முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இன்றைய வாசகன் ஒரு கண்ணாடிக் கோப்பையை போன்றவன்

 Image result for reading

அன்புள்ள அபிலாஷ் அவர்களுக்கு ,

இது நான் உங்களுக்கு எழுதும் முதல் கடிதம்தங்களின் "இலக்கிய குழுக்களும் புத்தக புரொமோஷனும்" கட்டுரைகளை படித்தேன். பொதுவாசகன் பற்றிய உங்கள் அலசல் அருமை. உங்கள் கட்டுரைகளின் சிறப்புகளில் ஒன்று, ஒரு தலைப்பை அதன் தரப்பு கேள்வி மற்றும் எதிர்தரப்பு கேள்விகளின் மூலம் விளக்க முயற்சிப்பதும் அந்த உரையாடலில் வாசகனையும் இணைத்துக்கொள்வதும் ஒரு புதிய மனதிறப்பையும் கோணத்தையும் வாசகனுக்கு தருகிறது.

பொதுவாசகன் பற்றிய எனக்கு எழுந்த கேள்விகளையும் என் அனுபவத்தையும் தங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.


பொதுவாசகன் என்று நவீனத்துவாதிகள் யாரை நம்பினார்கள். சார்பு அற்று ஒரு வாசகனால் இருக்க முடியாதா
என் பள்ளி கல்லூரி காலங்களில் வாரஇதழ்களில் சினிமா செய்திகள் தவிர எதுவும் படித்தது கிடையாது. இலக்கியம் பற்றியோ எழுத்தாளர்கள் பற்றியோ எதுவும் அறிந்திருக்கவில்லை. வேலைக்கு சேர்ந்தபின் ஒரு நாள் எதையோ கூகுள் செய்யும்போது விரல்தடுக்கி ஒரு வலைத்தளத்தில் விழுந்தேன். அதில் சுஜாதாவின் சில சிறுகதைகள் இருக்கவே அதை படிக்க துவங்கினேன். அதற்கு முன் சுஜாதாவை சினிமா வசனகர்த்தாவாகவே தெரியும். அந்த கதைகள் எனக்கு புது உலகத்தையும் நான் பார்க்காத புது மனிதர்களையும் காட்டியது. அதற்கு பின் சுஜாதாவின் மற்ற எழுத்துக்களை தேடி படிக்க ஆரம்பித்தேன்
இலக்கியம் பற்றியும் சுஜாதா பற்றியும் தெரியாத நன் அவரை தேடிப்படிக்க ஆரம்பித்த அந்த தருணம் வரை சார்பு அற்றுதானே இருந்தேன். பொது வாசகத்தன்மை  என்பது முதலிரவு போன்றதா. ஒரு புது வாசகனைத்தான் பொதுவாசகன் என்று நம்பினார்கள் என்று நினைக்கிறேன். என்னைப்போன்ற புதியவர்களை வாசகர்களாக்கும் பொருட்டு பொதுவாசகன் என்னும் "பட்டம்" தர முனைந்திருக்கலாம். அந்த முதல் படைப்பை கடந்து போக தேடல் தொடங்கும்போது பொதுவாசகத்தன்மை தொலைந்துபோகிறது என்று நினைக்கிறேன்.

அப்படியானால் என்னால் திரும்பவும் பொதுவாசகன் ஆகமுடியாதா? எதிர்காலத்தில் எழுத்தாளர் பெயர் தெரியாத தலைப்பு தெரியாத ஒரு கவிதை தொகுப்பை வாசிக்கநேர்ந்தால் அந்த கவிதை அதன் உலகிற்குள் என்னை உள்ளிழுத்து சகபடைப்புகளை என்னை தேடத்தூண்டினால், அந்த தேடல் ஆரம்பிக்கும்வரை ஒரு பொது புது வாசகனாக இருக்கமுடியும் என்று நம்புகிறேன்.

நன்றி,
பிரபு  

அன்புள்ள பிரபு
உங்கள் விளக்கமும் கருத்துக்களும் என்னை கவர்ந்தன. பொதுவாசகன் என்பவன் தொடர்ந்து மாறக் கூடிய fluid ஆன ஒரு பிரகிருதி தான்.

இலக்கியம், தத்துவம், அரசியல் என ஒரு குறிப்பிட்ட துறை சார்ந்து படிக்காத, பொதுவாக எல்லாவற்றையும் மேயும் வாசகர்களையும் பொதுவாசகர்கள் என்கிறார்கள். அவர்களுக்கு எதிர்தரப்பாக நிபுணத்துவம் கொண்ட வாசகர்கள் இருந்தார்கள். இன்று மெல்ல மெல்ல இந்த இருமை அழிந்து வருகிறது என நினைக்கிறேன். முன்பு சுஜாதா, பாலகுமாரனில் ஆரம்பித்து, தி.ஜாவுக்கு வந்து, புதுமைப்பித்தன், அசோகமித்திரன் என பயணித்து நகுலன், மௌனி என வருவார்கள். வந்த பின் தம்மை ஒரு வேறுவகையான ஆள் என கருதுவார்கள். புதிதாக மதம் மாறியவரைப் போன்று தம் பழைய வாசிப்பு பழக்கத்தை வெறுத்து மறப்பார்கள். கடிவாளம் கட்டியது போல் குறிப்பிட்ட வகை இதழ்களையும் நூல்களையும் மட்டுமே நுணுகி படிப்பார்கள்.

இன்று அந்த வளைந்த பாதையை யாரும் தேர்வதில்லை. முகநூலில் எதேச்சையாய் பலருக்கும் நவீன / தீவிர இலக்கியம் அறிமுகமாகிறது. போகன், இளங்கோ கிருஷ்ணன் போன்ற தீவிர இலக்கியவாதிகள் முகநூலில் சுவாரஸ்யமாக லகுவாக எழுதுகிறார்கள். தீவிர இலக்கியவாதியைக் கண்டு யாரும் இன்று தெறித்து ஓடுவதில்லை. இப்படி படிக்க ஆரம்பிக்கிறவர்கள் வெகுஜன இதழ்களை இன்று வெறுத்து ஒதுக்குவதும் இல்லை. ஒரே சமயம் ஒரு தீவிர கதை, ஒரு தத்துவக் கட்டுரை, வெகுஜன அரசியல் கட்டுரை, செய்தி அலசல், முகநூல் சர்ச்சைகள், கிசுகிசுக்கள் என கலந்து படிக்கிறார்கள். இன்றைய வாசகன் ஒரு கண்ணாகிக் கோப்பை போல் இருக்கிறான். அவனில் நிறைகிற விசயம் அவனை தீர்மானிக்கிறது; அவனது வண்ணம் அவனில் ஊற்றப்படும் திரவத்தின் வண்ணமாக இருக்கிறது.
பொதுவாசகன் பற்றி நீங்கள் குறிப்பிட்ட கருத்துடன் நான் உடன்படுகிறேன். தொடர்ந்து எழுதுங்கள் உரையாடுவோம்.
நன்றி
அன்புடன்
ஆர். அபிலாஷ்


கருத்துகள்

'பரிவை' சே.குமார் இவ்வாறு கூறியுள்ளார்…
//இன்றைய வாசகன் ஒரு கண்ணாகிக் கோப்பை போல் இருக்கிறான். அவனில் நிறைகிற விசயம் அவனை தீர்மானிக்கிறது; அவனது வண்ணம் அவனில் ஊற்றப்படும் திரவத்தின் வண்ணமாக இருக்கிறது//

உண்மை... கடிதக் கேள்வியும் அதற்கான பதிலும் அருமை.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மிச்சமுள்ள வேலை (குறுங்கதை) - ஆர். அபிலாஷ்

  வார இறுதி. காலை முதலே வேலைக்காரியை பத்து தடவைகளுக்கு மேல் அழைத்தாகி விட்டது. தவறான எண்ணென்று யாரோ திரும்பத் திரும்பச் சொல்வதுடன் தெலுங்கில் திட்டவும் செய்கிறார்கள். அவள் எண்ணை மாற்றியதுடன் எங்கே போனாள்? பாத்திரங்கள் குவிந்து கிடக்கின்றன. உணவை ஆர்டர் செய்து வாங்கி நானும் மனைவியுமாக அமைதியாக உண்டோம். பிள்ளைகள் இருவரும் என் சகோதரியின் வீட்டுக்கு விடுமுறையைக் கொண்டாடப் போயிருக்கிறார்கள். வீட்டு மணியடித்தது. நான் போய்த் திறந்தால் வேலைக்காரியின் தாயான எழுபது வயதுக் கிழவி நின்று கொண்டிருந்தார். நான் அவரைக் கண்டதும் திகைத்து ஒரு பக்கம் சாய்ந்து நின்று கொண்டேன். அவர் அலட்சியமாக என்னை விலக்கிக் கொண்டு உள்ளே நுழைந்தார். என் மனைவி தன் கையில் இருந்து தட்டைக் கீழே போட்டு விட்டுக் கத்துகிற சத்தம் கேட்டது. நான் தடுமாறியபடி உள்ளே வந்தேன். யாரை அழைப்பது, என்ன சொல்வது எனத் தெரியவில்லை.   அவர் உள்ளே சென்று வேலையை ஆரம்பித்ததுடன் சமையலறையில் யார் பொருட்களை மாற்றி வைத்தது என உரிமையுணர்வுடன் என் மனைவியை விசாரித்துக் கொண்டிருந்தார். என் மனைவி இன்னும் பேசும் இயல்பு நிலைக்கு வரவில்லை என்பதில் திகை...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

பிரபலங்களின் நோக்கம்

  நீங்கள் ஒரு பிரபலத்தின் நேர்முகத்தைப் பார்க்கிறீர்கள். அவர் தன் வாழ்வில் வெற்றி பெற சரியான உணவின்றி அலைந்து திரிந்ததைச் சொல்கிறார். நீங்கள் கண் கலங்குகிறீர்கள். அவர் தன் குடும்பத்தைப் பிரிந்து மாநகரத்தில் தனிமையில் அனாதையாக வாழ்ந்தைச் சொல்கிறார். நீங்கள் மனமுடைகிறீர்கள். இன்னொருவர் தான் தன் காதலனால் ஏமாற்றப்பட்டதைச் சொல்லி அதனால் ஏற்பட்ட மனச்சிக்கல்களை, பதற்றத்தை, காயங்களை வர்ணிக்கிறார். உங்களுக்கு இரக்கமும் ஆத்திரமும் வருகிறது. இந்த அனுபவங்களும் உணர்வுகளும் பொய்யல்ல. அவரும் நீங்களும் அடிப்படையில் மனிதர்களே. அதேநேரம், இங்கு எழுப்ப வேண்டிய முக்கியமான கேள்வியுண்டு - ஏன் இம்மாதிரியான கதையாடல்களை ஊடகங்கள் உங்கள் முன்வைக்கின்ற்ன? அவர்களின் நோக்கம் என்ன? ஒரு விசயம் உண்மையாக இருந்தாலும் அதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என வெகுஜன ஊடகம் நினைப்பதில் ஒரு உத்தேசம் இருக்குமே? பிரபலமும் நீங்களும் வர்க்கரீதியில் வெவ்வேறு இடங்களில் இருக்கிறீர்கள். இது ஒரு விலகலை ஏற்படுத்துகிறது. பிரபலங்கள் இந்த நாட்டின் பெரும்பணக்காரர்களை, அதிகார வர்க்கத்தின் பகுதியாக உள்ளார்கள். இந்த இடைவெளியை நிரப்புவது அவ...