முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பாஜகவின் புதிய உத்தி



அண்ணாமலை பாஜகவை விட்டு வெளியேறுவதான சேதியும் அவர் புது கட்சி ஆரம்பிப்பதான சேதிகளும் சுவரொட்டிகளும் அவராகப் பணம் கொடுத்துப் பரப்புவதுதான். அவர் எப்போதுமே ஊடகங்களுக்கு நிறைய செலவு செய்பவர்.

இது நிகழுமெனில் பாஜக தவெகவை நேரடியாக எதிர்க்க தான் மட்டும் போதாது, அண்ணாமலையையும் ஒரு மாற்று விஜய்யாக வைத்து ஒரு மாற்றுக் கட்சியை உருவாக்கி பாஜக எதிர்ப்பு மனநிலையில் இருந்து தப்பிக்கலாம் எனக் கருதுகிறது எனப் பொருள். அதாவது இனி தவெக எனும் பாஜக (திமுக எதிர்ப்பு), தவெக எனும் திமுக (பாஜக எதிர்ப்பு), அண்ணாமலையின் கட்சியான மாற்று பாஜக, நிஜ பாஜக என பல கட்சிகள் களமாடும். மிகுதியான தகவல்கள், உணர்வுத் தூண்டுதலைத் தரும் பிம்பங்கள், காணொளிகளைக் கொண்டு மக்களின் மூளையை நிரப்பி சிந்திக்க விடாமல் பண்ணுவதும், அரசியல் மாய்மாலங்களால் கவனத்தைத் தொடர்ந்து திருப்பி திராவிட அரசியல் இல்லை எனும் பிரமையை ஏற்படுத்துவதும், விஜய் எதிர்ப்பு வாக்குகளைப் பிரிப்பதுமே அவர்களுடைய உத்தேசமாக இருக்கும்.
முக்கியமாக, இங்குள்ள பாஜக ஆதரவு ஊடகங்களும் பத்திரிகையாளர்களும் ஐடி விங் கூட்டத்தினரும் தீவிரமாக அண்ணாமலையின் கட்சியை ஆதரிப்பர்.
விஜய்யைப் போல இன்னொரு விஜய்யை இங்கு உருவாக்குவது சுலபம். அதற்கான டூல் கிட் தயாராக உள்ளது.
முதலில் ஊடகங்கள் மூலமாக ஒரு தலைவருக்குப் பெரும் ஆதரவு உள்ளதாகக் காட்ட வேண்டும்.
அடுத்து அவரைக் கொண்டு ஆளும் அரசை நேரடியாக எதிர்க்க வைக்க வேண்டும்.
அவர் ஊழலற்றவர், தூய்மையானவர், அதிரடியானவர், மக்கள் ஆதரவு கொண்டவர், பாஜக அவரை ஏமாற்றிவிட்டது எனப் பிரச்சாரம் செய்ய வேண்டும்.
மேற்சொன்ன ஊடக பிரமை, திரட்டப்பட்ட கூட்டம், ஐடி விங் பரபரப்பைக் கொண்டு போலி மக்கள் ஆதரவு பிம்பத்தைக் கட்டமைத்த பின், அவருக்கு அடுத்த மாநிலத் தேர்தலில் 30-40 இடங்களை வாக்கு எந்திரத்தை டியூன் செய்து வைத்துக் கொடுத்து விடுவார்கள். இந்த இடங்கள் அதிமுக திமுகவுக்கான இடங்களாக இருக்கும். இதை ஏற்க வைத்துவிட்டால் அவர்களால் அதற்கடுத்த தேர்தலில் இந்தப் புதிய கட்சிக்கு 120 இடங்களைக் கொடுத்து ஆட்சியமைக்க வைக்க முடியும்.
இப்போது இவையெல்லாம் ஹேஷ்யம்தான். அவ்வப்போதுள்ள சூழலைப் பொறுத்து முடிவெடுப்பார்கள் என நினைக்கிறேன். ஆனால் நான்கு விசயங்கள் நிச்சயம்:
1) விஜய்க்கு மட்டும் வாக்கு எந்திர சொகுசால் வாக்குகளை அள்ளிக் கொடுத்து ஆட்சிக்குக் கொண்டு வந்தது அண்ணாமலையின் ஆசையையும் தூண்டிவிட்டது. தான் உருவாக்கிய அலையை விஜய் பயன்படுத்தி வென்றுவிட்டார் என்று கூட அவர் நம்பலாம். பாஜக தலைமையிடம் இதைக் குறித்து ஏதோ ஒரு பேச்சுவார்த்தையை நடத்திக் கொண்டிருக்கிறார்.
2) பாஜக ஆதரவாளர்கள் சட்டென பாஜக தலைமை அண்னாமலையை ஏமாற்றியது தவறு, அவர் கடுமையாக உழைத்திருக்கிறார், அவர்கள் ஒரு உள்ளூர் தலைவர் வலுவாக உருவாகி வருவதை வெறுக்கிறார்கள் என ஒரு பொய்ப் பிரச்சாரத்தை ஆரம்பிப்பார்கள். பாஜகவுக்கு எதிர்முகமாக அவர்கள் அண்ணாமலையைக் கட்டமைப்பார்கள். இன்னொரு பக்கம் அவர் தவெகவையும் கடுமையாக எதிர்ப்பார். அதே சமயம் அவர் பாஜகவின் அரசியலையோ கொள்கையையோ எதிர்க்க மாட்டார்.
3) பாஜக தன்னை நேரடியாக 'ஆட்சிக்குக் கொண்டு வர' உத்தேசிக்கவில்லை. அதற்கான எதிர்ப்பு கடுமையாக உள்ளது எல்லாருக்கும் தெரியும். அதற்குப் புதுத் தலைமைகள் எனும் பல பொய் முகங்கள் தேவையுள்ளன. இத்தலைமைகள் உள்ளூர் பிரபல முகங்களாக, கறுப்பான தோற்றம் கொண்டவர்களாக, மத்திய சாதியைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். இவர்களுக்கு அரசியல் பின்னணி, வரலாறு இருக்கக் கூடாது. கறைபடியாதவர் என்பதே இவர்களின் பிரதான வசீகரமாக இருக்கும். இதன் மூலம் பாஜக, இந்துத்துவா, மோடி எதிர்ப்பு எனும் கதையாடலைத் தகர்த்துவிட முடியும் என நம்புகிறார்கள்.
4) மேற்சொன்ன அசைவுகளை விஜய் விரும்பவில்லை. அதனாலே அவர் சண்டை தனக்கும் திமுகவுக்கும் மட்டும்தான் என திருச்சியில் மீண்டும் மீண்டும் வலியுறுத்திப் பேசுகிறார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மிச்சமுள்ள வேலை (குறுங்கதை) - ஆர். அபிலாஷ்

  வார இறுதி. காலை முதலே வேலைக்காரியை பத்து தடவைகளுக்கு மேல் அழைத்தாகி விட்டது. தவறான எண்ணென்று யாரோ திரும்பத் திரும்பச் சொல்வதுடன் தெலுங்கில் திட்டவும் செய்கிறார்கள். அவள் எண்ணை மாற்றியதுடன் எங்கே போனாள்? பாத்திரங்கள் குவிந்து கிடக்கின்றன. உணவை ஆர்டர் செய்து வாங்கி நானும் மனைவியுமாக அமைதியாக உண்டோம். பிள்ளைகள் இருவரும் என் சகோதரியின் வீட்டுக்கு விடுமுறையைக் கொண்டாடப் போயிருக்கிறார்கள். வீட்டு மணியடித்தது. நான் போய்த் திறந்தால் வேலைக்காரியின் தாயான எழுபது வயதுக் கிழவி நின்று கொண்டிருந்தார். நான் அவரைக் கண்டதும் திகைத்து ஒரு பக்கம் சாய்ந்து நின்று கொண்டேன். அவர் அலட்சியமாக என்னை விலக்கிக் கொண்டு உள்ளே நுழைந்தார். என் மனைவி தன் கையில் இருந்து தட்டைக் கீழே போட்டு விட்டுக் கத்துகிற சத்தம் கேட்டது. நான் தடுமாறியபடி உள்ளே வந்தேன். யாரை அழைப்பது, என்ன சொல்வது எனத் தெரியவில்லை.   அவர் உள்ளே சென்று வேலையை ஆரம்பித்ததுடன் சமையலறையில் யார் பொருட்களை மாற்றி வைத்தது என உரிமையுணர்வுடன் என் மனைவியை விசாரித்துக் கொண்டிருந்தார். என் மனைவி இன்னும் பேசும் இயல்பு நிலைக்கு வரவில்லை என்பதில் திகை...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

பிரபலங்களின் நோக்கம்

  நீங்கள் ஒரு பிரபலத்தின் நேர்முகத்தைப் பார்க்கிறீர்கள். அவர் தன் வாழ்வில் வெற்றி பெற சரியான உணவின்றி அலைந்து திரிந்ததைச் சொல்கிறார். நீங்கள் கண் கலங்குகிறீர்கள். அவர் தன் குடும்பத்தைப் பிரிந்து மாநகரத்தில் தனிமையில் அனாதையாக வாழ்ந்தைச் சொல்கிறார். நீங்கள் மனமுடைகிறீர்கள். இன்னொருவர் தான் தன் காதலனால் ஏமாற்றப்பட்டதைச் சொல்லி அதனால் ஏற்பட்ட மனச்சிக்கல்களை, பதற்றத்தை, காயங்களை வர்ணிக்கிறார். உங்களுக்கு இரக்கமும் ஆத்திரமும் வருகிறது. இந்த அனுபவங்களும் உணர்வுகளும் பொய்யல்ல. அவரும் நீங்களும் அடிப்படையில் மனிதர்களே. அதேநேரம், இங்கு எழுப்ப வேண்டிய முக்கியமான கேள்வியுண்டு - ஏன் இம்மாதிரியான கதையாடல்களை ஊடகங்கள் உங்கள் முன்வைக்கின்ற்ன? அவர்களின் நோக்கம் என்ன? ஒரு விசயம் உண்மையாக இருந்தாலும் அதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என வெகுஜன ஊடகம் நினைப்பதில் ஒரு உத்தேசம் இருக்குமே? பிரபலமும் நீங்களும் வர்க்கரீதியில் வெவ்வேறு இடங்களில் இருக்கிறீர்கள். இது ஒரு விலகலை ஏற்படுத்துகிறது. பிரபலங்கள் இந்த நாட்டின் பெரும்பணக்காரர்களை, அதிகார வர்க்கத்தின் பகுதியாக உள்ளார்கள். இந்த இடைவெளியை நிரப்புவது அவ...