இவ்வருடத்துக்கான இயல் விருது பெறும் சுகுமாரனுக்கு வாழ்த்துக்கள்! தமிழின் எல்லா சிறந்த கவிஞர்களுக்கும் ஒரு தனித்துவமான மொழி உண்டு. ஆனால் இந்த மொழி வெறும் மொழி அல்ல. அது ஒரு அணுகுமுறை, வாழ்க்கைப்பார்வை, நிலைப்பாடு. தமிழின் இறுக்கமான குறியீட்டு, படிமக் கவிதை உலகில் சுகுமாரன் நேரடியான (plain) கவிதைகளுடன் தோன்றினார். எண்பதுகளின் இறுதியில் துவங்கி தொண்ணூறுகளில் மறைபொருளுடன், அரூபமான கேள்விகளுடன் திரிந்த கவிஞர்கள் மத்தியில் அவர் காட்டன் சேலையில் தோளில் சிறு தோல்பையுடன் சரியான சில்லறையை எண்ணியபடி பேருந்து நிலையத்தில் நிற்கும் நிற்கும் ஒரு பெண்ணைப் போல் தோற்றமளித்தார். தனது வெறுமையை, தனிமையை, இச்சையின் தீராத தகிப்பை, உண்மைத் தேடலை, அதற்கான முடிவற்ற தவிப்பை பற்றி தன்னிலையில், வாசகனை எதிர்முனையில் வைத்து பேசும் தோரணையுடன் எளிய சொற்களுடன் பேசினார்.