உன்னைப் பார்த்து பல நாட்கள்
ஆகின்றன
ஆனாலும்
இதோ இந்த நொடி
நான் எதிர்வந்தால்
குளியலறை பக்கெட்டில் நீ
முக்கி
நசுக்கிக் கொல்லும் அந்த
பொம்மைகளை
பாதி தவிப்பில் விட்டு விட்டு
என்னிடம் ஓடி வருவாய் என
அறிவேன்.
நான் மடியில் தூக்கி வைத்து
முத்தமிட்டு விசாரித்து முடிக்குமுன்
நீ உனது பாதி வாக்கியம் ஒன்றில்
இருந்து
உன் இடையறா பேச்சை நீ தொடர்வாய்
என அறிவேன்
நான் அப்பேச்சுக்கு எதிர்கேள்வி
கேட்குமுன்
நீ மீண்டும்
பாதி தவித்து மூச்சு வாங்கிக்
கொண்டிருக்கும்
அந்த பொம்மைகளிடம் போய் விடுவாய்
என அறிவேன்
ஆகையால்
அந்த விளையாட்டு முடியட்டுமென
காத்திருக்கிறேன்
நான் வரும் போது
புதிதாய் சில அப்பா பொம்மைகளை
கொண்டு வருவேன்
முடிவற்று
குமிழ் குமிழாய் மூச்சு விட்டு
சுவாசம் சுவாசம் எனக் கேட்கும்
போது
உன் சிரிப்பைப் பார்த்து
அதைக் கேட்க மறந்து
நீரில் கரணம் அடிக்கும்
அப்பா பொம்மைகள்
விளையாட்டு என்பதே
ஒருவருக்கு உயிர்கொடுப்பதாய்
கொடுத்து
அதை பறிப்பதும்
உயிர்பறிப்பதாய் பறித்து
அதைக் கொடுப்பதும் தானே
கண்ணே!
நீ இல்லாத உலகில்
இந்த இரண்டுமே இல்லை.
அங்கு மகிழ்ச்சியும் இல்லை
தவிப்பும் இல்லை.
அங்கு தா தா எனும் பாய்ச்சலும்
விடு விடு எனும் கெஞ்சலும்
இல்லை
இது ஒரு தட்டையான உலகம்
இது உயிரற்ற உலகம்
அந்த நாளுக்காய் காத்திருக்கிறேன்
நான் வரும் போது
நீ ஓடி வருவாய் தானே?
கருத்துகள்