முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

என் கோபம்

Tvk maanadu portraits of president vijay 

தவெக ஆட்சியை ஏன் இப்படிச் சாடுகிறீர்கள், உங்களுக்கு எப்படி அப்படி வெறுப்பு என்று நண்பர் ஒருவர் கேட்டார். நான் அவரிடம் சொன்னேன், "எனக்கு தவெக ஆட்சி மெல் எந்த வெறுப்பும் இல்லை. ஏனென்றால் அப்படி ஒரு ஆட்சியே இல்லை. என் பிரச்சினை தவெக அல்ல, என் பிரச்சினை தவெகவே இல்லை என்பதே. நான் சொல்வது நிஜம். யார் வேண்டுமானாலும் சோதித்துப் பார்க்கலாம்.

இங்கு நடப்பது லாட்டரி மார்ட்டின் ஆட்சி. 25 நாட்களில் 5000 கோடிக்கு மேல் கனிம வள முதலாளிகளிடம் இருந்து கமிஷன் வாங்கி மார்ட்டினின் தொழில் முதலீட்டுக்காக அனுப்புகிறார்கள் எனும் குற்றச்சாட்டைப் பாருங்கள். அதில் ஒரு பங்கை தவெக தலைமைக்கும் கொடுத்திருப்பார்கள். நான் மறுக்கவில்லை. அதனாலே அது தவெக தலைமை ஆட்சி செய்வதாக ஆகாது. தவகவை வைத்து மார்ட்டின் ஆள்கிறார் என்பதே பொருள் ஆகும். மார்ட்டின் பல மோசடிகள் வழியாக சம்பாதித்த பணத்தை ("காட்பாதர்" படத்தில் வருவதைப் போல) நேரடியாக வணிகத்தில் முதலீடு செய்யத் தொடங்கினார். கூடவே மோசடித் தொழிலையும் தொடர்ந்தார். அவருக்கு அது போதவில்லை. அரசியல் கட்சிகளுக்குக் கொடுத்து பாதுகாப்புத் தேடுவதை விட கட்சி தொடங்கலாம் என நினைத்து ஆதவை அனுப்பினார். அவர் பல கட்சிகளில் புகுந்து புறப்பட்டு விஜய்யை அடைந்தார். அப்படி நிகழ்ந்ததே தவெக. தவெகவை வைத்து வெறுமனே பேரம் பேசி கமிஷனை ஈட்டி இன்னொரு பக்கம் தன் தொழிலை விருத்தி செய்கிறார். இப்பணத்தை நாளை அவர் தன் கட்சியில் கூட முதலீடு பண்ண மாட்டார். இம்முறை பாஜகவுக்கு விஜய் தேவைப்பட்டதைப் போல அடுத்த தேர்தலில் பயன்படவில்லை என்றால் வாக்குப்பதிவு எந்திரம் மக்கர் பண்ணும். அப்படி நிகழ்ந்தால் மார்ட்டின் மொத்த கமிஷன் வருமானத்தையும் (லட்சம் கோடிகளில்) அள்ளியெடுத்து இன்னொரு மாநிலத்தில் முதலீடு பண்ணுவார். லாட்டரி, அது இதுவென பொதுமக்கள் இந்தியா முழுக்க சுரண்டப்படுவர்.
மார்ட்டின் மட்டுமல்ல, விஜய்யை வைத்து வேறு சில மோசடி தொழிலதிபர்களும் இங்கு கொள்ளையடிக்கிறார்கள்.
முன்பெல்லாம் கமிஷன் இருக்கும். ஆட்சியும் பண்ணுவார்கள். இப்போது ஆட்சியோ நிர்வாகமோ இல்லை. ஏனென்றால் இது கட்சியே அல்ல. இவர்கள் ஒரு தோற்றம் மட்டுமே.
நாளை இவர்கள் மீது விசாரணை நடத்தவும் முடியாது. மார்ட்டின் தனக்கும் இந்த கட்சிக்கும் சம்மந்தமே இல்லை என்பார். விஷ்ணு ரெட்டி உள்ளிட்ட பிறரும் அவ்வாறே கையை விரிப்பார்கள். அமைச்சர்களிடமும் கேட்க முடியாது. அவர்களுக்குத் தம் துறையே என்னவென்று தெரியாது. அவர்களும் பெரிதாக அடிக்க முடியாது. கீழே விழுபவற்றைப் பொறுக்கவே முடியும். முதலமைச்சருக்கு எம்.எல்.ஏவா அமைச்சரா ஒன்றுமே தெரியாது. சந்தேகமிருந்தால் அவரிடமே கேட்டுப் பாருங்கள். அதனாலே அவரால் எந்தப் பிரச்சினைக்கும் தெளிவாக நடைமுறைத் தீர்வு சொல்ல முடிவதில்லை.
உங்களுக்கு இன்னும் தெளிவாகப் புரிய வேண்டும் என்றால் கேரள சட்டமன்றத்தில் முதலமைச்சர் வி.டி சதீஷன் பேசுவதைக் கேட்டு அதை விஜய்யின் பேச்சுடன் ஒப்பிடுங்கள். அவர் தன் முடிவுகளை நியாயப்படுத்துவதைப் பாருங்கள். புள்ளிவிபரங்களுடன் சட்டசபையில் நேராகவே விவாதிக்கிறார். சரியோ தவறோ அவர்களுக்கு ஆட்சியில் நடக்கிற விசயங்கள் தெரிகின்றன.
தவெகவுக்கு உள்ளது ஒரு ஸ்டார்ட்டிங் டிரபிள், முதிர்ச்சியின்மை என்று நான் நினைக்கவில்லை. நடப்பது ஒரு கட்சியின் ஆட்சியல்ல, ஒரு நாடகம். நாடகத்தை வைத்து பின்னால் நடக்கும் கொள்ளை. முறைகேடாக முதலீடு செய்யப்பட்ட பணத்தை திரும்ப முறைகேடாக பல மடங்குகளில் எடுக்கிற ஆவேசமான முயற்சிகள். போகப் போக இவர்களுக்கு முதிர்ச்சியும் நேர்த்தியும் வராது. நாடகம் போடுவதில் முதிர்ச்சி அதிகரிக்கும். அவ்வளவுதான்.
எனக்கு இதைப் பார்த்துதான் கோபம். எனக்கு மார்ட்டின் மீதும், ஆதவ் மீதும், வேறு 'முதலீட்டாளர்கள்' மீதும்தான் கோபம். இதையெல்லாம் நாம் விஜய், தவெக என திசைதிருப்புவதைப் பார்த்து கோபம். இல்லாத நபர்களை, கட்சியை வைத்து எனக்கு கோபம் இல்லை.
எனக்குத் தெரிந்து முதல்வரே இல்லாத, ஆளுங்கட்சியே இல்லாத ஒரே ஆட்சி தமிழ்நாட்டில்தான் நடக்கிறது. அதைப் பார்த்து கோபம்!
சாலையில் ஒரு உடல் நடந்து போகிறது. அதற்கு தலையே இல்லை. அது தாறுமாறாக நடக்கிறது. ஆனால் தைரியமாக நடக்கிறது. தன் பெயர் தமிழ்நாடு என்கிறது. அதைப் பார்த்து கோபம்."

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஹிட்லர் விஜய்

  விஜய் முதல்வர் ஆன நாளன்றே நான் அவர் ஒரு பாசிஸ்ட் என்று விரிவாக எழுதினேன். ஏன் பதவியேற்றவுடனே சொல்கிறீர்கள் என்று நண்பர்கள் கேட்டார்கள். ஆனால் ஒரு எழுத்தாளராக கூர்மையான நுண்ணுணர்வும் அவதானிப்பும் எனக்குண்டு. நான் அவர் ஏன் ஒரு பாசிஸ்ட், அவரது ஆளுமை எப்படி கருணையற்ற ஒன்று என்றும், ஹிட்லரின் பிரச்சார பாணிக்கும் இவர்களுடைய பாணிக்குமான ஒற்றுமையைப் பற்றியும் எழுதினேன். பதவியேற்ற சில வாரங்களிலேயே அவரது பாசிஸ அரசியல் அடுத்தடுத்து வெளிப்பட்டது. அவரைக் கேலி செய்ததற்காக பத்து போலீஸ் ஜீப்புகளில் அன்பானந்தம் எனும் இளைஞரின் வீட்டை நள்ளிரவில் சுற்றி வளைத்து துன்புறுத்தினார்கள். விஜய்யின் கட்சிக்காரர் ஒரு ஜென் ஸி திமுக அமைப்பின் இளைஞரை அடித்துத் துன்புறுத்தி இருக்கிறார். அவர் இஸ்லாமியர் என்று தவறாகப் புரிந்து கொண்டு சுன்னத் செய்த உன் ஆண்குறியை அறுப்பேன் என்று மிரட்டியிருக்கிறார். இன்னும் அடுத்தடுத்து மிக மோசமான காட்டாற்சியை, அடக்குமுறை இந்த மாநிலம் பார்க்கப் போகிறது. விஜய் அடிப்படையில் ஒரு கோமாளி ஹிட்லர். திமுக இவரைப் போன்றோரைத் துணிந்து எதிர்த்தடிக்க வேண்டும். பனையூரைச் சுற்றி வளைத்து பிரம்மாண்ட...