முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஹிட்லர், மோடி, விஜய் இடையிலான பத்து ஒற்றுமைகள்





1) கடைசி வரை வெளிப்படையாக ஊடகங்களைச் சந்திக்க மறுப்பது. எழுதி மனப்பாடம் செய்யப்படாத உரைகளை வழங்குவதைத் தவிர மக்களிடம் நேரடியாக உரையாடத் தயங்குவது. தன் கட்டமைக்கப்பட்ட பிம்பத்துக்கு அப்பால் மக்களுக்குத் தன்னைப் பற்றி எதுவுமே தெரியக் கூடாது, தன்னிடம் பிறர் நேரடியாக உரையாடினால் அது தன்னை சாதாரணமானவராக்கி விடும், தன் அசாதாரணத்தன்மை தன் அணுக முடியாமையால் வருவதாக நம்புவது.
2) தன் கட்சிக்காரர்களையும் பினாமிகளையும் கொண்டு ஊடக நிறுவனங்களை விலைக்கு வாங்குவது. விமர்சிப்பவர்களைக் கைது செய்வது.
3) எதற்கெடுத்தாலும் இந்த ஹிட்லர், இந்த மோடி, இந்த விஜய் என்று திரும்பத்திரும்பப் பேசுவது. தன் நார்சிசத்தின் நீட்சியாக மக்களைக் கருதுவது - "நான் என்னை மட்டுமே நேசிக்கிறேன், என் மக்கள் என்னை மட்டுமே நேசிக்கிறார்கள், நானும் என் மக்களும் ஒன்று, அதனால் என் மக்கள் எனக்காகவே வாழ்கிறார்கள்" என்பதே அவர்களின் லாஜிக்காக இருக்கும்.
4) "நான் மக்களுக்காக பல நன்மைகள் செய்தேன், செய்கிறேன். செய்வேன்" எனச் சொல்வார்கள். ஆனால் அவை என்னவென்று நேரடியாகச் சொல்ல மாட்டார்கள். இதன் மறைபொருள் நான் எனக்கு பல நன்மைகள் செய்தேன், செய்வேன் என்பதே. மக்கள் தன்னை மட்டுமே உலகில் நேசித்து, தனக்காகவே வாழ்வதால் தனக்கு நன்மை செய்வதே பொது நன்மையாகிறது எனும் லாஜிக் யாருக்குப் புரியாவிட்டாலும் தன் ஆதரவாளர்களுக்குப் புரியும் என நம்புவார்கள்.
5) சதா கற்பனையான எதிரியைப் பற்றியே பேசுவது. ஹிட்லர் உலகப்போரில் தன் ராணுவம் சந்தித்த தோல்விகளை மறைத்தார். ஆனால் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து வறுமை பெருகியதை மறைக்க முடியாதபோது அது யூதர்கள் சர்வதேச சக்திகளுடன் சேர்ந்து ஜெர்மனியை ஒழிக்கச் செய்யும் சதி, அதை எதிர்த்து மக்கள் தன்னுடன் நிற்பார்கள் எனத் தெரிவித்தார். அப்போது பாதிக்கும் மேலான யூதர்கள் வதைமுகாம்களில் இருந்தனர். கணிசமான யூதர்களைக் கொன்ற பின்னரும் அவர்கள் ஜெர்மனியைத் தொடர்ந்து பின்னுக்குத் தள்ளுவதாகப் ஹிட்லர் பிரச்சாரம் செய்தார். மோடி தான் மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்த பின்னரும் கூட காங்கிரஸ் நீண்ட காலமாக நாட்டுக்குச் செய்த தீங்கை இப்போது வரைக்கும் தான் சரி செய்வதாகச் சொல்லி வருகிறார். பெண்களுக்கான இட ஒதுக்கீட்டைத் தனி மசோதாவாகக் கொண்டு வந்தால் ஆதரிப்பதாக காங்கிரஸ் பலமுறைக் கூறியும்கூட பெண்களுக்கு எதிராக காங்கிரஸ் செயல்படுவதாக மோடி கூறினார். அதாவது மசோதாவை நிறைவேற்ற தனக்கு அதிகாரம் இல்லாததைப் போல ஒரு நாடகம் போட்டார். இன்னொரு பக்கம் காங்கிரஸ் இல்லாத இந்தியா எனும் இலக்கைத் தம் நெருங்கி விட்டதாகவும் அவரது கட்சிக்காரர்கள் கூறி வருகிறார்கள். விஜய் ஆட்சிக்கு வந்த சில வாரங்களில் நடக்கும் ஊழல், சோபா கொடுத்து எம்.எல்.ஏக்களை வாங்குகிற குற்றங்கள், கொலைகள், பலத்காரங்களுக்கு திமுக கடந்த ஐந்தாண்டுகளில் ஏற்படுத்திய சீரழிவே காரணம், தன் வாக்குறுதிகளை நிறைவேற்ற இயலாததற்கு திமுகவின் முந்தைய ஆட்சி நிதி நிலையை மோசமாக்கியதே காரணம் என்கிறார்.
6) தனக்கும் மக்களுக்கும் குறுக்கே யாரும் வர முடியாது, மக்கள் தன்னை கேள்விக்கு அப்பால் ஏற்றுக் கொண்டதாகக் கோருவது. தான் மக்களுக்காகவே இருப்பதாக, தன் மீதான விமர்சனங்களுக்கு மக்கள் பதில் தருவார்கள் என்பது. மக்களே தன்னை விமர்சித்தால்கூட அதை எதிர்க்கட்சியின் சதியாக மாற்றிச் சொல்வது. அதாவது இம்மூவரும் தம்மை ஆதரிப்போர் மட்டுமே பொதுமக்கள் எதிர்ப்போர் எதிர்க்கட்சியினர் என நம்புகிறவர்கள். மோடி "உங்கள் அபரிதமான அன்பே என் அதிர்ஷ்டம்" என்றார். ஹிட்லர் தான் ஆட்சியைப் பிடிக்க கடுமையாக முயன்று கொண்டிருந்தபோது எடுத்த வாக்குறுதியை நினைவுபடுத்த விரும்புவதாக 1939இல் ஒரு உரையில் சொன்னார்: "நான் உறுதியான முனைப்பு கொண்டிருந்தால் எந்த கஷ்டங்களும் துன்பங்களும் அதை நிலைகுலைய வைக்க இயலாது. அப்போது எனது நெஞ்சுரத்தையும் மக்களின் நெஞ்சுரத்தையும் யாராலும் குலைக்க முடியாது." அதாவது தன் சுயநலமான அதிகாரப் போராட்டத்தை மக்களுக்கான போராட்டமாகப் பார்த்தார்.
ஹிட்லர் மேலும், தன்னை விமர்சிப்போர் யூதர்கள், யூத ஆரவாளர்கள் என்று தொடர்ந்து கூறி வந்தார். மோடி தன்னை விமர்சிப்போர் காங்கிரஸும் அர்பன் நக்சல்களும் என்றார். விஜய் திமுக மட்டுமே என்கிறார். மக்களுக்கும் தனக்குமே நேரடி உரையாடல் என்பதன் வழியாக தன்னை ஆதரிக்காதவர்களை மக்களாகவே இம்மூவரும் ஏற்பதில்லை. தம்மை விமர்சிப்போர், ஊடகம், கல்வித்துறை, நீதிமன்றம் போன்ற பல்வேறு சமூக நிறுவனங்களை ஒதுக்கிவிட்டு கடவுளுக்கும் பக்தனுக்குமான உறவைப் போல ஆட்சியாளரான தனக்கும் குடிமக்களுக்குமான உறவை கேள்விக்கு அப்பாலானதாகச் சித்தரிப்பது, மக்களாட்சி முறைமையை இவ்வாறு அழித்தொழிக்க உத்தேசிப்பது இம்மூவரின் அடிப்படையான பண்பு.
7) தான் அதிகாரத்தின் உச்சத்தில் இருந்தாலும், செல்வத்தில் கொழித்தாலும், எப்போதுமே தன்னை ஒடுக்கப்பட்டவனாக, அடித்தட்டு மக்களில் ஒருவனாகக் காட்டுவது - ஹிட்லர் தன்னை எளிமையான பின்னணியில் இருந்து அதிகார வர்க்கத்துக்கும் செல்வந்தர்களுக்கும் எதிராகக் கிளர்ந்து எழுந்து வந்தவராக, தன் வாழ்வே போராட்டம்தான் என்றும் சித்தரித்தார். அவரது நூலின் தலைப்பே "என் போரட்டம்" (மெயின் கெம்ப்) தானே. மோடி தனி விமானத்தில் பறந்து ஒரு கோடி ரூபாய்க்கு ஆடையணிந்து கொண்டே தன்னை ஏழைத்தாயின் மகனாக, டீ விற்றவராகச் சித்தரித்தார். மாநிலத்தின் முதல்வரகவும், பெரும்பணக்காரராகவும் இருந்துகொண்டே விஜய்யும் தன்னை பாதிக்கப்பட்டவராக, அதிகாரமற்றவராக, மக்கள் தம் ஆதரவால் மட்டுமே தன்னைக் காப்பாற்றி வருவதாகக் கூறுகிறார். திருச்சி உரையிலும் கூட ஸ்டாலின் சாருக்கும் தனக்குமே போராட்டம் என்கிறார். இந்த "சார்" முக்கியம் - இது ஸ்டாலினை ஒரு அதிகார சக்தியாகவும் தன்னை பணிந்து போகக் கடமைப்பட்ட எளியவனாகவும் சித்தரிக்க உதவுகிறது.
8] எல்லா விமர்சனங்களையும் "நான் நல்லவன். என்னைச் சந்தேகிக்காதீங்க" எனும் ஒற்றை வரியில் கடந்து செல்வது. பொறுப்பை ஏற்காதது.
9) உணர்ச்சிவயப்படுவதாகப் பாவனை செய்து கையை முறுக்கிக் கொண்டு நரம்பு புடைக்க அடித்தொண்டையில் கத்திப் பேசுவது.
10) நேற்றும், இன்றும், நாளையும் தான் மட்டுமே நாட்டின் தலைவன் என்பார்கள். ஹிட்லரின் பிரபலமான முழக்கம் "Ein Volk, ein Reich, ein Führer" ("ஒரே மக்கள், ஒரே ஆட்சி, ஒரே தலைவர்") என்பது. 2024 தேர்தலுக்கான பரப்புரைகளின் போது மோடி தன்னை கடவுளால் நியமிக்கப்பட்டவர் என்றார். அவரது திட்டமிடப்பட்ட நேர்முகங்களின்போதும் இந்த "உண்மையை" அடிக்கடி வலியுறுத்தினார். விஜய்யும் தன்னை "நேத்தும், இன்னிக்கும் நாளன்னைக்கும்" மக்களின் தலைவராக இருக்கப் போவதாகக் கூறுகிறார். கடவுளால் மட்டுமே அப்படி இருக்க முடியும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மிச்சமுள்ள வேலை (குறுங்கதை) - ஆர். அபிலாஷ்

  வார இறுதி. காலை முதலே வேலைக்காரியை பத்து தடவைகளுக்கு மேல் அழைத்தாகி விட்டது. தவறான எண்ணென்று யாரோ திரும்பத் திரும்பச் சொல்வதுடன் தெலுங்கில் திட்டவும் செய்கிறார்கள். அவள் எண்ணை மாற்றியதுடன் எங்கே போனாள்? பாத்திரங்கள் குவிந்து கிடக்கின்றன. உணவை ஆர்டர் செய்து வாங்கி நானும் மனைவியுமாக அமைதியாக உண்டோம். பிள்ளைகள் இருவரும் என் சகோதரியின் வீட்டுக்கு விடுமுறையைக் கொண்டாடப் போயிருக்கிறார்கள். வீட்டு மணியடித்தது. நான் போய்த் திறந்தால் வேலைக்காரியின் தாயான எழுபது வயதுக் கிழவி நின்று கொண்டிருந்தார். நான் அவரைக் கண்டதும் திகைத்து ஒரு பக்கம் சாய்ந்து நின்று கொண்டேன். அவர் அலட்சியமாக என்னை விலக்கிக் கொண்டு உள்ளே நுழைந்தார். என் மனைவி தன் கையில் இருந்து தட்டைக் கீழே போட்டு விட்டுக் கத்துகிற சத்தம் கேட்டது. நான் தடுமாறியபடி உள்ளே வந்தேன். யாரை அழைப்பது, என்ன சொல்வது எனத் தெரியவில்லை.   அவர் உள்ளே சென்று வேலையை ஆரம்பித்ததுடன் சமையலறையில் யார் பொருட்களை மாற்றி வைத்தது என உரிமையுணர்வுடன் என் மனைவியை விசாரித்துக் கொண்டிருந்தார். என் மனைவி இன்னும் பேசும் இயல்பு நிலைக்கு வரவில்லை என்பதில் திகை...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

பிரபலங்களின் நோக்கம்

  நீங்கள் ஒரு பிரபலத்தின் நேர்முகத்தைப் பார்க்கிறீர்கள். அவர் தன் வாழ்வில் வெற்றி பெற சரியான உணவின்றி அலைந்து திரிந்ததைச் சொல்கிறார். நீங்கள் கண் கலங்குகிறீர்கள். அவர் தன் குடும்பத்தைப் பிரிந்து மாநகரத்தில் தனிமையில் அனாதையாக வாழ்ந்தைச் சொல்கிறார். நீங்கள் மனமுடைகிறீர்கள். இன்னொருவர் தான் தன் காதலனால் ஏமாற்றப்பட்டதைச் சொல்லி அதனால் ஏற்பட்ட மனச்சிக்கல்களை, பதற்றத்தை, காயங்களை வர்ணிக்கிறார். உங்களுக்கு இரக்கமும் ஆத்திரமும் வருகிறது. இந்த அனுபவங்களும் உணர்வுகளும் பொய்யல்ல. அவரும் நீங்களும் அடிப்படையில் மனிதர்களே. அதேநேரம், இங்கு எழுப்ப வேண்டிய முக்கியமான கேள்வியுண்டு - ஏன் இம்மாதிரியான கதையாடல்களை ஊடகங்கள் உங்கள் முன்வைக்கின்ற்ன? அவர்களின் நோக்கம் என்ன? ஒரு விசயம் உண்மையாக இருந்தாலும் அதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என வெகுஜன ஊடகம் நினைப்பதில் ஒரு உத்தேசம் இருக்குமே? பிரபலமும் நீங்களும் வர்க்கரீதியில் வெவ்வேறு இடங்களில் இருக்கிறீர்கள். இது ஒரு விலகலை ஏற்படுத்துகிறது. பிரபலங்கள் இந்த நாட்டின் பெரும்பணக்காரர்களை, அதிகார வர்க்கத்தின் பகுதியாக உள்ளார்கள். இந்த இடைவெளியை நிரப்புவது அவ...