இந்த தேர்தலில் படுதோல்வி உற்றால் பாதி அதிமுக தலைவர்கள் பாஜகவுக்கு தொண்டர்களுடன் சாதி சமூக ஆதரவுடன் இடம்பெயர்வார்கள். பாஜகவுக்கு இங்கே எந்த உள்கட்டமைப்பு வசதி, தொண்டர் படையும் இல்லாததால் இப்படி மானம் கெட்டு அவுட் சோர்ஸ் செய்வதே ஒரே வழி. ஆனால் பாஜகவுக்கு போகிற அதிமுவினர்களுக்கு கொள்கை அளவில் சிக்கல் இராது (கொள்கையே இல்லையே) என்றாலும் அங்கு அண்ணாமலை, மதுவந்தி, எஸ்.வி சேகர் போன்றோருடன் போட்டி போட வேண்டும் என்பதே கொடுமை. இது போக ரவீந்திரன் துரைசாமி, குருமூர்த்தி போன்ற புரோக்கர்களின் காலிலே விழுந்து கிடக்க வேண்டும். அதிகாரம் மிக்க ஜெயா, சசியின் கால்களில் இருந்து இந்த புரோக்கர்களின் கால்களுக்கான இடப்பெயர்வு ஒரு அசிங்கம் தானே. புதிய தலைமுறை வட்டமேஜை விவாதத்தில் மாபா பாண்டியராஜனின் முகத்தில் இப்போதே சவக்களை தெரிகிறது.
மீதமுள்ளோர் சசியின் அணிக்கு சென்று விடுவார்கள்.
இவ்விசயத்தில் திமுகவுக்கு ஒரு பொறுப்பு உள்ளது. தமிழகத்தில் அவர்களுக்கு எதிர்த்தரப்பாக அதிமுக இருப்பதே திமுகவுக்கும் தமிழகத்துக்கும் நல்லது. ஆகையால் அதிமுக சிதறாமல் அவர்கள் பாதுகாத்து, பாஜகவின் கையில் இருந்து பாதுகாக்க முயல வேண்டும். இல்லாவிட்டால் காலியாகும் இடத்தில் பாஜகவின் பி, சி டிம்களே பெருகும். அவர்களுடன் சேர்ந்து அதிமுகவை கைப்பற்றி பாஜகவும் வந்து எதிரே உட்கார்ந்து பஞ்சாயத்து பண்ணும்.
இன்றைய அதிமுக அமைச்சர்கள் நாளை யோகியை இங்கே அழைத்து வந்து 'மசூதியை இடிப்போம், ஜெய் ஸ்ரீராம்' என முழங்க ரொம்ப நாள் ஆகாது. அதிமுக தலைமையின் மதப்பற்றை மதவெறியாக, மாற்று மதத்தவர் மீதான வெறுப்பாக உருமாற்றுவது சுலபம்!
உங்களுக்கே தெரியும் பார்ப்பனியம் எப்படி வந்து தாக்கும் என - அதற்கு கட்சி சார்பு இல்லை. அது நேரில் நின்று எதிர்க்காது. முன்பு காங்கிரசை அது ஆக்கிரமித்து ஆட்டம் போட்டதாலே பெரியார் வெளியேறி இங்கு திராவிட இயக்கத்தை முன்னெடுத்தார். இன்று அதே பார்ப்பனியம் பாஜகவில் இருந்து காங்கிரஸை எதிர்த்து அழிக்கிறது. ஒரு காலை பாஜகவில் வைத்தபடி இன்னொரு காலை அதிமுகவில் வைக்க எவ்வளவு நேரமாகும்? அதனால் தான் சொல்கிறேன்: இன்று கர்நாடக பாஜகவின் தேஜ்ஸ்வி தமிழ் மண்ணில் நின்று பெரியார் பற்றி சொன்னதை நாளை அதிமுக தலைவர்கள் வாயாலே சொல்ல வைப்பார்கள்.
ஒரு மருத்துவர் நோயாளியின் உடலில் நுழைந்துள்ள கிருமிகளை அழிப்பதற்கு எப்படியான சிகிச்சை அளிப்பாரோ அதையே அதிமுகவுக்கும் நாம் செய்ய் வேண்டும். ஏனென்றால் அடிவாங்குவது அடுத்தவன் தானே என நாம் நினைத்தால் அடுத்து அது நம் உடலில் நுழையும்! திமுக தலைமை புத்திசாலி என்றால் சுதாரிக்கும்!
Comments