முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஏன் சில புத்தகங்கள் (புரொமோஷன் இன்றியே) பரவலாய் பேசப்படுகின்றன?

இது என் கடந்த பதிவின் தொடர்ச்சி
புரொமோஷன் இல்லாமலே அதிகம் கவனம் பெறும் புத்தகங்கள் இல்லையா?
உண்டு. ஆனால் இது விதிவிலக்கே. (பெரும்பாலான நூல்களுக்கு புரொமோஷன் இன்று அவசியம்.)
ஏன் விதிவிலக்காய் இவை கவனம் பெறுகின்றன?
இரண்டு காரணங்கள்.

1) சமூகத் தேவை. சில நூல்கள் ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் ஆதாரமான ஒரு தேவையை நிவர்த்தி செய்யும் போது அவை அச்சமூகத்தால் உடனடியாய் கொண்டாடப் படும். ஹிட்லரால் இன அழிப்புக்கு உள்ளாக்கப்பட்ட யூதர்கள் தப்பி ஓடி உலகெங்கும் சிதறினர். தம் இனத்துக்கு நேர்ந்த கொடுந்துயர் குறித்த நினைவுகளை சினிமா, இலக்கியம், பத்திரிகைகள் எங்கும் பதிவு செய்தனர். தம் நினைவுகளை தொகுத்து ஒரு குறியீடாக்கினர். உலகம் முழுக்க கவனமும் இரக்கமும் அவர்கள் பால் குவிந்தது. இந்த படைப்புகள் இருபதாம் நூற்றாண்டின் முதல் பாதியில் பெருமளவில் யூத சமூகத்தால் புரொமோட் செய்யப்பட்டன. பின்னர் இஸ்ரேல் உருவாக்கத்திற்கு இந்த படைப்புகள் ஒரு ஆதாரமான அடித்தளமாய் அமைந்தன. இன்று ஈழத்தமிழரின் போர் குறித்து நினைவுகள் இவ்வாறு தொகுக்கப்படுகின்றன. புனைவுகளில் அவை ஒரு உணர்ச்சிகரமான ஆழமான குறியீடு ஆகின்றன. ஈழ சமூகம் தன்னை தக்க வைப்பதற்கு இப்படைப்புகள் அவசியம். ஈழத்து நினைவுகள் எழுத்து வடிவில் குவியும் போது கலாச்சார அதிகாரமாக மாறுகின்றன. அம்மக்களுக்கு இந்த அதிகாரமும் தேவை. ஒரு ஆயுதமாக இதை எடுத்துக் கொள்கிறார்கள். ஆகவே ஈழப்போர் இலக்கியத்தை அவர்கள் பெருமளவில் கொண்டாடுகிறார்கள். ஒரு சமூகமே அதை புரொமோட் செய்கிறது. ஆயிரக்கணக்கான பிரதிகள் விற்பனையாகின்றன. நிறைய கூட்டங்கள் நடக்கின்றன. இப்படைப்புகள் இலக்கிய தகுதி கொண்டவை என்றாலும் அவை பெறும் கவனத்துக்கு சமூக அரசியல் ஒரு முக்கிய காரணம். இவ்வாறு ஒரு படைப்பை ஒரு சமூகம் தன் கையில் எடுத்துக் கொள்ளும். இது எழுத்தாளன் கையில் இல்லை. 
தமிழில் இது இமையத்தின் பெத்தவன் கதைக்கு நிகழ்ந்தது. சாதி குறித்த ஒரு சிக்கலான இடத்தை விவாதிக்க அப்புனைவு நமக்கு அவசியப்பட்டது. அதை பிரதியெடுத்து திருமணங்களில் பரிசாக வழங்கினர். படித்தவர்களும் மேலும் பிரதிகள் எடுத்து பகிர்ந்து கொண்டனர். இதே விசயம் எதிர்மறையாக பெருமாள் முருகனுக்கு நடந்ததை அறிவோம். ஆனால் இது விதிவிலக்கு. நூற்றில் ஒரு புத்தகத்துக்கே இது நேரும்.
2) பொழுதுபோக்கு அம்சம். பொழுதுபோக்கு என்றதும் அது வணிக எழுத்து சமாச்சாரம் என நாம் நினைத்து விடக் கூடாது. இலக்கிய படைப்புகளிலும் பொழுதுபோக்கு அம்சம் உண்டு. பொழுதுபோக்கு அம்சம் கொண்ட புத்தகங்களில் ஒரு புதிய சுவாரஸ்யமான உலகம் இருக்கும். வாசகனுக்கு அது ஒரு கிளர்ச்சி அளிக்கும். அந்நூல்கள் பட்டாசு போல் பற்றியதும் வெடிக்கும். சு.ராவின் ஜெ.ஜெ சில குறிப்புகள் வெளியான உடனே பரபரப்பாக படிக்கப்பட்டது. அதாவது இலக்கிய வாசகர்களால். ஆனால் சம்பத்தின் இடைவெளி நாவலில் இந்த அம்சம் இல்லை. அது மிக மிக மெதுவாய் தான் கவனம் பெற்றது.
ஆனால் இந்த அம்சத்தையும் ஒரு இலக்கிய பிரதியில் நாம் திட்டமிட்டு உருவாக்க முடியாது. இதுவும் விதிவிலக்கு தான். 
மீதி 99%. நூல்களும் கோயில் தேர் போல் ஊர் கூடி இழுத்தால் தான் நகரும். அதுவும் ரேஸ் கார் போல் ஓடும் என எதிர்பார்க்கக் கூடாது.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவனம் திருப்பும் ஆயுதம் - ஹிட்லர், மோடி, விஜய்: ஒற்றுமையும் வேறுபாடும்

  தவெக ஒரு 'ஆட்டத்திருப்பக்' கட்சி அல்ல கவனம் திருப்பும் (distracting) கட்சி எனத் தோன்றுகிறது. ராஜ்தீப் சர்தேசாய் தன் யுடியூப் அலைவரிசையில் மோடியின் ‘திமாகி நக்சல்’ பேச்சுச் சேட்டையைப் பற்றிப் பேசும்போது அது ஒரு திட்டமிடப்பட்ட கவனத் திருப்பல் பேராயுதம் (weapon of mass distraction) என்கிறார். அமெரிக்கா முன்பு சதாம் ஹுசைன் அணுகுண்டு வைத்திருப்பதாகச் சொல்லி இராக் மீது போர் தொடுத்ததைத் தொடர்ந்து பேராபத்து ஆயுதங்கள் குறித்து உலகம் முழுக்க விவாதங்கள் நடந்தன. ஆனால் அவை உண்மையில் அமெரிக்காவின் நோக்கத்தை மறைத்து மக்களின் கவனத்தைத் திருப்புவதற்காக உருவாக்கப்பட்ட பிரச்சாரம் மட்டுமே எனப் பின்னர் தெரிய வந்தது. உலகம் முழுக்க வலதுசாரிகள் இத்தகைய கவனம் திருப்பும் பேராயுதங்களைக் கொண்டே மக்களைக் கட்டுப்படுத்தி தம் வசம் வைத்திருக்கிறார்கள், தமது மோசமான நிர்வாகம் குறித்து விவாதம் எழாமல் பார்த்துக் கொள்கிறார்கள் என்கிறார் சர்தேசாய். அவர் மோடி அண்மையில் தனக்கெதிராக ஜென் ஸீ போராட்டம் தனது நிர்வாகக் கோளாறுகளை முன்வைத்து நடந்தபோது கவனத்தைத் திருப்பும் வண்ணம் கோட்பாட்டுத் தீவிரவாதிகள் பலர் இன்று உள்ளார்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.