முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஒரு சுயமுன்னேற்றக் குறிப்பு

 


எனக்கு விஜய்யிடம் பிடித்த ஒரு விசயம் உண்டு:

தனக்குத் தெரியாத ஒன்றைக் கூட நம்பிக்கையாகச் செய்கிறார். எவ்வளவுதான் சொதப்பினாலும் தைரியமாக மேடையில் வந்து நின்று லட்சக்கணக்கான மக்களை நோக்கி (யுடியூபில் பார்ப்பவர்களையும் சேர்த்து) பேசுகிறார். ஆட்சியே இல்லாத ஒரு ஆட்சியைச் செய்கிறார். மெத்தப் படித்த, அனுபவம் மிக்க அதிகாரிகளிடம் பிளேஸர் அணிந்து கொண்டு அமர்ந்து என்ன சொல்கிறோம் என்றே தெரியாமல் ஆணையிடுகிறார். வழிநடத்துகிறார்.

சமய சந்தப்பர்ப்பம், நிதிமுதலீடு, மூளைசச்சலவை எப்படி அவருக்குப் பயன்பட்டது, இவையெல்லாம் அவருக்குப் பலன் தருமா என்பதெல்லாம் வேறு விசயம். பெரும்பாலானவர்கள் காலையில் எழுந்ததும் அந்த இருக்கைக்குப் போக வேண்டுமா, நான் செய்யும் ஒவ்வொரு செயலும் எப்படியெல்லாம் விமர்சிக்கப்படுமோ எனக் கவலைப்படுவார்கள். ஒரு சாதாரண நேர்முகத்துக்காக வாரக்கணக்காய் படித்து டென்ஷனாகி சொதப்புவோர் உண்டு. எழுத்தாளர்களிலேயே எழுத உத்தேசித்த கதையை அது சரியாக வராமல் போனால் திட்டுவார்களோ என எண்ணி எழுதாததவர்கள் உண்டு. இப்படி எத்தனையோ விசயங்களை நாம் விமர்சனங்களையும், மதிப்பீட்டாளர்களையும் எண்ணி பயந்து கைவிடுகிறோம். ஒட்டுமொத்த உலகமும் இப்படித்தான் நடக்காத விசயங்களின் மீது அமர்ந்திருக்கிறது. இந்த இடத்தில்தான் விஜய் ஒரு வழிகாட்டி, ஒரு கலங்கரை விளக்கம், ஒரு பேராசான் - நமக்கு ஒன்றுமே தெரியாவிட்டாலும் தைரியமாக தன்னம்பிக்கையாக நினைத்ததை நினைத்தது போல் செய்தால் போதும். ஆம், சொதப்பும், சொதப்ப மட்டும்தான் செய்யும். அதற்கென்ன சொதப்புவதற்கும் இந்த உலகில் இடமுண்டு. சொதப்பினாலும்கூட, எதையும் உருப்படியாகச் செய்யாவிட்டாலும் கூட நம்மால் வெல்ல முடியும். அப்படி இல்லாவிட்டாலும் நாம் அப்படி நினைத்துக் கொள்ள முடியும். நம்மை யார் தடுக்கப் போகிறார்கள்?

காலையில் எழுந்ததும் எதைக் குறித்து தயக்கம் வந்தாலும், அச்சம் எழுந்தாலும் நான் விஜய்யை நினைத்துக் கொள்கிறேன். உடனே அபாரமான ஒரு ஆற்றல் வந்து என்னை ஆட்கொள்கிறது. வரவர, தைரியமாகச் சொதப்புவோருக்கு மட்டுமே உலகில் இடமுண்டு எனத் தோன்றுகிறது. கச்சிதத்தை, உன்னதத்தை ரொம்ப அதிகமாகக் கொண்டாடி விட்டோம். இனிமேல், ஒன்றுமே தெரியாமல் இருப்பதைக் கொண்டாடுவோம்.

விஜய் ஒரு தப்பான வாக்கியம் பேசினால் ஆயிரம் மீம்கள் போடுகிறார்கள். நாம் அதைவிட படுசொதப்பலான ஒன்றைச் செய்தால் யாருமே கவனிக்கப் போவதில்லை. மீம் போடப் போவதில்லை. 

என்ன நடந்தாலும் பாத்துக்கலாம் என உற்சாகமாக இருப்போம். நாம் பார்த்துக்காவிட்டாலும் அது நடக்கத்தானே போகிறது. உற்சாகம்தான் முக்கியம். 

தப்பித்தவறி நாம் ஜெயித்துவிட்டாலும் - அப்படி ஜெயிக்கிற காலமும் ஒருநாள் வரும் - அப்போதும் நாம் தோற்றுக்கொண்டே இருப்பதாக நம்பி, யாரையாவது திட்டிக்கொண்டு "எங்க எங்கிட்டயா வச்சுக்கிறது" என்று உதார் விடவேண்டும். அப்போது தொடர்ந்து வெல்ல வேண்டிய அழுத்தமும் போய்விடும். தொடர்ந்து வெல்ல வேண்டிய கட்டாயத்தில் பதற்றமாக இருப்போர் நம்மைக் காறித் துப்புவார்கள். அவர்கள் தம் மீதே துப்புகிறார்கள். அது நம் மீது படாது. படவே படாது.

நம்மிடம் கொஞ்சம் பிசிறும் கோமாளித்தனமும் இருக்க வேண்டும். இயல்பிலே நாம் அப்படியானவர்கள் எனில் சாலச் சிறந்தது. எதிரிகள் நம்மை வேடிக்கையாகக் கடந்து போகவும் பிறர் நம்மை ரசிக்கவும் இது உதவும். எல்லாவற்றிலும் கச்சிதத்தை நாடும் விரைப்பானவர்களை விட உலகம் கோமாளிகளையே கொண்டாடுகிறது. தப்புத்தப்பாய், குளறுபடியாய் அதேநேரம் நினைத்ததில் ரொம்ப தீவிரமாக இருப்பவர்கள் வசீகரமானவர்கள். 

முக்கியமாக, நாம் நம்மைக் கண்ணாடியில் பார்த்துவிடக் கூடாது. பார்த்தால் சிரிப்பு வரும். அதை மட்டும் ஒருபோதும் செய்யக் கூடாது.

பின்குறிப்பு: என்ன பயம் வந்தாலும் உடனே நாம் சொல்லிக்க வேண்டியது: "அவரே ஜெயிச்சிட்டார், நம்மால ஏன் முடியாது?"

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

நலத்திட்டங்களின் அடிப்படையான பிழை

  மகளிர் உதவித் (உரிமைத்) தொகைத் திட்டத்தைக் கைவிடுவதைக் குறித்து தவெக அரசு பரிசீலிக்க வேண்டும். அதற்காகச் செலவாகும் 15,000 கோடி ரூபாயை படித்து வேலை கிடைக்காமல் இருப்போரில் வருடாந்திர குடும்ப வருமானம் ஒரு அளவுக்கு மேல் குறைவாக இருப்போருக்கு அளிக்க வேண்டும். அதேபோல முறைசாரா தொழிலாளர்களுக்கு நொடிந்த தொழில்களில் ஈடுபட்டிருப்போருக்கும் கொடுப்பதை அரசு பரிலீக்க வேண்டும். அதாவது உதவி / உரிமைத் தொகையை பாலினம் சார்ந்ததாக அல்லாமல் தொழில் சார்ந்ததாகப் பார்க்க வேண்டும். மேற்சொன்ன பெண்களும் அப்போது இத்திட்டத்திற்குள் வந்துவிடுவார்கள். சொந்தமாக வீடும் சொத்தும் கொண்ட பெண்கள் இந்த தொகையைப் பெறுவதைத் தவிர்க்க இயலும். இந்த மாற்றத்திற்கான தேவைகளாக நான் கருதுவன: 1) வர்க்கரீதியாக இது திட்டமிடப்படாததால் நிறைய குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன. 2) இதை அரசு மக்களுக்கு கொடுக்கும் லஞ்சமாக சிலர் காண்கிறார்கள். அதாவது பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் அவர்களைத் தம் வசம் இழுப்பதற்காக அரசுகள் இத்திட்டங்களைக் கொண்டு வந்துள்ளதாக அவர்கள் நினைக்கிறார்கள். இதனால் மக்கள் நலத் திட்டத்துக்கே பெயர் கெடுகிறது. 3) தொழில்...

மக்களாட்சியின் தோல்வியும் மதிப்பிடுகளின் வீழ்ச்சியும் எப்படி முதலீட்டியத்தால் விளைந்தன?

ஏலியன்களே நம் நாட்டுக்கு வந்து கட்சி தொடங்கி ஆட்சியமைத்தாலும் ரௌடிகள், நில முகவர்கள், திடீர் பணக்காரர்கள், மோசடிக்காரர்கள் எம்.எல்.ஏ, அமைச்சர்கள் ஆவதையும், பெரும்பணக்காரர்கள் ஆட்சியைக் கையில் வைத்து தம் விருப்பப்படி உருட்டுவதையும் தவிர்க்க முடியாது என்று நினைக்கிறேன். நம் அதிகாரக் கட்டமைப்பு அப்படி. ஒரு செய்தி பார்த்தேன். எளியவர்களுக்கு வாய்ப்பளிப்போம் என்று கூறிய தவெகவின் எம்.எல்.ஏக்களில் 80% மேல் கோடீஸ்வரர்கள். குற்றவாளிகள், போலி சான்றிதழ் பேர்வழிகள், புரோக்கர்களும் உண்டு. கட்சியே ஒரு பக்கம் பாஜக கொடுத்த நிதியையும் இன்னொரு பக்கம் லாட்டரி குடும்பத்தின் நிதியையும் வைத்தே இத்தனை நாட்கள் நடந்தது. இனிமேல் டெண்டர் முறைகேடு, பல தளங்களில் ஊழல் என்று கொள்ளையடித்து 'தன்னிறைவு' ஆக முயல்வார்கள். அமைச்சர்கள் பல ஆயிரம் கோடிகள் சம்பாதித்து பெரிய நிறுவனங்களை ஆரம்பிப்பார்கள், வெளிநாடுகளில் முதலீடு செய்வார்கள், கறுப்புப் பணத்தைப் பதுக்குவார்கள். ஏன் எந்த ஆட்சி வந்தாலும் இந்த டெம்பிளேட் மாறுவதில்லை என்றே நாம் கேட்க வேண்டும்? யார் நல்லவர், யார் கொஞ்சம் குறைவாகக் கெட்டவர் என்பது அல்ல. நமது இப்போத...