முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பாவம் ஓட்டேரி நரி


 

டிவீஷா ஷர்மா எனும் நடிகையின் கொலை வழக்கு குறித்த செய்தி அறிக்கையை ஹிந்துவில் பார்த்தேன். அதில் "வரதட்சிணைக் கொலைக்கு உள்ளாகும் மகள்கள்" எனும் தொடரை தலைப்பாக வைத்திருந்தார்கள்.

இத்தகைய குற்றங்களைக் கண்டிக்கும் அதே சமயம் இதைக் குறித்த ஒரு சட்டத்திருத்தம் இன்று அவசியமென்றும் வலியுறுத்த வேண்டியுள்ளது - கடந்த சில பத்தாண்டுகளில் ஏற்பட்டுள்ள சமூகப் பொருளாதார மாற்றங்கள் காரணமாக வரதட்சிணை மிரட்டி அழுத்தம் கொடுத்துப் பெறுவதாக இன்று இல்லை. மாறாக பணக்கார குடும்பங்களிலும் மத்திய வர்க்க குடும்பங்களிலும் ஒருசேர 'வரதட்சிணை' சொந்த மகளுக்காக பெற்றோர் கொடுக்கிற சொத்தாக மாறிவிட்டது. பெரும்பாலும் மகள்களே இதைக் கேட்டுப் பெறுகிறார்கள். இன்றைய பெண்கள் யாரிடம் வேண்டுமானாலும் கேளுங்கள் -அவர்கள் திருமணத்தின்போது வரதட்சிணை வேண்டும் என்று கேட்கிறார்கள். சில டிவி நிகழ்ச்சிகளில் இளம்பெண்கள் வரதட்சிணைக்காக தம் பெற்றோரைத் தொந்தரவு பண்ணி கடனுக்குள் தள்ளுகிற சம்பவங்களும் பேசப்பட்டுள்ளன. ஒரே நிபந்தனை அப்பணமும் நகையும் தம் வசம் இருக்க வேண்டும் எனக் கருதுகிறார்கள். பெற்றோரும் இது தம் மகளுக்கான பாதுகாப்பு என நினைக்கிறார்கள். ஆகையால் நம் சட்டமும் வரதட்சிணை ஒரு 'பரிசாக' இருக்கும்பட்சத்தில் குற்றமில்லை என்கிறது.
இது சிலநேரங்களில் கணவர் குடும்பத்துக்கு உதவுகிறது - கணவருக்கு நெருக்கடி வரும்போது மனைவி தன் நகையை வைத்துக் கொடுக்கிறார். இன்று அரிதாகத்தான் மனைவியின் நகை, பணத்தை கணவர் வீட்டார் அபகரிப்பது நடக்கிறது. மனைவி வேலைக்குப் போய் சம்பாதிப்பவர் என்றால் இப்படி அடகு வைக்க வேண்டிய அவசியமும் வருவதில்லை. மாறாக வீடு வாங்கும்போது நகையை விற்றுக் கொள்கிறார்கள். புத்திசாலிப் பெண்கள் தம் பெயரிலும் சமமாக வீட்டைப் பதிவு செய்யக் கேட்கிறார்கள். இந்த அட்ஜெஸ்ட்மென்ட் ஒரு பிரச்சினை ஆவதில்லை. ஆனால் இருவருக்கும் இடையில் அதிருப்தி நிலவிக் கொண்டிருக்கும். போய் விடலாம் என மனைவி யோசித்துக் கொண்டிருப்பார். அப்போது பார்த்து எதாவது பிரச்சினை வெடிக்கும். இந்த வரதட்சிணைச் செலவுகளை ஒரு குற்றமாகப் பாவித்து மனைவி விவாகரத்து தொடுக்கும்போது மனுவில் எழுதுவார். இப்போது சட்டென எல்லாம் 360 பாகை மாறிவிடும். திருமணத்தின் போது நகையும் பணமும் வரதட்சிணையாகக் கோரப்பட்டு அதில் திருப்தி இல்லாமல் தொடர்ந்து மனைவி துன்புறுத்தப்பட்டு வதைக்கப்பட்டதாக தனி வழக்கு கோருவார்கள். அப்பிரிவில் உள்ளே போனால் பிணை இல்லை. அதை வைத்து பேரம் பேசுவார்கள். வரதட்சிணைப் பணத்துடன் கணவரின் சேமிப்புப் பணம், சொத்து ஆகியவையும் தரப்பட வேண்டும் என்பார்கள். இன்றைய சூழலில் வரதட்சிணை எனும் பெயரில் 10 லட்சம் நகையாகக் கொடுத்தால் 20 லட்சமாவது செட்டில்மெண்டாகப் பெற்றுவிடலாம். இதுவே இன்று நடைமுறை.
சிலநேரங்களில் துரதிஷ்டவசமாக கணவன் மனைவியிடையே பிரச்சினை வெடித்து வாக்குவாதம் வன்முறையாகி கொலையில் முடிகிறது. மனைவியும் விஷம் வைத்தும் ஆள் வைத்தும் கணவரைக் கொல்வதுண்டு. ஆனால் கணவர் தரப்பில் கொலை செய்தால் மட்டும் அதை ஓட்டேரி நரி பேரில் எழுது என்பதைப் போல வரதட்சிணைக் கொடுமைக் குற்றமாக எழுதிவிடுகிறார்கள். ஏனென்றால் (1) இதைக் குடும்பப் பிரச்சினையினால் விளைந்த குற்றமாகப் பாவித்தால் அந்தரங்கமான தகவல்கள் வெளியே வரும். இதை மனைவியின் தரப்பினர் விரும்புவதில்லை. (2) வரதட்சிணைக்காகக் கொலையென்றால் அது திட்டமிட்ட படுகொலை. அதற்கு தண்டனை அதிகம். உணர்ச்சிவயப்பட்டு நடக்கும் கொலையெனும்போது குற்றவாளி மீது இரக்கம் வரலாம். இதில் இரக்கமே இல்லை. ஊரே திரட்டு இவர்களை அடித்துக் கொல் என்று கோரும்.
அதாவது குற்றம் வேறு, ஆனால் குற்றத்திற்கான அடையாளமும், குற்றப் பிரிவும் பொருத்தமற்றவை.
இன்றைய சமூகச் சூழலில் உள்ள சிக்கல்களையும் சட்டம் பரிசீலித்து அதற்கு ஏற்ப மாற வேண்டும் - (1) இன்று பெண்களில் சிலருக்கு திருமணம் கட்டாயம் அல்ல. வலியுறுத்தியே கல்யாணத்துக்குள் தள்ளுகிறார்கள். இயல்பாகவே பிரிவு நடக்கும். அதையும் ஓட்டேரி நரி பெயரிலே எழுதுகிறார்கள். (2) திருமண பந்தத்தின் மீது இன்று கடும் அழுத்தம் வைக்கப்படுகிறது. எப்போதுமே இன்ப மயமாக, வேலையே இல்லாத சொகுசாக அது நடக்க வேண்டும் என்கிறார்கள். அது சாத்தியமல்ல. உணர்வு ரீதியான திருப்தி என இதை அழைக்கிறார்கள். இது காதலிலே கூட இன்று கிடைப்பதில்லை. இந்த அழுத்தமெல்லாம் இன்று ஆண்கள் மீதுதான் விழுகிறது. தினமும் 12 மணிநேரம் வேலை செய்ய வேண்டும். வீட்டுக்கு வந்ததும் மனைவியின் உணர்வுகளையும் திருப்திப் படுத்தும் படி காதலைப் பொழிய வேண்டும் எனில் சாத்தியமல்ல. மேலும் ஆண்களின் தேவைகளும் வேறு - அதையும் நாம் பேச வேண்டும். அவர்களுக்கு முதலில் தேவை நல்ல உணவு, உடலுறவு, ஓய்வு, அடுத்துதான் உணர்வுரீதியான திருப்தி. இதையும் பெண்கள் பரிசீலிக்க வேண்டும். ஊடகங்களில் பரவலாக இது பேசப்பட வேண்டும். இன்று பல குடும்பங்கள் உடைவதற்கு இந்தப் போதமைகள் ஒரு காரணம். சும்மா உணர்வுரீதியாகத் திருப்திப்படுத்துவதில்லை, கவனம் கொடுப்பதில்லை என்று பெண்கள் தரப்பில் இருந்து மட்டுமே பேசிக் கொண்டிருக்கக் கூடாது. (3) இணையம் காரணமாகவும் நகர்மயமான சூழலின் விளைவாகவும் ஆணும் பெண்ணும் சுதந்திரமாகச் சந்திக்கவும் உரையாடவும் இன்று சாத்தியங்கள் முன்பை விட அதிகம். ஆகையால் திருமண உறவு உடையத்தான் செய்யும். இப்படி உடைந்து பிரச்சினை வந்தால் (டிவீஷா ஷர்மா விசயத்தில் அவருக்கு திருமணத்துக்கு வெளியே உறவிருந்ததாக அவரது கணவர் தரப்பு சந்தேகப்படுகிறது) அதையும் ஓட்டேரி நரி பெயரிலே எழுதக் கூடாது. கூச்சப்படாமல் ஒப்புக் கொண்டு விலகி விட வேண்டும். கொலைக் குற்றம் நடந்தால் காரணத்தை சரியாகப் பதிவு பண்ண வேண்டும்.
அடுத்து நீதிமன்றமும் காலத்திற்கு ஏற்ப மாற வேண்டும்: வரதட்சிணை வழக்கை அதற்குரிய ஆதாரங்கள் இல்லாதபோது பரிசீலிக்கக் கூடாது. திருமணத்தின்போதே வரதட்சிணை ஆவணம் ஒன்றைத் தயாரித்து அதை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும் நடைமுறை வரவேண்டும். அதற்கு மேல் வரதட்சிணை கேட்கிறார்கள் என்றால் பெண் தரப்பு ஆடியோ வீடியோ ஆதாரம் கொடுக்கட்டும். இன்று இது மிக மிக சுலபமாகி விட்டது: பட்டன் சைசுக்கெல்லாம் வீடியொ காமெரா கிடைக்கிறது. போனில் எதையும் ரகசியமாகப் பதிவு பண்ணலாம். திருமணம் கசக்க ஆரம்பிக்கும்போதே கணவரும் மனைவியும் ஆதாரம் திரட்டத் தொடங்கும்படி சட்டம் கோர வேண்டும். ஆலோசனை வழங்கப்பட வேண்டும்.
ஓட்டேரி நரி பாவம். 40-50 ஆண்டுகளுக்கு முந்தைய வழக்குகளை இன்னும் அவர் மீது எழுதாதீர்கள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

அரசியல் தேய்வழக்குகள்

  நம்மூரில் இளைஞர்கள் மீதிருக்கக் கூடிய பிரேமை என்னை ஆச்சரியப்படுக்கக் கூடியது. இளைஞர்கள் ஆட்சிக்கு வர வேண்டும், அதிகாரத்துக்கு வர வேண்டும் எனக் கோரும்போது அவர்கள் இயல்பிலேயே களங்கமற்றவர்கள், குழந்தை மனம் படைத்தவர்கள், பேராசையோ கெட்ட குணங்களோ அற்றவர்கள் எனும் நம்பிக்கையைத்தான் வெளிப்படுத்துகிறோம். சொல்லப்போனால் நம் குடும்பத்தில் உள்ள பதின்வயதினரையும் இருபதில் இருப்பவர்களையும் கூட நாம் 'வளர்ந்த குழந்தைகளாகவே' பார்க்கிறோம். இது ஒரு கற்பனாவாத சிந்தனை. ஐரோப்பாவில் இருந்து நம்மூருக்கு வந்த ஒரு நம்பிக்கை. வளர வளர மக்கள் தன்னலமும் வஞ்சகமும் மிக்கவர்களாக ஆகிறார்கள் என நினைப்பதால் நாம் 40-60க்குள் இருக்கும் அரசியல்வாதிகளைச் சந்தேகத்துடன் நோக்குகிறோம். ஆனால் சற்றே உற்று கவனித்தால் இருபதுகளில் அரசியலுக்குள் போனவர்கள் பெரும் ஊழல்களைச் செய்திருக்கிறார்கள் அல்லது ஊழலுக்குத் துணை போயிருக்கிறார்கள் எனத் தெரியும். அறிவியல் நாம் குழந்தையாக இருக்கும்போதே மோசமான குணங்கள் வெளிப்படுகின்றன என்கிறது. எத்தனையோ கொடூரமான குற்றங்கள் இழைப்போர் இளைஞர்களே. குற்றம் இழைக்கும் பதின்வயதினருக்கான சிறைகளே உள்ளன (அ...