முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

விஜய்யும் தவெகவினரும் - நார்சிசிஸ்டுகளின் விடலை சர்வாதிகாரம்

 


மோடிக்கும் விஜய்க்குமான (கூடவே ஹிட்லருக்குமான) ஒற்றுமைகளைப் பற்றி எழுதியிருந்தேன். ஒரு வித்தியாசம் உண்டு. அது இதுதான்: மோடி ஒருபோதும் தன்னைக் குறித்த கேலி கிண்டலுக்குப் பதில் அளிக்க மாட்டார். விமர்சனங்களைத் தான் படித்ததாகவோ கேட்டதாகவோ காட்டிக் கொள்ள மாட்டார். அப்படித்தான் அவர் உச்சபட்சமான அதிகார பிம்பமாக, பலவீனமே அற்ற தலைவராகத் தன்னைக் காட்டிக் கொண்டார். ஆனால் விஜய் தொடர்ந்து தன்னைக் கலாய்ப்போரால் புண்படும் பதின்வயதினரைப் போல, பதினாறு வயதினிலே சப்பாணியைப் போல சிணுங்குகிறார், கோபிக்கிறார், சொடுக்கி சவால் விடுகிறார். "என்னை நேசிக்கும் மக்களான உங்களை தற்குறிகள் என்கிறார்கள்" என்று அவர் திருச்சி உரையில் போட்டுக் கொடுப்பது பதின்வயதினர் பேசுவதைப் போன்றே உள்ளது. அவர்கள் தம்மைக் கலாய்ப்பதாகப் புகார் சொல்லிக்கொண்டே தம் மீதான பரிகாசம் தம் மீதல்ல வளர்ந்தவர்கள் மீதே செய்யப்படுவதாக கோத்துவிட்டு பின்னவர்களைத் தம் வசம் ஆதரவுக்கு இழுப்பார்கள் ("தாத்தா தாத்தா உங்களையும் சேர்த்துதான் கிண்டல் பண்ணினாங்க. வந்து கேளுங்க.")

இதைப் பார்க்கையில் நமக்கு இவர் அதிகார மிக்கவர்தானா இல்லை வேலையும் சமூக மதிப்பும் இல்லாத பதின்வயது பையனா எனும் குழப்பம் ஏற்படுகிறது. அவரைப் பின்பற்றி தன்னை அமைத்துக் கொள்ளும் அமைச்சர்களின் நடத்தையும் பெரும்பாலும் இப்படியே உள்ளது. இவர்களது போக்குவரத்துத் துறை அமைச்சரிடம் ஒரு பயணி தான் பதிவு செய்த பேருந்து இன்னும் வரவில்லை என்று புகார் சொல்லும்போது அவர் சட்டென தானும் ஒன்றும் அமைச்சராக அதிகாரத்தின் உச்சத்தில் இல்லை என்று பாவனை செய்யும்விதத்தில் "நான் இன்னும் சாப்பிடல தம்பி" என்கிறார். கோயில், அரசு மருத்துவமனை என சோதனை செய்யக் கிளம்பும் பிற அமைச்சர்களின் நடத்தையும் இவ்வாறுதான் உள்ளது. அவர்களுடைய வயதுக்கும் தோரணைக்கும் பெரிய வேறுபாடு உள்ளது. இவர்களுடைய சர்வாதிகாரம் வழக்கமான சர்வாதிகாரத்தில் இருந்து இவ்வாறு வேறுபடுகிறது - இது ஒரு விடலை சர்வாதிகாரம். இவர்கள் சர்வாதிகாரத்தின் பொறுப்பை ஏற்றுக்கொள்ளாத சர்வாதிகாரிகள். வயது ஐம்பதுக்கு மேல் என்றாலும் விஜய்யும் அவரது கட்சியின் பிற தலைவர்களும் (ஆதவ்வைத் தவிர) வளராதவர்களின் தோரணையை எடுத்துக் கொள்வது பொறுப்பின்மையின் சுதந்திரத்தை அனுபவிக்கலாம் எனும் உபமன விழைவினால்தான் என நினைக்கிறேன். அல்லது அவர்களது உடல் மொழியும் பேச்சும் இப்படித்தானோ? இவர்கள் ஒரு கூட்டு மனநிலையை வரித்துக் கொண்டுள்ளனரோ?

பொதுவாக உளவியலாளர்கள் நார்சிசிஸ்டுகள் வளர்ந்த பின்னரும் முதிர்ச்சியற்று பதின்வயதினரைப் போன்றே உலகைப் பார்ப்பனர் என்று கூறுவர். துல்லியமாகச் சொல்தானால் ஒரு சிறு குழந்தையின் மனவுலகினுள் அவர்கள் அடைபட்டிருக்கிறார்கள். அவர்களுக்குத் தம் உணர்வுகளின் நிலையைச் சரியாக அவதானிக்கத் தெரியாது. விளைவாக அவர்க்ள் தம் உணர்வுகளைப் பிறரிடம் பிரதிபலித்துக் கண்டு மகிழ்வர். அதனாலே நார்சிஸ்டுகள் தம்மைக் குறித்து ஒரு மிகைப் பிம்பத்தை உருவாக்கி அதை ரசிப்பார்கள். அதைப் பிறர் ஏற்கையில் மட்டுமே மகிழ்வர். நார்சிசிஸம் என்பது தற்புகழ்ச்சியோ சுயமோகமோ அல்ல, அது தன்னை 'அறியாதிருப்பதே' என்கிறார் கேரில் மெக்பிரைட். விஜய்யைப் பொறுத்தமட்டில் அவர் தன் ரசிகர்களையும் கட்சிக்காரர்களையும் தன் பிம்பத்தைப் பிரதிபலிக்கும் அகக்கண்ணாடியாகப் பார்க்கிறார். அவர்களும் இப்பிம்பத்தில் தம்மைப் பிரதிபலித்து மகிழ்ச்சி காண்கிறார்கள். அவரைப் போலவே அவர்களாலும் சுயபரிசீலனை செய்ய இயலாது, அவர்களுக்கு சுய-அறிதல் இல்லை. அவர்களுடைய அகம் பலவீனமானது. சுலபத்தில் நொறுங்கக் கூடியது.
ஆகையால் இத்தகையோரால் விமர்சனத்தைத் தாங்க முடியாது. அடுத்தவர்களுடைய கஷ்டத்தையும் புரிந்துகொள்ள இயலாது. தாம் எப்படிப் பாதிக்கப்படுகிறோம் என்று மட்டுமே யோசிக்க முடியும். ஆகையால் தம் எதிரிகளை இவர்கள் தொடர்ந்து விமர்சித்துக் கொண்டே இருப்பார்கள். இது - உலகமே தன்னைக் கேலி செய்வதிலும் காறித் துப்புவதிலும் மும்முரமாக இருப்பதாக நம்புவது - தமது சுயபிம்பத்தைப் பெருக்கிக் காட்டி ஆறுதல் கொள்ள உதவும். விஜய் தன்னைத் திமுகவினர் தொடர்ந்து தாக்குவதாகாகவும் தனக்கு இணையான எதிரி திமுக மட்டுமே என ஆட்சிக்கு வந்த பின்னரும் கோருவது இப்படி எதிர்மறையாக மட்டுமே அவரால் தன்னை ரசிக்க முடியும் என்பதாலே. தன்னை மேலும் திட்டும்படி அவர் மேடையில் வெளிப்படையாகவே சவால் விடுவது இதனாலே.
நார்சிசிஸ்டுகளின் உலகம் அவர்களைக் கொண்டாடுவோருக்கு ஈடாக எதிர்ப்போராலும் கட்டமைக்கப்படுகிறது. அவர்களால் எதிரிகளை மன்னிக்கவே முடியாது இந்த தன்னிலை உருவாக்க செயற்பாங்கினாலே. விஜய்யை அறிந்தோர் அவரால் தன்னை எதிர்ப்போரை எதிரியாகவே காண இயலும், எதிரிகளை ஒருபோதும் மன்னிக்க இயலாது என்கிறார்கள். அவர் இன்னும் முதல்வராகிய பின்னரும் தன் மனைவி, குழந்தையைப் பார்க்காதது இதற்கு உதாரணம். இது வெறுப்பினால் அல்ல, எதிரி மீதான ஒருவித சார்பினாலே.

சதா எதாவது ஒரு அதிகாரத்தை எதிர்ப்பதாக, கலகம் செய்வதாகப் பாவிப்பது, தன்னைக் குறித்த ஒரு பெருக்கப்பட்ட பிம்பத்தைக் கொண்டிருப்பது, தன்னைப் பிறர் இடையறாது கொண்டாடி ஆமோதிக்க வேண்டும் என எதிர்பார்ப்பது, முக்கியமாக எந்த வேலையிலும் பொறுப்பை ஏற்காமல் இருப்பது எல்லாம் நார்சிசிஸ்டுகளின் பிற இயல்புகள்.
விஜய் தன் பிளேசரைப் பற்றிப் பேசும்போது "நான் எல்லாவற்றையும் கறுப்பு வெள்ளையாகவே பார்ப்பேன்" என்றார். அவர் இதைத் தான் நேரடியாக, கறாராகப் பார்ப்பதாக உத்தேசித்தாலும், இந்த கறுப்பு-வெள்ளைப் பார்வை, இருமையாக உலகைக் காணுதல் நார்சிசிஸ்டுகளின் மனப்போக்காகும். அவர்களால் பழுப்பு வண்ணத்தைப் புரிந்துகொள்ள இயலாது. அவரது ஆதரவாளர்களான ரசிகர்களும் ஒன்று விஜய் அல்லது அவரது எதிரிகள் என்று உலகை இரண்டாகப் பார்ப்பது, சுயவிமர்சனம், சுயபரிசீலனைக்கு தயாராக அல்லாதவர்களாக இருப்பது நம் சமூகத்தில் உள்ள விடலைத்தனமான நார்சிஸிஸ்டுகளுக்கு விஜய் ஒரு மையமாகப் போயிருக்கிறார் என்பதைக் காட்டுகிறது. அல்லது அவர் தன் சினிமா, அரசியலின் வழியாக இதை ஒரு ஆதிக்கப் பண்பாட்டாக மாற்றியிருக்கலாம்.

இவர்களிடம் மாநிலத்தை ஒப்படைத்த வாக்காளர்களும் விடலை சர்வாதிகாரத்தை நேசிக்கிறார்களா? ஏன்? வளர்ந்தவர்களின் நிர்வாகம், அதிகாரம் மீது கசப்பேற்பட்டதாலா?


மேலும் தெரிந்து கொள்ள
McBride, Karyl. “Narcissists Are Not Accountable: Who Me? I Didn’t Do It?” Psychology Today, 19 Aug. 2013, Psychology Today. Accessed 2 June 2026.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.

கவனம் திருப்பும் ஆயுதம் - ஹிட்லர், மோடி, விஜய்: ஒற்றுமையும் வேறுபாடும்

  தவெக ஒரு 'ஆட்டத்திருப்பக்' கட்சி அல்ல கவனம் திருப்பும் (distracting) கட்சி எனத் தோன்றுகிறது. ராஜ்தீப் சர்தேசாய் தன் யுடியூப் அலைவரிசையில் மோடியின் ‘திமாகி நக்சல்’ பேச்சுச் சேட்டையைப் பற்றிப் பேசும்போது அது ஒரு திட்டமிடப்பட்ட கவனத் திருப்பல் பேராயுதம் (weapon of mass distraction) என்கிறார். அமெரிக்கா முன்பு சதாம் ஹுசைன் அணுகுண்டு வைத்திருப்பதாகச் சொல்லி இராக் மீது போர் தொடுத்ததைத் தொடர்ந்து பேராபத்து ஆயுதங்கள் குறித்து உலகம் முழுக்க விவாதங்கள் நடந்தன. ஆனால் அவை உண்மையில் அமெரிக்காவின் நோக்கத்தை மறைத்து மக்களின் கவனத்தைத் திருப்புவதற்காக உருவாக்கப்பட்ட பிரச்சாரம் மட்டுமே எனப் பின்னர் தெரிய வந்தது. உலகம் முழுக்க வலதுசாரிகள் இத்தகைய கவனம் திருப்பும் பேராயுதங்களைக் கொண்டே மக்களைக் கட்டுப்படுத்தி தம் வசம் வைத்திருக்கிறார்கள், தமது மோசமான நிர்வாகம் குறித்து விவாதம் எழாமல் பார்த்துக் கொள்கிறார்கள் என்கிறார் சர்தேசாய். அவர் மோடி அண்மையில் தனக்கெதிராக ஜென் ஸீ போராட்டம் தனது நிர்வாகக் கோளாறுகளை முன்வைத்து நடந்தபோது கவனத்தைத் திருப்பும் வண்ணம் கோட்பாட்டுத் தீவிரவாதிகள் பலர் இன்று உள்ளார்...