முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தமிழ்நாட்டின் சுதேசி "மோடி" ஆட்சிக்கட்டில் ஏறினால் என்னவாகும்?

விஜய் பதவியேற்பு எப்போது? நொடிக்கு நொடி மாறும் தமிழக அரசியல் களம்


1) இதுவரையிலான தாமதத்துக்கும் குழப்பங்களுக்கும் காங்கிரஸ் செய்த அரசியல் ஒரு காரணமென்றால் அதிமுக ஆட்சியமைக்க முயன்றது இன்னொரு காரணம். ஏனோ திமுக கூட்டணி அதைப் பரிசீலித்தது என்று இப்போது தெரிகிறது. அதேநேரம் எடப்பாடியால் அவர்களுடன் உடன்படிக்கைக்கு வர இயலவில்லை. ஆனாலும் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்ததால் விசிக உள்ளிட்ட கட்சிகள் தாமதித்துக் கொண்டே இருந்தன. தவெகவும் ஒன்றிரண்டு இடங்களுக்காக மழைக்காக டீக்கடை வாசலில் ஒதுங்கி நிற்பவர்களைப் போல காத்திருக்க நேர்ந்தது. அதிமுகவின் மனத்தில் யாரோ உருவாக்கிய ஒரு முட்டாள்தனமான கனவினாலும் பாஜகவை தவெக விரோதித்ததாலும் விஜய் ஏதோ பள்ளி மாணவனைப் போல திரும்பத்திரும்ப ஆளுநரைச் சந்திக்கவும் திரும்ப வெறுங்கையுடன் அனுப்பப்படவும் நேர்ந்தது. அதிமுக இதற்கு மேல் கனவு காண முடியாது என்று விழித்துக் கொண்டதும், எடப்பாடியார் வாழ்த்தி அறிக்கை விட்டதும், விசிக, ஐயுஎமெல் ஆகியவையும் தவெக பக்கம் வந்துவிட்டன. நாடகம் முடிந்தது.

2) ஒருவிதத்தில் தவெக ஆட்சியமைப்பதும் நல்லதுதான். விஜய் நேர்மையான முறையில் 108 இடங்களைப் பெற்றாரோ இல்லையோ நடந்ததை மாற்ற முடியாது. இப்போதைக்குச் சாத்தியமானது அனைவரும் அவர் ஆட்சியமைப்பதை ஆதரிப்பதுதான். ஆளுநர் ஆட்சி, மறுதேர்தல் எல்லாம் இன்னும் மோசமான விளைவுகளையே ஏற்படுத்தும்.

3) திமுக கூட்டணிக் கட்சிகள் அமைச்சரவையில் இடம்பெறுவார்களா இல்லையா என்பது அவர்கள் கூட்டணிக்குள் இருக்கிறார்களா இல்லையா என்பதைத் தெளிவுபடுத்தி விடும். அமைச்சரவையில் இடம்பெற்றால் விஜய் ஆட்சியின் குழப்பங்களுக்கும் ஏமாற்றங்களுக்கும் அவர்கள் பதில் சொல்ல வேண்டி வரும். ஆம், இந்த ஆட்சி அப்படித்தான் இருக்குமென நான் கணிக்கிறேன்.

4) செய்தியே வாசிக்காத, மாநில அரசியல், பொருளாதாரம், சமூக நிலை குறித்து எந்த அக்கறையும் இல்லாத தன்னலமான குருட்டுத்தனமான ஒரு குழு உருவாகி இருக்கிறது. அவர்கள் விஜய் ஒரு நடிகர் என்பதால் மட்டுமே அவரைக் காண்பதற்காகத் தவிக்கிறது. பதவி ஏற்பின்போதும் அவர்களே திரண்டு கூக்குரல் இடப் போகிறார்கள். ஒவ்வொரு முறையும் விஜய் காரில் போகும்போது வழியில் நின்று கத்தப் போகிறார்கள். இவர்களும் வேறு ஏதோ சில தேர்தல் மோசடிகளும் சேர்ந்தே இந்த வெற்றி சாத்தியமாகி இருக்கிறது. அடுத்த ஓரிரு ஆண்டுகளில் இவர்கள் இயல்பு வாழ்க்கைக்கு மீள்வார்கள் என நம்புகிறேன்.

5) ஒன்றிய அரசு இதற்கு மேல் முட்டுக்கட்டையிடாமல் விஜய் ஆட்சியமைத்த பிறகும்கூட விஜய் பெரும்பாலும் எதற்கும் பதில் சொல்லாமல், மக்களுடன் உரையாடாமல் ஒரு கண்ணாடி கூண்டுக்குள் இருந்தே ஆட்சி செய்வார். அவரது ஆலோசகர்கள் யாரென்று பாருங்கள் - அவர்களுக்கும் அரசியலுக்கும் கொள்கைகளுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை ஆர்.எஸ்.எஸ்ஸில் பணியாற்றியது, லாட்டரிக் கம்பெனி, ரியல் எஸ்டேட் தொழில் செய்தது, கட்சிகளுக்கு பிரச்சார வியூகம் வகுத்துக் கொடுத்தது ஆட்சி நடத்துவதற்கோ ஆலோசனைச் சொல்வதற்கோ ஆன தகுதி அல்ல. முழுநேரக் கொள்ளை மட்டுமே நடக்கும்.

6) தவெக மேம்போக்காக திமுகவைப் போலச் செய்யவே முயலும் - மக்களுக்கான நலத்திட்டங்கள், சமூக வலைதளப் பிரச்சாரம், விஜய்யை ஒரு மக்கள் நாயகன் என முன்னிலைப்படுத்திக் கொண்டே இருந்துவிட்டு அவரைத் திருவுருவாக்கி அவருக்குப் பின்னால் இவர்கள் கொள்ளையடிப்பார்கள். விஜய்க்கும் பங்குபோகும். அவர் அதற்காக யாரை நிறுவப்போகிறார்கள் எனத் தெரியவில்லை. அதாவது அடுத்த ஐந்தாண்டுகளில் விஜய்யை ஒரு கலக நாயகனில் இருந்து, தூய சக்தியில் இருந்து திருவுருவாக மாற்றப் போகிறார்கள். பாஜக மோடியை வைத்துச் செய்ததை தவெக விஜய்யை வைத்துச் செய்யும். அவருடைய மர்மமான குணம் இதற்கு ஓரளவுக்கு உதவும் என நினைக்கிறேன்.

7) விஜய்யின் ஆட்சியில் பெரும்பாலும் எந்த அமைச்சர்களும் 'பெரிய தலைக்கட்டுகளாக' அறியப்பட மாட்டார்கள். எது நடந்தாலும் அது விஜய்யால் செய்யப்பட்டது என்றே சித்தரிப்பார்கள். அமைச்சர்களும் அவ்வாறே நடந்து கொள்வார்கள் என்பது அவர்களுடைய இப்போதைய நடத்தையை வைத்தே தெரிகிறது. ஆகையால் இது பொம்மை ஆட்சியாக இருக்காது, திருவுரு ஆட்சியாக இருக்கும்.

8. ஆட்சி மீது என்ன குற்றச்சாட்டு வந்தாலும் அது தன் மீதுள்ள வெறுப்பினால் சொல்லப்படுபவை என்று விஜய் சொல்வார். பிறரும் விஜய் விமர்சனங்களுக்கு அப்பாலானவர் என்றே பேசுவர். அதாவது எல்லா குற்றச்சாட்டுகளையும் விலக்கித் தள்ளிக் கொண்டே இருப்பார்கள்.

9) விஜய் இனி அவ்வப்போது ஒன்றிய அரசுக்கு எதிராக சவால் விடுவார் என்றும், அதன் மூலம் தன்னை தமிழ்ப் பெருமையின் அடையாளமாக கட்டமைக்க முயல்வார் என்றும் கணிக்கிறேன். திமுகவை இனி பழிக்க இயலாது. ஊழல், குடும்ப அரசியல், அங்கிள், சார் என்றெல்லாம் வசனம் பேச முடியாது. வேண்டுமென்றால் திமுக மீது ஊழல் வழக்குப் போடலாம். அதை வைத்தே ஓட்ட முடியாது. மோடியைப் போன்றே விஜய்க்கும் சதா ஒரு எதிரி தேவை. மேலும் காங்கிரஸும் இணைந்துள்ளதால் அடுத்த மக்களவைத் தேர்தலில் தவெக-காங்கிரஸ் கூட்டணியை மதவாத எதிர்ப்புக் கூட்டணியாகச் சித்தரிக்க முயல்வார்கள். ஆனால் முழுமையான எதிர்ப்பரசியலும் செய்ய மாட்டார்கள் - பூடகமாக சில வசனங்களைப் பேசி அதை வைரலாக்கி விட்டு பிரச்சினை வரும்போதெல்லாம் காலில் பணிந்து விடுவார்கள். வரும் ஆண்டுகளில் தமிழ்நாடு ஒரு 'தமிழ் மோடியை', ஒரு கட்டமைக்கப்பட்ட நாயகனை எப்படிக் கையாளப் போகிறது என்பது கவனிக்கத்தக்கது. குஜராத்தில் ஆரம்பித்த ஒரு பரிசோதனையைப் போல இது தமிழ்நாட்டில் நிகழ்த்தப்பட்ட பரிசோதனை. அப்பரிசோதனை இந்தியாவின் தலைவிதியை மாற்றியது. இது என்ன செய்யப் போகிறது?
10) பாஜக இக்கூட்டணியில் இருந்து காங்கிரஸ், இடதுசாரிகளை வெளியேற்றி அதிமுகவை இணைய வைக்க என்னவெல்லாம் செய்யப் போகிறது, எடப்பாடி-விஜய் உறவு எப்படி இருக்கப் போகிறது என்பதும் சுவாரஸ்யமாக இருக்கும்.

கருத்துகள்

Boomi இவ்வாறு கூறியுள்ளார்…
காலத்தின் கோலம்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...