Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

ஜல்லிக்கட்டு போராட்டமும் முடிவும்: கிளைமேக்ஸை மாற்றிய ஒ.பி.எஸ்

Image result for ஜல்லிக்கட்டு

ஜல்லிக்கட்டு தடைக்கு எதிரான இளைஞர்களின் மாபெரும் போராட்டம் அரசியல், சமூக, கலாச்சார உணர்வுகள் சார்ந்து மக்கள் திரள்வதற்கான துவக்கப் புள்ளி என்றால் எனக்கு மகிழ்ச்சியே.அதேவேளை இந்த போராட்டம் அடுத்து வரும் நாட்களில் என்னவாகப் போகிறது என்பதையும் நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இதற்கு முன் மதுவுக்கு எதிராக இப்படியான உணர்வெழுச்சி போராட்டங்கள் நடந்தன. அதற்கு முன்பு ஈழப்போரை முன்னிட்டு இதை விட உக்கிரமான ஆவேசத்துடன் இளைஞர்கள் திரண்டார்கள். ஆனால் ஒவ்வொரு முறையும் மக்கள் உணர்ச்சிகளுக்கான வடிவாலாக அவை முடிந்து போயின. எந்த கட்சிகளும் இப்போராட்டங்களை வடிவமைக்கவில்லை. சொல்லப் போனால் இளைஞர் கூட்டத்தை ஒரு அமைப்பாக, அரசியல் சக்தியாக மாற்றுவதில் கட்சிகளுக்கு அதிக ஆர்வமில்லை என தோன்றுகிறது. இது தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியா பூரா உள்ள நிலை தான். நிர்பயா விசயத்தில் திரண்ட பெரும் எதிர்ப்பை, ரோஹித் வெமுலா மரணத்தை ஒட்டின போராட்டங்களை எதிர்க்கட்சியால் ஒருமுகப்படுத்தி பயன்படுத்த முடியவில்லை. இளைஞர்களை, குறிப்பாய் மாணவர்களை, எப்படியான வாக்காளர் குழுவாய் கட்டமைப்பது என்பதில் கட்சிகளுக்கு குழப்பம் உள்ளது. இவர்கள் தேர்தல் களத்தில் எங்கிருப்பார்கள்? எந்த அடிப்படையில் வாக்களிப்பார்கள்? யாருக்கும் தெரியாது. தெரியாதவரை இவர்களுக்கு என சமூக அதிகாரமும் கிடைக்காது. இது ஒரு நுட்பமான சிக்கல். அதுவரை இம்மக்கள் போராட்டங்கள் தற்காலிக உணர்வு வடிவால்களாய் மட்டுமே இருக்கும்.

ஒரு சமூகத்துக்கு இத்தகைய குறுகிய கால எழுச்சிகள் அவசியம் தான் என்பதையும் நான் மறுக்கவில்லை. சிவில் உணர்வை உயிர்ப்புடன் வைக்க இவை நிச்சயம் உதவும்.
அதேநேரம் ஜல்லிக்கட்டு பிரச்சனையை, அதன் நடைமுறை நிலவரத்தை, நாம் சரியாக புரிந்து கொள்ளவில்லை என்பதும் உண்மை. ஜல்லிக்கட்டில் என்ன நடக்கிறது, அதன் சமூக, கலாச்சார, விவசாய தேவை என்ன என தமிழகத்தில் எத்தனை பேருக்கு தெரியும்? ஜல்லிக்கட்டு நடக்கும் பகுதி மக்களைத் தவிர கணிசமான மக்களுக்கு இது குறித்து தூலமான புரிதல் இல்லை. எனக்கு சமீபம் வரை தெரியாது. என் மனைவி ஒரு விலங்குகள் உரிமை ஆர்வலர். இந்த ஆர்வலர்கள் இப்போது இரண்டாய் பிரிந்திருக்கிறார்கள். ஒரு பகுதியினர் ஜல்லிக்கட்டை மாட்டைப் பிடித்து முரட்டுத்தனமாய் விளையாடுவது என பார்க்கிறார்கள். இன்னொரு பகுதியினர் ஜல்லிக்கட்டை தடை செய்வது எப்படி ஒரு காளை இனம் அழிய காரணமாகும், எப்படி ஜல்லிக்கட்டு காளைகள் கிராமத்து மாடுகளில் சிறந்தவற்றின் மரபணுக்கள் மட்டும் அடுத்த தலைமுறைக்கு கடந்து போவதற்கான ஒரு முக்கியமான கண்ணி; மக்களால் ஜல்லிக்கட்டு இல்லாமல் இந்த மாடுகளை பராமரிக்க முடியாது என்பதால் அவற்றை கசாப்புக்கு அனுப்புகிறார்கள் என பேசுகிறார்கள். என் மனைவி இப்படியான ஒரு ஜல்லிக்கட்டு ஆதரவாளர். அவர் தான் தொடர்ந்து உரையாடி எனக்கு ஒரு புரிதலை ஏற்படுத்தினார். அதாவது ஜல்லிக்கட்டு ஒரு கலாச்சார தேவை மட்டும் அல்ல. விலங்கினங்களின் உய்வு எப்படி இது போன்ற பண்பாட்டு நிகழ்வுகளை நம்பி இருக்கின்றன என அவரும் அவரைப் போன்ற ஆர்வலர்களும் பேசுகிறார்கள்.
ஆனால் இந்த கோணத்திலான வாதங்களை நீங்கள் ஆங்கில சானல்களிலோ பத்திரிகைகளிலோ பார்க்க முடியாது. இந்திய அளவில் நன்கு படித்த கணிசமான மக்களுக்கே இந்த விசயங்கள் தெரியாது. அவர்கள் மாடுகள் ஒரு காட்டுமிராண்டித்தனமான விளையாட்டின் பொருட்டு துன்புறுத்தப்படுகின்றன என்றே நினைக்கிறார்கள். தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கும் நிச்சயம் இதன் நுணுக்கங்கள் தெரிந்திருக்காது. அவர்களுக்கு சாதாரண காளைக்கும் ஜல்லிக்கட்டு காளைக்குமே வித்தியாசம் தெரியாது. தெரியாதது அவர்கள் தவறல்ல. நம் தவறு தான்.
எனக்குத் தெரிந்து இரு பத்தாண்டுகளாய் விலங்குகள் நல ஆர்வலர்கள் இது போன்ற பிரச்சாரங்களை செய்து வருகிறார்கள். ஜல்லிக்கட்டு காளை மட்டுமல்ல நாய்கள், யானைகள், குரங்குகள், ஆமைகள் என எல்லா ஜீவராசிகளுக்காகவும் பிரச்சாரம் செய்கிறார்கள். இந்த அமைப்பினரால் சில நன்மைகள் விளைந்துள்ளன. நம் நகரங்களில் உள்ள தெருநாய்களின் எண்ணிக்கையை கருத்தடை மூலம் கட்டுப்படுத்தி இருக்கிறார்கள். இவர்கள் பரபரப்பாய் செயல்படும் சென்னையில் நாய்க்கடியால் மக்கள் அதிகம் இறக்காமல் இருப்பதற்கு உதவியிருக்கிறார்கள். ஆனால் இவர்கள் தொண்டாற்றாத கேரளாவில் நாய்க்கடி ஒரு பெரும் பிரச்சனை. அதனால் தெருநாய்களை மக்கள் அங்கு கொன்று குவிக்கிறார்கள். நாய்களை பிடித்து கொன்று இறைச்சியை வெளிநாட்டுக்கு அனுப்புகிறார்கள். மேலும் இவர்கள் ஆதரவற்ற, காயம் பட்ட மிருகங்களுக்கான சிகிச்சை மையங்கள் உருவாக்கி இருக்கிறார்கள். மிருகங்களுக்கு எங்கெல்லாம் பிரச்சனை வருகிறதோ அங்கெல்லாம் போய் மூர்க்கமாய் போராடுகிறார்கள்.
ஆக பீட்டா, புளுகிராஸ் போன்ற அமைப்புகள் ஒரு முக்கியமான பங்காற்றி வருகின்றன.
இன்னொரு பக்கம் இந்த அமைப்புகளில் ஊழல் பெருத்து விட்டது. சாதாரண தொகை அல்ல. கோடிக்கணக்கில் தில்லுமுல்லு செய்கிறார்கள். இவ்வமைப்புகளின் சீரழிவை எதிர்க்கும் மாற்று விலங்குகள் இப்போது நல அமைப்புகள தோன்றி விட்டன. அவர்கள் இவ்வமைப்புகளின் ஊழலை சமூக வலைதளங்களில் அம்பலப்படுத்துகிறார்கள். வழக்கு தொடுக்கிறார்கள். பீட்டா போன்ற அமைப்புகளுக்கு தம் மீதான குற்றச்சாட்டுகளில் இருந்து தப்பிக்க ஒரு சாக்குபோக்கு தேவைப்படுகிறது. ஜல்லிக்கட்டு அப்படியான ஒன்று தான்.
ஜல்லிக்கட்டை தடை செய்வதற்காய் ஒரு திறமையான வழக்கறிஞரை அமர்த்தி பீட்டா பல வருடங்களாய் போராடி வருகிறது. ரெண்டாயிரத்தில் இருந்தே அவர்களின் ஆதரவாளர்கள் இணையம், மீடியா எங்கும் ஜல்லிக்கட்டுக்கு எதிரான கருத்துக்களை பரப்பி வருகிறார்கள். இந்த பிரச்சாரம் அவர்களுக்கு ஒரு ஒரு நல்ல புரொமோஷனாக இருக்கிறது. நிறைய பணம் ஜெயின் மக்களிடம் இருந்து நன்கொடையாக வருகிறது. ஜெயின் மக்கள் சைவர்கள். அவர்களுக்கு விலங்குகளை ”காட்டுமிராண்டிகள்” துன்புறுத்துவதாய் ஒரு சித்திரத்தை ஏற்படுத்தினால் உருகி விடுவார்கள். அவர்கள் அதைத் தடுக்க பணம் அள்ளித் தருவார்கள். பீட்டாவின் உயிர்நாடி இது தான். நாம் செய்ய வேண்டியது இந்த ஜெயின் நன்கொடையாளர்களின் தவறான மனபிம்பத்தை திருத்துவது தன். அதற்கான பிரச்சாரத்தை முன்னெடுப்பதுதான்.
 ஆனால் இந்த பிரச்சாரத்தை தகர்க்கும் ஒரு எதிர்-பிரச்சாரத்தை தொடுக்க தமிழர்களால் முடியவில்லை. இது தான் பிரச்சனையின் ஆதாரப் புள்ளி.
இப்போது தான் பீட்டா, புளுகிராஸ் போன்றவற்றின் போட்டி அமைப்பினர் மத்தியில் ஒரு சரியான புரிந்துணர்வு ஜல்லிக்கட்டு சார்ந்து ஏற்பட்டிருக்கிறது. நானே இதை அன்றொரு நாள் ஒரு காப்பிக்கடையில் இருக்கையில் அங்கு வந்த சில இளைஞர்களின் உரையாடலை ஒட்டுக்கேட்டதில் கவனித்தேன். மேற்தட்டை சேர்ந்த இந்த இளைஞர்கள் விலங்குநல ஆர்வலர்கள். ஆனால் அவர்கள் இன்று பீட்டாவுக்கு எதிராக பேசுகிறார்கள். ஜல்லிக்கட்டின் பண்பாட்டு முக்கியத்துவம் பற்றி அவர்களுக்கு அக்கறையில்லை. ஆனால் மாட்டு இனங்கள் பாதுகாக்கப்பட ஜல்லிக்கட்டு அவசியம் என நம்புகிறார்கள். ஆனால் இது போல் ஆயிரக்கணக்கானோர் பேச வேண்டும். இந்தியா பூரா இந்த மாற்று பிரச்சாரம் பரவ வேண்டும். அல்லாமல் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான ஒரு சூழல் அகில இந்திய அளவில் ஏற்படாது. அங்கு ஏற்படாவிடில் வருடாவருடம் நீதிபதிகள் தடை விதிப்பாளர்கள். ஒரு கட்டத்தில் இந்த மாட்டினமே கேரள கசாப்பு முதலாளிகளுக்கு மொத்தமாய் விற்கப்பட்டு அழிந்து விடும்.

அதாவது தமிழகத்துக்குள் நாம் எப்படியான கூட்டத்தை கூட்டி போராடினாலும் பயனில்லை. இது ஒரு அகில இந்திய பிரச்சனை. ஜல்லிக்கட்டை தடுப்பதற்காய் அவர்கள் நிறைய மெனக்கெடுகிறார்கள். அமைப்பு ரீதியாய் செயல்படுகிறார்கள். அரசியல்வாதிகளின் லாபி செய்கிறார்கள். பணத்தை இறைக்கிறார்கள். வழக்கறிஞர்களை வரிசையாய் அனுப்புகிறார்கள். வருடக்கணக்காய் இதற்காய் உழைக்கிறார்கள். நீங்களும் இந்தளவு உழைக்காவிடில் இதற்கு ஒரு நிரந்தர தீர்வு கிடைக்காது! இப்போராட்டங்கள் அத்திசை நோக்கி நகரட்டும்!

Comments

Popular posts from this blog

செய்யறிவு நம்மை வைத்துச் செய்த கதை

செய்யறிவுக் குமிழ் உடையப் போகிறது எனப் பலரும் பேசிக்கொண்டிருந்த நிலையில் அமேரிக்க மென்பொருள் நிறுவனங்களில் செய்யறிவைப் பயன்படுத்தி எழுதப்பட்ட நிரல்களில் பல பிரச்சினைகள் வருகின்றன, செய்யறிவு தனக்குத் தெரியாத பகுதிகளில் பகற்கனவு காண்கிறது (hallucinate) என்றும், அதைச் சரிசெய்வதில் அனுபவமிக்க நிரலாளர்கள் வேலை செய்ய வேண்டியிருப்பதால் அவர்களுடைய வேலை 30% அதிகரித்துவிட்டது என்றும் ஒரு யுடியூப் சேனலில் வந்த செய்தித்தொகுப்பில் சொன்னார்கள். இன்னொரு தகவல் செய்யறிவால் செய்ய முடியாத நிரலாக்கப் பணியை இந்திய நிரலாளர்களைக் கொண்டு செய்ததாகவும் அச்செய்தி அம்பலமானதில் நிறுவனங்களுக்கு அசிங்கமாகி விட்டது என்பது. செய்யறிவின் பிரச்சினை அது ஒரு நிரலை வேகமாக எழுதிவிடும், ஆனால் அதில் வரும் கோளாறுகளைக் குறித்து அது கவலைப்படாமல் தனக்குத் தெரியாத இடங்களில் தெரிந்ததைப் போல பழைய நிரலின் பாணியில் எதையோ இட்டு நிரப்பிவிடும் என்பதே, செய்யறிவுக்கு 'பொறுப்புணர்வு' இல்லை என்றும் கூறுகிறார்கள். அங்கு இரண்டு சிக்கல்கள் - பெருநிறுவனங்கள் செய்யறிவுத் துறையில் 52 பில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு பன்ணியிருக்கிறார்கள்....

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"சாய் வித் சித்ரா" போலி விவாதம்

"சாய் வித் சித்ரா" எழுத்தாளர்களின் வட்டமேஜை விவாதம் பார்த்தேன். இலக்கிய எழுத்தாளர்கள் × வணிக எழுத்தாளர்கள் என்ற அந்த விவாதத்தின் மையப்புள்ளியே தவறானது. கடந்த 20 ஆண்டுகளில் அந்த கோடு கரைந்து போய் இன்று இடைநிலை இலக்கியம் × இலக்கியம் எனும் இடமே உள்ளது. அதாவது இன்று பெரும்பாலானவர்க்ள் இடைநிலை இலக்கியம் பக்கமாகத்தான் நிற்கிறார்கள், ஜெயமோகன் உட்பட. இணையம், சினிமா வாய்ப்பு இந்த வீழ்ச்சியை நோக்கி நம்மைச் செலுத்திவிட்டது. சிக்கலான தீவிரமானப் புனைவுகளைப் படிப்பதற்கான பயிற்சியும் நுண்ணுணர்வும் கற்பனையும் கொண்டவர்கள் இன்று மிகவும் குறைவு. முன்பும் அப்படித்தான் இருந்ததா எனத் தெரியவில்லை. இன்று செயல்படுகிற வணிக எழுத்தாளர்கள் கிண்டிலில் அரைகுறைத் தமிழில் மலினமாக எழுதுவோர் மட்டுமே. பட்டுக்கோட்டை பிரபாகர், சுபாவின் தரம் கூட அவர்களிடம் இல்லை (அவர்களிலும் இலக்கியம் படித்து இந்தப் பக்கம் வருவோர் அரிதாக உண்டு). ஆக இல்லாத ஒரு பிரச்சினையை வைத்து நடக்கிற ஒரு விவாதமாக அது மாறிவிட்டது. உதாரணமாக, ஜெயமோகனை வாசிப்போர் அதிகரித்ததும் அவரது எழுத்தின் தரம் ரொம்ப கீழே வந்துவிட்டது. மிகையுணர்ச்சி, சினிமாத்தனமா...