நேற்று இரவில் இருந்தே தொலைபேசியிலும், குறுந்தகவல்கள், மெஸஞ்சர் மூலமாகவும் நூற்றுக்கும் மேற்பட்ட நண்பர்கள் பிறந்த நாள் வாழ்த்தினார்கள். பெரும்பாலானோருடன் பேஸ்புக் மூலமாய் சன்னமான தொடர்பு தான். நிறைய பேரிடம் நான் அரட்டை அடித்தது கூட இல்லை. ஆனால் எழுத்து மூலமாய் ஏதோ ஒரு அளவில் அவர்களுடன் உரையாடி வந்திருக்கிறேன். அத்தனை பேரின் வாழ்த்துக்களும் வெறும் சொற்கள் அல்ல. நூற்றுக்கணக்கான கரங்கள் என் தோளை அணைப்பதாகவே உணர்ந்தேன். சமூக வலைதள காலத்தின் வரப்பிரசாதம் இது. அல்லாவிட்டால் என்னைப் போன்ற தனிமை விரும்பிகளுக்கு இந்த பிரியம் சாத்தியப்பட்டிருக்காது. நன்றிகள்! உங்கள் அன்பின் ஒளி என் உள்ளங்கைகளுக்குள் சுடர்ந்து கொண்டிருக்கும்.
மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...
கருத்துகள்