மனம் பேட்டி உங்களது இலக்கியப் பயணம் எந்த இடத்தில் தொடங்கியது ? “ என்னுடைய எழுத்துப் பயணம் என்பது எதிர்பாராத பல திருப்பங்களைக் கொண்டது . நான் அறிவார்ந்த ஆள் கிடையாது . முழுக்க உணர்ச்சிகளின் உலகத்தில்தான் , நான் தொடர்ந்து பயணித்து வந்திருக்கிறேன் . சுமார் பதினான்கு வயதில் கவிதைகள் எழுத ஆரம்பித்தேன் . பிறகு , சிறுகதைகளை எழுதிப் பார்த்தேன் . அப்போது , கட்டுரைகளுக்கும் எனக்கும் சம்பந்தமே இருந்ததில்லை . அப்படியாக வளர்ந்து வருகிறபோதுதான் , கவிஞர் மனுஷ்யபுத்திரன் உடனான நட்பு கிடைத்தது . அப்போது எனக்கு மொழிபெயர்ப்பில் பெரிய ஆர்வம் இருந்தது . சில மொழிபெயர்ப்பு கவிதைகளை எழுதிக்கொண்டுபோய் , அவரிடம் காண்பித்தேன் . அதைப் படித்த மனுஷ்யபுத்திரன் , ‘ அதைப் பதிப்பிக்கலாம் ’ என்று சொன்னார் . ஆனால் , சில காரணங்களால் அது பதிப்பிக்க முடியாமல் போனது . இந்த சமயத்தில்தான் , ’ உயிரோசை ’ என்கிற இணையதளத்தை மனுஷ் ஆரம்பித்தார் . அதில் நிறைய புதுமுக எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தினார் . அப்படி , அதில் எழுத எனக்கும் வாய்ப்பளித்தார் . அங்கேதான் , ஒ...