Skip to main content

இலக்கியத்திருட்டும் அதிர்ச்சியும்


தமிழ் இலக்கியப் பரப்பு ஒரு ஒண்டுக்குடித்தன குடியிருப்பு போல. எங்கு எந்த மூலையில் யார் என்ன எழுதினாலும் இன்னொருவருக்கு தெரிந்து விடும். அதனாலே இங்கு எழுத்து திருடப்படுவதற்கான சாத்தியம் இல்லை என்று இதுநாள் வரை நம்பி இருந்தேன். ஆனால் என் நம்பிக்கை பொய்த்து விட்டது.
இம்மாத “உயிர் எழுத்தில்” நண்பர் எச். முஜீப் ரஹ்மானின் “ரிகர்சனிசம்: பின்நவீனத்தின் இன்னொரு முகம்” என்றொரு கட்டுரை வெளியாகி இருந்தது. இதில் என்னுடைய ஒரு பழைய கட்டுரையில் இருந்து எட்டு பத்திகளை திருடி பயன்படுத்தி இருக்கிறார். 

முதலில் அக்கட்டுரையின் சுவாரஸ்யமான தலைப்பை பார்த்து ஈர்க்கப்பட்டு படிக்க ஆரம்பித்தேன். முதல் இரண்டு பக்கங்கள் தாண்டினதும் கட்டுரையின் தொனியில் மொழியில் ஒரு மாற்றம் தென்பட்டது. நட.சிவகுமாரின் “வெட்டிமுறித்து களம்” தொகுப்பில் உள்ள கவிதைகள் பற்றி விமர்சனம் வந்தது. அக்கருத்துக்கள் பரிச்சயமானவையாய் தோன்றின. பிறகு என் கருத்துக்கள் போன்றே இருந்தன. ஏனென்றால் இத்தொகுப்பு பற்றி நான் ஒரு கட்டுரையை ஆறு வருடங்களுக்கு முன்பு எழுதியிருந்தேன். பரவாயில்லை இவர் நம்மைப் போன்றே இக்கவிதைகள் பற்றி யோசித்திருக்கிறார் என நினைத்து மேலும் ஆர்வமாகிப் படித்தேன். பிறகு தான் எனக்கு உறைத்தது. ஒவ்வொரு வரியும் என் வரி. அப்படியே காப்பி பேஸ்ட் பண்ணி இருக்கிறார்.
 ஒன்று ரெண்டல்ல; என்னுடைய எட்டு பத்திகள் அப்படியே அவர் கட்டுரை நடுவே வருகிறது. (அவற்றின் ஸ்கேன் பிரதிகளை கீழே இணைத்துள்ளேன்). சரி மேற்கோள் காட்டி இருக்கிறாரா என்றால் அதுவும் இல்லை. அத்தொகுப்பு பற்றி அவர் ஒரு வரி கூட எழுதவில்லை. முழுக்க என் வரிகளை அவர் பெயரில் பயன்படுத்தி இருக்கிறார். எனக்கு முதலில் கடும் அதிர்ச்சியும் பிறகு கோபமும் ஏற்பட்டது. என் கண்களையே என்னால் நம்ப இயலவில்லை.
இப்பிரச்சனை பற்றி பொறுமையாக யோசித்தேன். கண்டுகொள்ளாமல் விட்டு விடலாம் எனக் கூட நினைத்தேன். ஏனென்றால் இதை செய்திருப்பவர் என நண்பர். எழுத்துலகில் எனக்கு மூத்தவர். சிறந்த வாசகர். நிறைய படித்திருப்பவர். ஆனால் நான் இதை பதிவு செய்யாமல் விட்டால் இன்னொரு பிரச்சனை வரும்: நாளை முஜீப் ரஹ்மானின் கட்டுரையை படித்து விட்டு என் கட்டுரையை பார்க்க நேர்கிறவர் நான் தான் முஜீப்பின் கட்டுரையை திருடி விட்டதாய் நினைக்கக் கூடும். இதைத் தவிர்க்க நான் இதை இங்கு பதிவு செய்தே ஆக வேண்டும். இனிமேல் இப்படியான தவறுகள் நிகழாதிருக்கட்டும்.
என்னுடைய கட்டுரையின் தலைப்பு: “நவீன தலித் மனதின் பிளவுக்களம்: நட.சிவகுமார் கவிதைகள்”. இது 2008 செப்டம்பரில் என் இணையதளத்தில் வெளியானது. இணைப்பை கீழே தந்திருக்கிறேன்.
இவை என் கட்டுரையில் இருந்து முஜீப் ரஜ்மான் காப்பி பேஸ்ட் பண்ணியிருக்கிற பத்திகள்.
நட.சிவகுமாரின் சமீபக் கவிதைகள் (வெட்டி முறிப்புக்களம்) தனி நபராகவும், சமூக மனிதனாகவும் கவிதை சொல்லியின் பல்வேறுபட்ட பிளவுகளைப் பேசுபவை. மாந்திரிகச் சடங்குகள் பற்றின நுண்தகவல்கள்,மைய நீரோட்ட சாதியினரின் வரலாற்றுப் புனைவுகளைச் சாடும் எதிர்கலாச்சாரப் பதிவுகள் ஆகியன இவர் கவிதைகளுக்கு காற்றில் பறந்து விடாதபடியான கனபரிமாணத்தை, மண்ணில் காலூன்றும் வலுவை அளிக்கின்றன.
பழம் கலாச்சாரக் கூறுகள், விளிம்பு நிலை சமூகத்தினுடையதாகினும்,இன்றைய முதலாளித்துவ, அறிவியல் சமூக ஓட்டங்கள் முன் பொருளற்றுப் போகும் தருணங்கள் நிறைய உள்ளன. சிவகுமார் ஒருபுறம் தலித் தெய்வங்களாய் மேலாங்கோட்டு, கொல்லங்கோட்டு அம்மன்கள், இசக்கி,மாடன், சுடலையின் வீரியம் பேசுகிறார். மறுபுறம் தான் பயங்கரவாத உலகில் பிழைக்க குண்டு துளைக்காத வீடும், இரண்டாய் வெட்டிப் போட்டால் உடல் ஒன்று சேரவும், காசு கொட்டவும் வரங்கள் கேட்டால் தர இயலாது உருத்தெரியாது மாயமாகும் தனது உதவாத தலித் தெய்வத்தையும் பகடி செய்கிறார் (மாந்திரிக ஓலைச்சுவடி). காலமாற்றங்களில் வலுவிழக்கும் சமூக கலாச்சாரக் கூறுகளை எதிரொலித்த புதுமைப்பித்தனின் வயோதிக வேதாளத்திற்குப் பிறகு முக்கிய பகடிப் பாத்திரம் சிவகுமாரின் இந்தச் சுடலைதான். இன்றைய சூழலில் பின்-நவீன மனிதன் தனி அடையாளங்களை சிறுகச்சிறுக இழந்து நுகர்வோனாக மட்டும் பரிணமித்து வருகிறான். கலாச்சார நுண் அடையாளங்கள் மற்றும் வம்ச வரலாற்றை புனரமைப்பதோ,பத்திரப்படுத்துவதோ அரசியல், சமூக நிர்ப்பந்தம். ஆனால் அவை பிரக்ஞையற்ற இன்றைய உலகின் சுருங்கி வரும் வெளியில் பல சமயங்களில் பொருளற்றுப் போகின்றன. 
சிவகுமாரின் கவிதைகள் சமூக மனப் பிளவிலிருந்து உள்நகர்ந்து மேலும்நுட்பமாய் தனிமனித ஆளுமை உடைவை விசாரிக்கின்றனசுயம் மீறிப் போகும்தனிமனித அதிகாரப் பசியை ‘உடல் தின்னும் பிசாசு‘ கவிதையில்விவரிக்கிறார்.
இதுவரையிலான வாழ்வில் நாம் எத்தனையோ மனிதர்களின் வயிற்றுள்வாழ்ந்திருப்போம்அதே நேரம் பாதி செரித்த நிலையில் அகப்பட்ட மனிதர்கள்பலரை நம் சிறுஇரைப்பைக்குள் அடக்கியிருந்திருப்போம்இந்த நரகாசுரவிருந்து எழுத்து அரசியலில்அன்றாட அலுவலக உறவுகளில்குடும்பஅடுக்குகளின் நகர்வுகளில் சகஜமாக நிகழ்வதுஇதனை 'பயன்படுத்தல்'என்றல்லாமல் நுண்சொல்லாடல்கள் வழியான அதிகாரக் கடத்தல் என்பதேதகும்.
அந்த வயதில்
செண்பகத்தையும் பிச்சுமணி சாரையும் தின்று முடித்தேன்
கல்லூரிக் காலங்களில்
வித்யாவை
பிறகு பெயர் சொல்ல விரும்பாத அவளையும்
தம்பியையும் சாப்பாட்டுப் பாத்திரத்தில் வைத்து
கொஞ்சமாக வைத்து தின்று கொண்டிருந்த போது
கைதவறி விழ
எடுத்து தூசு தட்டி ஒவ்வொன்றாக சாப்பிடுகிறேன் ...
இனி யாரையெல்லாம் தின்னப் போகிறேனோ ...‘

அழகியல் மனதின் மறைமுக வன்முறையை கவனிக்கிறது ஒரு கவிதை.அறைச்சுவரில் ஒட்டிக் கிடந்த வண்ணத்துப் பூச்சியைக் கவிதையாக்குகிறான்.பிறகு அது
காதுகளிலும் வாயிலும் நுழைந்த போது
கடித்துத் தின்ன
பொத்துக்கிட்டு வந்தது கோபம்.‘
மேலும் சில கவிதைகள் எளிய உயிர்கள் மீதான வன்முறையை (கடந்தை,சிலந்திப் பூச்சிகள்ஆமைப்புழுக்கள்குறியீடாகக் கொண்டு தனிமனித அறம்நுட்பமானதொரு தளத்தில் புரையோடிப் போய் விட்டதைப் பேசுகின்றனஇந்தமுதலாளித்துவ நூற்றாண்டில் மனிதன் விலகி நின்று குழந்தைகள்பெண்கள்,ஆதரவற்றவர்கள் மீதான வன்முறையை ஆதரிக்கிறான்அல்லதுபிரயோகிக்கிறான்எப்போதையும் விட இந்தக் காலத்தில் தான்சித்தாந்தங்களில் நம்பிக்கை இழந்து வன்முறை முன் அம்மணமாய்நிற்கிறோம்சமீப தமிழக தேர்தல் முடிவுகள் சரியான உதாரணம் இதற்கு.மற்றொரு தளத்தில் மத்திய வர்க்கத்தினரின் உள்ளார்ந்த குரூரவன்மவெளிப்பாடாகவும் கீழ்வரும் வரிகளைப் புரியலாம்.
எச்சிப்பாத்திரம் கழுவிய சாக்கடை நீர் கசிந்து வீட்டு சமையலறைக்குள் வரஅதன் வழி ஆமைப்புழுக்களும் நுழைகின்றனகவிதைசொல்லி லோசன்தெளிக்கிறான்பயனில்லைகடைசியாய் சாக்கடை மூடுகிறான்.
அன்றிரவில்
... காதுவழி வந்தது ஓராயிரம் ஆமைப்புழுக்கள் ... ரத்தம் குடிக்க
அறம் பிளவுண்ட மனதில் சுயரத்தம் குடிக்கும் புழுக்கள் இவை.
இதன் நீட்சியாக நாம் படிக்க வேண்டியவை வடை சுட்ட பாட்டி கதையைஅங்கதமாக்கும் இவ்வரிகள்:
அந்த மரத்தடியில் ஏமாந்த பாட்டி
அன்றொரு நாள் இறந்து போனாள்
வடையை எடுத்த காகங்கள்
காகாவென கரைந்து கொண்டே
பாட்டியை சுற்றி ...
கலந்து கொண்டன
பாட்டியின் சாவு கருத்தியலின் கருமாதிதான்.
அடுத்து வருகின்ற கவிதை கருத்தியல் பிடிமானமற்ற மனிதர்களின்பாசாங்கைப் பகடி செய்கிறது.
" கால்தடுக்கி சாக்கடையில் விழுந்தும்
ஓவியனின் வர்ணத்தை களவாண்டு பூசியும்
தன்னை கறுப்பு எருமையாக்கியது பசு ...
இப்போது எருமைகளுக்கு மவுசு இருப்பதால்
திமிர்பிடித்த எருமையாக
காட்டிக் கொண்டதில் தப்பில்லை"

இப்பத்திகள் அவர் கட்டுரையில் இடம் பெற்றுள்ள பகுதிகளை ஸ்கான் செய்து இத்துடன் இணைத்திருக்கிறேன். படித்து ஒப்பிட்டு பார்த்து இந்த கொடுமைக்கு நியாயம் கூறுங்கள்.

  





Comments

ADMIN said…
இணையதளங்களில் வெளியாகும் கட்டுரைகளை திருடுவது மிக சுலபம் என்பதால் இதுபோன்ற குற்றங்கள் நிகழ்கிறது. திருடராய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது. குறிப்பாக இணைய வெளியில் நடக்கும் திருட்டுகளை கட்டுப்படுத்துவது கடினமே..!
ADMIN said…
வணக்கம் ஐயா.

எனது வலைத்தளத்தில் தங்களின் கட்டுரைகளை மீள்பதிவிட விரும்புகிறேன்.

தங்களது கட்டுரைகளை மீள்பதிவிட (தங்களது பெயருடன்) அனுமதிக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.

-தங்கம்பழனி
தொழில்நுட்ப வலைப்பதிவர்
அன்புள்ள தங்கம் பழனி நீங்கள் தாராளமாக வெளியிடலாம்

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

போலி அறச்சீற்றம்

  ஜெயமோகனின் அறச்சீற்றப் பதிவில் ஒரு அரசியல் உள்ளோட்டத்தைப் பலரும் கவனிக்கவில்லை. வைரமுத்து துணை-ஜனாதிபதியின் செல்வாக்கில் விருதை வென்றார் என ஒரு கூற்று. அதேசமயம் இதற்கு முன்பு வைரமுத்து இவ்விருதுக்காக முயன்றபோது தான் கடுமையாக எதிர்த்ததாகவும், விருது அவருக்கு நழுவிப் போனதாகவும் சொல்கிறார். இதன் பொருள் ஜெயமோகன் இங்கு பேசுவது வைரமுத்துப் பிரச்சினை அல்ல உட்கட்சி மோதல் பிரச்சினையைத் தான் என்பது. அதாவது. ஆர்.எஸ்.எஸ், பாஜகவுக்குள் இருக்கும் உட்குழுக்களில் எதையோ ஜெயமோகனைப் போன்றவர்கள் பிடித்து செல்வாக்கு செலுத்த முயல வைரமுத்து இவர்களையும் மீறி ராதாகிருஷ்ணனைப் பிடித்து காரியம் சாதித்துவிட்டார் என்று ஜெயமோகன் எண்ணுகிறார். இது அவரது குறிப்புக்குள் ஓடுகிற உள்ளோட்டம். வெளியே வைரமுத்து இலக்கிய மதிப்பற்ற சகதி, அவருக்கெல்லாம் தகுதியில்லை, அவருக்கு எதிராக நாம் திரண்டு வேலை செய்ய வேண்டும் எனும் உணர்ச்சிகரமான அறைகூவல் வருகிறது. நாம் இந்த அறைகூவலையே அதிகம் கவனிக்கிறோம். ஜெயமோகன் வேறு யாருக்கோ ஏதோ ஒரு செய்தியைத் தெரிவிக்க விரும்புகிறார். அவர் தன்னை செல்வாக்கு மிக்க ஒரு அதிகார முகவராகக் காட்டிக் கொள்ள ...