முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இருவகை ஆண்கள்

 சில குற்றச் சம்பவங்களைப் பற்றிச் சொல்லப் போகிறேன். என் இங்கு கேள்வி குற்றத்தை ஆராய்வதல்ல. ஏன் இக்குற்றங்களை அனுமதிக்கிறோம், கிட்டத்தட்ட ஆராதிக்கிறோம் என்பதே.

செட் அப் சம்பவங்கள், நரேட்டிவ்களுக்கே பழகிவிட்டோமா திடீரென்று யாராவது அழுகிற காணொளி, குழந்தையுடன் பின்னணி இசை ஒலிக்கப் பேசுகிற காணொளியைக் கண்டாலே அதுவும் ஒரு செட் அப் சங்கதிதான் என்று விட்டுவிடத் தோன்றுகிறது. அப்பா, மகனாகப் பேசும் அந்தக் காணொளியை ஒட்டி நேற்று நான் படித்த விசயங்கள் உலுக்குப் போட்டுவிட்டன. நேற்று ரொம்ப நேரம் எதையும் யோசிக்க முடியவில்லை - ஒருவர் நிஜத்தை அப்படியே பதிவு பண்ணிப் போட்டுவிட்டு கொலை முயற்சியிலும் ஈடுபடுகிறார். தற்கொலை செய்யப் போவதாகச் சொல்கிறார். என்னால் இதையெல்லாம் தாங்க முடியவில்லை. இவ்வளவு பக்கத்திலா இதெல்லாம் நடக்கிறது எனும் பயம், பதற்றம். ஒரு பின்னூட்டத்தில் ஒருவர் 'யாரும் சாகவில்லை, அப்பெண் ஆஸ்பத்திரியில் இருக்கிறார்' எனச் சொன்ன சேதி சற்று நிம்மதி தந்தது.
முதலில், இவர்களுக்கு பலரும் ஆலோசனை தரலாம், உளவியலாளர்கள் கூட உதவலாம், ஆனால் இத்தகைய கோபாவேசச் செயல்கள் நடப்பதைத் தடுக்க முடியாது. இவையெல்லாம் நடந்தே ஆகும். தப்பிப்பது அதிர்ஷ்டம்தான். அடுத்து, நாம் அவர் சொல்வதை மட்டுமே கேட்கிறோம். அப்பெண் அவரைப் பிடிக்காமல் இன்னொரு உறவில் இருக்கலாம். எனக்கு அவர் சொல்னதையும், அவரது காணொளிகளையும் பார்க்கும்போது அவர் சிறிது காலமாகவே தனியாகத்தான் இருக்கிறார் எனத் தோன்றுகிறது. குழந்தையுடன் அவர் இருக்கும் படங்களிலும் காணொளிகளிலும் அப்பெண் எங்கும் இல்லை. அல்லது அவரே அப்பெண்ணுடனான படங்களை அழித்துவிட்டாரோ தெரியவில்லை. ஒருவேளை விலகி வாழும் காலத்தில் தோன்றிய உறவாக இருக்கலாம். அப்பெண் "இது நம்ம வீடில்ல" என்று வேறு சொல்கிறார். முடிந்தளவுக்கு தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அதைச் சமாளிக்கப் பார்க்கிறார். அழுது மன்றாடியிருந்தால் அவர் இன்னும் அப்பெண்ணை அடித்திருப்பார் என நினைக்கிறேன். அந்த திமிர்த்தனம் அவரைக் கொஞ்சம் அதிர்ச்சியடைய வைக்கத்தான். அது ரொம்ப நேரம் தாக்குப்பிடிக்க உதவவில்லை.
ஒரு ஆணின் கண்ணோட்டத்தில் இருந்து பார்த்தால் இது ஒரு மிகப்பெரிய அவமானம், கைவிடல், ஆண்மைக்கான சவால். தாங்க முடியாத மனவுளைச்சலைத் தருவது. அதனால் அப்பெண்ணை வெட்டுகிறார். அதன்பிறகான பயத்தில்தான் அவர் தன் சாவைப் பற்றி மகனிடம் பேசியது என நினைக்கிறேன். எது எப்படியோ இதெல்லாம் நடந்தே ஆக வேண்டும். சின்னச்சின்ன பிழைகள் ஒரு பெரிய தருணத்தை நோக்கி, குற்றத்தை நோக்கி, இட்டுச் செல்லும். குற்றம் அவ்வளவு வசீகரமானது. காமத்தைவிட குற்றமே அதிக வசீகரமானது என நினைக்கிறேன். இன்பம் அதில்தான் அதிகம்.
பூட்டப்பட்ட அறையில் இருந்து ஒருவர் வருகிறார். அவர் ஒரு குட்டிப் பெருச்சாளியைப் போல இருக்கிறார். இவர் அறைக்கு வெளியில் இருந்து கத்தும்போது அவர் சத்தமே இல்லாமல் இருக்கிறார். அதன்பிறகு இருள் சூழ்கிறது. அந்த குட்டிப் பெருச்சாளி பதுங்கிப் பதுங்கி வெளிவருகிறார். இவரா, இவருக்காகவா என்று தோன்றுகிறது. அடிதடிக்கு ரொம்ப பயப்படுகிற மனிசன் போல. ஒரு மன்னிப்புக் கேட்டுவிட்டு சண்டைக்குத் தயாராக வேண்டும். அதுதான் கண்ணியம். அவர் பண்ணியதை விட பதுங்கித் தப்பிப்பதைப் பார்க்கத்தான் அசிங்கமாக இருக்கிறது. ஒருவேளை அந்தரங்கமான சந்தர்ப்பங்களில் ரொம்ப பிரியமான மனிதராக இருந்திருக்கலாம். அது அவரிடம் அப்பெண்ணை ஈர்த்ததா? மற்ற சமயங்களில் அவர் ஒரு பெருச்சாளி. கள்ளக்காதலர்கள் மட்டுமல்ல பெரும்பாலான காதலர்களும் இப்படித்தான். ரெண்டு பேர் வந்து மிரட்டினால் காதலியை அதோகதியாக விட்டுவிட்டு ஓடிவிடுகிறார்கள். இவர்களையெல்லாம் ஏன் காதலிக்கிறார்கள்?
இன்னொரு பக்கம் சைக்கோ கொலைகார காதலர்கள் வருகிறார்கள். கேரளாவில் நெடுமங்காடு எனும் பகுதியில் அண்மையில் அப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. அஸ்கர் எனும் ஒரு இளைஞர். இளமையிலேயே அவருக்கு வன்முறை விருப்பமும் சைக்கோத்தனமும் அதிகம். அவரைப் போன்றவர்களுக்குத் தம்மைவிட பலவீனமானவர்களைத் துன்புறுத்திக் கட்டுப்படுத்துவதில் அபாரமான விருப்பம் இருக்கும். இதை நேரடியாக ஒப்புக்கொள்ள மாட்டார்கள். எப்போதெல்லாம் அவர்கள் மீது விமர்சனம் வருகிறதோ, அழுத்தம் அதிகமாகிறதோ அப்போதெல்லாம் தன் துன்பத்துக்குக் காரணமானவர் என ஒருவரைப் பிடித்துத் துன்புறுத்துவார்கள். இவர்களுக்கு இலக்கு குழந்தைகள், பெண்கள், அடித்தால் கும்பிட்டு தேம்புபவர்கள். தாம் செய்வது தவறென்றே புரியாதபடிக்கு இவர்களுடைய மூளையமைப்பில் சில சிக்கல்கள் இருக்கும். இரக்கத்தை, அக்கறையைத் தூண்டுகிற பகுதிகள் ஆக்டிவ்வாக இருக்காது. ஆகையால் யார் எவ்வளவு அழுது மன்றாடினாலும் கோபப்பட்டாலும் அவர்களுக்குப் புரியாது. வெளியே பார்க்க சாதாரண ஒரு கடைப்பையனைப் போலிருந்தாலும் இவர்கள் வாழ்வது ஒரு மாற்று உலகில். கோபமும் பயமும் மட்டுமே இவர்களைப் பிடித்தாட்டும், செலுத்தும். அஸ்கர் இப்படியானவர். இதற்கு அவரது குடும்பம் காரணமா அல்லது அவரது சிறுவயது அனுபவங்களா அல்லது மூளையமைப்பா மூன்றுமா எனத் தெரியவில்லை.
அஸ்கர் பார்க்க சென்னை, பெங்களூர் மலையாளி டீக்கடைகளில் டீ அடிப்பவர் போன்றோ, இஸ்லாமிய சூப்பர் மார்க்கெட்டில் தண்ணீர் கேன் போடுபவர் போலோ இருக்கிறார். பேரழகன் அல்ல. ஒரு சுமாரான டிப்பிக்கல் கேன் தூக்கும் மலையாளி இளைஞன் லுக். நீளமான கோல்கேட் பற்பசையை கற்பனை செய்யுங்கள், முகம் அப்படித்தான் இருக்கும். (இதை நான் சொன்னதும் ஒரு தோழி நீ டிப்பிக்கலாக ஒரு ஆணின் பார்வையில் இருந்து பார்க்கிறாய் என்கிறார். என்ன எழவோ. எனக்குத் தெரிந்து அவர் சல்மான் கான் அல்ல.). இந்த நபர் படித்தவரும் அல்லர். ஆட்டோ ஓட்டுபவர். பின்னர் ஒரு கார் வாங்கியிருக்கிறார். சொந்தமாக ஊரில் அவரது குடும்பத்துக்கு ஒரு வீடு உண்டு. ஆனால் அது சிறியது என்பதால் அவர்கள் வாடகைக்கு கொடுத்துவிட்டு இன்னொரு வாடகை வீட்டில் வசிக்கிறார்கள். ஆடம்பரப் பிரியர்கள் என ஊர்க்காரர்கள் சொல்கிறார்கள். இவர் அங்குள்ள ஒரு நடனப்பள்ளியில் ஓட்டுநராக இருக்கிறார். அந்தப் பள்ளிதான் அவரது வேட்டைக்களம். அங்கு படிக்க வருகிற, வேலை செய்கிற பெண்களைத் தன் கோல்கேட் பற்பசை முகத்தால் கவர்ந்திழுத்து விடுவார். ஒருவேளை அவரது நடத்தை அவர்களைக் கவர்ந்திருக்கலாம் - ஆனால் நடத்தையெப்படி ஆனது எனத் தெரிந்தால் நடுங்கி விடுவீர்கள்:
இவர் ஒரு பதினாறு வயது இஸ்லாமியப் பெண்ணைக் காதலிப்பதாக நடித்து அப்பெண்ணின் வீட்டில் உள்ளோருக்கு அழுத்தம் போட்டு கல்யாணத்தை ஏற்பாடு பண்ணுகிறார். ஆனால் பெண் வீட்டார் இவரைப் பற்றி அக்கம் பக்கத்தில் விசாரித்தால் அவர்கள் இவனுக்கு கொடுப்பதற்குப் பதில் முதலைகள் நிரம்பிய ஆற்றில் உங்கள் பெண்ணைத் தள்ளிவிடுங்கள் என்கிறார்கள். அவர்கள் கல்யாணத்தை ரத்து செய்கிறார்கள். அஸ்கர் தன் குடும்பத்தினருடன் மணப்பெண்ணின் வீட்டுக்கு வந்து பெண்ணை அழைத்துச் சென்று விடுகிறார். சில மாதங்களுக்குப் பிறகு மணவீட்டார் வேறுவழியின்றி முறையாகக் கட்டிக் கொடுக்கிறார்கள். ஆனால் அஸ்கரின் குடும்பத்தினர் பெண்ணின் குடும்பத்தினருடன் நல்லுறவைப் பேணுவதில்லை என்பதால் அம்மா சென்று மகளைப் பார்ப்பதில்லை. அதேநேரம் அஸ்கரின் அண்டை வீட்டார் அஸ்கர் அப்பெண்ணைப் போட்டு அடித்து வதைப்பதாக அவளது அம்மாவிடம் போய்ச் சொல்ல அவர் சென்று விசாரிக்கிறார். அவர்கள் “உன் வேலையைப் பார்த்துக் கொண்டு போ” என அந்தம்மாவிடம் சொல்லிவிடுகிறார்கள். அடி உதை, கிணற்றில் தள்ளுவது, தலையை சுவரில் மோதி உடைப்பதெல்லாம் தொடர்கிறது. காரணம் ஒன்றுதான்: அஸ்கர் அந்தப் பள்ளியில் படிக்கும் வேறு சிலருடன் உறவில் இருக்கிறார். அப்பெண்களில் ஒருவள் அவருக்கு கல்யாணம் ஆனதும் இந்த கோல்கேட் முகத்துக்காக மனம் உடைந்து தற்கொலை பண்ணிக் கொள்கிறாள். இது நடந்தபிறகும் அந்த ஊரில் யாரும் நடவடிக்கை எடுத்ததாகத் தெரியவில்லை. ஏனென்றால் அஸ்கர் இப்பெண்களின் நகையை வாங்கி விற்று தன் செலவுக்கு வைத்துக் கொண்டு போலீஸ்காரருக்கும் கொடுத்துவிடுவார். அவர் ஒரு வக்கீலையும் வைத்திருக்கிறார். முழுமையான செட் அப்புடன் நடக்கும் தொழில் இது. இந்தக் குற்றங்கள் நடந்து கொண்டிருக்கும்போதே அஸ்கர் மூன்றாவதாக அப்பள்ளியில் வேலை பார்க்கும் அகிலா எனும் பெண்ணையும் காதலிக்கிறார். அதாவது அவரது வன்முறைக்குத் தயார்படுத்துகிறார். அகிலாவுக்கு கல்யாணமாகி இருந்தது. அவருக்கும் கணவருக்கும் ஏதோ தகராறு வர அவர் இவருக்கு கருவுண்டான மூன்று மாதங்களிலே தற்கொலை பண்ணிக் கொள்கிறார். இங்கு உண்மையான பிரச்சினை அகிலாவின் நடத்தையல்ல தேர்வுதான். அவர் கணவன் இறந்ததில் ஒரு சைக்கோவின் தோள்களை நாடுகிறார். இதற்குப் பதில் அவர் கிணற்றில் குதித்திருக்கலாம் என்றாலும் கிணற்றுக்கும் முகமும் பேசிக் கவரும் வாயும் இல்லையே.
அஸ்கருக்கு அகிலா தவிர வேறு பெண்களுடனும் உறவிருந்திருக்கும் என நினைக்கிறேன். இதை ஒட்டியே அவருக்கும் அவர் மனைவிக்கும் தகராறு வருகிறது. இத்தகையோரால் எதையும் இன்பம், எதிர்ப்பு, மிரட்டல் என்றுதான் புரிந்துகொள்ள முடியும். தன் இன்பம், அதை ஒருவர் எதிர்க்கிறார், தன்னை மிரட்டுகிறார், அவரை வதைத்து முடிவுக்குக் கொண்டு வர வேண்டும், அவரையும் நமக்கு இணையான துன்பத்தை அனுபவிக்க வைக்க வேண்டும், அப்போதே தான் யாரென அவருக்குப் புரியும் என மட்டுமே அவரால் சிந்திக்க முடியும். தினமும் இப்படி வதைத்ததில் அப்பெண் ஒருநாள் மண்டை உடைந்து மயங்கி விழுகிறார். அதைத் தற்கொலையாக மாற்றலாம் எனக் கருதி குடும்பமாகச் சேர்ந்து அவரை கயிற்றில் கட்டித் தொங்க விடுகிறார்கள். அவர் எப்படியோ பிழைத்துக் கொள்கிறார். இதற்கு இடையில் அவருக்கு மூளையில் கட்டிவர இனிமேல் தனக்குத் தேவையில்லை என்று அவரைத் தன் அம்மாவிடம் அனுப்பி விட்டு அகிலாவை அழைத்து வருகிறார். நல்லவேளை அகிலா இவருடன் வந்ததால் மனமுடைந்து எந்தப் பெண்ணும் தற்கொலை செய்யவில்லை. அகிலா தன் மகனை முதலில் தன் அம்மாவிடம் விட்டு வருகிறார். அவரது குடும்பம் ஏழ்மையானது. அம்மா சத்துணவுக் கூடம் போலொன்றில் பணி புரிகிறார். அவரால் குழந்தையைப் பார்க்க முடியாது என்று கூறி காவல்துறையிடம் செல்ல அகிலா வேறுவழியின்றி குழந்தையை அஸ்கரிடம் கொண்டு வருகிறார். அஸ்கர் இப்போது குழந்தையை அடித்து அதன் கைகளை உடைக்கிறார். விலாவை உடைக்கிறார். உடம்பெல்லாம் லைட்டரால் சூடு வைக்கிறார். அவரது நியாயம் அக்குழந்தை சொன்னால் கேட்க மாட்டேன் என்கிறது, அழுது முரண்டு பிடிக்கிறது என்பது. அகிலா ஏன் இதைப் பொறுத்துக் கொண்டார் என்பது வினோதமானது - பயமா வேறு வழியில்லாததாலா? சிலநேரங்களில் பழைய வாழ்க்கையைவிட்டு வர விரும்புவோர் குழந்தை இல்லாதிருந்தால் நல்லது என நினைப்பார்கள். அது ஒரு புத்துயிர்ப்பாக அவர்களுக்குப் படும். ஆனால் அஸ்கர் வரும் முன்பு அவர் தன் குழந்தையை நன்றாகவே பார்த்துக் கொண்டிருக்கிறார் என்பதால் அவருக்கும் இதற்கும் நேரடியான தொடர்பில்லை என்கிறார்கள். அதேநேரம் இக்குழந்தையை அஸ்கர் தன் வீட்டு சன் ஷேடில் ஏற்றி நிறுத்தியிருக்கிறார். ஒன்றரை வயது குழந்தை. இரு கைகளும் உடைக்கப்பட்டிருக்கின்றன. அது என்ன செய்யும்? நினைத்துப் பாருங்கள். மற்றொரு சமயம், இக்குழந்தை பசியிலும் வலியிலும் தன் வீட்டில் இருந்து வெளியேறி சில நூறு அடிகள் ஊர்ந்து சென்று சாலைக்கு வந்திருக்கிறது. யோசித்துப் பாருங்கள். இரண்டு உடைந்த கைகளுடன். ஊர்க்காரர்கள் அதை எடுத்துக் கொண்டு அஸ்கரின் வீட்டாரை அழைத்து எச்சரித்திருக்கிறார்கள். அவர்கள் சமாதானம் சொல்லிவிட்டு குழந்தையை வாங்கியிருக்கிறார்கள். அடுத்து இச்செய்தியை குழந்தையின் தந்தை வழிப் பாட்டியிடம் அவர்கள் சொல்ல பாட்டி குழந்தையைக் கேட்டு காவல் துறையிடம் சென்றிருக்கிறார். இங்குதான் ஒரு திருப்பம் - அகிலா வந்து தன் குழந்தையை பத்திரமாகத் தாம் பார்த்துக் கொள்வதாகவும், குழந்தை மீது அடுப்புக் கனல் பட்டதாலும், அது பைக்கில் இருந்து விழுந்ததாலும் ஏற்பட்ட காயங்களே அவையென வாதிட்டிருக்கிறார். அவர் மனத்தில் குழந்தையைத் தன் மாமியாரிடம் கொடுக்கக் கூடாதென இருந்திருக்கிறது. காரணம் அவர்கள் இடையிலான தகராறு - திருமணத்தின் போதே அகிலாவுக்கு வேறு ஆண்களுடன் உறவிருந்திருப்பதாக ஏதோ சச்சரவு. அது உண்மையோ பொய்யோ அகிலாவின் கணவரின் தற்கொலைக்கு அவரது மாமியார் அகிலாவையே குற்றம் சுமத்துகிறார். ஒருவேளை அவர் அப்போதே குழந்தையை அங்கு ஒப்படைத்திருந்தால் பிரச்சினை இவ்வளவு பெரிதாக வளர்ந்திருக்காது. ஆனால் ஏதோ ஒரு ஈகோ, கோபம் அவரைத் தடுத்துவிட்டது. நம் போலிசாரும் இந்த உலகிலேயே தாயால் மட்டுமே குழந்தையை நன்றாகப் பார்த்துக் கொள்ள முடியும் என செண்டிமெண்டலாக நம்பி திரும்பக் கொடுத்து விட்டார்கள். குறைந்தது, குழந்தையை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி ஒரு மருத்துவ பரிசோதனை செய்தாலே உண்மைக் காரணம் தெரிந்திருக்கும். ஆனால் அந்த மெண்டல்களுக்கு அது கூட செய்ய முடியாத சோம்பல். அல்லது பயங்கர பிஸியாகவும் இருந்திருக்கலாம். அம்மா செண்டிமெண்ட் பைத்தியங்களாக இருந்திருக்கலாம். காசு வாங்கியிருக்கலாம். அவர்கள் மட்டுமல்ல குழந்தையின் அப்பா வழி பாட்டி Childline 1098க்கு அழைத்துப் புகார் அளித்திருக்கிறார்கள். சைல்ட் லைன் ஆட்களும் பயங்கர அம்மா செண்டிமெண்ட் குரூப் போல. அவர்களும் கண்டுகொள்ளவில்லை. இதுவே அகிலா போன் செய்து என் குழந்தையைக் கொடுமைப்படுத்துகிறார்கள் என்று சொல்லியிருந்தால் சைல்ட் லைன், காவல்துறை எல்லாம் யானை, குதிரைப் படையுடன் வந்திருப்பார்கள். சொன்னேனே, அம்மா செண்டிமெண்ட். இதுதான் இப்போது கேரள ஊடகங்களில் பேசுபொருள் - எப்படி மொத்த அமைப்புகளும் ஒரு சிறுகுழந்தையைக் கைவிட்டார்கள் எனக் கேட்கிறார்கள். அவர்களுக்குப் புரியவில்லை. அம்மா செண்டிமெண்ட் கடவுள் சென்டிமெண்டை விடப் பெரியது - நீங்கள் நீதிபதி முன் அந்த கை உடைந்த குழந்தையை நிறுத்தியிருந்தாலும் கூட அவர் அதை அம்மாவிடமே ஒப்படைத்திருப்பார். செண்டிமெண்டை வைத்து ஏமாற்றுவது சுலபம்.
அண்மையில் அகிலா தமிழ்நாட்டுக்குச் சென்று பணி செய்தபோது குழந்தை வழக்கம் போல வலியில் அழ அஸ்கர் அதன் கழுத்தை நெரித்தும் விலாவில் உதைத்தும் அது அழுகையை நிறுத்தவில்லை. அவன் முயற்சியை நிறுத்தவில்லை. குழந்தை இறந்து போனதும் அவரது பேரறிவுக்கு எட்டிய உத்தி அதை ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போய் உணவு தொண்டையில் மாட்டி மூச்சுத்திணறி இறந்துவிட்டது எனச் சொல்ல. ஏற்கனவே கையை உடைத்தபோது மருத்துவ பரிசோதனை செய்யப்படாததைப் போல இம்முறையையும் பண்ண மாட்டார்கள் என அவர் நினைத்திருக்கலாம். ஆனால் ஆஸ்பத்திரியிலேயே பார்த்ததும் சொல்லி விட்டார்கள். பிரேதக் கூராய்வில் உறுதி செய்தார்கள். கடைசியில் அந்த சைக்கோ மாட்டிக் கொண்டான். அகிலாவையும் கைது பண்ணியிருக்கிறார்கள்.
அகிலா ஏன் தன் சொந்தக் குழந்தையின் மீதான சித்திரவதையை வேடிக்கைப் பார்த்தார்? பக்கத்து வீட்டாராலேயே சகிக்க முடியாததை அவரால் எப்படி ஏற்றுக்கொள்ள முடிந்தது? ஏன் தன் இரண்டாம் கணவரைக் காப்பாற்ற காவல் நிலையத்தில் நாடகமாடினார். இவையே முக்கியமான கேள்விகள்: இம்மாதிரியான வேறு சில வழக்குகளையும் கேள்விப்பட்டிருப்பீர்கள். இரண்டாவது கணவன் முதல் கணவன் வழியாகப் பிறந்த குழந்தையை பாலியல் துன்புறுத்தல் செய்யும்போது அம்மா தன் குழந்தையைக் காப்பாற்றாமல் வேடிக்கைப் பார்ப்பார். குழந்தை மீதே பழிபோடுவார். தனக்குள்ள ஒரே பிடிமானமான கணவன் தன்னை விட்டுப் போய்விடக் கூடாது எனும் பயமும் நெருக்கடியும் இதற்குக் காரணம் என்கிறார்கள். மெத்தப் படித்த சிறந்த எழுத்தாளரான ஆலிஸ் மன்ரோவை இதையெல்லாம் செய்திருக்கிறார். கடைசி வரை அவர் வருத்தம் தெரிவிக்கவும் இல்லை. எனக்கு அதனால் அகிலாவைக் குற்றம் சொல்ல இயலவில்லை. இதெல்லாம் ஏன் நடக்கிறது எனபெண்கள் தம் அவதானிப்பாலும் கற்பனையாலும் அறிந்து சொன்னாலே நமக்கு முழுமையாகப் புரியும்.
கடைசியாக: இவ்வளவு கொடூரமான அஸ்கருக்காக ஏன் ஒரு பெண் அடி உதையை, கிணற்றில் தள்ளியிட்டுத் துன்புறுத்தலை, கயிற்றில் தொங்க விட்டு கொலை முயற்சியைத் தாங்கிக் கொண்டார்? ஏன் அவன் தானிருக்கையில் இன்னொருத்தியை மணந்து கொண்டான் என்று அடுத்தொரு பெண் தற்கொலை செய்தாள்? இந்த இரு பெண்களும் ஒரே பள்ளியைச் சேர்ந்தவர்கள். இவ்வளவும் நடந்திருப்பது தெரிந்தும் ஏன் மூன்றாவதாக ஒரு பெண் இவனை மணந்து கொண்டாள்? ஒருவேளை இந்த குழந்தை கொல்லப்படாமல் அகிலா அதை தன் மாமியாரிடம் கொடுத்திருந்தால், அவன் அகிலாவின் மண்டையை உடைத்து அவரையும் துரத்தி விட்டிருந்தால், இன்னும் எத்தனைப் பெண்கள் அவன் தன்னை மணக்க வேண்டும் என மண்டியிட்டுக் கெஞ்சியிருப்பார்கள்? எனக்கு அஸ்கரைப் பார்க்க ஆட்டோ சங்கர் நினைவுக்கு வருகிறார். அவரையும் இப்படித்தான் பல பெண்கள் காதலித்தார்கள். அவர்கள் பாலியல் தொழில் செய்பவர்கள். அவனுக்காக தியாகம் செய்தார்கள். கடைசியில் அவன் அவர்களைக் கொன்று சுவரில் புதைத்தான். தமிழ்நாட்டில் பெண்களை இணையத்தில் ஏமாற்றி கூட்டுப் பலாத்காரம் பண்ணின வழக்கைப் பற்றித் தெரியும். அக்குற்றவாளியும் இத்தகைய மனநிலை கொண்டவர்தான்.
கடைசியாக நான் மென்மையான சைக்கோக்களுக்கு வருகிறேன். இவர்களைக் குறித்த செய்திகள் குற்றமாக வராது. ஆனால் நான் இப்படியானவர்களைப் பற்றி தோழியரும் நண்பர்களும் சொல்லக் கேட்டிருக்கிறோம். அடித்து உதைத்து மண்டையை உடைத்துத் துன்புறுத்த மாட்டார்கள். ஆனால் பேச்சும் நடத்தையும் ரொம்ப சைக்கோத்தனமாக இருக்கும். தாங்க முடியாததாக இருக்கும். இவர்களிடம் வருடக்கணக்கில் அடிமைப்பட்டுக் கிடக்கும் பெண்களைத் தெரியும். இது ஒருவித சேடோமசோக்கிசமா அல்லது வாழ்க்கைச் சூழலா தெரியவில்லை. ஆனால் இத்தகைய உறவுகள் சுலபத்தில் உடைவதில்லை. பெண்கள் இத்தகையோரை நியாயப்படுத்திக் கொண்டே இருப்பார்கள்.
ஒரு பக்கம் சைக்கோ கொலைகாரர்கள், இன்னொரு பக்கம் பெருச்சாளிகள். இவர்களின் வசீகரம்தான் என்ன? நாம் சினிமாவில் பார்க்கும் ஹீரோக்கள் அவ்வாறு இல்லை. நாம் இலக்கியத்தில் படிக்கும் காதலர்களும் அவ்வாறு இல்லை. அத்தகையோர் ஒரு காதலியைக் காதலித்து சமாளிக்கவே படாதபாடு படுகிறார்கள். ஆம் மேற்சொல்லப்பட்டவ விதிவிலக்குத்தான். ஆனாலும் ஒரு சொல் தவறாக சொல்லப்பட்டால் “வி.தா.வ” திரிசாவைப் போல வெடுக்கென்று கிளம்பிப் போய் விடுகிற பெண்கள் ஏன் இவர்கள் அடித்தாலும் கட்டித் தொங்கப் போட்டாலும் இவர்களிடம் அவ்வளவு பாசமாக இருக்கிறார்கள்? எந்த தகுதியும் இல்லாத பெருச்சாளிகளை, பயந்தாங்கொள்ளிகளை எப்படிக் காதலிக்கிறார்கள்? இதையும் பெண்கள் மட்டுமே நமக்கு விளக்க முடியும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...