ஜெ.என்.யுவிலும் ஐ.ஐ.டியிலும் அரசின் குறுக்கீட்டால் நடந்த ஒடுக்குமுறையும் அது சார்ந்த மாணவர் போராட்டங்களும் பற்றி நிறைய விவாதித்து விட்டோம். இப்போது ஜாதவ்பூர் பல்கலையில் Buddha in Traffic Jam படத்தை எதிர்த்த இடதுசாரி மாணவர்கள் அதை திரையிட விடாமல் தடுத்ததுடன் இயக்குநரையும் தாக்கி உள்ளார்கள். இப்படம் இடதுசாரிகள் மீது விமர்ச்னப் பார்வை கொண்டது என்பது தான் வன்முறைக்கு காரணம்.
இதை சுட்டிக் காட்டிய ஒரு நண்பர் என்னிடம் கேட்டார் "அப்படியென்றால் எ.பி.வி.பிக்கும் இடதுசாரி அமைப்புகளுக்கும் என்ன வித்தியாசம்? இருவருமே எதிர்தரப்பை கவனிக்க தயாரில்லை. மாற்றுக் கருத்தை நசுக்குகிறார்களே"
நான் சொன்னேன் "எனக்குத் தெரிந்த இடதுசாரி தோழர்கள் மாற்றுக்கருத்தை விவாதத்தால் மட்டுமே எதிர்கொள்பவர்கள். இந்துத்துவர்கள் சிலரையும் தெரியும். இந்துத்துவர்களிடம் விவாதப் பயிற்சியோ தர்க்க அறிவோ இல்லை என்றாலும் அவர்களும் எதிர்தரப்பை நோக்கி அருவா தூக்குபவர்கள் அல்ல. பிரச்சனை வேறு. இருவருமே லட்சியவாதிகள். லட்சியவாதம் அதிகாரம் பெறும் போது அது சர்வாதிகாரத் தன்மை பெறும். லட்சியவாதிகள் நடைமுறை அரசியலில் ஈடுபடும் போதும் மாற்றுக் கருத்து மீது அலர்ஜி கொண்டவர்களாக மாறுவார்கள். மனிதர்களை விட கருத்தே முக்கியம் என கருதுவதன் சிக்கல் இது. லட்சியவாதம் கட்சி அரசியலிலோ மாணவர் அரசியலிலோ ஆபத்தானது ஆகும். சட்டென அது வன்முறை நோக்கி சென்று விடும். லட்சியவாத கட்சிகளை விட நடைமுறைவாத கட்சிகளான திமுகவும் அதிமுகவும் மேல் என நினைக்கிறேன். அவை வன்முறையை தூண்டியோ பொது எதிரியை உருவாக்கியோ ஓட்டு வாங்க முயலாது. இலவசத் திட்டங்களை அள்ளி வீசும். வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுக்கும். ஆனால் அவை சதா கலவரச் சூழலில் நம்மை வைக்காது. அவை கருத்தியலை விட மக்களின் அன்றாட பிரச்சனைகளே முக்கியம் என நினைக்கும். காங்கிரசை எடுத்துக் கொண்டால் கூட சீக்கிய வன்முறையை தவிர அக்கட்சியால் பெரும் வன்முறைகள், படுகொலைகள், கலைஞர்கள் மீதான ஒடுக்குமுறை நடந்ததாய் வரலாறு இல்லை. உண்மையான அபின் லட்சியவாதம் தான். அது இடது என்றாலும் வலது என்றாலும்..."
ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன். அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...
கருத்துகள்