Skip to main content

இவ்வருடம் இதுவரை…



பிறந்த நாளின் போது அந்த வருடத்தில் எனக்கு நிகழ்ந்தவற்றை, அவ்வருடத்தின் பிரத்யேக அம்சத்தை பின்னோக்கி தொகுத்து எழுதுவது என் வழக்கம். அவ்வாறே, இன்று என் பிறந்த நாள்.
இன்று திரும்பி நோக்கும் போது இது என் வாழ்வின் மிக மிக நெருக்கடியான வருடம், இது என்னை மனச்சிதைவை நோக்கி கிட்டத்தட்ட இட்டுச்சென்ற வருடம், இதுவே என்னை அதிகமான தடவைகள் தற்கொலை குறித்து விலாவரியாய் திட்டமிடச் செய்த வருடம் எனத் தோன்றியது.

 நான் எப்போதுமே கசப்பான கவலையான சுணக்கமான ஆளில்லை; நான் முசுடனாக சுயவெறுப்பாளனாக இருந்ததில்லை. எழுத்தில் இருந்து கவனம் பிசகி மோட்டுவளையை வெறித்தபடி இருந்ததில்லை. அதையெல்லாம் இவ்வருடம் செய்தேன்காரணம் எனக்கு நெருக்கமான ஆதரவு தளத்தை, என் குடும்பத்தை நான் ஒரு சின்ன கண் சிமிட்டலில் முழுக்க இழந்தது.
எந்த இழப்பின் போதும், துயரத்தின் போதும் என்னால் சரளமாய் முழு ஈடுபாட்டுடன் எழுத முடியும் என நம்பியிருந்தேன். என் அப்பா காலமான போது நான் வீட்டுக்குக் கிளம்பிய நாளில் இருந்து துக்கம் அனுசரித்த காலம் வரை எழுதுவதை நிறுத்தவில்லைஅப்பாவின் சடலம் முன்னறையில் கிடக்க நீ உட்கார்ந்து அசராமல் எழுதுகிறாயே என சிலர் கண்டித்தார்கள். ”நான் அப்படித் தான்என பதில் சொன்னேன். பின்னர், நான் கோமா நிலைக்கு சென்று ஆஸ்பத்திரியில் மயக்கமாய் இரு வாரங்கள் இருந்த பின் கண்விழித்த அன்றைய நாள் மாலையே ஆயிரம் வார்த்தைகள் சரளமாய் எழுதினேன். என்னுடைய இந்த சுதந்திரம், விலகல் மனப்பான்மை குறித்த பெருமைப்பட்டதுண்டு. ஆனால் இந்த அசராத உறுதிப்பாட்டுக்குப் பின்னிருந்த மற்றொரு ஆதரவுத் தளத்தை நான் அன்றெல்லாம் கவனிக்கவில்லைஎன் குடும்பம். தன் மென்மையான பெரிய பாத்த்தில் ஒரு பெரிய ஆணியோ கண்ணாடிப் பாளமோ இறங்கியதும் யானை நிற்க முடியாமல் தளர்ந்து சரிவதைப் போல நான் என் குடும்பம் என்னில் இருந்து அகன்றதும் நொறுங்கி சரிந்தேன்.
என் வாழ்வில் முதல் முறையாய், இப்போது, நான் எழுதுவதைக் குறைத்துக் கொண்டு அதிக மனிதர்களிடம் உரையாடினேன். மனிதர்களுடன் வெறுமனே உரையாடியபடியே அவர்களது மொழியை, நடவடிக்கைகளை கவனித்து உள்வாங்குவதே என் வழக்கம். அதை விடுத்து சக மனிதர்களுடன் உணர்ச்சிகரமாய் ஒன்றிப் போய் உரையாடத் துவங்கினேன். சகமனிதனின் துயரத்தைக் கேட்டு கண்ணீர் விடப் பழகினேன். தர்க்க ஒழுங்குடன், பகுத்தறிவுடன் வாழ்வை அலசி புரிந்து கொண்டு வந்த நான் இப்போது அவற்றை விடுத்து அதர்க்கத்தை, உணர்ச்சிகரமான தளும்பலை, நீரொழுக்கு போன்ற மனநிலையை அதிகம் விரும்பத் தொடங்கினேன். ஒரே நேரம் எனக்குள் மகிழ்ச்சியும் கசப்பும் இருக்கும்ஒரு விசயத்தைக் குறித்து திளைப்புடன் உவகையும் சிந்திக்கும் போதே என் இழப்புணர்வு என் வதைத்துப் பிழிந்தபடி இருக்கும்.
சதா எனக்குள் உணர்ந்த தடுமாற்றம் என்னை எப்போதும் கண்ணீர் தளும்பிய நிலையை இருக்கச் செய்தது. . இது என்னை எல்லாவற்றையும் மிகையாக காண வைத்தது; மிகையை ரசிக்கச் செய்தது. முன்பு ஜாலியாய், அறிவார்த்தமாய் பார்த்துக் கடந்த திரைப்படங்கள் சிலவற்றை மீள மீளப் பார்த்து அழுகிறவனாய் மாறினேன். நான் அதுவரையில் என் வாழ்க்கை ஒருமுறை கூட ஒரு படத்தைப் பார்த்து கண்ணீர் விட்டதில்லை எனக் கூற வேண்டும். என் கண்களைக் கசியச் செய்ய ஒரு சிறு சொல் போதும், ஒரு வாசனை, ஒரு முகக்குறி, ஏதோ நினைவுக்கு குறுக்கே ஒரு நிழலாய் கடந்தால் போதும் என்று ஆகியது.
இந்த மனநிலை நீண்ட காலவெளியை கோரும் நீள்கட்டுரைகள், நாவல் ஆகிய வடிவங்களில் நான் செயல்படத் தடையாகியது. ஆகையால் நான் கவிதை மொழிபெயர்ப்பில் ஈடுபட்டேன். மனுஷ்யபுத்திரனின் கவிதைகளை ஆங்கிலமாக்குவதும், பாப்லோ நெருடாவை தமிழாக்குவதும் என்னை இக்கட்டத்தில் பெருமளவு காப்பாற்றின. ஒவ்வொரு கவிதையை மொழியாக்கும் போதும் என் கண்களில் இருந்து நீர் உருண்டோடும். இந்த துன்பத்தின் உச்சத்தில் ஒரு பெரும் மனத்திளைப்பு உண்டென நான் இம்மொழியாக்கத்தில் உணர்ந்தேன். இந்த மொழியாக்கங்கள் என் முந்தைய கராறான கச்சித மொழியாக்க முயற்சிகளில் இருந்து வித்தியாசப்பட்டிருந்தன. நான் என் கொதிக்கும் இதயத்தில் இருந்து நேரடியாய் இவற்றை வாசித்து மொழியாக்கினேன். சில விடுமுறை நாட்களில் நான் இப்படியான ஒரு எழுத்து முயற்சியில் தொடர்ந்து எட்டு-பத்து மணிநேரங்கள் ஈடுபடுவதுண்டு. இவை முடியும் போது நான் அடையும் கசப்பு அளவற்றது. முடியுறாமல் மொழியாக்கியபடியே இந்த தீவிர அனுபவங்களுக்குள், கனவு நிலைக்குள் இருக்க இயலாதா என ஏங்கியதுண்டு.
இந்த மனநிலை என் வகுப்பெடுக்கும் பாணியையும் மாற்றியது. நான் வகுப்பில் மிக உணர்ச்சிகரமாய் பேசுகிறவனாய் மாறினேன். முன்னெப்போதும் இல்லாதபடி மாணவர்களுக்கு இணக்கமானேன். எப்போதும் நிதானம் கைவிடாத ஆசிரியனான அவர்களிடம் அதிகமாய் கோபப்படுகிறவனாகவும் உருமாறினேன். சில வகுப்புகளில் சின்ன விசயங்களுக்கு கோபப்பட்டுஇனிமேல் உங்களிடம் பேச மாட்டேன்எனக் கூறி விட்டு அமைதியாக உட்கார்ந்து விடுவேன். ஆனால் ஆச்சரியமாக இந்த அணுகுமுறை மாணவர்களின் கூடுதல் பிரியத்தை எனக்குப் பெற்றுத் தந்தது. நான் ஒவ்வொரு முறை கோபித்து பின்னேகும் போதும் அவர்கள் என்னை நோக்கி கூடுதலாய் நெருங்கி வந்தார்கள். கடந்த வருட இறுதியில் என் வகுப்பிடம் சென்று இன்னும் இரு வாரங்களுக்கு மேல் நான் வர மாட்டேன்; அதற்குள் பாடங்களை முடித்துக் கொள்வேன் எனக் கூறினேன். இரு வாரங்களில் வாழ்க்கையை முடித்துக் கொள்வதே என் திட்டமாக இருந்தது. ஆனால் மாணவர்களோ நான் அவர்கள் பால் ஏமாற்றம் கொண்டே அவ்வாறு பேசுவதாய் நம்பினார்கள். ஆகையால் என்னை வந்து சமாதானப்படுத்தினார்கள். தாம் ஒழுங்காய் வகுப்பில் இருப்பதாய் உறுதி தந்தார்கள். அப்போது தான் நான் லக்கான் பற்றி மாணவர்களுடன் ஒரு புத்தகம் எழுதலாம் என முடிவெடுத்தேன். இரண்டே வாரங்கள்ஒரு புத்தகம் வெளியிடுவோம். அதன்பிறகு விடைபெறலாம் என்றே என் ஆழ்மனம் என்னிடம் சொன்னது. ஒரு எழுத்தாளன் போர்முனையிலும் தூக்குமேடையிலும் புத்தகம் எழுதுவது பற்றியே திட்டமிட முடியும் அல்லவா!
ஆச்சரியமாக நாங்கள் அந்த குறுகின காலத்தில் அப்புத்தகத்தை முடித்தோம். அதன் பிறகு சுய அழிவு எண்ணம் மறந்து, புத்தகத்தை எடிட் செய்வது, அட்டையை தயாரிப்பது, வேறு பிரசுர வேலைகள் என மனம் தடம் மாறிப் பயணித்தது. குழந்தைப்பேறுக்குப் பிறகு குழந்தையை முலையூட்டுவதிலும் பராமரிப்பதிலும் தன்னை இழக்கும் இளம் தாயைப் போல ஆனேன். அந்த புத்தகத் திட்டமே என் ஆழ்மனத்தின் ஒரு தற்காப்பு வியூகமோ என இப்போது தோன்றுகிறது.
அதன் பிறகு ஒவ்வொரு முறையும் வாழ்வின் விளிம்புக்கு வந்து அதல பாதாளத்தை எட்டி நோக்கும் போது என் வாழ்வில் ஏதாவது ஒரு வினோதமோ அதிசயமோ நிகழும். ஒருவிதத்தில், கிரைஸ்ட் பல்கலைக்கழகத்துக்கு நான் வர நேர்ந்ததே ஒரு அதிர்ஷ்டம் தான் எனத் தோன்றுகிறது. இத்தனை மனிதர்கள், மாணவர்கள், நண்பர்கள் என்னைச் சுற்றி இராவிட்டால் நான் முழுக்க சிதறிப் போயிருப்பேன்.
கடந்த ஆறு மாதங்களாய் தான் நான் மெல்ல மெல்ல இழப்புகளில் இருந்து மீளத் துவங்கி இருக்கிறேன். இறைவன் அருகில் இருந்து என்னை பத்திரமாய் கவனித்துக் கொள்கிற உணர்வு எனக்கு இப்போதெல்லாம் இருக்கிறது. துன்பமே நம்மை இந்த வாழ்வுக்கு, இதை நடத்தும் அவனுக்கு நெருக்கமாய் ஆக்குகிறது. கண்ணீருக்கு ஒரு எல்லை உண்டுஅதைக் கடந்ததும் வானவில்கள் தோன்றும். என் வாழ்விலும் ஒரு வானவில் வந்தது. நான் அதைப் பற்றிக் கொண்டு வெளியே வந்தேன்,
 ஆனால் ஒருநாளும் நான் இனி முழுக்க மகிழ்ச்சியான நடுநிலையான அமைதியான நபராய் இருக்க முடியாது எனத் தோன்றுகிறது. ஆனால் இதன் வழி, நான் நிறையவே சிதைந்தவனாய் இருக்கும் போதே ஓரளவு மேம்பட்டவனாயும் மாறி இருக்கிறேன்.
இந்த பிறந்த நாளின் சிறப்பு என்ன?
உருக்குலைக்கும் துயரங்களின் இறுதியில் நான் ஒரு எழுத்தாளனாய் எஞ்சியிருக்கிறேன் என்பது. எனக்கு அது போதும்.
குறுஞ்செய்திகள் வழியாகவும் முகநூலிலும் நேரில் அழைத்தும் வாழ்த்திய, அன்பைப் பகிர்ந்த அத்தனை நண்பர்களுக்கும் நன்றி; உங்களுக்குக் கடன்பட்டிருக்கிறேன்.
நாம் எப்போதும் இருப்போம், அழிந்தாலும் கூட!


Comments

gomathy said…
விரைவில் மீண்டு வர வாழ்த்துக்கள்.
அன்புடன்
செல்வராஜ்

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...