தட்ட 40-45வது பக்கங்களில் இது வருகிறது என நினைக்கிறேன். இக்குறிப்பு வந்ததும் நமக்கு கதைசொல்லியின் அடிப்படையான நெருக்கடி புரிகிறது. அவரிடம் எல்லாம் இருக்கிறது. ஆனால் எதுவும் சொந்தமாக அவர் ஆதாரமாக உறவு பாராட்டும்படியாக இல்லை. அவருக்கும் தன் சொத்துக்கும் (தன் மனைவி, பிள்ளைகளையும் அவர் தன் சொத்தாகவே பாவிக்கிறார்) இடைவெளி அதிகமாக உள்ளது. முழுக்க அந்நியப்பட்ட வாழ்க்கை. அவரால் தன் மனைவியைக் காதலிக்க முடியவில்லை. இதை உணர்ந்த அவளும் அவரைப் பொருட்படுத்தாமல் தன் கடமையை மட்டும் ஆற்றுகிறாள். குழந்தைகளிடம் அவர் இப்படியே இருக்கிறார், அவர்களும் அப்படியே அவரை நடத்துகிறார்கள். நாவல் முடிவுக்கு வருவதற்கு முன்பு அவர் தான் பல ஆண்டுகளுக்கு முன்பு செய்த ஒரு கொலைக்குற்றத்தைக் குறிப்பிட்டு, அதனால் தான் அடையும் குற்றவுணர்வுக்கும் பயத்துக்கும் பரிகாரம் செய்ய திட்டமிட்டுள்ள விசயங்களைச் சொல்கிறார். அத்துடன் நாவல் முடிகிறது. கடைசி வரை இந்தப் பெரிய மனிதரின் சொற்களை நம்மால் தீர்மானமாக நம்ப முடியவில்லை, அதிலொரு நகைமுரண் இருந்துகொண்டே இருக்கிறது என்பதே இந்நாவலின் சிறப்பு.

க.நா.சுவின் பிற நாவல்களில் போல இதிலும் ஷேக்ஸ்பியரின் சாயல் உண்டு. குறிப்பாக "கிங் லியர்".

இத்தகைய படைப்புகளை ஒப்புதல் வாக்குமூல இலக்கியம் என்பார்கள். மேற்கில் இது பிரசித்தம். இதில் நாம் ஒரு பாத்திரத்தின் (கதைசொல்லியின்) குரலை மட்டுமே கேட்க இயலும். அவரது வர்ணனைகளிலும் வசனங்களிலும் நினைவுகளிலும் கருத்துக்களிலும் தீர்மானங்களிலும் உள்ள முரண்பாடுகள் நகைமுரணைத் தோற்றுவிக்கும். நகைமுரணே பிரதான தொனியாகும்போது நம்மால் கதைசொல்லியின் குரலை நம்ப முடியாத நிலையும் அவரை நாம் நேசிக்கிற நிலையும் ஒரே சமயம் ஏற்படும். அதனாலே இந்த வடிவம் க.நா.சுவின் "பெரிய மனிதர்" கதைக்குப் பொருத்தமாக உள்ளது எனக் கூறலாம். அதேசமயம் இத்தகைய படைப்புகளில் பிற பாத்திரங்கள், எதிர்த்தரப்பு ஆகியோரின் வர்ணனைகள், மனச்சித்திரங்கள், வாக்குமூலங்களை, கதைசொல்லியின் குழப்பமான நினைவுகள், கனவுகளையும் கொண்டு வந்தால் மொழி இன்னும் அடர்த்தியாகும். க.நா.சு இதை முயலவில்லை என்பதாலே வழக்கம்போல இது சரியாக எழுதி முடிக்கப்படாத பிரதி எனும் உணர்வு வருகிறது.

இந்நாவலின் மேலும் இரண்டு பலவீனங்களில் ஒன்று க.நா.சு சில முக்கியமான பாத்திரங்களை, காட்சிகளை நம் கண்முன் எழுந்து வரும்படி காட்சிபூர்வமாகவோ உணர்ச்சிகரமாகவோ எழுதுவதில்லை என்பது. அடுத்த பலவீனம் கதைசொல்லி ஒவ்வொரு தீர்வாகக் கண்டையும்போதும் அதற்குத் தடையாக மற்றொரு சம்பவம் தோன்றி அதிகச் சிக்கலை ஏற்படுத்துவதில்லை என்பது.

நான் இத்தகைய நாவல்களை 'முன்-நாவல்கள்' என்று அழைக்க விரும்புவேன். இவற்றைப் படித்து நாவலாசிரியர்கள் உத்வேகம் கொண்டு இவற்றை மேம்படுத்தி வளர்த்தெடுத்து வேறு சில படைப்புகளை எழுத முடியும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மிச்சமுள்ள வேலை (குறுங்கதை) - ஆர். அபிலாஷ்

  வார இறுதி. காலை முதலே வேலைக்காரியை பத்து தடவைகளுக்கு மேல் அழைத்தாகி விட்டது. தவறான எண்ணென்று யாரோ திரும்பத் திரும்பச் சொல்வதுடன் தெலுங்கில் திட்டவும் செய்கிறார்கள். அவள் எண்ணை மாற்றியதுடன் எங்கே போனாள்? பாத்திரங்கள் குவிந்து கிடக்கின்றன. உணவை ஆர்டர் செய்து வாங்கி நானும் மனைவியுமாக அமைதியாக உண்டோம். பிள்ளைகள் இருவரும் என் சகோதரியின் வீட்டுக்கு விடுமுறையைக் கொண்டாடப் போயிருக்கிறார்கள். வீட்டு மணியடித்தது. நான் போய்த் திறந்தால் வேலைக்காரியின் தாயான எழுபது வயதுக் கிழவி நின்று கொண்டிருந்தார். நான் அவரைக் கண்டதும் திகைத்து ஒரு பக்கம் சாய்ந்து நின்று கொண்டேன். அவர் அலட்சியமாக என்னை விலக்கிக் கொண்டு உள்ளே நுழைந்தார். என் மனைவி தன் கையில் இருந்து தட்டைக் கீழே போட்டு விட்டுக் கத்துகிற சத்தம் கேட்டது. நான் தடுமாறியபடி உள்ளே வந்தேன். யாரை அழைப்பது, என்ன சொல்வது எனத் தெரியவில்லை.   அவர் உள்ளே சென்று வேலையை ஆரம்பித்ததுடன் சமையலறையில் யார் பொருட்களை மாற்றி வைத்தது என உரிமையுணர்வுடன் என் மனைவியை விசாரித்துக் கொண்டிருந்தார். என் மனைவி இன்னும் பேசும் இயல்பு நிலைக்கு வரவில்லை என்பதில் திகை...

சினிமாவும் சர்வாதிகாரமும்: யோசா சொல்வதென்ன?

  காட்சி ஊடகம் நமக்குப் பொழுதுபோக்க உதவுகிறது என்றாலும் அது அடிப்படையில் மனிதரைச் சிந்திக்க விடாமல் செய்து செயலூக்கத்தை ஒழிக்கிறது, இது சர்வாதிகாரத்தை நோக்கி இட்டுச் செல்கிறது என்று சில மாதங்களுக்கு முன் நான் விஜய்யின் வருகையை ஒட்டி ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். இன்று தற்செயலாக மரியோ பார்கஸ் யோசாவின் ஒரு கட்டுரையைப் படித்தால் அதில் அவர் கிட்டத்தட்ட அதே கருத்தைத்தான் சொல்கிறார். காட்சி ஊடகங்களின் ஆதிக்கம் உள்ள சமூகம் சர்வாதிகாரத்துக்கு எதிராகச் செயல்பட முடியாமல் முடங்கும் என்கிறார்: (...) making the present unreal, turning actual history into fiction has the effect of demobilising the citizen, making him or her feel exempt from any civic responsibility, encouraging the conviction that it is beyond anyone's reach to intervene in a history whose screenplay is already written. Along this path we may well slide into a world where there are no citizens, only spectators, a world where, although formal democracy may be preserved, we will be resigned to the kind of lethargy dictatorships asp...

பிரபலங்களின் நோக்கம்

  நீங்கள் ஒரு பிரபலத்தின் நேர்முகத்தைப் பார்க்கிறீர்கள். அவர் தன் வாழ்வில் வெற்றி பெற சரியான உணவின்றி அலைந்து திரிந்ததைச் சொல்கிறார். நீங்கள் கண் கலங்குகிறீர்கள். அவர் தன் குடும்பத்தைப் பிரிந்து மாநகரத்தில் தனிமையில் அனாதையாக வாழ்ந்தைச் சொல்கிறார். நீங்கள் மனமுடைகிறீர்கள். இன்னொருவர் தான் தன் காதலனால் ஏமாற்றப்பட்டதைச் சொல்லி அதனால் ஏற்பட்ட மனச்சிக்கல்களை, பதற்றத்தை, காயங்களை வர்ணிக்கிறார். உங்களுக்கு இரக்கமும் ஆத்திரமும் வருகிறது. இந்த அனுபவங்களும் உணர்வுகளும் பொய்யல்ல. அவரும் நீங்களும் அடிப்படையில் மனிதர்களே. அதேநேரம், இங்கு எழுப்ப வேண்டிய முக்கியமான கேள்வியுண்டு - ஏன் இம்மாதிரியான கதையாடல்களை ஊடகங்கள் உங்கள் முன்வைக்கின்ற்ன? அவர்களின் நோக்கம் என்ன? ஒரு விசயம் உண்மையாக இருந்தாலும் அதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என வெகுஜன ஊடகம் நினைப்பதில் ஒரு உத்தேசம் இருக்குமே? பிரபலமும் நீங்களும் வர்க்கரீதியில் வெவ்வேறு இடங்களில் இருக்கிறீர்கள். இது ஒரு விலகலை ஏற்படுத்துகிறது. பிரபலங்கள் இந்த நாட்டின் பெரும்பணக்காரர்களை, அதிகார வர்க்கத்தின் பகுதியாக உள்ளார்கள். இந்த இடைவெளியை நிரப்புவது அவ...