முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இங்கிலாந்திடம் கோலி கற்றுக் கொள்ள வேண்டியது


Image result for india england test series


நான்காவது டெஸ்டில் 184 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன நிலையில் இந்தியா 3-1 என்கிற நிலையில் தொடரை இழந்துள்ளது. ஆனால் டிவி நேரலை வர்ணனையில் சஞ்சய் மஞ்சிரேக்கர் சொன்னது போல, இது 3-1 எனும் ஸ்கோர் லைன் காட்டுமளவு தரைமட்டமான தொடர் தோல்வி அல்ல. மேலும் கீழுமாய் ஊசலாடிய தொடர் இது. இரண்டாவது டெஸ்டை தவிர மிச்ச மூன்று ஆட்டங்களிலும் இந்தியா கடுமையாய் போராடியது. நான்காவது டெஸ்டிலும் கூட கடைசி இன்னிங்ஸ் வரை ஆட்டம் தொடர்ந்து குடிகாரன் கால்கள் போல தடுமாறிக் கொண்டே வந்தது – கடைசியில் நிலைபெற்றது இங்கிலாந்தின் கால்கள், அதுவும் மிக சன்னமாய் தான்.

 என்னதான் தொடரை இழந்தாலும் கோலி தன் அணியின் போராட்டத்தைப் பொறுத்தமட்டில், தனது அபாரமான மட்டையாட்டத்தைப் பொறுத்தமட்டில், பெருமைப்படலாம். தென்னாப்பிரிக்க பயணத் தொடரைப் போன்றே, இத்தொடரிலும் இந்தியா வெற்றியை வெகுஅருகில் நெருங்கி வந்து, கடைசி கட்ட திறன் குறைபாடு மற்றும் மன உறுதியின்மை காரணமாய், தவற விட்டுள்ளது. அடுத்த முறை கோலி இதே போல இங்கிலாந்துக்கு பயணப்படும் போது, வளர்த்துக் கொள்ள வேண்டிய சில திறன்கள் என்ன? இனிமேல் பயணத் தொடர்களை எப்படி வெல்வது?
முன்பு மூன்றாவது வேகவீச்சாளரின் குறைபாடு இந்தியாவை பின்னுக்குத் தள்ளும். ஆனால் இம்முறை வேகவீச்சு சிறப்பாகவே அமைந்தது. அதுவும், புவனேஷ்வர் குமார் காயம்பட்டு விலகிய பின்னரும், பும்ரா, இஷாந்த் ஆகியோரின் சிறப்பான வீச்சு இந்தியாவை வலுப்படுத்தியது. ஷாமி அவ்வப்போது கங்காவாகவும் அவ்வப்போது சந்திரமுகியாகவும் ஆடினார்.
இத்தொடரில், இந்தியாவை விட இங்கிலாந்தை முன்னுக்கு தள்ளியவை 1) கீப்பரின் ரன்கள், (2) ஆல்ரவுண்டர்களின் ஆட்டம்.
இங்கிலாந்தை பொறுத்தமட்டில் கீப்பர்கள் பேர்ஸ்டோவ் (212), பட்லர் (260) ஆகியோர் இந்தியாவின் கார்த்திக் (21), பாண்ட் (43) ஆகியோரை விட பலமடங்கு கூடுதலாய் ரன்கள் அடித்தனர்.
இங்கிலாந்து: 472 vs இந்தியா: 64
வேகவீச்சாளர்களைப் பொறுத்தமட்டில் இங்கிலாந்தின் வோக்ஸ் (149), ரஷீத் (84), புராட் (49) ஆகியோர் இந்தியாவின் பும்ரா (6), ஷாமி (26), இஷாந்த் (33) ஆகியோரை விட அதிகமாய் ரன் அடித்துள்ளனர்.
இங்கிலாந்து: 282 vs இந்தியா: 65

ஆல்ரவுண்டர்களைப் பொறுத்தமட்டில் இங்கிலாந்தின் குர்ரன் (251),ஸ்டோக்ஸ் (152), மொயின் அலி (49) ஆக்யோர் இந்தியாவின் பாண்டியா (164), அஷ்வின் (126) ஆகியோரை விட அதிகமாய் ஸ்கோர் செய்தனர்.
இங்கிலாந்து: 502 vs இந்தியா: 290

ஆல்ரவுண்டர்கள் விசயத்தில் மட்டும் தான் இந்தியா இங்கிலாந்துடன் ஓரளவுக்காவது போட்டியிட்டுள்ளது. பவுலர்கள், கீப்பர்களின் ரன்களின் விசயத்தில் போட்டியே இல்லை. இந்த இரண்டு அம்சங்களில் தான் இங்கிலாந்து இந்தியாவை சுலபமாய் முறியடித்தது.
மூன்று டெஸ்டுகளிலும் இந்த அம்சங்கள் தாம் இந்தியா பின்னுக்கு செல்ல பிரதான காரணங்களாய் அமைந்தன. அதாவது, இரண்டு அணிகளிலும் துவக்க மட்டையாளர்கள் திணறினர். மத்திய வரிசை பேட்ஸ்மேன்கள் நன்றாய் ஆடினர். ஆனால் கீழ்மத்திய வரிசையில் இங்கிலாந்து குவித்த ரன்களே வெற்றி தோல்வியை நிர்ணயித்தன.
ஏன் இந்த கீழ்மத்திய வரிசை (5-8 எட்டுக்குள் வந்த பேட்ஸ்மேன்களின்) ரன்கள் ஏன் இத்தொடரில் முக்கியமாய் மாறின?
இத்தொடரில் மட்டையாட சிறந்த வேளை 50-80 ஓவர்களுக்குள் தாம். இந்த கட்டத்தில் பந்துவீச்சுக்கு சாதகமாய் ஆடுதளமோ பந்தின் நிலைமையோ இராது.  அப்போது இந்தியாவின் மட்டையாளர்கள் ஆடத் தெரியாமல் நடுங்கி சரிய இங்கிலாந்தின் மட்டையாளர்களோ அடித்தாடி அரைசதங்கள் குவித்தனர். குறிப்பாய் கீப்பர் பட்லர் (260) மற்றும் பவுலிங் ஆல்ரவுண்டர் குர்ரன் (251) ஆகியோரின் ரன்கள் தாம் இந்தியாவின் சாவுமணிகளாய் மாறின.
வரும் வெளிநாட்டு ஆட்டத்தொடர்களில் இந்தியா இது போல் மயிரிழையில் தோற்காமல் இருக்க, ரன் அடிக்கும் கீப்பர்களையும் ஆளுக்கு 30, 40 ரன்களை எடுக்க திறன் கொண்ட பவுலர்களையும் அணிக்குள் கொண்டு வர வேண்டும். சாஹா நல்ல கீப்பர் தான், ஆனால் வெறும் கீப்பிங் போதாது. பும்ரா, இஷாந்த் ஆகியோர் 5 விக்கெட்டுகள் எடுத்தால் மட்டும் போதாது.
இப்போதைய ஆட்டத்தொடர்களில், ஆடுதளங்கள் பந்துவீச்சுக்கு மிகுதியாய் உதவுவதால், வேகவீச்சாளர்கள் சோபிப்பது சுலபம். துவக்க மட்டையாளர்கள் ஆடுவதோ சிரமம். ஆக 4-9 வரை ஆடும் மட்டையாளர்கள் தாம் ரன்களை பெரும்பாலும் எடுக்க வேண்டும். முதல் 3 மட்டையாளர்களால் பெரிதாய் பங்களிக்க முடியாது. அவர்கள் ஆளுக்கு 50 பந்துகளை தடுத்தாடினாலே போதும். மேற்சொன்ன மத்திய-கீழ் வரிசையின் 6 மட்டையாளர்களில் முதல் மூவர் சற்றே தடுத்தாடி ரன் சேர்ப்பவர்களாகவும் அடுத்த மூவர் அடித்தாடி அதிரடி ரன் எடுப்பவர்களாகவும் இருப்பது அவசியம். இங்கிலாந்தின் ஆல்ரவுண்ட் திறனே இத்தொடரில் அவர்கது வெற்றி மார்க்கம்.
இந்தியாவில் நாம் ஆடும் போது துவக்க மற்றும் மத்திய வரிசையே ரன்களைக் குவிக்கும். ஏனெனில் முதல் மூன்று நாட்களில் அதுவும் மதியம் 2 மணி வரை தான் ஆடுதளம் மட்டையாட்டத்துக்கு சிறப்பாக இருக்கும். ஆகையால் முதல் 4 மட்டையாளர்களே அதிக ரன்கள் எடுப்பர். கீப்பர் மற்றும் பந்து வீச்சாளர்களின் ரன்கள் நமக்கு இந்தியாவில் ஆடுகையில் அவ்வளவு முக்கியமல்ல. ஆனால் வெளிநாடுகளிலோ நிலைமை தலைகீழ்.
இந்தியாவில் தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளை வென்று வரும் கோலி, இந்த முக்கியமான இரு துறைகளின் ரன்கள் போதுமான அளவுக்கு கவனிக்கவில்லை. ஸ்பெஷலிஸ்ட் பவுலர்கள், கீப்பர் எனும் அழுத்தத்தில் இருந்து அவர் மீள வேண்டும். ஆடுதளமும், சீதோஷ்ண நிலையுமே நம் நிலைப்பாட்டை முடிவு செய்ய வேண்டும். வெளிநாடுகளைப் பொறுத்தமட்டில், கோலியின் வியூகங்கள் தவறானவை.
தீபக் சஹார் போன்ற கீழ்வரிசை ரன்கள் விளாசக் கூடிய வேகவீச்சாளர்களை தேர்ந்தெடுத்து அவர் அடுத்து வரும் வெளிநாட்டு பயணங்களில் கொண்டு செல்ல வேண்டும். பாண்ட் போன்ற இளம் கீப்பர்களுக்கு உள்ளூர் ஆட்டங்களில் அதிக வாய்ப்பளித்து ஊக்குவிக்க வேண்டும்.
எளிமையாய் சொல்வதானால் - வரும் ஆட்டத்தொடர்களில் நம் மட்டையாட்டம் கீழிருந்து மேலாக அதிக ரன் குவிப்பதாய் அமைந்தால் நாம் வெல்வோம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மிச்சமுள்ள வேலை (குறுங்கதை) - ஆர். அபிலாஷ்

  வார இறுதி. காலை முதலே வேலைக்காரியை பத்து தடவைகளுக்கு மேல் அழைத்தாகி விட்டது. தவறான எண்ணென்று யாரோ திரும்பத் திரும்பச் சொல்வதுடன் தெலுங்கில் திட்டவும் செய்கிறார்கள். அவள் எண்ணை மாற்றியதுடன் எங்கே போனாள்? பாத்திரங்கள் குவிந்து கிடக்கின்றன. உணவை ஆர்டர் செய்து வாங்கி நானும் மனைவியுமாக அமைதியாக உண்டோம். பிள்ளைகள் இருவரும் என் சகோதரியின் வீட்டுக்கு விடுமுறையைக் கொண்டாடப் போயிருக்கிறார்கள். வீட்டு மணியடித்தது. நான் போய்த் திறந்தால் வேலைக்காரியின் தாயான எழுபது வயதுக் கிழவி நின்று கொண்டிருந்தார். நான் அவரைக் கண்டதும் திகைத்து ஒரு பக்கம் சாய்ந்து நின்று கொண்டேன். அவர் அலட்சியமாக என்னை விலக்கிக் கொண்டு உள்ளே நுழைந்தார். என் மனைவி தன் கையில் இருந்து தட்டைக் கீழே போட்டு விட்டுக் கத்துகிற சத்தம் கேட்டது. நான் தடுமாறியபடி உள்ளே வந்தேன். யாரை அழைப்பது, என்ன சொல்வது எனத் தெரியவில்லை.   அவர் உள்ளே சென்று வேலையை ஆரம்பித்ததுடன் சமையலறையில் யார் பொருட்களை மாற்றி வைத்தது என உரிமையுணர்வுடன் என் மனைவியை விசாரித்துக் கொண்டிருந்தார். என் மனைவி இன்னும் பேசும் இயல்பு நிலைக்கு வரவில்லை என்பதில் திகை...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

பிரபலங்களின் நோக்கம்

  நீங்கள் ஒரு பிரபலத்தின் நேர்முகத்தைப் பார்க்கிறீர்கள். அவர் தன் வாழ்வில் வெற்றி பெற சரியான உணவின்றி அலைந்து திரிந்ததைச் சொல்கிறார். நீங்கள் கண் கலங்குகிறீர்கள். அவர் தன் குடும்பத்தைப் பிரிந்து மாநகரத்தில் தனிமையில் அனாதையாக வாழ்ந்தைச் சொல்கிறார். நீங்கள் மனமுடைகிறீர்கள். இன்னொருவர் தான் தன் காதலனால் ஏமாற்றப்பட்டதைச் சொல்லி அதனால் ஏற்பட்ட மனச்சிக்கல்களை, பதற்றத்தை, காயங்களை வர்ணிக்கிறார். உங்களுக்கு இரக்கமும் ஆத்திரமும் வருகிறது. இந்த அனுபவங்களும் உணர்வுகளும் பொய்யல்ல. அவரும் நீங்களும் அடிப்படையில் மனிதர்களே. அதேநேரம், இங்கு எழுப்ப வேண்டிய முக்கியமான கேள்வியுண்டு - ஏன் இம்மாதிரியான கதையாடல்களை ஊடகங்கள் உங்கள் முன்வைக்கின்ற்ன? அவர்களின் நோக்கம் என்ன? ஒரு விசயம் உண்மையாக இருந்தாலும் அதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என வெகுஜன ஊடகம் நினைப்பதில் ஒரு உத்தேசம் இருக்குமே? பிரபலமும் நீங்களும் வர்க்கரீதியில் வெவ்வேறு இடங்களில் இருக்கிறீர்கள். இது ஒரு விலகலை ஏற்படுத்துகிறது. பிரபலங்கள் இந்த நாட்டின் பெரும்பணக்காரர்களை, அதிகார வர்க்கத்தின் பகுதியாக உள்ளார்கள். இந்த இடைவெளியை நிரப்புவது அவ...