முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இந்தியா இங்கிலாந்து மூன்றாவது டெஸ்ட்: நாள் இரண்டு



இந்த டெஸ்ட் தொடரில் என் கவனத்தை தொடர்ந்து ஈர்ப்பது ஆடுதளங்கள் தாம். அவை இங்கிலாந்தில் உள்ள வறட்சி காரணமாய் காய்ந்து தளர்ந்து போயுள்ளன.

 ஒரு நல்ல ஆடுதளத்துக்குள் மண் அடுக்குகள் உறுதியாய் இருக்க வேண்டும்; அவை நெகிழவோ தளரவோ கூடாது. அது ஆடுதளத்தை மிக மெத்தனமாக்கும்; பவுன்ஸ் இல்லாமல் பந்து ஊர்ந்து வரத் தொடங்கும். இதைத் தவிர்க்கவே இங்கிலாந்து ஆடுதள தயாரிப்பாளர்கள் கூடுதலாய் நீர் தெளிக்கிறார்கள். ஆனால் கடும் வெப்ப அலைகள் காரணமாய் நீரை தளங்கள் வேகமாய் உறிஞ்சுகின்றன. ஆடுதளம் வெடிக்காமல் இருக்கும் பொருட்டு தொடர்ந்து நீர் தெளிக்கிறார்கள். விளைவாக, ஆடுதளம் ஒரு பாதி ஈரமாயும் மறு பாதி காய்ந்து போய் வறண்டும் இருக்கும். மேலும் உறுதித்தன்மை கொடுக்க புற்களை அதிகம் மழிக்காமல் விட்டு வைப்பார்கள். இத்தகைய ஆடுதளங்களில் (புற்பரப்பு காரணமாய்) பந்து தொடர்ந்து ஸ்விங் ஆகும். ஆடுதளத்துக்குள் காயாத அடுக்குகள் மீது பந்து பட்டால் ஓவராய் பவுன்ஸ் ஆகும்; காய்ந்த அடுக்குகள் என்றால் பந்து முட்டிக்கு கீழே பம்மிப் போகும்.
இந்தியா மட்டையாடிய போது பந்து மெத்தனமாய் இருந்ததால் சமாளித்து விட்டார்கள். ஆனால் இன்று இங்கிலாந்து மட்டை ஆடிய போது வானம் மேகமூட்டமாய் இருந்திட பந்து நன்றாய் ஸ்விங் ஆனது. 161க்கு இங்கிலாந்து ஆல் அவுட் ஆனது உண்மையிலேயே ஆச்சரியம் என்றாலும், இன்றைய சீதோஷ்ண நிலையும் இதற்கு ஒரு காரணம்.
 நாளையும் மேகமூட்டமும் சாரலும் தொடரும். ஆகையால் நாளைக் காலை முதல் முப்பது ஓவர்களுக்குள் நிச்சயம் 3-4 இந்திய விக்கெட்டுகள் சரியும் என ஊகிக்கிறேன். அப்படியே நடந்தாலும் இந்தியாவுக்கு அதனால் பெரிய பாதிப்பு இராது. 400 சுமாருக்கு இலக்கு நிர்ணயித்தாலே நான்காவது இன்னிங்ஸில் இங்கிலாந்தால் அதை சுலபத்தில் தாண்ட முடியாது.
ஆனால், இங்கிலாந்துக்கு இரண்டு விசயங்கள் அனுகூலமானவை:
1)   நான்காவது மற்றும் ஐந்தாவது நாட்கள் மழையோ மேகமூட்டமோ இன்றி சீதோஷ்ண நிலை மட்டையாட்டத்துக்கு சிறப்பாக இருக்கும்
2)   அஷ்வினின் காயம்
அதேவேளை, கடைசி இரு நாட்கள் இந்த ஆடுதளம் இரு விதங்களில் மாற்றமடையலாம்.
1)   இங்கிலாந்து நாளை ஐந்துக்கு மேல் விக்கெட்டுகள் இழந்தால் நான்காவது நாள் ஆடுதளம் மட்டையாட்டத்துக்கு வசதிப்படும் போது அதில் லாபம் கொய்ய முடியாது போகும்.
2)   ஆனால் ஒருவேளை இங்கிலாந்து நாளை நன்றாக மட்டையாடினால், நான்காவது நாள் வெயிலில் மட்டையாட்டம் சிறப்பாக அமையலாம். அப்போது அஷ்வின் காயத்தில் இருந்து மீளவில்லை எனில் நான்கு பவுலர்களைக் கொண்டு நூற்றுக்கு மேல் ஓவர்கள் வீசுவது சிரமமாகும். ஆடுதளம் நன்றாய் மாறும், பவுலர்கள் களைப்பாவார்கள். ஆட்டம் தலைகீழாய் மாறலாம்.
ஆட்டத்தின் போக்கை தீர்மானித்த நாள் இன்று. ஆட்டத்தை சீல் வைக்கும் நாள் நாளை. இந்தியாவின் வெற்றி வாய்ப்பு இப்போதைக்கு 60-40.

கருத்துகள்

ஸ்ரீராம். இவ்வாறு கூறியுள்ளார்…
விவரங்கள் தெரிந்து கொண்டேன்.

ஆனால் இந்தியா வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.

கவனம் திருப்பும் ஆயுதம் - ஹிட்லர், மோடி, விஜய்: ஒற்றுமையும் வேறுபாடும்

  தவெக ஒரு 'ஆட்டத்திருப்பக்' கட்சி அல்ல கவனம் திருப்பும் (distracting) கட்சி எனத் தோன்றுகிறது. ராஜ்தீப் சர்தேசாய் தன் யுடியூப் அலைவரிசையில் மோடியின் ‘திமாகி நக்சல்’ பேச்சுச் சேட்டையைப் பற்றிப் பேசும்போது அது ஒரு திட்டமிடப்பட்ட கவனத் திருப்பல் பேராயுதம் (weapon of mass distraction) என்கிறார். அமெரிக்கா முன்பு சதாம் ஹுசைன் அணுகுண்டு வைத்திருப்பதாகச் சொல்லி இராக் மீது போர் தொடுத்ததைத் தொடர்ந்து பேராபத்து ஆயுதங்கள் குறித்து உலகம் முழுக்க விவாதங்கள் நடந்தன. ஆனால் அவை உண்மையில் அமெரிக்காவின் நோக்கத்தை மறைத்து மக்களின் கவனத்தைத் திருப்புவதற்காக உருவாக்கப்பட்ட பிரச்சாரம் மட்டுமே எனப் பின்னர் தெரிய வந்தது. உலகம் முழுக்க வலதுசாரிகள் இத்தகைய கவனம் திருப்பும் பேராயுதங்களைக் கொண்டே மக்களைக் கட்டுப்படுத்தி தம் வசம் வைத்திருக்கிறார்கள், தமது மோசமான நிர்வாகம் குறித்து விவாதம் எழாமல் பார்த்துக் கொள்கிறார்கள் என்கிறார் சர்தேசாய். அவர் மோடி அண்மையில் தனக்கெதிராக ஜென் ஸீ போராட்டம் தனது நிர்வாகக் கோளாறுகளை முன்வைத்து நடந்தபோது கவனத்தைத் திருப்பும் வண்ணம் கோட்பாட்டுத் தீவிரவாதிகள் பலர் இன்று உள்ளார்...