முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நாலு பேருக்கு நல்லது செய்யுறதுன்னா...


 

ஜெயமோகன் அரவிந்தனுக்கு எழுதிய இழிவான அஞ்சலியைப் படித்தேன். இதைவிட இழிவான அஞ்சலியை க்ரியா ராமகிருஷ்ணனுக்கு எழுதியவர் அவர். இவர்தான் தமிழையும் தமிழ் எழுத்தாளர்களையும் வாழ வைக்க அவதாரம் எடுத்தவர் என்ற பிம்பத்தை உருவாக்கிக்கொண்டிருக்கிறார். அவருக்கு முட்டுக் கொடுப்பவர்களும் பெருகிவிட்டார்கள். வைரமுத்துவைப் போலவே இலக்கியத்துக்கு ஆபத்தானவர் ஜெயமோகன். அவருடைய முன்னெடுப்புகளால் எவ்வளவுதான் அனுகூலங்கள் இருந்தாலும் தமிழ் இலக்கியத்தில் மடாலய முறையை, குருகுல முறையைக் கட்டமைக்கத்தான் பெரிதும் உதவும். அதனால்தான் அவரை எதிர்க்க வேண்டியிருக்கிறது.

தன்னை நிலைநிறுத்த, அதன் உப விளைவாகத் தன்னைச் சார்ந்தோரையும் நிலைநிறுத்த அவர் முன்னெடுக்கும் விஷயங்களை விமர்சனம் செய்தால் உடனே அவர்களைக் கையாலாகாதவர்கள், சோம்பேறிகள் என்பதற்குச் சிலர் கிளம்பிவிடுகிறார்கள். அம்பானி, அதானியும் பல நலத்திட்டங்கள் செய்யவே செய்கிறார்கள். அதற்காக அவர்களுடன் நம்மை ஒப்பிட்டு நம்மைக் கையாலாகாதவர்கள் என்று சொல்ல முடியுமா?
ஜெயமோகனின் முன்னெடுப்புகளால் நாலு பேருக்கு நல்லது நடந்தால் சரி என்ற வகையில் மட்டும் அவற்றை வரவேற்கிறேன். மற்றபடி தமிழ் இலக்கியத்துக்கு அவரது முன்னெடுப்புகளால் நன்மையை விட தீமைகளே அதிகம். பன்மைத்தன்மை, விமர்சன மனப்பான்மை போன்றவை அழிந்து ஒருபடித்தான நிலைக்கு இலக்கியம் செல்லக் கூடும். எதிர்க் குரல்கள் குறையக் கூடும். துதிபாடும் மனநிலை அதிகரிக்கக் கூடும். இலக்கியம் நிறுவனமயமாதலைவிட ஆபத்தானது மடாலயமயமாவது. அந்த ஆபத்து ஜெயமோகனால் நடக்கிறது. அதற்காகவே அவரை எதிர்க்க வேண்டும்.
- கவிஞர் ஆசைத்தம்பி
எனக்கு ஜெயமோகனின் நண்பர்கள் அவரது 'நற்பணிகளைப்' பாராட்டி அவரது கெடுதிகளை நியாயப்படுத்திப் பேசும்போதும் "நாயகன்" படத்தில் "நாலு பேருக்கு நல்லது பண்ணனும்னா எதையும் செய்யலாம்" என்று வேலு நாயக்கராக கமல் சொல்வது நினைவுக்கு வரும். நாயக்கர் இப்படிச் சொல்லிச் சொல்லி கொலை, கைகால் ஒடிப்பது, பொருட்களைக் கடத்துவது எனப் பம்பரமாகச் செயல்படுவார். தான் கொலை செய்த போலீஸ்காரரின் மகனை வேறு எடுத்து வளர்ப்பார். ஜெயமோகன் ஒரு இலக்கிய வேலு நாயக்கர் என்று சொல்லாமல் சொல்கிறார்களோ?
- ஆர். அபிலாஷ்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...