என்னுடைய பல்கலையில் நடந்த ரயில்வே குறித்த கருத்தரங்கில் டி. டி ராமகிருஷ்ணன் பேசினார். இலக்கியவாதியாக அல்ல, முன்னாள் ரயில்வே துறை உயரதிகாரியாக தன் வாழ்க்கை, ரயில்வே துறையின் சிக்கலான அமைப்பு, செயல்முறை என பேசியதில் பல விசயங்களைத் தெரிந்துகொண்டேன்.
இடைவேளையின் போது என்னை அறிமுகப்படுத்திக் கொண்டு உரையாடினேன். சுமார் பத்தாண்டுகளுக்கு முன் அவரை அவரது நூல் வெளியீட்டின் போது சந்தித்திருக்கிறேன். அவரது இட்டிக்கோரா நூல் மதிப்புரை நிகழ்விலும் பேசியிருக்கிறேன். சொன்னதும் நினைவுகொண்டார். மனுஷ்யபுத்திரன், உயிர்மை நிகழ்ச்சி தானே என்றார். அவர் விநாயக முருகனின் "சென்னைக்கு மிக அருகில்" நாவலின் தலைப்பை நினைவுகொண்டதுதான் சுவாரஸ்யம். அந்த தலைப்பு வித்தியாசமாக இருக்க என் மனத்தில் ஒட்டிக்கொண்டது என்றார். அதுதான் அவரது இயல்பு, சிந்தனை முறை - இன்றைய சமூகத்தில் நிகழும் சிக்கல்கள், அபத்தங்கள் மீது ஆர்வம்.
அவருக்கு தமிழில் வாசிக்கத் தெரியும், மொழியாக்கம் செய்ததுண்டு என்றார். சாருவின் தாக்கத்தினாலே பின்நவீன எழுத்தில் ஈர்ப்பு கொண்டு பிரான்ஸிஸ் இட்டிக்கோரா எழுதியதாக ஒரு கூட்டத்தில் முன்பு சொன்னார். அவர் தமிழில் சிந்திக்கும் ஒரு மலையாள எழுத்தாளர் என நினைக்கிறேன். என்னுடைய சில நூல்களை அவருக்கு கொடுக்க வேண்டும்.
கருத்துகள்